5.4 நாம் கண்ட தெய்வம்

இசைக்கவி ரமணன்

காஞ்சி மகா பெரியவர் ஆராதனை நாள்: மார்கழி -விசாகம்

 

அறமொன்றே தன்கடனாய் அன்பொன்றே தன்னியல்பாய்

பிறர்நலமே தினம்விழையும் பெரும்பண்பே தன்மூச்சாய்

இறையொன்றே தன்நினைப்பாய் இகத்தினிலே பரவிளக்காய்

கறையகற்றிக் கலமேற்றிக் கரையேற்றும் அருட்கரமாய்

 

நம்மிடையே தோன்றி நம்மோடே வாழ்ந்து

நாளெல்லாம் இரவெல்லாம் நம்நலமே நாடி

இம்மையில் மறுமையை இறக்கி நமைக்காக்க

எங்கிருந்தோ இங்குற்ற ஏழைப் பங்காளனை

 

காஞ்சியில் சுடர்வீசும் கயிலைத் திருவிளக்கை

காலால் நடந்துவந்த கண்கண்ட கடவுளை

தீஞ்சுவைத் தமிழால் சித்தத்தில் வைத்தேற்றி

திசைவியக்கும் பெருமுனியின் திறம்பேச வந்துநின்றேன்! 

***

உலகம் நலமாய் வாழ வேண்டும் என்றால், பாரதம் வாழ வேண்டும். பாரதம் வாழ வேண்டும் என்றால் அதன் தர்மமும் அது சார்ந்த மரபுகளும் பாதுகாக்கப்பட வேண்டும். தர்மத்திற்கு வேதமே வேர். அந்த வேரில் நீரூற்றி, பணமே பெரிதென அலையும் உலகில் எளிமையே ஏற்றமென வாழ்ந்துகாட்டி வழிசொல்ல வந்த அவதாரமூர்த்திதான் நாம்   ‘மஹா பெரியவா’ என்று அன்புடன் அழைக்கும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

விழுப்புரம் அருகிலுள்ள நவாப்தோப்புக்கு அருகில் 1894 ஆம் ஆண்டு திருமதி மகாலட்சுமி- திரு. சுப்ரமண்ய சாஸ்திரிகள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் மகான். மூத்த மகனுக்கு கணபதி என்று பெயரிட்டிருந்ததால், இவருக்கு சுவாமிநாதன் என்று பெயர்சூட்டினர் பெற்றோர். அவர்களுடைய குலதெய்வத்தின் பெயரை ஏற்ற அந்தப் பிள்ளை மனிதகுலத்துக்கே தெய்வமாக விளங்கப்போகிறது என்பதை அப்போது யாரேனும் அறிந்திருப்பார்களோ?

அமெரிக்கன் மிஷன் பள்ளியில் (திண்டிவனம்) படித்தார். கல்வியில் மிகச் சிறந்து விளங்கினார். அனைத்துப் பாடங்களிலும் முதன்மையாக நின்றார். பரிசுகளை அள்ளிக்கொண்டு சென்றார். ஏன், பைபிள் தேர்விலும் முதல்பரிசைத் தட்டிச்சென்றார். 12 வயதில் பள்ளியில் மாணவர்களே ஷேக்ஸ்பியரின் நாடகமொன்றை மேடையேறி நடித்தார்கள். அதில் இளவரசராக மிகச் சிறப்பாக நடித்து அதிலும் பரிசை வென்றார்.

ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தின் 66-ஆவது பீடாதிபதியாய் இருந்தவர், சுவாமிநாதனின் வயதுக்கு மீறிய அறிவைக் கண்டு வியந்து அவரை  67 ஆவது பீடாதிபதியாக்க விரும்பினார். ஆனால், அவர் சித்தியடைந்தார், அவரைத் தொடர்ந்த ஸ்ரீ மகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகளும் ஏழே நாட்கள் பீடத்தை அலங்கரித்து, திடீரென சித்தியடைந்தார். இவர் சுவாமிநாதனின் ஒன்றுவிட்ட சகோதரர். ஆறுதல் சொல்லச் சென்ற வேளையில், முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் அடுத்த பீடாதிபதி சுவாமிநாதன் என்று தீர்மானமாகிறது! இது இறைவனின் சித்தமன்றோ!

1907 ஆம் ஆண்டு, பிப்ரவரி 13 ஆம் நாள், சுவாமிநாதன் காஞ்சி மடத்தின் 68 ஆவது பீடாதிபதியாகி,  ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்னும் திருநாமம் பெற்றார். அன்றிலிருந்து  87  ஆண்டுகள் இந்த நாடெங்கும் காலார நடந்து அவர் நம்முடைய தர்மம் தழைக்கவும் நாம் தர்மத்தை விட்டுவிடாமல் இருக்கவும் வேண்டிச்செய்த தொண்டை ஒரு சிறிய கட்டுரையில் சொல்வதற்கு வழியே இல்லை.

ஒரு துறவி, அதிலும் ஒரு பீடாதிபதி என்றமுறையில் கடுமையான விதிகளைப் பின்பற்றினார். மற்றவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத விரதங்களைக் கடைப்பிடித்தார். தொடர்ந்து சில நாட்கள் முழுப்பட்டினி கிடந்தபோதும், தன்னுடைய தினசரி பூஜை, ஜெபம், தரிசனம், பிரசாதம் வழங்குதல், வந்தவர்களுடைய குறைகளைக் கேட்டு அறிவுரை அருளல், நிர்வாகம் எவையும் ஒரு துளியும் குறையாமல் நடந்துகொண்டார்.

வேதங்கள், சாத்திரங்கள் அனைத்திலும் விற்பன்னராக விளங்கினார். மிக அரிய தத்துவங்களைப் பாமரர்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் விளக்கும் அருட்சொற்பொழிவாளராக இருந்தார். தனக்கு சமர்ப்பிக்கப்பட்ட பொருட்களையெல்லாம் அங்கேயே பிறருக்கு விநியோகித்தார். சிலர் அவரிடம் நேரில் குறைகளைச் சொல்லி நிவாரணம் பெற்றனர். ஆனால், பலர் வாய் திறக்காமலேயே நின்றபோதும், அவர்களுடைய துன்பத்தை அறிந்து அதைத் துடைத்த கருணைவள்ளல் அவர். எல்லா விவரங்களும் எப்போதும் நினைவிருக்கும் யோகியாகவும், எதிலும் பற்றிலாத ஞானியாகவும்,  எளியவர்க்கும் எளியவரான பக்தராகவும் சமுதாயத்தில் திறந்த புத்தகமாக வாழ்ந்த இந்தச் செம்மலை  ‘நடமாடும் தெய்வம்’ என்று நாடே கொண்டாடியதில் வியப்பில்லை.

நம்முடைய வரலாறு, பிற நாடுகளில் நம்முடைய பண்பாட்டின் தாக்கம், வடமொழி – தமிழ் இடையே உள்ள ஒற்றுமை, கல்வெட்டுகள், சிற்பம், தலவரலாறு போன்ற பலவற்றிலும் இடைவிடாது ஆராய்ச்சி செய்து பல அரிய உண்மைகளை நமக்குத் தெரிவித்தார்.

இன்றைக்கும் வேதபாடசாலைகள் நடைபெற்று வேதம் முழங்குவதற்கும், கோயில்களில் திருப்பணிகள் நடப்பதற்கும் மஹா சுவாமிகளின் பெருமுயற்சியே காரணம்.

எல்லோரும் செய்யக்கூடிய சில பணிகளை, செய்தே ஆக வேண்டிய பணிகள் என்று சொல்லி, நம்மைச் செய்யத் தூண்டினார். அவற்றுள் சில:

  • வீட்டுக்கு உழைப்பதுபோல நாட்டுக்கு உழைக்க வேண்டும்.
  • ஒவ்வொரு வீட்டிலும் தினமும் இறைவழிபாடு நடக்க வேண்டும். குழந்தைகளுக்கு சுலோகங்கள், தேவாரம், பாசுரங்கள் ஆகியவற்றைக் கற்றுத்தர வேண்டும்
  • உடலால் திருத்தொண்டு செய்ய வேண்டும். உடலால் செய்யும் திருப்பணி சித்தத்தைச் சுத்தமாக்கும்.
  • கோயில்களைப் பாதுகாக்கும் பொருட்டு, நம்மால் இயன்ற பொருளுதவியைச் செய்ய வேண்டும்.
  • பசுவை தெய்வமாக, தர்மமாக மதித்துப் போற்ற வேண்டும்
  • பிடியரிசித் திட்டம், வீணாய் விட்டெறியும் காய்கறித் தோலைத் திரட்டிக் கால்நடைகளுக்குத் தருவது, பசுவுக்குப் புல் கொடுப்பது, ஆதரவின்றி இறந்தவர்களுக்கு மரியாதையுடன் ஈமக்கடன் செய்வது, கோயிலில் விளக்கெரிய எண்ணெய் ஊற்றுவது- ஆகிய எளிய செயல்களை அனைவரும் செய்ய வேண்டும்.
  • தாய் தந்தையரை மதிக்க வேண்டும். அவர்களுடைய வயதான காலத்தில் அவர்கள் மனம் நோகும்படி நடந்துகொள்ளக் கூடாது
  • நமக்குப் பணிவிடை செய்பவர்களிடம் அன்பாக இருக்க வேண்டும். கடுமையாக நடந்துகொள்ளக் கூடாது
  • குலதெய்வ வழிபாடு, சுமங்கலிப் பிரார்த்தனை ஆகியவற்றை விடாமல் செய்து வந்தாலேயே பலவிதமான தடைகளும் நீங்கும்; சந்ததி தழைக்கும்.
  • அன்றாட அனுஷ்டானங்கள், அமாவாசை தர்ப்பணம், ஆண்டுதோறும் திவசம் இவற்றைத் தவறாமல் செய்துவர வேண்டும்.

(இதுபோன்றஎத்தனையோ சிறு சிறு செயல்களை சமய – சமூக இயக்கங்களாக மாற்றிய பெருமை அவரையே சாரும்)

ஏழையாகவே வாழ்ந்தார். அதேசமயம் ஏழைப் பங்காளனாக எண்ணற்றவர்களுக்கு அருள் செய்தார். ஒவ்வொரு நாளும் அவரைக் காண,  பாமரர்கள், படித்தவர்கள், பசித்தவர்கள்,  பிரமுகர்கள், அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள் என்று பலதரப்பட்டவர்கள் வருவார்கள். அவர் ஒரேதரமான இறைவனாக இருந்து பலவிதமாக அருள்பாலித்தார்.

பற்பல மொழிகளில் விற்பன்னராக விளங்கியவரை வெளிநாடுகளிலிருந்து பலர் வந்து சந்தித்த வண்ணமிருந்தனர். எல்லோர்க்கும் அவருடைய சந்நிதியில் சாந்தி கிடைத்தது; சஞ்சலம் தீர்ந்தது. இனிமேல் சரியாக வாழ்வோம் என்னும் நம்பிக்கை வந்தது.

காலைப் பணிந்தால் கயவரையும்

  காத்துத் திருத்தும் கருணைமனம்

பாலைப் பொழிவது போலிதமாய்ப்

  பக்குவம் சொல்லும் பரிவுமனம்

ஞாலத்தினிலே இருந்தபடி

  வானம்காட்டும் ஞானமனம்

தூலம் நுழைந்து வந்த குரு

  தூய பதங்களில் நமதுமனம்!

’’இறைவன் ஒருவனே! இருப்பது அவனே! நம்முடைய கடமைகளைப் பற்றின்றிச் செய்து,  மற்றவர்களுக்கு நம்மாலான உதவிகளை அன்புடன் செய்து, நமக்கென்று விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அனுசரித்து நடந்து இறைவனை இங்கேயே இப்போதே அடையலாம்,”  என்னும் நம்பிக்கையை அவர் நாடெங்கும் ஊன்றியபடி நடந்து சென்றார்.

பணம் தான் பெரிது என்று மனித சமுதாயம் நிழலைத் துரத்திக்கொண்டு வாழ்வின் பயனையே வீணாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், பெரிது என்பதைத் தனது வாழ்க்கையின் மூலமே நிரூபித்துக் காட்டினார்.

அவருடைய வாசகங்கள் அவருடைய வாழ்க்கையின் விளக்கமாகவே இருந்தன. அவருடைய வாழ்க்கையும் அவருடைய வாசகங்களுக்கு விளக்கமாகவே திகழ்ந்தது.

கேட்டவர்க்குக் கேட்டபடித் தருவார், கேளாக்

கேள்விகளின் வேரறுத்துச் சிரிப்பார்; இங்கே

போட்டதெல்லாம் போட்டபடிப் போகும் வாழ்வில்

போகாத துணையாகத் தொடர்வார்;  நெஞ்சம்

வேட்டதெல்லாம் விழியாலே அறிவார்; நம்மை

வீணாக்கும் ஆசையெல்லாம் வீழ்ந்து, நாமே

கேட்கின்ற கணம் வரையில் காத்திருப்பார்-

கேட்ட கணம் கைவல்யம் தந்து செல்வார்!

 ஒரு பசுத் தொழுவம்,  இடிந்த கட்டிடம், சிறு கோயில், மரத்தடி – இவையே அவர் நாடெங்கும் மேற்கொண்ட பயணங்களின்போது வசித்த இடங்கள்! ஓர் ஊரிலிருந்து கிளம்பும்போது அந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் கொடுத்ததை எல்லாம் ஏற்றுக்கொண்டவர்கள், தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பிச்செல்ல வேண்டும். அவற்றை அங்கேயே விட்டுவிட்டு வந்தவர்களே அவரைப் பின்பற்றி நடக்கும் தகுதி வாய்ந்தவர்கள் என்பதாக ஓர் ஒப்பற்ற கொள்கையை வைத்திருந்தார்.

முழுக்க முழுக்க நம்மோடேயே இருந்து, நாம் அவரை எப்போதும் பார்க்கும்படியே வாழ்ந்து, அதேசமயம் தொடர்ந்து தவத்தில் ஆழ்ந்திருந்த அதிசயமான தபஸ்வி அவர்.

அறிவியல் கோலோச்சும் காலகட்டத்தில் அறவியல் போதிக்க வந்தவர். தொழில்நுட்பமே அறிவு என்று கொண்டாடப்படும்வேளையில், தொண்டே செறிவு என்று நிலைநாட்ட வந்தவர்.

நம்முடைய இன்றைய பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு,  நமது பண்டைய பண்பிபாட்டில்தான் இருக்கிறது, அதற்கு ஆதாரம் வேதமே என்ற நம்பிக்கையில் ஆழ்ந்திருந்தவர்; அதை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டியவர்.

சந்தைக்கடையில் தவம் செய்து சந்நிதியாக்கியவர்

சாதனை என்பது பிறர்க்குதவல் என சாதித்தருளியவர்

மந்தையை நல்ல மக்களாக்கிட மண்ணுக் கவர்வந்தார்

மலராய்ச் சிரித்து மழையாய்ப் பொழிந்து மலையாய் அவர் நின்றார்!

அவரைக் கண்டவர்களுக்கு, நாம் தெய்வத்தை நேரில் கண்டோம் என்னும் நெகிழ்ச்சி கலந்த நிறைவு இருக்கிறது. அவரைக் காணாதவர்களுக்கும் அவர் தங்களுடனேயே இருந்து வழிநடத்துகின்றார் என்னும் நம்பிக்கை இருக்கிறது. இரண்டுமே சத்தியம்தான், அவரைப் போலவே.

கால்முளைத்த தர்மமாய், கண்ணறிந்த தெய்வமாய்,

கலியுகத்து விந்தையாய், கருணைபொங்கும் சிந்தையாய்,

சூல்விளைத்த சூழ்ச்சிகளைப் போக்கவந்த தொண்டனாய்,

சொன்ன சொல்லைப் போல்நடந்து சுடர்ந்தொளிர்ந்த தீபமாய்,

தோல்சுமந்து யாவருக்கும் தோள்கொடுக்கும் தோழனாய்,

தொன்மை பாரதத்து மேன்மை தூண்டுகின்ற தேவனாய்,

கால்நடந்து நாடளந்த காஞ்சிமுனியின் பாதமே

காட்டும் வழியில் நாம்நடந்து காலம் போற்ற வாழ்வமே!  

 

குறிப்பு:

இசைக்கவி ரமணன்

திரு. இசைக்கவி ரமணன், ஆன்மிகச் சொற்பொழிவாளர்; எழுத்தாளர். தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலக் குழு உறுப்பினர்களுள் ஒருவர்.

 

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஐப்பசி-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s