4.8 ஜிஎஸ்டி: குழப்ப முயன்ற சகுனிகள்!

-கலாவதி

தவறு செய்யும் ஆட்சியாளர்களைக் குறிப்பதற்காக,  ‘ரோம் நகரம் பற்றியெரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னன்’  என்ற வாக்கியத்தைப் பயன்படுத்துவதுண்டு. ஆனால், இந்தியாவில் மட்டும் அந்த வாக்கியம் இன்றைய எதிர்க்கட்சிகளுக்கே பொருந்துகிறது.

எந்த ஒரு திட்டத்தையும், சட்டத்தையும் கொண்டு வருவதற்கு முன்னரே அதைப் பற்றிய அவதூறுகளையும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு மீது கடும் விமர்சனங்களையும் எதிர்க்கட்சிகள் எழுப்பி விடுகின்றன. அரசின் செயல்பாடுகளை விமர்சித்து மக்களுக்குப் பணியாற்றுவதற்குப் பதிலாக, கடும் வெறுப்புப் பிரசாரத்தை அவை முன்வைக்கின்றன. அவர்களுக்குச் சாதகமாக சில ஊடகங்களும் சாமரம் வீசுகின்றன.

கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது. அதற்கு சுமார் ஒரு மாதத்துக்கு முன்னரே எதிர்க்கட்சிகள் தங்களது வெறுப்புப் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டன. ஜிஎஸ்டி மசோதாவை பாஜக ஆளும் மாநிலங்கள் மட்டுமல்ல, காங்கிரஸ் ஆளும் கர்நாடகமும் கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளமும் கூட வரவேற்றன.

கேரள நிதியமைச்சர் ஒரு படி மேலே போய்,  ஜிஎஸ்டி குறித்து அவதூறு கிளப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். ஆனால், அந்த எச்சரிக்கையை அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளின் தலைவர்களே மதிக்கத் தயாரில்லை. தங்கள் பிரசாரத்தால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குப் பதிலாக, மக்களைக் குழப்பி அரசியல் செய்வதிலேயே எதிர்க்கட்சிகள் நேரத்தைச் செலவிட்டன.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளிதழ், ‘ஜிஎஸ்டியால் நாடு முழுவதும் தங்கம் விலை உயருகிறது’ என்று தலைப்புச் செய்தி வெளியிட்டது. பதறியடித்து செய்திக்குள் புகுந்தால் பிற மாநிலங்களில் தங்க விலை உயர்ந்தாலும், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் தங்கம் விலை குறையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த உண்மையை தலைப்பிலேயே கொண்டு வந்திருந்தால் பீதி குறைந்திருக்கும்.

அதேபோல, ‘பீட்சாவுக்கு 5 % வரி, கடலை மிட்டாய்க்கு 18% வரியா?’ என்று கேள்வியெழுப்பி பாஜகவின் சுதேசிக் கொள்கையை விமர்சித்தார்கள் சிலர். 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வருமானம் ஈட்டுபவர்களுக்குதான் வரி என்பதை மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்திய பிறகும்கூட, அந்த பொய்ப் பிரசாரம் நிற்கவில்லை. ஆனால், அவர்களின் தந்திரம் கடலை மிட்டாய் வியாபாரிகளிடமோ பொதுமக்களிடமும் எடுபடவில்லை. கடலை மிட்டாய்க்கு 5% தான் வரி என்பதை வியாபாரிகளே போட்டுடைத்தார்கள்.

ஆனால், உணவகங்களிலும் தேநீர்க் கடைகளிலும் விலையை உயர்த்தி பீதி கிளம்பியது. சென்னையில் உள்ள கடைகளில் தேநீர் விலை உயர்ந்தது. மேலும், உணவகங்களில் விலையை உயர்த்தியதோடு, ஜிஎஸ்டிக்கு என தனியாகவும் வசூலிக்கத் தொடங்கினார்கள். நல்ல வேளையாக மத்திய அரசு உடனடியாக விழித்துக் கொண்டு, ஜிஎஸ்டிக்கு முந்தைய விலையையும் பிந்தைய விலையையும் பொருட்களின் மீது பொறிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

ஜிஎஸ்டி-யை அறிமுகப்படுத்திய காங்கிரஸ் கட்சியும் தன் பங்குக்கு அரசியல் செய்து மூக்குடைபட்டது. முந்தைய ஆட்சியில் ஜிஎஸ்டி குறித்த முயற்சிகளை மத்திய அரசு தன்னிச்சையாக எடுத்தது. தனக்குப் பிடிக்காத மாநில அரசுகளைச் சீர்குலைக்க ஜிஎஸ்டியை கையில் எடுக்க முனைந்தது. அதனால் தான் அப்போது அதனை குஜராத் முதல்வராக இருந்த மோடி எதிர்த்தார். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மாநில அரசுகளின் பங்களிப்புடன் ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்தது. அதன் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. எந்தெந்தப் பொருள்களுக்கு எத்தனை சதவீத வரி என்பதை பகிரங்கப்படுத்தியது.

இதில் பரிதாபத்துக்குரியவர் முன்னாள் நிதியமைச்சர் ப.சி. ஆட்சியில் இருந்தபோது ஊழல்கள் செய்வதில் கவனம் செலுத்தாமல் ஜிஎஸ்டியில் கவனம் செலுத்தியிருந்தால் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே அது நடைமுறைக்கு வந்திருக்கும். இப்போது ஜிஎஸ்டியின் பெருமை அனைத்தும் பிரதமர் மோடிக்கு செல்வதால் வயிற்றெரிச்சலில் புலம்புகிறார், காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம்.  தாங்கள் கொண்டு வர நினைத்தது தற்போதைய வடிவம் இல்லை என்பதை ஒப்புக்கொண்டு, அனைத்துப் பொருட்களுக்கும் ஒரே விதமான வரி விதிக்கப்படவில்லை என்று அங்கலாய்க்கிறார் அவர். ஒரே விதமான வரி விதிக்கப்பட்டிருந்தால், சிறு வியாபாரிகள் துன்பப்படுவார்கள் என்ற உண்மை அவருக்குத் தெரியாதா என்ன?

அவர்களின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினோ, “ஜல்லிக்கட்டைப் போல ஜிஎஸ்டியை எதிர்த்துப் போரிட வேண்டும்’ என்று  ‘அறைகூவல்’ விடுத்துப் பார்த்தார். ஆனால், அவரது பேச்சைக் கேட்பாரில்லை என்பதை உணர்ந்து, ‘ஜிஎஸ்டியை மொத்தமாக எதிர்க்கவில்லை’ என்று வடிவேலு பாணியில் இழுக்கத் தொடங்கி இருக்கிறார்.

உண்மையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பைப் பொருத்த வரை, அதை நடைமுறைப்படுத்தும் முனைப்பை மட்டுமே மத்திய அரசு மேற்கொண்டது. மாநில நிதியமைச்சர்களும் அங்கம் வகிக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் தான் வரி விகிதங்களைத் தீர்மானிக்கிறது. எந்த ஒரு பொருளுக்கும் வரியைக் கூட்டவோ, குறைக்கவோ அந்த கவுன்சிலால் தான் முடியும். இதுவே உண்மையான கூட்டாட்சி என்பதை திமுக தலைவர்கள் இதுவரை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

மொத்தத்தில், ஜிஎஸ்டி குறித்து எதிர்க்கட்சிகள் வீசிய வலை செல்லரித்துப் போனது நிஜம். எனினும் மக்களைக் குழப்பிய பாவத்துக்கு அவர்களை எப்படித் தண்டிப்பது? தேர்தல் வரை மக்கள் காத்திருக்கத்தான் வேண்டும்.

 

 

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஆடி-2017 and tagged . Bookmark the permalink.

Leave a comment