5.5 சிறுதொழில் வளர்ச்சிக்கு சீரிய முயற்சி

பத்மன்

 

(நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, பொருளாதார வளர்ச்சிக்கு எதுவுமே செய்யவில்லை என்ற புகார் அண்மைக்காலமாக எழுப்பப்படுகிறது. அது உண்மையல்ல. குறிப்பாக, சிறு, குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளின் தொகுப்பே இக்கட்டுரை.)

சிறுதுளி பெருவெள்ளம் என்பது மூதுரை. அதற்கேற்ப இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் சிறுதொழில்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை ஆங்கிலத்தில் எம்எஸ்எம்இ என்று சுருக்கமாக அழைப்பார்கள். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த எம்எஸ்எம்இ துறையின் பங்கு 8 சதவீதம். அதேநேரத்தில் நாட்டில் உற்பத்தியாகும் மொத்தப் பொருள்களின் அளவில் எம்எஸ்எம்இ துறை உற்பத்தியின் பங்கு 45 சதவீதம், அதேபோல நாட்டின் மொத்த ஏற்றுமதியில் எம்எஸ்எம்இ துறையின் பங்கு 40 சதவீதம்.

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களான எம்எஸ்எம்இ நிறுவனங்களின் மற்றொரு சிறப்பு, அதிகப் பேருக்கான வேலைவாய்ப்பு. ஒருசில பெரிய நிறுவனங்களில் ஆங்காங்கே கணிசமான பேருக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்புகளைவிட நாடு முழுவதிலும் பரவலாக இயங்கிவரும் பல்வேறு சிறுதொழில் நிறுவனங்களால் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. அண்மைக்கால புள்ளிவிவரம் ஒன்றின்படி, நாட்டில் இயங்கிவரும் 2 கோடியே 60 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்களால் 6 கோடிப் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

பொருள் உற்பத்தித் துறையைப் பொருத்தவரை 25 லட்சம் ரூபாய் வரையிலான முதலீடு உள்ள நிறுவனங்கள் குறு நிறுவனங்களாகவும், 25 லட்சம் முதல் 5 கோடி ரூபாய் வரை முதலீடு உள்ள நிறுவனங்கள் சிறு நிறுவனங்களாகவும், 5 கோடி முதல் 10 கோடி ரூபாய் வரை முதலீடு உள்ள நிறுவனங்கள் நடுத்தர நிறுவனங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரத்தில், சேவைத் துறையைப் பொருத்த வரை 10 லட்சம் ரூபாய் வரை முதலீடு உள்ளவை குறு நிறுவனங்களாகவும், 10 லட்சத்துக்கு மேல் 2 கோடி ரூபாய் வரை முதலீடு உள்ளவை சிறு நிறுவனங்களாகவும், 2 கோடிக்கு மேல் 5 கோடி ரூபாய் வரை முதலீடு செய்பவை நடுத்தர நிறுவனங்களாகவும் கருதப்படுகின்றன.

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமின்றி, அந்த வளர்ச்சி கடையனுக்கும் கிடைக்கும் வகையிலான சமச்சீர் வளர்ச்சியாகவும் இருப்பதற்கு குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களே பெரிதும் உதவிகரமாக உள்ளன. வேலைவாய்ப்புகளை மட்டுமின்றி சுயவேலைவாய்ப்புகளையும், சிறு சிறு தொழிலதிபர்கள் உருவாவதையும் இவ்வகை நிறுவனங்களே பெரிதும் ஊக்குவிக்கின்றன. இத்தகைய சிறுதொழில் துறையின் சீரான வளர்ச்சிக்கு நமது மத்திய அரசு சிறப்பான பல திட்டங்களைத் தற்போது தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

இத் திட்டங்களுக்கு முன்னோடியாக, இந்தியப் பொருளாதாரச் சிங்கத்தை அதன் வலிமையை உணர்ந்து கர்ஜிக்க வைப்பதைப்போன்ற திட்டம் ஒன்றை பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தது. அதுதான் ‘மேக் இன் இந்தியா’ அதாவது இந்தியாவில் தயாரிப்போம் திட்டம். அன்னிய நேரடி முதலீடுகளை இந்தியத் தொழில்துறையின் பக்கம் திருப்புவதற்காகவே இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. நாட்டின் முக்கியமான 25 தொழில் துறைகளில் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துவதுடன் வேலைவாய்ப்புகளையும் பெருக்குவதே இத்திட்டத்தின் மைய நோக்கம். இத்திட்டத்தின் மூலம் அயல்நாட்டுப் பெரிய நிறுவனங்கள் அதிக அளவிலான முதலீடுகளுடனான தொழில் திட்டங்களை இந்தியாவில் தொடங்க முன்வந்தன. இதன் மறைமுகப் பயனாக, இந்தியாவில் முதலீடு செய்யும் பெரிய நிறுவனங்களிடமிருந்து அவற்றுக்கான கருவிகளைத் தயாரிப்பதற்கும், தொழில்நுட்ப உதவிகளை அளிப்பதற்குமான துணை ஒப்பந்தங்களை இந்திய எம்எஸ்எம்இ நிறுவனங்கள் பெறத் தொடங்கின. வெளிநாட்டுப் புதிய தொழில்நுட்பங்களை இந்தியச் சிறுதொழில் நிறுவனங்கள் எளிதில் பெறுவதற்கான வாய்ப்பாகவும் இது அமைந்துள்ளது.

அதேநேரத்தில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சியடைவதற்கான நேரடித் திட்டங்களை கடந்த 2015, 2016 -ஆம் ஆண்டுகளில் அரசு அடுக்கடுக்காக அறிவித்தது. அதில் முதலாவதாகக் குறிப்பிடத் தகுந்தது,  ‘உத்யோக் ஆதார் மெமோரண்டம்’ எனப்படும் தொழில் ஆதார் பதிவுத் திட்டம். எம்எஸ்எம்இ மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் இத்திட்டம் கடந்த 2015 செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான பதிவுகளை மிகவும் எளிமைப்படுத்தியது இத் திட்டம். அதுவரை இருந்த ‘என்டர்பிரீனியர்ஸ் மெமொரண்டம்’ எனப்படும் தொழில்முனைவோர் பதிவுத் திட்ட முறை மிகவும் சிக்கலானதாகவும் கடினமானதாகவும் இருந்தது. இதன்கீழ் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான பதிவு பெற பல்வேறு படிவங்களைப் பூர்த்தி செய்வதோடு, பல்வேறு ஆவணங்களையும் இணைக்க வேண்டி இருந்ததால் மிகுந்த கால விரயமும் ஆனது.

மேலும் இத்திட்டத்தின்கீழ் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் படிவங்களை கையால் எழுதி பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் மிகப் பழமையான நடைமுறையே இருந்தது. இந்தக் கஷ்டங்களை எல்லாம் உடைத்தெறிந்தது, யுஏஎம் என்று சுருக்கமாக அழைக்கப்படும் தொழில் ஆதார் பதிவுத் திட்டம். இதன்படி ஒரேயொரு பக்கத்தில் தன்னைப் பற்றியும் தனது தொழிலைப் பற்றியுமான  விவரங்களை தொழில்முனைவோர் ஆன்லைனில் நிரப்பினாலே போதுமானது. இதற்கு எவ்வித ஆவணங்களையும் இணைக்கத் தேவையில்லை, சுய ஒப்புகையே போதும். இந்தப் பதிவையடுத்து அப்போதே அவருக்கென பிரத்யேக யுஏஎன் எனப்படும்  ‘உத்யோக் ஆதார் எண்’ கிடைத்துவிடும். உடனடியாக அவர் தொழிலைத் தொடங்கிவிடலாம். இவ்வாறு எம்எஸ்எம்இ நிறுவனங்கள் தொடங்குவதை எளிமைப்படுத்துவதற்கான யோசனை, பிரதமர் திரு. மோடிக்கு, கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற மன் கீ பாத் – மக்களுடன் மனம்விட்டுப் பேசும் உரை நிகழ்ச்சியால்தான் கிடைத்தது; உடனடியாக அமலுக்கும் வந்தது.

அடுத்ததாகக் குறிப்பிட வேண்டிய திட்டம், எம்எஸ்எம்இ நிறுவனங்களைப் புதுப்பிப்பதற்கும் மறுசீரமைப்பதற்குமான நெறிமுறைகள் அறிவிப்பு. எம்எஸ்எம்இ நிறுவனங்களில் சில – முதலீடு, மூலப்பொருள் அல்லது தொழில்நுட்பப் பற்றாக்குறை காரணமாக மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படுவதுண்டு. இதுபோன்ற நிறுவனங்களில், குறிப்பிட்ட நிறுவனம் நலிவடைந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்டு, உரிய இழப்பீட்டுடன் மூடப்படுவதற்கோ அல்லது மறுசீரமைப்பதற்கோ முடிவெடுப்பதற்கு சுமார் நாலரை ஆண்டுகள் பிடிப்பது வழக்கம். இந்த வழக்கத்தை மாற்றி தூக்கி எறிந்தது, எம்எஸ்எம்இ புதுப்பிப்பு மற்றும் மறுசீரமைப்பு நெறிமுறைத் திட்டம். இதன்படி பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் நலிவடைந்த நிறுவனமாக விரைந்து அறிவிக்கப்பட்டு, அவற்றைப் புதுப்பித்து, மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளும் துரிதமாக எடுக்கப்பட வழிபிறந்தது.

எம்எஸ்எம்இ நிறுவனங்கள் நலிவடைவதற்கு முக்கிய காரணம் அவற்றுக்குப் போதிய மூலதனம், நிதி ஆதாரங்கள் கிடைக்காமையே. இதனைச் சரிசெய்வதற்கும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதன் பயனாக உருவானதுதான் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கும் சி.ஜி.டி.எம்.எஸ்.இ. எனப்படும் கடன் உத்தரவாத நிதிக் கட்டளைத் திட்டம். சிறு, நடுத்தர நிறுவனங்களை நடத்துவோர், தாங்கள் ஏற்கெனவே வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கும்போது, இத்திட்டத்தின் கீழ் எவ்வித சொத்தையும் பிணையாக வைக்காமல் தேவைப்படும் நிதியில் 85 சதவீதம் வரை பெறலாம். சிறு, நடுத்தர நிறுவன உரிமையாளர்களுக்கு நம்பிக்கையுடன் கைகொடுக்கும் இத் திட்டம், அவர்களை கடன் சுமைகளால் நசுங்குவதிலிருந்து காப்பாற்றுகிறது. இத் திட்டம் அறிவிக்கப்பட்ட 2015-ஆம் நிதியாண்டின் முதல் 7 மாத காலத்திலேயே சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர்,  ரூ. 11,446 கோடி வரை நிதியுதவி பெற்று, கடன் சுமையில் இருந்து மீண்டுள்ளனர் என்றால், இதன் பயனை நாம் எளிதில் உணர்ந்துகொள்ளலாம்.

தேவைப்படும் இயந்திரங்களை வாங்குவதற்குப் போதிய மூலதனம் இல்லாத காரணத்தால், பல சிறுதொழில் நிறுவனங்கள் அவதிப்பட நேர்வதுண்டு. இந்தத் துயரத்தைக் களைய மலர்ந்தது, சி.சி.எல்.எஸ்.எஸ். எனப்படும் கடனுதவியோடு இணைந்த மூலதன மானியத் திட்டம். இத்திட்டத்தின்கீழ் சிறுதொழில் நிறுவனங்களுக்கு தங்களுக்குத் தேவையான இயந்திரங்கள், தளவாடங்களை வாங்க ஒரு கோடி ரூபாய் வரை கடனுதவியாகப் பெறலாம். இதில் 15 லட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும். அதாவது இந்த 15 லட்சம் ரூபாயை அவர்கள் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை, மீதிப் பணத்தை தவணை முறையில் சிறு வட்டியுடன் திருப்பிச் செலுத்தினால் போதும். 2015-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்துக்கு புதிய உத்வேகம் அளிக்கும் வகையில் நடப்பாண்டு, அதாவது 2017-ஆம் ஆண்டில் புத்தாண்டுப் பரிசாக ஓர் அறிவிப்பை பிரதமர் வெளியிட்டார். அதன்படி இத்திட்டத்தின் கீழான கடனுதவி 2 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதன்மூலம் 30 லட்சம் ரூபாய் வரை மானியமாகப் பெறவும் வழிபிறந்தது. மேலும், சிறுதொழில் நிறுவனங்களுக்கு அவற்றின் விற்பனை வருமானத்தில் 20 சதவீதம் வரை வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டு வந்ததை, 25 சதவீதமாக உயர்த்தி, இத் துறையினருக்கு மற்றொரு புத்தாண்டுப் பரிசையும் பிரதமர் வழங்கினார்.

கடன் சுமையில் இருந்து சிறுதொழில் முனைவோர் மீளவும், மானியத்துடன் அவர்கள் இயந்திரங்கள் வாங்கவும் உதவுகின்ற மத்திய அரசு, புதிதாக சிறுதொழில் நிறுவனங்களைத் தொடங்கி பலருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கும் வகை செய்ய மற்றோர் சீரிய திட்டத்தை அறிமுகம் செய்தது. அதுதான், பி.எம்.இ.ஜி.பி. எனப்படும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம். இத் திட்டத்தின்கீழ் பொருள் உற்பத்தித் துறையில் புதிய சிறுதொழில் நிறுவனங்களைத் தொடங்க 25 லட்சம் ரூபாய் வரையும், சேவைத் துறையில் இத்தகு நிறுவனங்களை ஆரம்பிக்க 10 லட்சம் ரூபாய் வரையும் கடனுதவி வழங்கப்படுகிறது. இத் திட்டமும், மானிய உதவியுடன் கூடியதே. இதன்படி, கிராமப்புறங்களில் சிறுதொழில் நிறுவனங்களைத் தொடங்குவோருக்கு கடனுதவியில் 25 சதவீதம் வரை மானியமாக  வழங்கப்படுகிறது. இதுவே, அவர்கள் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் போன்ற நலிந்த பிரிவினராக இருந்தால் 35 சதவீதம் வரை மானியமாகப் பெறலாம். நகர்ப்புறங்களில் சிறுதொழில் நிறுவனங்களைத் தொடங்குவோருக்கு 15 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. நலிவடைந்த பிரிவினர் என்றால், 25 சதவீதம் வரை மானியம் பெறலாம்.

இத்தகைய கடனுதவித் திட்டங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல அமைந்தது முத்ரா வங்கி குறித்த அறிவிப்பு. கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, 2015-2016-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பொது பட்ஜெட்டில், இத்திட்டம் அறிவிக்கப்பட்டு, உடனடியாக அமலுக்கு வந்தது. சிறு நிறுவனங்கள் மேம்பாடு மற்றும் மறுநிதியுதவி முகமை வங்கி என்பதன் சுருக்கமே முத்ரா வங்கி. நான்-கார்ப்பரேட் எனப்படும் முறைசாரா சிறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இந்த முத்ரா வங்கித் திட்டம் பெரிதும் துணைநிற்கிறது. புதிதாக சிறுதொழில் நிறுவனங்கள் தொடங்கப்படவும், ஏற்கெனவே இயங்குகின்ற இத்துறை நிறுவனங்கள் வளர்ச்சி அடையவும், இவற்றின் மூலம் வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் கடனுதவி வழங்குவதே முத்ரா வங்கிக் கடனுதவித் திட்டத்தின் நோக்கம்.

இத் திட்டத்தின் கீழ் பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட பொதுத் துறை வங்கிகளும், கார்ப்பரேஷன் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகிய தனியார் வங்கிகளும் சிறுதொழில் நிறுவனங்களுக்கு முத்ரா கடனுதவியை வழங்கி வருகின்றன. இந்தத் திட்டத்தின்கீழ் சிறுதொழில் முனைவோருக்குக் கடனுதவி வழங்க ஒரு மத்திய அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இத்திட்டத்தின்படி, மூன்று வகைகளில் வங்கிகள் முத்ரா கடனுதவியை வழங்குகின்றன அவை சிசு, கிஷோர், தருண் என்று அழைக்கப்படுகின்றன. இதன்படி, சிசு பிரிவின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் வரையில் சிறுதொழில் நிறுவனங்களுக்குக் கடனுதவி அளிக்கப்படுகிறது. கிஷோர் பிரிவின் கீழ் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் 5 லட்சம் ரூபாய் வரையிலும், தருண் பிரிவின் கீழ் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் 10 லட்சம் ரூபாய் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது.

கடந்த 2015-2016-ஆம் நிதியாண்டில் முத்ரா வங்கிக் கடனுதவித் திட்டத்தின்கீழ் மூன்றரைக் கோடி சிறுதொழில் முனைவோருக்கு மொத்தம் 1.22 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு 2016-2017-ஆம் நிதியாண்டில் மொத்தம் ஒரு 1.80 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயனாளிகளின் எண்ணிக்கையும் இதற்கேற்ப கணிசமாக அதிகரிக்கும்.

நிதி இருந்தால் மாத்திரமே தொழில்கள் வளர்ச்சி அடைந்துவிடாது. அதற்கு மதியும் வேண்டும். அதற்கும் மத்திய அரசு பல திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறது. அவற்றில் குறிப்பிடத் தகுந்தது, கிராமப்புறங்களில் தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் ஆஸ்பைர் எனப்படும் புத்தாக்க ஊக்குவிப்பு, ஊரகத் தொழில்- தொழில்முனைவுத் திட்டம். கிராமத் தொழில்கள் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களில் ஏராளமான தொழில்முனைவோரை உருவாக்கும் நோக்கிலான இத்திட்டத்துக்காக மத்திய அரசு 210 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது. கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் 16-ஆம் தேதி தொடங்கப்பட்ட இத் திட்டத்தின்கீழ் கிராமங்களில் தொழில்நுட்ப மையங்களும், தொழில் வளர்ப்பு மையங்களும் செயல்படுகின்றன. இதற்கான நிதியுதவி சிட்பி எனப்படும் இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி மூலம் வழங்கப்படுகிறது. இந்த மையங்கள் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படுவதோடு, அவர்களைத் தொழிலதிபர்களாக உயர்த்துவதற்கான பயிற்சிப் பட்டறைகளும் நடத்தப்படுகின்றன.

ஆஸ்பைர் போன்ற மற்றொரு திட்டம்தான் ஸ்ஃபுர்த்தி எனப்படும் பாரம்பரியத் தொழில் மறுஉருவாக்க நிதித் திட்டம். பாரம்பரிய முறையில் பண்டங்களைத் தயாரிக்கும் கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்பம் உள்ளிட்ட உதவிகளை வழங்கவும், அவர்களது தயாரிப்புகளை சந்தைப்படுத்தவும் இத் திட்டம் கைகொடுக்கிறது. இத் திட்டத்தின் கீழ் 2015-ஆம் ஆண்டில் 62 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, சுமார் 100 பாரம்பரியத் தொழில் ஊக்குவிப்புத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதேபோல சிறு, நடுத்தர தொழில்முனைவோர்களிடையே போட்டியிடும் திறனை ஊக்குவிப்பதற்காக எல்.எம்.சி.எஸ். எனப்படும்கழிவுநீக்க உற்பத்தி போட்டித்திறன் திட்டம் என்ற புதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் சிறுதொழில் முனைவோருக்கு தொழில் நடத்துவதில் உள்ள தேவையற்ற சுமைகளை அகற்றி, தேவைப்படுகின்ற மொத்த உற்பத்தியாக்க பராமரிப்பு, தரப்படுத்தப்பட்ட செயலாக்க நடைமுறைகள், கன்பான் சிஸ்டம், வால்யூ சிஸ்டம் மேப்பிங், கெய்ஸன் உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதிலும் சுமார் 200 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் புதிய தொழில்முனைவோரை உருவாக்குவதற்காக  ‘ஸ்டார்ட்அப் இந்தியா’ எனப்படும்  ‘தொடங்கிடு இந்தியா’ திட்டத்தை பிரதமர் திரு. மோடி, கடந்த 2015-ஆம் ஆண்டு சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர், மகளிர் ஆகிய நலிந்த பிரிவினரை சிறப்பாக ஊக்குவிப்பதற்காக ‘ஸ்டாண்ட்அப் இந்தியா’ எனப்படும் ‘எழுந்திடு இந்தியா’ திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மூலதனம், தொழில்நுட்பம், தொழிலைத் தொடங்குவதற்கான தொழில்முனைவோரின் துணிவு – அறிவு ஆகியவை மட்டுமே தொழிலை நடத்திவிடப் போதுமானதாக இருக்காது. அத்தொழில் ஈடுபடுகின்ற, வேலைவாய்ப்பு பெறுகின்ற தொழிலாளர்களுக்கும் போதிய தொழில்நுட்பத் திறனும், திறமையும் இருந்தால்தான் அத் தொழில் நன்கு வளர்ச்சி அடையும். இதை உணர்ந்துதான்  ‘ஸ்கில் இந்தியா’ எனப்படும் ‘திறன்மிகு இந்தியா’ என்ற திட்டத்தையும் 2015-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று பிரதமர் திரு. மோடி தொடங்கிவைத்தார்.

இத்திட்டத்தின்கீழ், 40 கோடி இந்தியர்களுக்குத் தேவையான, பல்வேறு தொழில் சார்ந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத் திட்டத்தின்கீழ் என்.எஸ்.டி.எம். எனப்படும் தேசிய திறன் மேம்பாட்டு ஆணையம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுக்கான தேசியக் கொள்கை, பிஎம்கேவிஒய் என்றழைக்கப்படும் பிரதமரின் தொழில் திறன் மேம்பாட்டுத் திட்டம், தொழில் திறன் கடனுதவித் திட்டம், ஊரக இந்தியா திறன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் இதுபோன்ற பல்வேறு திட்டங்களின் உதவியுடன் சிறுதொழில் வளர்ச்சி வாயிலாக இந்தியா சீரும் சிறப்புமாய் திகழும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

 

குறிப்பு:

பத்மன்

 திரு. பத்மன், மூத்த பத்திரிகையாளர்; விண் தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியராக உள்ளார்.

 

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஐப்பசி-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s