5.7 அம்பேத்கரின் நூல்கள்

திருநின்றவூர் ரவிக்குமார்

அம்பேத்கர்    ‘நவீன மனு’ என்று புகழப்படுகிறார். புராண மனு,  சமுதாயத்திற்கான  சட்ட திட்டங்களை, விதிமுறைகளை ஏற்படுத்தியவர். இப்போது நம்மை வழிநடத்தும் இந்திய  அரசியல் சாஸனத்தை வடிவமைத்தவர் டாக்டர் அம்பேத்கர். எனவே அவர் நவீன மனு.

2014- ஆம் ஆண்டு காலமான கிரானிவில் ஆஸ்டின் என்ற அமெரிக்கர், இந்திய அரசியல் சாஸனத்தில் நிபுணர். அவர் அம்பேத்கர் வடிவமைத்த இந்த அரசியல் சாஸனத்தைப் பற்றி, “மிகச் சிறந்த சமூக ஆவணம். சமூகப் புரட்சிக்கு வித்திடும் ஆவணம். அந்த நோக்கத்துடனே  வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று புகழ்ந்துள்ளார்.

தனிநபருக்கு நிறைய சிவில் உரிமைகளைத் தரும் சாஸனம் இது. மதச் சுதந்திரம், தீண்டாமை ஒழிப்பு, எல்லாவிதமான வேறுபாடுகளை சட்ட ரீதியாக தடைசெய்வது என பல சிவில் உரிமைகள் கொண்ட சாஸனம் இது. பெண்களுக்கு பொருளாதார, சமூக உரிமைகள்,  எஸ்.சி.எஸ்.டி, பிற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு, இதன் மூலம் சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை நீக்கி பிற்பட்டவர்களும் ஒடுக்கப்பட்டவர்களும் முன்னேற்றம் அடையும்படியாக வடிவமைத்துள்ளார் டாக்டர் அம்பேத்கர். பொருளாதார, சமூக விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம், முன்னேற்றம் இதுவே அம்பேத்கரின் இலக்கு. அந்த இலக்கை அடையும் விதமாகவே இச்சாஸனத்தை அவர் வடிவமைத்துள்ளார்.

இந்தியா என்றவுடன், ஓயாத பிரச்னையாக உள்ள காஷ்மீரும் 370-வது சட்டப்பிரிவும் நினைவுக்கு வரலாம். காஷ்மீர் பகுதியில், செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த ஷேக் அப்துல்லா சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கரைச் சந்தித்து, காஷ்மீரத்திற்கு சிறப்பு சலுகைகளும் சிறப்பு அந்தஸ்தும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். ஷேக் அப்துல்லாவின் கோரிக்கையைக் கேட்ட அம்பேத்கர்,  “இந்தியா உங்கள் எல்லையைப் பாதுகாக்க வேண்டும்,  உங்கள் பகுதியில் சாலைகளைப் போட வேண்டும், உங்களுக்கு உணவுப் பொருட்களை வழங்க வேண்டும், இந்தியாவுக்கு இணையான அந்தஸ்து காஷ்மீருக்கு வழங்க வேண்டும். ஆனால், இந்திய அரசுக்கு காஷ்மீரில் உரிமைகள் கொஞ்சம்தான். இந்தியர்களுக்கோ ஒன்றுமே கிடையாது. இதற்கு ஒப்புதல் வழங்குவது இந்தியாவுக்கு செய்யும் துரோகம். நான் சட்ட அமைச்சராக இதைச் செய்ய மாட்டேன்” என்று உறுதியாகக் கூறிவிட்டார். அம்பேத்கரின் கூற்றை பாரதிய ஜனசங்கத்தின் தலைவராக இருந்த பால்ராஜ் மதோக் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.

பிறகு ஷேக் அப்துல்லா பண்டித நேருவை அணுகினார். நேரு அவரைக் கிருஷ்ணசாமி ஐயங்காரைப்  பார்த்து பேசும்படி கூறினார். அரசியல் சாஸன வரைவு கமிட்டியில் இருந்த கிருஷ்ணசாமி ஐயங்கார், படேலைச் சந்தித்து இது நேருவின் விருப்பம் என தெரிவித்தார்.

வேறு வழியின்றி படேல் தலை அசைக்க, 370-வது சட்டப்பிரிவு நாடாளுமன்றத்தில் வந்தது. நாடாளுமன்றத்தில் இந்த விவாதத்தில் கலந்துகொள்ளாமல் அம்பேத்கர் அமைதியாக இருந்துவிட்டார். உறுப்பினர்களின் ஆட்சேபனைகளுக்கு எல்லாமே ஐயங்காரே பதிலளித்தார்.

அம்பேத்கரின் விருப்பத்திற்கு மாறாகச் செயல்பட்ட நேரு – ஐயங்கார் கூட்டணியே ஓயாப் பிரச்னையின்  ஊற்றுக்கண் என்கிறது வரலாறு. இந்தியா பாகிஸ்தான் பிரிவினை பற்றி, டாக்டர் அம்பேத்கர் தன் கருத்தை மிக விரிவாக, ‘பாகிஸ்தான் குறித்த சிந்தனைகள்’ என்று ஒரு நூலாக எழுதியுள்ளார். அதில்  “பிரிவினையை  ஏற்றுக் கொள்வதுடன், அவ்வாறு பிரிவினை செய்யும்போது எல்லைகள் தெளிவாக வரையறுக்க  வேண்டும்; மக்கள் தொகை பரிமாற்றம் செய்ய வேண்டும். புவியியல் ரீதியான பிரிவினையை  விட மக்கள் சமூக ரீதியான பிரிவினையே சரியானது”  என்ற தனது கருத்தை உலக  நிகழ்வுகளிலிருந்து  சான்றுகளுடன் அம்பேத்கர் வலியுறுத்தியுள்ளார்.

அரசியலுக்கு வருவதற்கு முன்பு, சட்டம் பயில்வதற்கு முன்பு, அம்பேத்கர் ஒரு பொருளாதார நிபுணர். பொருளாதாரத்திற்காக வெளிநாட்டில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் அம்பேத்கர். அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவர் பொருளாதாரம் பற்றி மூன்று நூல்களை எழுதியுள்ளார்.

இந்தியாவைச் சுரண்டிக் கொள்ளையடித்துக் கொழுத்த இங்கிலாந்து, உலகப் போருக்குப் பிறகு பொருளாதாரச் சரிவைச் சந்தித்தது. அதிலிருந்து மீண்டுவர, வழிமுறைகளை ஆராய, ‘ஹில்டன் யங் கமிஷன்’, ஒரு ஆய்வுக் குழுவை அமைத்தது. அக்குழு இந்தியாவுக்கும் வந்து அறிஞர்களின் கருத்துக்களை கேட்டறிந்தது. அக்குழுவின் முன்பு ஆஜராகி அம்பேத்கர் தன் கருத்துக்களை பதிவு செய்துள்ளார். மிக விரிவான கேள்வி பதில்களைக் கொண்ட அது, பின்பு நூல் வடிவம் பெற்றது. அதில் அம்பேத்கர் கூறியுள்ள ஆலோசனைகள் பலவும் நடைமுறைக்கு வந்துள்ளன. அதுமட்டுமின்றி, இன்றைய சூழ்நிலையிலும் கருத்தில் கொள்ள வேண்டிய ஆவணமாக உள்ளது என்று ‘சுதேசி ஜாக்ரண் மன்ச்’ தோற்றுவித்த தத்தோபந்த் தெங்கடி கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

அவரது பொருளாதாரக் கருத்துக்களைப் பொதுவாக இப்படிக் கூறலாம். தொழில் துறை, விவசாயம் இரண்டுமே தேச முன்னேற்றத்திற்கு அவசியம். விவசாயத்திற்கு அதிக முதலீடு செய்ய வேண்டும். விவசாயத்தை ஒரு தொழிலாகக் கருதி அதை அரசு ஊக்குவிக்க வேண்டும்.

நீண்டகாலம், விவசாய அமைச்சராக இருந்த சரத்பவார், ‘இந்தியா உணவு உற்பத்தியில்  தன்னிறைவு அடைந்ததற்கு காரணம் அம்பேத்கரின் வழிகாட்டுதல்களே’ என்று கூறியுள்ளார்.

‘கல்வி, பொது சுகாதாரம், சமூக ஆரோக்கியம், வீடு ஆகியவை அடிப்படைத் தேவைகள்’, என்கிறார் அம்பேத்கர். குடும்பக் கட்டுப்பாடு, தேச வளர்ச்சிக்கு அவசியம். பெண்களுக்கு சமஉரிமை அளிப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழிலாளர்கள், ஜாதி ரீதியாகப் பிரிந்திருப்பது பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. சுதந்திரப் பொருளாதார முறையைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இது இப்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஆர்.சி.சி.-யில்  அம்பேத்கர் உறுப்பினராகவும் விவசாயம், மின்சக்தி துறைக்கான கொள்கை வகுப்புக் கமிட்டியின்  தலைவராகவும் இருந்தார். அப்போது அவர் சொல்லிய திட்டத்தின்படியே தாமோதர் பள்ளத்தாக்கு நதி திட்டம் நடைமுறைக்கு வந்தது. இன்று பெரிதும் பேசப்படுகின்ற மத்திய மின்சார தொகுப்பு – ‘கிரிட் சிஸ்டம்’ திட்டம் அம்பேத்கரின் சிந்தனையில் உதித்ததே. பாஜக  அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுத்த உள்ள தேசிய நீர் வழிப்பாதை – தண்ணீருக்கான கிரிட் சிஸ்டம் என்பது அம்பேத்கரின் சிந்தனையின் விரிவாக்கமாக கருதலாம்.

1955-இல் பதிப்பிக்கப்பட்டது அம்பேத்கரின் ‘தாட்ஸ் ஆன் லிஸ்டிக் ஸ்டேட்ஸ்’ என்ற நூலிலேயே  அவர்,  மத்தியப் பிரதேசம், பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மிகப் பெரியதாக  இருப்பதால் அவை பிரிக்கப்பட வேண்டும் என்றார். வாஜ்பாய் தலைமையில் நடந்த ஆட்சியில்,  2000-ல் சத்திஸ்கர், ஜார்கண்ட், உத்தராஞ்சல் மாநிலங்களைப் பிரித்ததற்கு அடித்தளமிட்டது அம்பேத்கரின் கருத்துக்கள் என்றால் அது மிகையல்ல.

ஹிந்துக்கள் ஒன்றுபட்ட ஒரு சமுதாயமாக, தேசியமாக மாறவிடாமல் தடுப்பது ஜாதி  முறைமையே  என்ற அம்பேத்கர், ஜாதியைப் பற்றி அவர் பல நூல்களை எழுதியுள்ளார். அதற்காக முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

அம்பேத்கர் ஜாதியை வலியுறுத்தும் ஹிந்து சமுதாயத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் செய்ய,  புத்த மதம் மாறினார். அவரது இறுதிக் காலத்தில் எழுதிய நூல் ‘தம்மபதம்’. அது புத்தரின் சிந்தனைகளின் அடிப்படையில் தர்மத்தை வரையறுக்கிறது. சமயம், தத்துவம் பற்றிய அம்பேத்கரின் ஆழ்ந்த அறிவும் புலமையும் வெளிப்படுகிறது இந்நூலில்.

அம்பேத்கரின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக 1991-இல் அவரது பேச்சுகளையும்  எழுத்துகளையும்  தொகுத்து மத்திய அரசு வெளியிட்டது. அதை அனைத்து மாநில மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது மத்திய அரசு என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

குறிப்பு:

இக்கட்டுரை, அம்பேத்கரின் நூற்றாண்டை ஒட்டி விஜயபாரதம் வார இதழில் வெளியானது. அம்பேத்கரின் நினைவு தினத்தை (டிச. 6, 1956) ஒட்டி இக்கட்டுரை இங்கு ள்பிரசுரம் ஆனது.

இதன் ஆசிரியர் திரு. திருநின்றவூர் ரவிகுமார், காண்டீபம் ஆசிரியர் குழுவின் உறுப்பினர்.

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஐப்பசி-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s