5.11 வாழ்நாள் முழுவதும் போராளியாக வாழ்ந்தவர்

தஞ்சை வெ.கோபாலன்

               

பசும்பொன் முத்து ராமலிங்க தேவர்

(தோற்றம்: 1908, அக். 30 – மறைவு:     1963 அக். 30

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஓர் அரசியல்வாதி மட்டுமல்ல, ஆன்மிகவாதி, மக்கள் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனப் பன்முகம் கொண்டவர். குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், சுதந்திரப் போரில் ஆழங்கால் பட்டிருந்ததாலும் திருமணமே வேண்டாமென்று பிரம்மச்சாரியாகவே காலம் முழுதும் வாழ்ந்த வைராக்கிய வீரர். ராஜாஜிக்கு தேவர் மீது மிகுந்த அன்பும் பாசமும் உண்டு.

அந்த நாளில் தமிழ்நாட்டு அரசியலில் ஜஸ்டிஸ் கட்சி அதிகார பலத்துடன் விளங்கி வந்தது. அதை முறியடிக்க  காங்கிரஸ் தேசிய இயக்கம் தீவிரமாகப் பாடுபட்டுக் கொண்டிருந்தது. ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட சில பகுதிகளில் ஜஸ்டிஸ் கட்சியினரின் அத்துமீறல்களைத் எதிர்த்து அங்கெல்லாம் தேசிய முழக்கங்களை எதிரொலிக்கச் செய்து  ‘காங்கிரசைக் காத்தவர்’எனும் பாராட்டை தீரர் சத்தியமூர்த்தியிடம் பெற்றவர் தேவர்.

முத்துராமலிங்கத் தேவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி அருகிலுள்ள பசும்பொன் கிராமத்தில் 1908-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ஆம் நாள் பிறந்தார். தந்தை உக்கிரபாண்டித் தேவர், தாயார் இந்திராணி அம்மையார். இளம் வயதிலேயே  இவர் தாயை இழந்தார். தாயார் இறந்தபின் தாய்வழி பாட்டியிடம் இவர் வளர்ந்தார். மதுரையில் பசுமலையில் கல்வி பயின்றார். இந்து மத வழிபாடுகள் குறித்து கேலி பேசிய பாதிரியாரை மடக்கிக் கேள்விகள் கேட்டுத் திணறடித்தவர் தேவர். நெற்றி நிறைந்த திருநீற்றைப் பூசிக்கொண்டு தான் ஒரு ஹிந்து என்பதில் பெருமை கொண்டவர்.

1927-ஆம் ஆண்டு தனது சொத்து சம்பந்தமான வழக்கு ஒன்றுக்காக சென்னை சென்று அப்போது பிரபலமாக விளங்கிய காங்கிரஸ் தலைவர் எஸ்.சீனிவாச ஐயங்காரைச் சந்தித்தார். பின்னர் அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சியின்பால் ஆர்வம் கொண்டு காங்கிரசில் சேர்ந்தார். அப்போது சென்னையில் டாக்டர் அன்சாரி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. அதன் பிறகு ஊர் திரும்பிய தேவர் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு சுதந்திரப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ராஜாஜி 1937-இல் சென்னை மாகாண முதல்வராகப் பொறுப்பு ஏற்ற பின் ஆலயப் பிரவேசச் சட்டத்தைக் கொண்டு வந்தார். தாழ்த்தப்பட்டவர்களை ஆலயத்துள் அழைத்துச் செல்லும் பொறுப்பை மதுரையில் ஏ.வைத்தியநாத ஐயரிடம் ஒப்படைத்தார். மதுரை வைத்தியநாத ஐயருக்கு, ஆலயப் பிரவேசம் செய்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அச்சுறுத்தல்களுடன் பயங்கர எதிர்ப்பும் ஏற்பட்டது. இது குறித்து ஐயர் ராஜாஜிக்குத் தெரியப்படுத்தினார். ராஜாஜி தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டு பசும்பொன் தேவரைத் தொடர்பு கொண்டு பேசினார். எதிர்ப்புகளைத் தான் சமாளித்து ஆலயப் பிரவேசம் நடைபெற ஐயருக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக அவர் வாக்குறுதி அளித்தார். சொன்னபடியே எதிர்ப்பை முறியடித்து அந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார் தேவர்.

ராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தலில் தேவர் முதுகுளத்தூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஜில்லா போர்டு தலைவராக வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் கட்சி பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் பெயரை சிபாரிசு செய்தது. இருப்பினும், அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்து பாடுபட்டார். 1937-இல் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது பலம்பொருந்திய கட்சியாக விளங்கிய ஜஸ்டிஸ் கட்சிக்கும் காங்கிரசுக்கும் பலத்த போட்டி. ராமநாதபுரம் தொகுதியில் ராமநாதபுரம் ராஜா ஜஸ்டிஸ் கட்சி சார்பில் நின்றார். அவரது சமஸ்தானத்தில் மன்னருக்கு எதிராக யார் காங்கிரசில் போட்டியிட முடியும்? அப்படி போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியுமா? அந்த நிலையில் தேவரை காங்கிரஸ் கட்சி அங்கு நிறுத்துகிறது. கடைசி நேரத்தில் தன்னுடைய வேட்பு மனுவைத் தாக்கல் செய்த தேவரே அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் காமராஜ் சாத்தூர் தொகுதியில் நின்றார். கடும் எதிர்ப்பு அமளிக்கு இடையே காமராஜை வெற்றி பெற வைத்தவர் தேவர்.

காங்கிரசில் அப்போது மகாத்மா காந்தியின் தலைமைக்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கும் போட்டி நிலவியது. திரிபுரா காங்கிரசில் மகாத்மா காந்தி பட்டாபி சீதாராமையாவை தலைமைப் பதவிக்கு நிறுத்துகிறார். காங்கிரசின் பெரும் தலைவர்கள் எல்லாம் காந்திஜியின் ஆதரவு பெற்ற பட்டாபிக்கு ஆதரவு நல்கினர். நேதாஜியை தீவிர தேசபக்தர்கள் ஆதரித்தனர். இந்தப் போட்டியில் தேவர் நேதாஜியை ஆதரித்தார். இறுதியில் நேதாஜி வெற்றி பெற்றதும் காந்திஜி  ‘பட்டாபியின் தோல்வி என் தோல்வி’ என்று அறிவித்தார். காங்கிரசில் அப்போது இரு கோஷ்டிகளுக்கிடையே ஒற்றுமையில்லாமல் இருந்தது. பெரும்பாலான காரியக் கமிட்டி உறுப்பினர்கள் நேதாஜியின் செயற்குழுவில் இடம்பெற மறுத்து விட்டனர். ஒரு கட்டத்தில் நேதாஜியும் அவரது சகோதரரும் மட்டுமே காரியக் கமிட்டியில் இருந்தனர்.  எதிரிகளின் நெருக்கடி காரணமாக நேதாஜி ராஜிநாமா செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது. காங்கிரசிலிருந்து வெளியேறிய நேதாஜி பார்வர்டு பிளாக் எனும் கட்சியைத் தோற்றுவித்தார். அதில் தேவர் தீவிரமாகப் பங்கேற்று பாடுபட்டார். நேதாஜி ராஜிநாமா செய்த பிறகு அபுல் கலாம் ஆசாத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நேரு உள்ளிட்ட அத்தனை காரியக் கமிட்டி உறுப்பினர்களும் மீண்டும் பதவியேற்றனர்.

இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தேவர் தீவிரவாத கோஷ்டியைச் சேர்ந்தவர் என்று சொல்லி அவரை மதுரையை விட்டு வெளியே போகக் கூடாது என்று தடை விதித்தனர். இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு அடிபணியக் கூடியவரல்லவே தேவர். தடையை மீறி சொந்த கிராமமான பசும்பொன்னுக்குச் செல்லும் வழியில் திருப்புவனத்தில் கைது செய்யப்பட்டு 18 மாத சிறைத் தண்டனை பெறுகிறார். 1939 செப்டம்பர் மாதத்தில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்

18 மாத சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த தேவரை, சிறைச்சாலை வாயிலில் பாதுகாப்புச் சட்டத்தின்படி மறுபடியும் கைது செய்கிறார்கள். திருச்சி, வேலூர், அலிப்புரம், ராஜமுந்திரி, அம்ரோட்டி ஆகிய சிறைகளில் இவர் அடைக்கப்பட்டிருந்தார். போரில் ஜப்பான் சரணடைந்த பிறகு, தேவர் ஆறாண்டு கால சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்தார்.

1942-இல் பம்பாய் காங்கிரஸ்  ‘வெள்ளையனே வெளியேறு’ எனும் தீர்மானத்தை நிறைவேற்றியது. உடனடியாக காந்திஜி உட்பட எல்லா காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்படுகிறார்கள். அப்போது நாடெங்கும் கலவரம் ஏற்படுகிறது. அப்போது நேதாஜி இந்திய தேசிய ராணுவத்தை வழிநடத்தி இந்தியாவை விடுவிக்கப் பாடுபட்டுக் கொண்டிருந்தார். யுத்தம் நின்ற பிறகு நாட்டுக்குச் சுதந்திரம் பெறும் காலம் நெருங்கிவிட்டதற்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கின. 1946-இல் சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது. தேவர் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். டி.பிரகாசம் முதல்வராகப் பதவியேற்றார். தேவரை தன்னுடைய அமைச்சரவையில் சேரும்படி பிரகாசம் அழைத்ததை தேவர் ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரசின் ஒரு பிரிவாகச் செயல்பட்டு வந்த நேதாஜியின் பார்வர்டு பிளாக் கட்சி 1948-ல் தனிக் கட்சியாக வெளியே வந்தது. அப்போதிலிருந்து தேவர் பார்வர்டு பிளாக்கின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். இந்த நிலையில் இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்து குடியரசாக 26-1-1950-இல் பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்தியக் குடியரசின் முதல் பொதுத் தேர்தல் 1952-இல் நடைபெற்றது. தேவர் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும், அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியிலும் ஒரே நேரத்தில் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்று,  பின்னர் சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்தார்.

1957-இல் நடந்த பொதுத் தேர்தலிலும் இவர் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி, ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தொகுதி இரண்டிலும் போட்டியிடுகிறார். இரண்டிலும் மறுபடி வெற்றி. இந்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து விடுகிறார்.

மதுரையில் 11.9.1957-இல் நடந்த மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்டிய அமைதி பேச்சுவார்த்தையின் போது அதில் பங்குகொண்ட அடுத்த நாள் இம்மானுவேல் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலையை அடுத்து பரமக்குடி, முதுகுளத்தூர், அருப்புக்கோட்டை, சிவகங்கை ஆகிய பகுதிகளில் கலவரம் வெடித்தது. அந்தக் கலவரத்திலும் பலர் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து தேவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற பலர் காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டி என்ற பெயரில் ஒரு கட்சி தொடங்கினர். அந்த கமிட்டியை  ‘இந்திய தேசிய ஜனநாயக காங்கிரஸ்’ என்று பிரகடனப்படுத்த 1957 செப்டம்பரில் மதுரை தமுக்கம் மைதானத்தில் ஒரு மாநாடு நடந்தது. அதில் வான்கார்டு இன்சூரன்ஸ் கம்பெனி தலைவரும், தேசபக்தருமான ஹெச்.டி.ராஜா தலைமை வகித்தார். தேவர் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். மாநாட்டின் மூன்றாம் நாள் தேவர் டி.ஜி.கிருஷ்ணமூர்த்தி என்பவருடன் காரில் தனது இல்லம் திரும்பிக் கொண்டிருந்தார். மதுரை வைகை ஆற்றுப் பாலத்தில் தேவரின் கார் வந்து கொண்டிருந்தபோது போலீஸ் வழிமறித்து கைது செய்தனர். அப்போது இரவு மணி பத்துக்கும் மேல் ஆகியிருந்தது. தேவர் தன் விபூதிப் பையிலிருந்து திருநீற்றை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு, அந்த விபூதிப் பையையும், கழுத்தில் அணிந்திருந்த ருத்திராக்ஷ மாலையையும் டி.ஜி.கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்துவிட்டு  ‘எல்லோரும் அமைதியாக இருக்கவேண்டும், சத்தியமே வெல்லும் அச்சப்பட வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு போலீசுடன் சென்றார்.

வேலூர் சிறையிலும் பிறகு சென்னை சிறையிலும் இருந்த தேவரை வழக்கு விசாரணைக்காக புதுக்கோட்டை சிறைக்கு மாற்றினார்கள். 1959 ஜனவரி 7-ஆம் தேதி வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டது. தேவர் விடுதலையானார். இதர மூன்று பேருக்குத் தூக்கு தண்டனை கிடைத்தது. விடுதலையானபோது தேவரின் உடல்நிலை மோசமாக இருந்தது. திருச்சியில் இருந்த டாக்டர் காளமேகம் என்பவருடன் தங்கினார். 1962 தேர்தலில் அவர் அருப்புக்கோட்டை தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்வானார். எனினும் அவர் உடல் நிலை காரணமாக அவரால் நாடாளுமன்றத்துக்குப் போகமுடியவில்லை.

1963 அக்டோபர் 29-ஆம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு தேவர் உயிர் பிரிந்தது. அவர் உடல் பசும்பொன் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. காலமெல்லாம் மாவீரனாக வாழ்ந்த தேவர் பசும்பொன் கிராமத்தில் அடக்கமானார். இன்றும் அவரது  நினைவிடம் ஆண்டுதோறும் வழிபாட்டுத் தலமாக விளங்கி வருகிறது.

 

குறிப்பு:

திரு. தஞ்சை வெ.கோபாலன், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில துணைத் தலைவர். பாரதி இலக்கியப் பயிலரங்கத்தை தஞ்சையில் நடத்தி வருகிறார்.

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஐப்பசி-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s