5.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 4

-ம.வே.பசுபதி

2.16 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-1

3.4 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 2

4.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 3

 திருமணம் பற்றிய செய்திகளில் பாரதம் முழுமைக்குமான முறைமைகளிலிருந்து தமிழகம் தனிமைப்படுகிறதா? ஒருமை உள்ளதா என்பது பற்றி இனிக் காண்போம்.

திருமணம் என்பது ஒரு சடங்கு; பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் எக்காரணத்தைக் கொண்டும் விலகிப் போகாமலிருப்பதற்கான கட்டு! பொய்  சொல்லி ஏமாற்றிப் பெண்ணுடன் சிலகாலம் வாழ்ந்து பிரிந்து போன எத்தர்களும் இருந்திருக்கிறார்கள். அதைத் தவிர்க்கவே ‘கரணம்’ எனப்படும் திருமணச் சடங்குகள் தோன்றின. இச்செய்தியை தொல்காப்பியர், ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப’ என்ற நூற்பாவால் தெரிவித்துள்ளார். தமிழ் நிலத்தில் மட்டும் இப்படி நடந்தது என்று சொல்ல முடியாது. எத்து வேலைகள் எத்தனை நிகழ்ந்தது என எண்ணிக்கை சொல்லவும் இயலாது. ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்’ என்று தொல்காப்பியர் அறிவித்தாலும், ‘பல்கிய பின்னர்’ என்பதையே, ‘தோன்றிய பின்னர்’ என்பதன் கருத்தாகக் கொள்ள முடிகிறது.

வேதநெறி என்பது தென்னகத்துக்கு மட்டுமன்றி பாரதநாடு முழுமைக்குமான நெறி என்பதை நாமறிவோம். வேதநெறித் திருமணங்கள் எட்டு வகைப்படும் என்றும், அவற்றுள் களவு என்பது காந்தர்வம் என்றும் தொல்காப்பியர் கூறுகிறார். தமிழர்கள் காந்தர்வமாகிய களவுத் திருமணம் மட்டுமே செய்து கொண்டார்கள் என்றில்லை; பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமண முறையை, ‘நொணற்கிரி மரபின் கிழவன்,கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே’ என்ற நூற்பாவால் தெரிவித்தார்.  ‘அந்தணர் திறத்தும்,சான்றோர் தேயத்தும், அந்தமில் சிறப்பின் பிறர்பிறர் திறத்தும் ஒழுக்கம் காட்டிய குறிப்பு’ என்ற தலைவன் கூற்று நிகழிடம் பற்றிய துறை  ‘கற்பிக்கப்படுவது கற்பு’ என்ற உண்மையை உணர்த்துகிறது. தலைவனும் சில ஒழுக்கங்களை கற்பிப்பான். அதுவே இத்துறையின் நோக்கம். கற்பவள் தலைவி, கற்றபடி நிற்பவளும் அவளே. அந்தணர் கற்பிப்பவை திருமணச் சடங்கில் மந்திரங்களாகச் சொல்லப் பெறும்.

களவின் வழிவாராக் கற்பாகிய இவை, களவின் வழி வந்தவர்க்கு இல்லையோ என்ற ஐயம் வரும். களவில் காதல் சந்திப்புகள் உண்டு. அதன் முடிவில் அவர்கள் திருமணம் செய்து கொண்டாக வேண்டும். களவு வாழ்க்கை என்பது நெடுங்காலம் தொடராது. உற்றார் உறவினர்க்கும் ஊரார்க்கும் தெரிந்துவிடும். அதனை களவு வெளிப்படுதல் என்பர். இவன் கணவன், இவள் மனைவி என ஊரார்க்குத் தெரிவிப்பதுதானே திருமணத்தின் குறிக்கோள்? களவு நிலையிலேயே ஊரார்க்குத் தெரிந்துவிட்டால் பிறகு, திருமணச் சடங்கு எதற்கு? இந்த வினாவுக்குத் தொல்காப்பியர் விடை சொல்கிறார்;

‘வெளிப்படைதானே கற்பினோடு ஒப்பினும் ஞாங்கர்க் கிளந்த மூன்றுபொருளாக வரையாது பிரிதல் கிழவோற்கு இல்லை’ என்கிறார். அதாவது திருமணத்திற்குப் பிறகு வாழ்நாட்கள் முழுவதும் கணவன் தன் மனைவியுடனேயே இல்லத்தில் முடங்கிக் கிடக்க முடியாது. ஆணுக்கென்று சமுதாயக் கடமைகள் தன்கடமைகள் பல உள்ளன. அவற்றின் நிமித்தம் வெளியூர்கட்கும் வெளிமாநிலங்களும் செல்ல வேண்டும்.  ‘ஓதல் பகையே தூது இவை பிரிவே’ என்று தொல்காப்பியரே, மனைவியைப் பிரிந்து செல்ல முதன்மைக் கடமைகள் மூன்றினைக் குறிப்பிட்டுள்ளார். கல்வி கற்பிக்க, மேலும் கற்க, நாட்டுக்காகப் போர் செய்ய, சமாதானம் செய்யும் பொருட்டும் பிரிய வேண்டி வரும். அவை மட்டுமல்ல; எவ்வளவுதான் தன்னிடம் முன்னோரின் செல்வ வளம் இருந்தாலும் தான் உழைத்துச் சம்பாதித்து குடும்பம் நடத்துவதுதானே ஆண் மகனுக்கு அழகு; இலக்கணம்! எனவே பொருளீட்டுவதற்காகவும் பிரிய வேண்டும். இதனை பொருள்வயிற் பிரிவு என்பர்.

ஆக, களவு எனப்படும் காதல் ஊரார்க்கும் உறவினர்க்கும் வெளிப்படையாகத் தெரிந்த பிற்பாடு திருமணம் செய்து கொண்டு கற்பு வாழ்க்கை மேற்கொண்ட பிறகே சுயக் கடமைகள், சமுதாயக் கடமைகள் ஆகியவற்றுக்காகத் தலைவன் அயலூர், அயல் மாநிலம், அயல் நாடுகளுக்குப் பிரிய முடியும். எனவே காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்களானாலும் ‘அந்தணர் சான்றோர், பெரும் சிறப்புகளையுடைய மற்றவர்கள் கற்பிக்கும் வழிநிற்றலாகிய கற்பு‘ உண்டு என்றாகிறது.

பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணத்தைக் ‘கொளற்குரி மரபின் கிழவன், கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”’ எனத் தொல்காப்பியர் தெரிவித்த நூற்பாவை நன்கு சிந்திக்க வேண்டும். இதில் கன்னிகாதானம் என்ற வேதவிதிப்படியான – பாரதம் முழுமையிலும் உள்ள விதி கூறப்பட்டுள்ளது. தமிழ்நூல்களில் இதனை ‘ மகட்கொடை’  என்பர்.  ‘மரபின்’,  ‘மரபினோர்’ என ஈரிடங்களில் குறிப்பிட்டுள்ளமை இவ்வகைத் திருமணம் கலப்புத் திருமணமன்று என்ற செய்தியைப் புலப்படுத்துகிறது.

களவியலின் முதல் நூற்பாவில் அந்தணர்களின் வேதவழிப்பட்ட திருமண முறைகள் எட்டு என்றும், அதில் யாழோர் கூட்டமாகிய காந்தர்வமே களவு என்றும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். பாரதம் முழுவதிலும் நடைபெற்ற, நடைபெறும் திருமணங்கள் யாவற்றையும் இவ்வெட்டுத் தலைப்புகளுக்குள்ளேயே அடக்கலாம். அவை பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.

பிரமம்: பிரமசாரியாய் உள்ள தக்கவனுக்கு அக்னிசாட்சியாகக் கன்னியைத் தானம் கொடுப்பது, வரதட்சணையில்லை.

பிரஜாபத்யம்: உறவுத் திருமணம். அன்னிய கோத்திரமாக இருக்க வேண்டும். மணமகளுக்கு மணமகன் அன்னிய கோத்திரத்தானாக இருக்க வேண்டும் என்பது எல்லாத் திருமணங்களுக்கும் பொது நியதி.

ஆரிடம்: மணமகளின் பெற்றோருக்குச் சில பசுமாடுகளைக் கொடுத்துப் பின்னர் வேதவிதிப்படியாகப் பெண்ணை மணந்து கொள்வது. இலக்கியங்களில் முலைவிலை எனப்படுகிறது. இக்காலத்தில் பரிசம் என்கின்றனர்.

தெய்வம்: வேள்வி ஆசிரியனுக்குக் கன்னிகாதானம் செய்வது. வேள்வி ஆசிரியன் என்ற தகுதி மணமானவனுக்கே உண்டு. எனவே இரண்டாம் தாரத் திருமணம் அல்லது மனைவியை இழந்த வேள்வியாசிரியனுக்கு என்று கொள்ளலாம்.

காந்தர்வம்: இது காதல் திருமணம். ஒருவன் ஒருத்தியை மனமொத்துக் காதலித்த அன்றே அவர்களுக்குத் திருமணம் ஆனதாகவே கொள்ளப்படும். எனினும் மணச்சடங்குகள் நிகழாமையால் பெற்றோர் இசைவுடன் விதிப்படியான திருமணம் செய்து கொள்வது கட்டாயமாகிவிடும். அப்படிச் செய்து கொள்ளாமல் இல்லறம் நடத்த உரிமையில்லை.

ஆசுரம்: மற்போர், விற்போர், கல்தூக்குதல், காளையை அடக்குதல் முதலிய போட்டிகளில் ஒன்றிலோ பலவற்றிலோ வென்று போட்டி வைத்தவரின் மகளைப் பரிசாகக் கொண்டு மணப்பது. ஆசுரம் என்பது இங்கு அசுரத்தனம் என்று பொருள் தராமல் பெருவலிமை காட்டி வெல்லுதல் என்ற பொருள் தருகிறது. இராமனுக்கும் சீதைக்குமான திருமணம் வில்லொடிந்த ஆசுரத்தால் நிகழ்ந்ததன்று. முன்னமே  ‘அண்ணலும் நோக்கி, அவளும் நோக்கி’  ‘இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தி’ய காதல் காரணமாக அத்திருமணம் காந்தர்வ மணமேயாகும்.

இராக்கதம்: கட்டாயத் திருமணம். கடத்திக் கொண்டு சென்று மணந்து கொள்வது. மன்னர்கள் வரலாறுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இப்படி நடந்திருக்கிறது. இது குற்றமேயானாலும் பின்னர் மனமொத்து வாழ வாய்ப்பாக இதற்கும் பொருந்தாக் காமம் என்ற வகையில் இசைவு தரப்படுகிறது.

பைசாசம்: தூக்கத்தின் போது, அல்லது கள் மயக்கத்தில் ஆணும் பெண்ணும் இணைந்துவிடும் அசம்பாவிதம், ஒரு பக்கக் குற்றமாகவோ, இருபக்கமும் ஒப்புக் கொண்ட குற்றமாகவும் இருக்கலாம். அக்குற்றம் செய்தவர்களையே வற்புறுத்தியோ, நியாயம் கூறியோ செய்து வைக்கும் திருமணம் பைசாசம் எனப்படும். இது ஒரு வகையில் குற்றத்திற்கான தண்டனை போன்றதேயாகும்.

(வளரும்)

குறிப்பு:

ம.வே.பசுபதி

திரு. ம.வே.பசுபதி, தேசிய சிந்தனைக் கழகத்தின் தமிழகத் தலைவர்.

 

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஐப்பசி-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s