6.18 நேதாஜியின் வீர முழக்கம்

-தஞ்சை வெ.கோபாலன்

இந்திய சுதந்திரப் போரைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் ‘நேதாஜி’ என்று அன்போடு அழைக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் பற்றிக் குறிப்பிடாமல் நிரைவு செய்ய முடியாது. ‘பருப்பு இல்லாமல் கல்யாணமா?’ என்பது போல,  நேதாஜி இல்லாமல் இந்திய சுதந்திரப் போர் வரலாறா என்று கேட்பார்கள். “இந்தியா உடனடியாக சுதந்திரம் பெற்றாக வேண்டும், அதற்குரிய ஒரே வழி போர்! ஆம், போர் மட்டுமே” என்று முழங்கியவர் நேதாஜி.

இந்த குறிக்கோளை நிறைவேற்றும் விதமாகத் தான் இவர் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் நாட்டின் உதவியோடு இந்தியப் படைகளை எதிர்த்துப் போரிட்டார்.

பாரத தேவியின் கிழக்குக் கடற்கரை மாநிலமான ஒரிசாவில் கட்டாக் எனுமிடத்தில் 1897 ஜனவரி 23-ஆம் தேதி பிறந்தவர் சுபாஷ் சந்திர போஸ். இவரது தந்தையார் ஜானகிநாத் போஸ், தாயார் பிரபாவதி தேவி. இந்த தம்பதியரின் ஒன்பதாவது மகன் தான் நமது சுபாஷ்.

எட்டு சகோதரர்கள் ஆறு சகோதரிகள் என்று ஒரு பெரிய பட்டாளத்திற்கிடையில் வந்து பிறந்தவர். இவர்கள் வங்காளிகள். கல்கத்தாவில் 1913-இல் கல்லூரிப் படிப்பை முடித்தார். பின்னர் ராஜதானி கல்லூரியில் படிக்கும்போது ஒரு ஆங்கிலப் பேராசிரியர் இந்தியர்களை மோசமாக வர்ணித்துப் பேசியமைக்காக இவர் அவருடன் சண்டையிட்டதால் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

படிப்பை வேறொரு கல்லூரியில் முடித்துவிட்டு ஐ.சி.எஸ். படிக்க லண்டன் சென்றார். 1919-இல் நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலை இவரை மிகவும் பாதித்தது. சி.ஆர்.தாசைத் தன் அரசியல் குருவாகக் கொண்டவர். 1922-இல் பிரிட்டிஷ் இளவரசர் வருகையின்போது எதிர்த்துப் போராட்டம் நடத்தினார்.

இந்த சுபாஷ் சந்திர போஸ் 1938-ஆம் வருஷம் ஹரிபுரா எனுமிடத்தில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய தீவிரமான சிந்தனைகள் காந்திஜி தலைமையிலான மற்ற தலைவர்களுக்கு இவர் கட்சியை எப்படி நடத்திச் செல்வார் என்கிற அச்சத்தை ஏற்படுத்தியது. 1938-இல் சுபாஷ் காங்கிரஸ் தலைவராக ஆனபின்பு ரவீந்திரநாத் தாகூர் இவருக்குப் பாராட்டு விழா நடத்தி இவருக்கு ‘நேதாஜி’ எனும் பட்டத்தை வழங்கினார். அதுமுதல் இவர் ‘நேதாஜி’ என்றே அழைக்கப்பட்டார்.

1939-ஆம் ஆண்டு காங்கிரசுக்கு பட்டாபி சீத்தாராமையாவை தலைவராக ஆக்க மகாத்மாவால்    சிபாரிசு செய்யப் பட்டார். இவர் எழுதிய ‘காங்கிரஸ் சரித்திரத்தில்’ தமிழ்நாட்டு சுதந்திரப் போராளிகள் வ.உ.சி., சிவா, பாரதி போன்ற எவரையும் குறிப்பிடாதது பின்னாளில் வரலாறு எழுதிய ம.பொ.சிவஞான கிராமணியார் உள்ளிட்ட பலர் குறை கூறியிருக்கின்றனர்.

மகாத்மாவின் இமாலயத் தவறு

அத்தனை விசால புத்தி இல்லாத இவர் 1939-இல் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். காந்திஜி பட்டாபி சீத்தாராமையாவை ஆதரித்தார். தீவிர எண்ணங்கொண்ட நேதாஜியால் சுதந்திரப் போரை அகிம்சை வழியில் நடத்த முடியுமா என்கிற சந்தேகம் காந்திஜிக்கு உண்டு. எனவே அவர் பட்டாபியை சுபாஷுக்கு எதிராக நிறுத்தினார்.

ஆனால் அந்தத் தேர்தலில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வெற்றி பெற்றபோது காந்திஜி, “பட்டாபியின் தோல்வி என் தோல்வி” என்று பிரகடனப் படுத்தினார். அப்படிச் சொன்னதோடு அவர் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கினார். அந்த ஆண்டு நேதாஜி உருவாக்கிய காரியக் கமிட்டியில் நேரு உள்ளிட்ட பெருந்தலைவர்கள் இடம்பெற விரும்பவில்லை.

இந்தத் தேர்தல் குறித்து காங்கிரசார் காந்திஜியின் செயல் சரியே என்று வாதிடுகின்றனர். ஆனால் நேதாஜியைத் தலைமைப் பதவிக்கு வரவிடாமல் காந்திஜி தடுத்தார் எனவும் மற்றொரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர். நேதாஜி தொடர்ந்து காங்கிரஸ் தலைவராக இருந்திருந்தால் சுதந்திரம் இன்னமும் சீக்கிரம் கிட்டியிருக்கும் என்று சொல்பவர்களும் உண்டு.

ஹரிபுராவுக்கு அடுத்து 1939 மார்ச்சில் நடந்த திரிபுரா காங்கிரசில் தான் இத்தனை விவகாரங்களும் நடந்தன. சுபாஷ் சந்திர போசுக்கு உடல்நிலை கெட்டது. அத்துடன் அவர் கூட்டத்துக்கு வந்தார். அப்போது வல்லபபாய் படேல் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். நேரு உள்ளிட்ட காரியக்கமிட்டி பதவிகளை ராஜிநாமா செய்தவர்களிடம் நம்பிக்கை தெரிவித்தும், காந்திஜியின் ஆலோசனைப்படி புதிய காரியக் கமிட்டியை நேதாஜி நியமிக்க வேண்டுமென்றும் அந்தத் தீர்மானம் கூறியது. தன் கைகால்களைக் கட்டிவிட்டு செயல்படும்படி சொல்வதாக சுபாஷ் நினைத்தார். காந்திஜி இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

தனக்கு ஒத்துழைப்பு தராத காங்கிரசில் இருப்பதில் பயனில்லை என்று கருதி சுபாஷ் 1939 மே மாதம் 21-ஆம் தேதி கட்சியை விட்டு வெளியேறினார்.

அதன் பின்னர் அவருடைய வரலாறு ஒரு புரட்சி வரலாறு. அவர் தலைமறைவாகி நாட்டைவிட்டு வெளியேறி ரஷ்யா சென்றதும், ஜெர்மனிக்குச் சென்றதும் இந்திய தேசிய ராணுவம் உருவாக்கி அந்தமானில் சுதந்திரப் பிரகடனம் செய்ததும், ஜப்பான் வென்று சிறைப் பிடித்த சிப்பாய்களைக் கொண்டும், மேலும் பல இந்தியர்களைக் கொண்டும் இந்திய தேசிய ராணுவம் அமைத்து இந்தியாவை நோக்கி “சலோ தில்லி” என்று கொஹீமா வரை வந்ததும் வரலாற்றில் பதிந்துவிட்ட வீர சாகசங்கள்.

நேதாஜியைப் பற்றி ஒரிசாவைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஒருவர் எழுதியிருந்த கட்டுரையொன்றில் தெரிவித்த வரலாற்றுச் செய்தி இது.

நேதாஜி வீட்டினுள் சிறை வைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் அங்கிருந்து தப்பி எங்கேயோ சென்று விட்டதாகவும், பின்னர் அவர் ரஷ்யா சென்றதும் செய்தி வெளியாகின. ஆனால் அப்போது நடந்த வரலாற்றை அந்த கம்யூனிஸ்ட் தலைவர் விவரிக்கிறார்.

ஒரு நாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த எஸ்.ஏ.டாங்கே இந்த ஒரிசா தலைவரிடம் ஒரு வேலையை ஒப்படைத்தார். ஒரு சந்நியாசியை அவரிடம் ஒப்படைப்பதாகவும், ‘அவரை எப்படியாவது ரகசியமாக ஆப்கானிஸ்தான் வரை கொண்டு சேர்த்து ரஷ்ய எல்லையில் கொண்டு விட்டுவிட வேண்டும். செல்லும் வழியில் அவரைப் பற்றிய விவரங்கள் எதையும் அவரிடம் கேட்க வேண்டாம், தேவையானவற்றுக்கு மட்டும் அவரிடம் பேச்சு கொடுங்கள், மற்ற நேரங்களில் மெளனமாகவே அழைத்துச் செல்லுங்கள்’ என்று சொன்னார்.

அவரும் அந்த காவி அணிந்த துறவியை அழைத்துக் கொண்டு பல இடையூறுகளுக்கு மத்தியில் பயணம் செய்து ஆப்கானிஸ்தான் ரஷ்யா எல்லை வரை கொண்டு விட்டுவிட்டு வந்ததாகவும், பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் எஸ்.ஏ.டாங்கே சொல்லித் தான் அவர்தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்பதை அறிந்து கொண்டதாகவும் அவர் அந்தக் கட்டுரையில் எழுதியிருந்தார்.

அப்படி ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்று அங்குள்ள தலைவர்களைச் சந்தித்து, பின் ஜெர்மனி சென்று ஹிட்லரைச் சந்தித்து, பின்னர் இந்திய தேசிய ராணுவத்தை நிறுவியதெல்லாம் தனி வரலாறாகும்.

அவருக்கு உறுதுணையாக இருந்த பல தலைவர்களும், படை வீரர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் கேப்டன் லக்ஷ்மி எனும் சென்னையைச் சேர்ந்த வீராங்கனை குறிப்பிடத் தக்கவராவார்.

‘தில்லி சலோ’

இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக திரிபுராவில் நேதாஜி தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அவர் செயல்பட முடியாத விதத்தில் காந்திஜி, நேரு முதலான தலைவர்கள் அவரை நிர்பந்தித்த நிலையில் வேறு வழியின்றி காங்கிரசிலிருந்து வெளியேறி அவர் தனிக் கட்சி தொடங்கினார்.

இந்தியாவை படைபலம் கொண்டு வெற்றி பெற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். அதற்காக ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் சென்று அந்தந்த நாட்டுத் தலைவர்களோடு பேசினார்.

அந்த முயற்சியில் இவருக்கு ராஷ் பிகாரி போஸ் எனும் புரட்சிக்காரரின் தொடர்பு ஏற்பட்டது. அவர் உருவாக்கிய இந்த ஐ.என்.ஏ.வுக்கு 1943-இல் நேதாஜி சுபாஷ் தலைமை ஏற்றார். சிங்கப்பூரில் இவர் இந்தியாவுக்கான ஒரு தற்காலிக அரசை 1943, அக்டோபர் 21-இல் தொடங்கி இந்தியாவை பிரிட்டிஷாரிடமிருந்து மீட்க ஒரு போருக்கு ஆயத்தமானார்.

இவருடைய ஐ.என்.ஏ. ‘ஆசாத் ஹிந்த் பவுஜ்’ என்றும் பெயர் பெற்றது. இவர் ஸ்தாபித்த தற்காலிக இந்திய அரசை ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளால் வெல்லப்பட்ட ஒன்பது நாடுகள் அங்கீகரித்தன. இந்த படையில் சுமார் 40,000 வீரர்கள் இருந்தனர். இவர்களில் பெரும்பாலோர் தென்கிழக்கு ஆசியாவில் குடிபெயர்ந்த இந்தியர்கள்;  ஜப்பானால் இந்திய படைகளிலிருந்து சிறை பிடிக்கப்பட்டவர்கள். அவர்களில் பெரும்பாலோர் தமிழர்களும் சீக்கியர்களும் இருந்தனர்.

ஜப்பான் படை பர்மாவைப் பிடித்தவுடன் ஐ.என்.ஏ.வும் அவர்களோடு சேர்ந்து இந்தியாவை நோக்கி ‘தில்லி சலோ’ என்று போர் பேரணியாகச் சென்றனர்.

இவர்களுடைய சுதந்திர ஆசாத் ஹிந்த் ராஜ்யம் 1943 டிசம்பரில் அந்தமான் தீவில் நேதாஜியின் சொற்பொழிவுடன் ஸ்தாபிக்கப்பட்டது. 1944 ஏப்ரல் 18-ஆம் தேதி இந்தப் படை மணிப்பூரில் மொய்ரங் எனும் நகரைக் கைப்பற்றியது.

அப்போது ஜப்பான் படைக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதால் அவர்களது உதவி ஐ.என்.ஏ.வுக்குக் கிடைப்பதில் சிரமங்கள் ஏற்பட்டது. இவர்களுடைய இந்தியாவை விடுவிக்கும் நோக்கம் தோற்றுப் போனது. இவர்களைக் கைது செய்து தில்லி செங்கோட்டையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வரலாறு உலகறியும்.

உலகப் போர் முடிவை நெருங்கிக் கொண்டிருந்த சமயம் நேதாஜி ஜப்பானுக்கு விமானத்தில் சென்றபோது காணாமல் போனார். இவர் தைபே விமான நிலையத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்துவிட்டதாக ஒரு செய்தியும், இல்லை இவர் உயிரோடு தான் இருக்கிறார் என்றொரு சாராரும் சொல்லி வரும் நேரத்தில், இவர் என்ன ஆனார் என்பது இன்னமும் மர்மமாகவே இருந்து வருகிறது.

குறிப்பு:

திரு. தஞ்சை வெ.கோபாலன், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில துணைத் தலைவர். அவரது ‘ஸ்வதந்திர கர்ஜனை’ நூலின் 2வது பாகம்- 16வது அத்தியாயமே இக்கட்டுரை.

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in தை-2018 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s