1.9. திரு. ம.வே.பசுபதி வாழ்த்துரை

ம.வே.பசுபதி

ம.வே.பசுபதி

தேசிய சிந்தனைக் கழகம்- தமிழ்நாடு

ம.வே.பசுபதி

மாநிலத் தலைவர், தே.சி.க.

சென்னை,  03.10.2016

உணர்வூட்டும் சில சொற்களோடு  ‘நம்’ என்ற தன்மைப் பன்மைச் சொல்லை இணைத்தால் கம்பீரமாக இருக்கும்; பெருமித மெய்ப்பாட்டைக் கொடுக்கும். அதே நேரத்தில் அந்த ’நம்’ என்னும் ஒட்டு பிரிவினை என்னும் நச்சுப் பிணியை ஊதிப் பெருக்கி அழிவுக்குக் காரணமாகவும் உருவெடுப்பதுண்டு.

நம் ஊர், நம் மாநிலம், நம் தேசம், நம் மொழி, நம் சமயம் என்பதிலெல்லாம்  ‘நம்’ என்னும் முன்னொட்டு முதுகெலும்பை நிமிர்த்தும் மந்திரம். நம்மூர் என்றால் நிமிரும் தலை, அடுத்த ஊரானுடன் போருக்காகவே அதைச் சொல்லியிருந்தால் அந்த ‘நம்’ பெருமிதச் சொல் ஆகாது. அதுவே பெரும் பிணியுடைய சொல்லாகும். அதாவது, ‘நம்’ சேர்த்துச் சொல்லும்போது மற்றவர்களுடையவற்றை மதியாத போக்கு இருக்குமானால் அது பிணியுடைய சொல்லாகும்.

பிரிவினைப் பிணி இல்லாத இடங்களில் அப்பிணியை நுழைய விடாமல் தடுப்பது ஊடகங்களின் தலையாய கடமையாகும். பிரிவினைப் பிணி சற்றே புகுந்துள்ள பகுதிகளில் ஒற்றுமை, ஒருமைப்பாடு, ஒருங்கிணைப்பு மருந்துகளைத் தெளித்து அப்பிணியைக் கட்டுப்படுத்துவதும் ஊடகங்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். பிரிவினைப் பிணி முற்றி புற்றுநோய் ஆகிவிட்ட பகுதிகளில், ஊடக, எழுத்தாளர்களின் எழுதுகோல்கள் பிரிவினை என்னும் நச்சு மரங்களை வெட்டும் கோடரிகளாக இருக்க வேண்டும்.

இவ்வுண்மைகளையெல்லாம் நன்குணர்ந்து தக்கவாறு பணிபுரியப் புறப்பட்டுள்ள ‘காண்டீபம்’, அதன் ஆசிரியர் குழுவினரின் இதழியல் அனுபவத்தால் உரிய பணிகளை நெறியறிந்து செய்து, நற்புகழுடன் லட்சம் பிரதிகள் விற்கும் பத்திரிகைகளின் நிரலில் விரைந்து இணையும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

வாழ்க! சிறக்க!

என

பணிவுடன்,

ம.வே.பசுபதி.

 

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஐப்பசி-2016 and tagged . Bookmark the permalink.

Leave a comment