6.2 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-5

-ம.வே.பசுபதி

எட்டுப் புலவர்கள் பாடிய பத்து இலக்கியங்களின் தொகுப்பு  பத்துப்பாட்டு எனப்படும். பத்துப்பாட்டு,  எட்டுத்தொகை இரண்டும் சேர்ந்தது பதிணென் மேற்கணக்கு நூல்கள் என்பர். இவையே சங்க இலக்கியங்கள்.

பத்துப்பாட்டு தொகுப்பின் முதற்பாடல், சங்கப்புலவராகிய நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை. இது இத்தொகுப்புக்கு கடவுள் வாழ்த்தாகவும், பத்தில் ஒன்றாகவும் விளங்கும் சிறப்புடையது.

சிவனைப் பரம்பொருளாகக் கொண்ட சைவம்; திருமாலை முழுமுதலாகக் கொண்ட வைணவம்; சக்தியை ஆதியாகக் கொண்ட சாக்தம்; சுப்ரமணியரை மேலான இறைமையாகக் கொண்ட கௌமாரம்; விநாயகரை முதல் நாயகமாகக் கொண்ட காணாபத்யம்; ஆதவனை ஆதியாகக் கொண்ட சௌரம் என்னும் இந்த ஆறு சமயங்களும் திரண்ட பெருஞ்சமயமே இந்து சமயம். இவை ஆறும் நாம ரூப பேதங்களுடன் வேறு வேறு சமயங்கள் போலத் தோற்றம் கொடுத்தாலும் இவை ஆறும் ஒன்றே! – இத் தத்துவம் கூறி ஒருமைப்படுத்தும் கொள்கையின் பெயர் இந்து மதம். மதம்= கொள்கை.

மேலெழுதிய சமயங்கள் ஆறுமே வேதநெறிச் சமயங்கள். ஆக இந்த சமயம் என்பது வைதிக சமயம். வேதம் நான்கு. அதன் கிளைகளாகிய விரிவு இரண்டு; உபநிடதம், ஆகமம் என்பன அவை.

இவையாவற்றின் செய்திகளையும் கதைப் போக்கில் சொல்வன புராணங்கள். அவற்றைச் செய்கையாக இறைவரே நடத்திக் காட்டிய நிகழ்வுக் கதைகளே இதிகாசங்கள்.

வேதம் என்பதற்கு அறிவிப்பது என்பது பொருள். பாரததேசம் முழுமையிலும் உள்ள இந்துக்கள் யாவரும் இவ் வைதிக நெறியினராகவே உள்ளனர். தமிழ் இலக்கியங்களும் பாரதம் முழுமைக்குமான இவ் வைதிக நெறியை ஏற்றுப் போற்றுவனவேயாகும். மேலும் வைதிக நெறி சார்ந்த ஆசாரங்களையே தமிழ் இலக்கியங்களும் போதிக்கின்றன.

திருமுருகாற்றுப்படை வைதிக நெறிபடர்ந்த இலக்கியமே ஆகும். இச்செய்தியின் விரிவை இனிக் காண்போம்.

முருகப் பெருமானின் ஆறுமுகங்களில் ஒருமுகம் “மந்திரவிதியின் மரபுளி விழாஅ அந்தணர் வேள்வி ஓர்க்கும்” என்கிறது திருமுருகாற்றுப் படை. வேதத்தில் 21 வேள்விகள் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் பாகவேள்வி ஏழு. இவ்வேழும் நம் இந்து மன்னர்கள் நாடாட்சி செய்த காலங்களில் மன்னர்களால் மட்டும் செய்யப் பெற்றவை. எஞ்சிய அவிர் வேள்விகள் ஏழும், சோம வேள்விகள் ஏழும் பாரதம் முழுவதும் நடைபெற்றவை; இன்றும் நடைபெறுபவை. அவ்வேள்விகள் நல்லபடியாக நடைபெறுவதற்கு முருகனின் ஒருமுகம் அருள்பாலிக்கிறது என்கிறார் நக்கீரர்.

பிற்காலத்தில் அருணகிரிநாதர் “ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே” எனத் தொடங்கும் பாடலில் முருகப் பெருமானின் ஆறு முகங்களின் செயல்களைச் சொல்கிறார். அதில் ஆறுமுகங்களில் ஒருமுகம் வேதவேள்விகள் சிறக்குமாறு ஆதரிக்கிறது என்ற செய்தி கூறப் பெறவில்லை. அந்தப் பாடலை மட்டும் பார்த்து ஒரு முடிவுக்கு வரக் கூடாது. ”நாதவிந்து கலாதி நமோநமோ” எனத் தொடங்கும் திருப்புகழில் “வேதமந்த்ர ஸ்வரூபா” என்று முருகனின் ஸ்வரூப லட்சணத்தை வேதமந்திரம் என்பதை இணைத்துக் காண வேண்டும்.

தொல் பழங்காலங்களில் மேலெழுதிய வைதிக சமயங்களும் நிரீச சமயங்களாகிய சமண பௌத்த சமயங்களும் பாரத தேசம் முழுவதிலுமாகப் பரவியிருந்தன. பொ.யு. இரண்டாம் நூற்றாண்டில் 30-க்கும் மேற்பட்ட சிறு சமயங்கள் இருந்ததற்கான குறிப்பை மணிமேகலை காவியத்தால் அறிய முடிகிறது.

சமண, பௌத்த சமயங்களை நிரீச சமயங்கள் எனக் குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் உண்டு. அவற்றில் பரம்பொருள் தத்துவமில்லை. சைவத்தில் சிவம் என்பதும், வேதாந்தத்தில் பரபிரமமும், இவ்வண்ணமே சாக்தம், வைணவம், காணாபத்யம், கௌமாரம், சௌரம் ஆகியவற்றில் அவ்வக்கடவுளையே ஈசுவரத் தானத்திலும்,நிர்க்குண நிர்சலனமாகிய பரத்துவத்திலும் வைத்துச் சொல்லும் பரம்பொருள் தத்துவ நிலைகள் உள்ளன. ஆனால் சமண, பௌத்தத்தில் அப்படியானதொரு தத்துவ நிலையில்லை.தெய்வநிலை எய்திய பேரருளாளர்களை வழிபடுவது வேறு;தலைமையிடம் மற்றும் முதன்மை இடம் ஒரு புனித ஆத்மருக்கு கொடுப்பதனால் அதை பரம்பொருள் தத்துவம் உடையதாகச் சொல்ல முடியாது. எனவே அவ்விரு சமயங்களை நிரீச சமயங்கள் என்கிறோம். அதுமட்டுமின்றி அச்சமயங்களை புறச் சமயங்கள் என்று சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் குறிப்பிடுகின்றன.

அப்படியென்றால் நம் இந்து சமய தத்துவங்களுக்கு சமண, பௌத்த சமயங்கள் நேர் விரோதமானவையா என்றால், “இல்லை” என்ற பதிவைத்தான் உரத்த குரலில் ஒலிக்க வேண்டியுள்ளது. வேதாகம, புராண, இதிகாசங்களிலும், தமிழ்மறையாகிய தெய்வப் புலமைத் திருக்குறளிலும், பிறபல தமிழ்நூல்களிலும் இந்து சமய சாத்திரங்களிலும் அழுத்தமாகச் சொல்லப்படும் விதிக் கோட்பாடு, மறுபிறப்புக் கோட்பாடு முதலியவற்றை அச்சமயங்களும் உயர்த்திப் பிடித்தோதுகின்றன.

முருகப் பெருமானின் திருவுதயத்தைப் பதினெண் புராணங்களில் ஒன்றாகிய ஸ்கந்தம் ஒருவிதமாகவும், குமாரசம்பவம் என்னும் இலக்கியம் சற்றே வேறுபட்டு வேறொரு விதமாகவும் சொல்கின்றன. குமாரசம்பவம் சொல்லும் விதத்தையே திருமுருகாற்றுப்படை பின்பற்றுகிறது.

ஐம்முக சிவன் தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீத்துகள்களை வெளியேற்ற அவற்றை வாயுவின் வழியாக வாங்கிக் கொண்ட கங்கை சரவணப் பொய்கையில் விட்டாள். அவை ஆறு குழந்தைகளான நிலையில் கார்த்திகை மகளிர் பாராட்டினர். உமையம்மை அவ்வாறு குழந்தைகளையும் எடுத்துப் பாராட்டி அணைத்து, ஒரு திருமேனியும் ஆறு முகங்களும் கொண்ட ஆறுமுக சிவனை உருவாக்கினார். இது ஸ்கந்தம் சொல்லும் கந்தனின் திருவுதயம் பற்றிய செய்தி. சங்ககாலத்திற்குப் பின் இதுவே இலக்கியங்களிலும் வழக்கிலும் பேசப் பெறுவதாக அமைந்தது. வேதம் சுப்ரமண்யம் என முருகனைக் குறிப்பதால், அவ்வேத வழக்கையொட்டி பாரதம் முழுவதிலும் அப்பெயரிலேயே அப்பெருமானுக்கு மந்திர வழிபாடுகள் நடைபெறுகின்றன. திவ்யப்பிரபந்தத்தில் கண்ணன் என்ற பெயரே இருப்பினும், மந்திர வழிபாடுகளில் கிருஷ்ணன் என்பதே உள்ளது போன்ற வழக்கமாக இதனைக் கருத வேண்டும்.

தமிழின் இனிமை பொதிய முருகன், கண்ணன் என்ற பெயர்களிட்டு அக்கடவுளரைக் குறிப்பிட்டாலும் ஒருதேச உணர்வடிப்படையில் சுப்ரமண்யம், கிருஷ்ணன் என்ற திருநாமங்களிலேயே மந்திர வழிபாடுகள் நிகழ்கின்றன.

வழிபாட்டு முறைமைகளில் மந்திரவிதிப்படியான, வைதிக நெறிப்படியான வழிபாட்டு முறையேயன்றிக் குலாசார வழிபாட்டு முறையும் உண்டு. திருமுருகாற்றுப்படை முருகனுக்கு இருவகை வழிபாடுகளும் நிகழ்ந்ததைத் தெரிவிக்கிறது.

திரு ஏரகம் என்னும் பதியில் வேதியர்கள் வேத மந்திரங்களை இசையுடன் சொல்லி வழிபட்டார்கள். அவ்வேதியர் வேதம் ஓதுதல், பிறருக்கும் கற்றுக் கொடுத்து ஓதச் செய்வித்தல், கொடை செய்தல், பிறர் கொடுப்பவற்றை ஏற்றுக் கொள்ளுதல், வேள்விகள் செய்தல், அரசர்கள் வணிகர்கள் வேள்வி செய்யுமாறு உதவுதல் என்ற ஆறு இயல்புகள்- தொழில்கள் உடையவர்கள். புகழமைந்த தந்தை மரபும், தாய்மரபும் உடையவர்கள். நாற்பத்தாண்டுகள் வேதம் ஓதிய பயிற்சியும் பிரம்மச்சர்யம் காத்த சிறப்பும் உடையவர்கள். அறத்தைக் கூறும் கோட்பாடுடையவர்கள். நாற்சதுரம், முச்சதுரம், வில்வடிவங்களிலாகிய வேள்விக் குண்டங்களில் ஆசுவனீயம், தட்சிணாக்கினி, சாந்தமத்தியம் என்னும் மூவகை வேள்விகளையும் செய்பவர்கள். அவ் வேள்வித்தீயையே தெய்வமாக மதிப்பவர்கள். உபநயனத்திற்கு முன்பு பெற்ற தாய்க்கு மகனாக விளங்கிய பிறப்பும், உபநயனத்திற்குப் பிறகு குருநாதரையும், குருபத்தினியையும், தந்தையும் தாயுமாகக் கொண்ட பிறப்பும்- ஆக இரண்டு பிறப்புகளைக் கொண்டவர்கள். அவர்கள் விடியல் முதலாக அர்த்தயாமம் ஈறாகப் பூசனைக்குரிய காலங்களில் வேதங்களை ஓதி வழிபட்டார்கள்.

மூன்று பிரிகளில் ஒன்பது இழைகளைக் கொண்ட பூணூலை உடைய அந்தணர்கள் நீராடி, ஈரத்துணிகள் உடம்பின் வெப்பத்திலேயே புலர உடுத்திக் கொண்டு தலைக்கு மேல், கைகளைக் குவித்தவாறே கோயிலுக்குள் வந்து, தன்னுள் பிரம்மம் இருப்பதை உணர்ந்து அதனைத் துதித்து, ஆறெழுத்து மந்திரத்தை உச்சரித்து வேதமந்திரங்களை நாக்குப்புடை பெயர உரத்துச் சொல்லி, மணம் மிகுந்த மலர்களால் அருச்சித்து முருகனுக்கு வழிபாடு செய்தார்கள். – இது வைதிக பூசை கூறிய திருமுருகாற்றுப்படைப் பகுதி.

(வளரும்)

 

குறிப்பு:

ம.வே.பசுபதி

திரு. ம.வே.பசுபதி, தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலத் தலைவர்.

 

 

 

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in தை-2018 and tagged . Bookmark the permalink.

1 Response to 6.2 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-5

  1. selvarajan says:

    இரட்டுற மொழிதல் குறித்து வலைதளத்தில் ஆய்வு செய்யும் போது இந்த காண்டீபம் இதழ் பற்றி அறிந்து கொண்டேன். மிகவும் மகிழ்ச்சி. நட்புடன் தொடர்ந்து செல்ல விரும்புகிறேன்.
    நன்றி

    கவிஞர்.ம.செல்வராஜன்

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s