5.14 தமிழருக்கு

சி.சுப்பிரமணிய பாரதி

தமிழா, தெய்வத்தை நம்பு. பயப்படாதே. உனக்கு நல்ல காலம் வருகின்றது.

உனது ஜாதியிலே உயர்ந்த அறிஞர் பிறந்திருக்கிறார்கள். தெய்வங்கண்ட கவிகள்,அற்புதமான சங்கீத வித்வான்கள்,  கைதேர்ந்த சிற்பர்,  பல நூல் வல்லார்,  பல தொழில் வல்லார்,  பல மணிகள்  தோன்றுகிறார்கள். அச்சமில்லாத தர்மிஷ்டர் பெருகுகின்றனர்.  உனது  ஜாதியிலே தேவர்கள் மனிதராக  அவதரித்திருக்கிறார்கள். கண்ணை  நன்றாகத்  துடைத்துவிட்டு  நான்கு பக்கங்களிலும் பார்.  ஒரு நிலைக் கண்ணாடியிலே  போய்ப் பார்.

நமது நாட்டு ஸ்திரீகளிலே பலர் சக்திக் கணங்களின் அவதாரமாக ஜனித்திருக்கிறார்கள்.  ஒளி,  சக்தி, வலிமை,  வீர்யம்,  கவிதை,  அழகு,  மகிழ்ச்சி நலங்களெல்லாம்  உன்னைச்  சார்கின்றன.

தமிழா, பயப்படாதே. ஊர் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்  கொடுக்க  ஏற்பாடு செய்.

ஜாதி வேற்றுமைகளை வளர்க்காதே. ஜாதியிரண்டொழிய வேறில்லை என்ற  பழந்தமிழ் வாக்கியத்தை வேதமாகக் கொள்.

பெண்ணை அடிமை என்று கருதாதே. முற்காலத்துத் தமிழர் மனைவியை ‘வாழ்க்கைத்  துணை’  என்றார்.  ஆத்மாவும் சக்தியும் ஒன்று-  ஆணும்,  பெண்ணும் சமம்.

வேதங்களை நம்பு, அவற்றின் பொருளைத் தெரிந்துகொண்டு பின் நம்பு. புராணங்களைக்  கேட்டுப் பயனடைந்து கொள்.  புராணங்களை வேதங்களாக  நினைத்து   மடமைகள் பேசி  விலங்குகள் போல்  நடந்து  கொள்ளாதே.

தமிழா, உனது வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிதமிஞ்சி விட்டன. உனது  மதக்  கொள்கைகள், லௌகிகக்  கொள்கைகள்,  வைதிக நடை எல்லாவற்றிலுமே  பொய்கள் புகுந்து தலைதூக்கி ஆட  இடங்கொடுத்து விட்டாய். இவற்றை நீக்கிவிடு.

வீட்டிலும் வெளியிலும் தனிமையிலும் கட்டிடத்திலும், எதிலும்,  எப்போதும் நேர்மை  இருக்க வேண்டும்.  எல்லாப் பேறுகளைக் காட்டிலும் உண்மைப் பேறுதான்  பெருமை  கொண்டது.  உண்மை  தவங்களுக்கெல்லாம்   உயிர்.  உண்மை  சாஸ்திரங்களுக்கொல்லாம்  வேர்.  உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி. உண்மை பரமாத்மாவின்  கண்ணாடி.  ஆதலால்  தமிழா,  எல்லாச் செய்திகளிலும் உண்மை  நிலவும்படி செய்.

தமிழா, எழுதிப் படிப்பதெல்லாம் மெய்யுமில்லை. எதிர்நின்று கேட்பதெல்லாம் பொய்யுமில்லை.

“முந்திய சாஸ்திரந்தான் மெய்,  பிந்திய சாஸ்திரம் பொய்”  என்று தீர்மானம்  செய்து கொள்ளாதே.  காலத்துக்கும் உண்மைக்கும்  எதிரிடையாக ஓர் கணக்கு ஏற்பட்டிருக்கிறதா?

“தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லி மூடர்கள்உப்பு நீரைக் குடிக்கிறார்கள்” என்று பஞ்ச தந்திரம் நகைக்கிறது.

இவ்வுலகில் நான்கு புருஷார்த்தங்கள் என்று பெரியோர் காட்டியிருக்கிறார்கள். அவை  அறம், பொருள், இன்பம், வீடு என்பன.

இவற்றுள் அறமாவது கடமை. அது உனக்கும் உனது சுற்றத்தாருக்கும், பிறர்க்கும், நீ  செலுத்த வேண்டிய கடமை. பிறர் என்பதனுள் வையகம்  முழுதும்  அடங்கும். கடமையில்  தவறலாகாது. தொழில்களெல்லாம்  நற்பயன் தருமிடத்து அறங்களாகும்.

பொருள் என்பது செல்வம். நிலமும், பொன்னும், கலையும், புகழும்நிறைந்திருத்தல், நல்ல மக்களைப் பெறுதல், இனப்பெருமை சேருதல் – இவையெல்லாம் செல்வம்.  இச்செல்வத்தைச் சேர்த்தல்  மனித  உயிருக்கு ஈசன் இட்டிருக்கும் இரண்டாம் கட்டளை.

இன்பம் என்பது இனிய பொருள்களுடன் உயிர் கலந்து நிற்பது. பெண், பாட்டு, கூத்து  முதலிய  ரஸவஸ்துக்களை  அனுபவிப்பது.  இவ்வின்பங்கள்  எல்லாம்,  தமிழா, உனக்கு  நன்றாக  அமையும்படி  பராசக்தி அருள் புரிக.  உன்னுடைய நோய்களெல்லாம் தீர்க.  உனது வறுமை  தொலைக.  உனக்கு இனிமையும் அழகுமுடைய  வஸ்துக்களெல்லாம் வசப்படுக.

பஞ்ச பூதங்களும் உனக்கு வசப்படுக. நீ எப்பொழுதும்  இன்பம் எய்துக.

வீடாவது பரமாத்மாவுடன் அறிவு கலந்து நிற்பது.   ‘வீடு’ என்ற  சொல்லுக்கு  ‘விடுதலை  என்பது பொருள்.  மேல் கூறப்பட்ட  மூன்று  புருஷார்த்தங்களும் ஈடேறிய  பெரியோருக்கு ஈசன்  தானாகவே  வீட்டு  நிலையருள்  செய்வான்.  தமிழா, உனது புருஷார்த்தங்கள்  கைகூடுக.

 

குறிப்பு:

தேசபக்தியும் தாய்மொழிப் பற்றும் காக்க வந்த மாமுனிவரே மகாகவி பாரதி. அவரது பிறந்த தினத்தை (டிச. 11, 1882) முன்னிட்டு இக்கட்டுரை இங்கு வெளியாகியுள்ளது.

 

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஐப்பசி-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s