6.7 கவிஞர் வைரமுத்துவுக்கு 11 கேள்விகள்.

-சுகி.சிவம்

 தமிழன்னை ஆண்டாளை கவிஞர் வைரமுத்து அவதூறாகப் பேசியதற்கு தமிழ்நாடெங்கும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. அப்போது ஆன்மிகப் பெரியோர் பலரும் இதுவரை கானாத வகையில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

பிரபல மேடைச் சொற்பொழிவாளர் திரு. சுகி.சிவம் எழுதிய ‘அத்துமீறல் ஓர் அலசல்’  என்ற தலைப்பிட்ட கேள்விகளை இங்கு காண்போம்:

பரந்த வாசிப்பும், சிறந்த மொழித்திறனும்,  சொந்த சிந்தனைகளும்  உடைய மதிப்புறு மனிதர் கவிஞர் வைரமுத்து என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால், ஆண்டாள் குறித்த கட்டுரையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளிப்படுத்தியதால், அவரிடம் சில கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது:

 1. இண்டியானா பல்கலைக்கழகத்தின் (?) ஆய்வு செய்தியைப் பதிவிடும்போது – அதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் எழுதாமல் நழுவியது ஏன்? இது தவறு, அல்லது சரி என்று காரண காரியங்களுடன் எழுத வேண்டியது நேர்மையான இலக்கியவாதியின் கடமை அல்லவா? அந்த நேர்மை உங்களிடம் இல்லாமல் போனது ஏன்?

 1. ‘கோட்டுக்கால் கட்டிலின்மேல்’ என்ற பாசுரத்திற்கு உரைதாரர் விளக்கங்களை ‘தீராப் புலமையின் திமிர் காட்டி’ என்று கண்டுபிடிக்க முடிந்த உங்களால், பல்கலைக்கழக ஆய்வு மட்டும் தவறு என்று கண்டுபிடிக்க முடியாமல் போனது ஏன்?
 1. பலரது பலகால நம்பிக்கைகளுக்குப் பகையாக ( முரணாக அல்ல) ஒரு செய்தியை எழுதும்போது தக்க ஆதாரங்களையும், நிரூபணங்களையும் தந்திருக்க வேண்டும். மேம்போக்கான மேற்கோள் எவ்வாறு ஆதாரமாக – நிரூபணமாக முடியும்? ஆண்டாள் ஸ்ரீரங்கத்தில், அவ்வாறு வாழ்ந்து காலம் கழித்தாள்  என்பதற்கு என்ன சான்றுகளைச் சேகரித்தீர்கள்?
 1. பக்தி இலக்கியம் பற்றி ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் எழுதிக் கொண்டிருக்கும் நீங்கள், பகுத்தறிவு நண்பர்களின் கண்டனங்களில் இருந்து தப்ப, அவர்களை திருப்திப்படுத்த இப்படியொரு சாமர்த்தியத்தைக் கையாண்டீர்களா?
 1. சமண – பௌத்த சமயங்களின் கடுநெறிகளுக்கு மாறான துய்ப்பின் கதவுகளைத் திறந்துவிட்ட அக்கால மதநெறிகளின் குறியீடு -ஆண்டாள் என்கிறீர்கள். இது பிழை.

சமண – பௌத்த மதங்களால் வாழ்க்கை இறுக்கமானதும், பக்தி இயக்கங்கள், அதனைத் தளர்த்த முயன்றதும் வரலாற்று உண்மை என அறிவேன். ஆனால் துய்ப்பு நெறி சமயத்தின் செய்தி அன்று. நுட்பமான வேறுபாடு தெரிய வேண்டும். உலகியல் துய்ப்பினும் பரம்பொருள் துய்ப்பே மேலானது என்கிற அணுகுமுறையே ஆண்டாளின் செய்தி.

இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு

உற்றோமே யாவோம் உமக்கே நாம் ஆட் செய்வோம்

மற்றை நம் நாமங்கள் மாற்று”

-என்கிறாள் ஆண்டாள். ‘மற்றை நம் காமங்கள் மாற்று’ என்பது உலகியல் துய்ப்புக்கு எதிரான  நிலைப்பாடு அல்லவா?

 1. உண்மையில் ஆண்டாளின் தமிழ், ‘கடவுளைக் காதலிக்கும் அச்சமற்ற அழகியல் உணர்வின் உச்சபட்ச வெளிப்பாடு’. ஆன்மாவின் அனுபவத்தை சரீரத்தின் சுகமாகவும் சொல்ல முயன்ற முயற்சி. கடினமானதாகக் கண்டறியப்பட்ட கடவுள் தத்துவத்தை, கலவி, காமம், காதல் என்கிற விஷயத்தை, சுகநிலையில் பேச முடியும் என்று நிரூபித்தகவிதாயினியின் சாதனை அது. முக்தி என்று சூன்ம விடுதலை பேசிய ஒரு சமயத்தின் முழுச் சுதந்திரம் வெளிப்படுத்திய தமிழ்- கோதைத் தமிழ். ஆண்டாளின் தமிழ் பதிமூன்று நூற்றாண்டுகளைக் கடந்தும் உயிர் வாழ்கிறது. ஆனால், அடுத்த நூற்றாண்டு வரை உங்கள் கவிதைகள் தாக்குப் பிடித்தால், அதுவே பெரிய விஷயம் என்பது புரிய வேண்டாமா?
 1. அர்ச்சாவதாரத்தோடு எலும்பும் சதையுமுடைய பெண் எவ்வாறு கலக்க முடியும் என்று அறிவுக் கேள்வி எழும்புமானால், இறைபணியிலும், கோயில் பணியிலும் காலம் கழித்து கரைந்து கலந்த திலகவதியார் போல, ஸ்ரீரங்கத்தில் ஆண்டாள் வாழ்ந்திருக்க்க் கூடும் என்று எழுதி இருந்தால் சமய உலகம் இவ்வளவு கொதிப்படைந்து இருக்காதே?
 1. உங்கள் வார்த்தைத் தேர்வில், வன்மம், குரூரம், மெல்லிய வஞ்சகம் வெளிப்படுவதாகவே பக்தர்கள் வருந்துகிறார்கள். குருதி, இறைச்சி என்ற சொற்களில் எந்தப் பிழையும் இல்லையென்றாலும், ‘ஊணினை உருக்கி’ என்ற மணிவாசகரையும், ‘தசையினைத் தீச்சுடினும்’  என்கிற பாரதியையும் நீங்கள் ஒருமுறை கூர்ந்து கவனிப்பது அவசியம். சமய உலகிற்கென்று மரபு இருக்கிறது. நீங்கள் நாத்திகராக அறியப்பட்டவர். அப்படி இருக்க, காயப்படுத்தும் வார்த்தைகளில் கவனம் காட்டத் தவறியது ஏன்? இதுதான் பகுத்தறிவா?
 1. வைணவக் குடும்பங்களில் ஒவ்வொரு பெற்றோரும் தம் மகளை ஆண்டாளாக பாவித்து, ஆண்டாள் கொண்டையிட்டு, மாப்பிள்ளையை ரங்க மன்னாராக்கி மணமுடித்துக் கொடுப்பதே வழக்கம். பெற்ற தகப்பன் பெரியாழ்வாராவது அந்த ஒரு கணம்… ஒரே கணம். அந்த அழகான கனவை அசிங்கமான பதிவால் கலைத்து என்ன நன்மை பெறுகிறீர்கள்?
 1. சாதிக் கட்டுமானம் காரணமாக ஆண்டாளை சமூகம் நிராகரிப்புச் செய்திருக்கலாம் என்பது அபத்தமான கற்பனை. அவளை வீட்டுக்குள் வரவேற்காத சமூகம், கோயிலுக்குள் குடியேற்றிக் கொண்டாடி இருக்குமா என்ன? கடவுளையே மணப்பேன் என்கிற ஆண்டாள் ‘பெரிதினும் பெரிது கேள்’ என்கிற பாரதியின் முன்னோடி. சமூக நிராகரிப்பு என்ற வார்த்தைகளால் அவளது உச்சபட்ச உயரத்தைக் கொச்சைப்படுத்த வேண்டுமா என்ன? கள்ளழகனுக்கு நிவேதனம்கூட நூறு அண்டா வெண்ணெய், நூறு அண்டா சர்க்கரைப் பொங்கல் படைப்பதாக, பெரிதினும் பெரிது குறித்துப் பேசிய பெண்பிள்ளை அவள். உள்ளூர் மாப்பிள்ளைகளை ஒதுக்கிவிட்டு வைகுந்தவாசிக்கு வாழ்க்கைப்பட நினைத்ததே ஆண்டாளின் தனிச் சிறப்பு அல்லவா?
 1. கட்டுரை முழுவதும் ஆண்டாளை வெளிப்படுத்தும் அக்கறையை விட உங்கள் பரந்த புலமையை வெளிப்படுத்தும் வேகமே வெளிப்படுகிறது. நாத்திகராக இருப்பது உங்கள் சௌகர்யம். ஆனால், அதற்காக ஆண்டாளிடமிருந்து கடவுளைக் கழித்த பிறகு என்று கட்டுரையை முடித்திருக்க வேண்டாமே. இறைநிலையை ஆண்டாளிடம் இருந்து அழிக்க முடியாது. அழித்த பின் ஆண்டாள் அங்கே இருக்க முடியாது. ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா வாங்கி வந்து, பால்கோவாவை எறிந்துவிட்டு பிளாஸ்டிக் பையைச் சேகரிக்கும் உங்கள் முயற்சியை பைத்தியக்காரத்தனம் என்று சொல்லாமல், பாராட்டவா முடியும்? நாத்திகர்களைத் திருப்தி செய்ய ஆத்திகர்களை வலிக்கச் செய்வது விவேகமா கவிஞரே?

 

 

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in தை-2018 and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s