4.12 விவசாயம் படும் பாடு

-நைத்ருவன்

 

(அட்டைப்படக் கட்டுரை)

 

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்

       -இது ஐயன் வள்ளுவனின் வாக்கு. தெய்வப்புலவனின் வாக்கு பொய்த்துவிடுமா என்ன? ஆனால் இதைச் சொன்னால் நம்மைப் பார்த்துச் சிரிப்பவர்களோடு விவசாயிகளும் சேர்வர் எனச் சொல்லலாம். தாங்கள் வாங்கிய கடனைக் கூட திரும்பச் செலுத்த இயலாமல் அதனைத் தள்ளுபடிச் செய்யச் சொல்லி பல இடங்களிலும் போராட்டம், சமூக வலைத்தளங்களில் அரசைக் கடும் விமர்சனம் செய்து பலரும் பதிவுகள் இடுவது என்று, விவசாயம்  ஒன்றுக்கும் உதவாத தொழில் என்ற எண்ணத்தை மிக அழுத்தமாகப் பதிவு செய்து கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை.

இன்றைய சூழலில் விவசாயிகளில் தாங்கள் வாங்கிய கடனையும், அதற்கான வட்டியையும் அடைக்க இயலாமல் தவிக்கும் தவிப்பு சொல்லொணாத் துயரத்தை அளிக்கக் கூடிய ஒன்று. விவசாயிகள் வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்தாலும், அவர்களது சுமை ஓரளவுக்கே குறையும்;ஏனெனில் அவர்கள் தனியாரிடமும் கடன்களைப் பெற்றிருக்க வாய்ப்புண்டு. இதற்கு என்ன வழி காணக் கூடும் என்று விளங்கவில்லை.

ஏன் இந்த அவலநிலை? கடன் தள்ளுபடி என்பது நிரந்தரத் தீர்வல்லவே!  தன்னைச் சார்ந்து மற்றவர்களை இருக்க வைத்த வேளாண்குடி, இன்று மற்றவர்களைத் தொழுது நிற்கும் நிலைமை ஏன் வந்தது?

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல் 

-என்ற குறளுக்கு இணங்க தற்காலிக நிவாரணத்தைக் கொடுக்கும் அலோபதி மருத்துவம் போலல்லாமல், நிரந்தரத் தீர்வை நோக்கி நகர வேண்டுமெனில் வேளாண்குடிக்கு நேர்ந்த இந்த இழிநிலைக்கு மூலகாரணம்  என்ன  என்று  அறிய வேண்டும்.

இக்கட்டுரையில் விவசாயத்தைப் பாதிக்கும் சில அம்சங்கள் குறித்து சுருக்கமாக்க் காண்போம். இவை குறித்த ஆக்கப்பூர்வமான விவாதங்கள் கூடும்போது, இன்றைய பிரச்னைகளுக்கு தாமாகவே தீர்வு கிடைக்கும்.

விவசாயம் சரிந்த கதை…

என்றோ ஒரு நாள் ஆண்கள் தேடிக் கொணர்ந்தவற்றை உண்ட பெண்கள் அதன் விதைகளை எறிந்தபோது விளைந்த செடி, கொடிகள், மரங்களே விவசாயத்தின் ஆரம்ப நிலை. பின்னர் உணவைத் தேடி அலையாமல் அவற்றைத் தன்னருகிலேயே மகளிர் உருவாக்கத் துவங்க, விவசாயம் சிறிது மேம்பட்டு அடுத்த நிலை கண்டது. பின்பு காடழித்துக் கழனியாக்கி, விவசாய பரப்பளவு விரிந்தது.

இந்த விவசாயமும் இயற்கை வளமும், இதனூடே மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு அமைந்து வளர்ந்த நெசவும் இதர தொழில்களும் பாரதத்தை வளமும் செல்வச் செழிப்பும் கொண்ட நாடாக மாற்றின. உலகமெங்கும் உள்ளோர் பாரதநாட்டைக் கண்டடையத் துடித்ததன் பின்னணியும் அதுவே. அன்றைக்கும் இன்றைக்குமான வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் போன்றதாக மாறிப் போனது.

இந்த மாபெரும் வித்தியாசத்திற்கான முதல் படி, தனது தேவைக்காக நடந்த விவசாயம், மற்றவர்களின் தேவைக்கும் என ஆனதுதான்.  இன்று யாருக்கு எனத் தெரியாத நிலையிலேயே உற்பத்தி நடைபெறுகிறது.

இன்றைய சூழலில் தனக்காக விவசாயத்தில் ஈடுபடுவோர் மிகவும் குறைவு. ஆனால் உணவுக்காக விவசாயத்தைச் சார்ந்திருப்போர் எண்ணிக்கை கோடிக் கணக்கில்! எனவே அதீத உற்பத்தி  தேவையானதாக இருக்கிறது. அதற்காக,  அதை நோக்கி விவசாயியை அரசு வழி நடத்துகிறது. இது தவிர்க்க இயலாதது.

பசுமைப் புரட்சி மாயை

பசுமைப்புரட்சி அன்றைய அத்தியாவசியத் தேவைக்கு ஏற்பட்ட தற்காலிக நிவாரணமே. அது குறைபாடான ஒன்றல்ல. அது அன்றைய சூழலில் நம் மக்களை பஞ்சத்தின் பிடியிலிருந்து காத்திருக்கிறது. ஆனால் அதீத உரமும், பூச்சி மருந்தும் அன்றைக்கு அதீத மகசூலைக் கொடுத்தாலும், மண்ணின் வளத்தைக் குறைத்து அதனை மலடாக்கிவிட்டது என்பதனை மறுக்க இயலாது. ஆனால் இன்று மரபு வழி பாரம்பரிய விவசாயத்துக்கு உடனே தாவுவதும் தற்கொலைக்கே சமமாகும்.

உற்பத்தி அதிகமாகவும், மரபு வழி விவசாயமும் வேண்டும் என்றால் விவசாய நிலப்பரப்பு அதிகமாக இருக்க வேண்டியது மிக முக்கியம். ஆனால் நில உச்ச வரம்புச் சட்டமும்,  கூட்டுக் குடும்பச் சிதைவும் விவசாய நிலப்பரப்பினை சிறு துண்டுகளாக்கிச் சீரழித்துவிட்டன. ரியல் எஸ்டேட் என்ற மாபெரும் அரக்கன் பெரும் விவசாய நிலப்பரப்புகளை விழுங்கி விட்டான்.

தோட்டப் பயிர்களின் விளைவு

பணப்பயிர்கள் அதிக அளவு நீரை எடுத்துக் கொள்ளக்கூடியவை. தென்னந்தோப்புகள் என்பது ஊருக்கு பல இருக்கின்றன. இவை நீரை அதிகம் பயன்படுத்துபவை. நெல், கரும்பும் இந்த வகையைச் சார்ந்ததே. ஆனால் அரசு ஊக்குவிப்பது இந்தப் பயிர்களை. இவற்றுக்கு விலை கேட்டுப் போராட்டம் நடத்தவே விவசாயிகளுக்கு நேரம் போதவில்லை.

நிலக்கடலை, உளுந்து, தட்டைப்பயறு, துவரை என்று அனைத்தையும் ஒன்றாகப் பயிரிட்ட காலம் இன்று காணக் கிடைக்கவில்லை. இந்தப் பருப்பு வகைகளை சாகுபடி செய்தபோது,  விவசாயிகளுக்கும், அந்த கிராமத்தைச் சார்ந்த மற்றவர்களுக்கும் போதுமான அளவுக்கு விளைச்சல் இருந்தது. இந்த கலப்புப் பயிர் முறை அழிந்த பிறகு பருப்பு இறக்குமதியை நம்பி நாடும், கிராமத்து சாமானியன்  நியாய விலைக் கடைகளை நம்பியும் காத்திருக்க வேண்டிய நிலை வந்த்து. விவசாயியே கூட, அரிசிக்கும் பருப்புக்கும் நியாய விலைக்கடையில் காத்துக் கிடக்கும் அவலம்.

நீர் மேலாண்மையில் வீழ்ச்சி

தமிழகம் வானம் பார்த்த மானாவாரி விவசாயத்தையே பெருமளவில் சார்ந்திருக்கிறது. எனவேதான் கோயிலில் குளம், ஊர்க் கோடியில் குட்டை, ஏரி என்று பலவகையிலும் நீர் சேமிப்பு தமிழகத்தில் அக்காலத்தில் இருந்திருக்கிறது. இன்று விவசாயிகளுக்கு மிகப் பெரும் இடையூறு  தண்ணீர்த் தட்டுப்பாடுதான். நீர் மேலாண்மை என்று அரசின் கைகளுக்குச் சென்றதோ அன்றிலிருந்தே அதன் அழிவு தொடங்கிவிட்டது.

அறம், தெய்வம் சார்ந்து நீரைத் தேக்கி வைக்க குளம் குட்டை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற எண்ணத்தையும் திராவிடப்  பகுத்தறிவுப் பிரசாரம் நிலைகுலையச் செய்து நீர்நிலைகளை அசுத்தமாக்கி, அதனை ஆக்கிரமித்து அழிப்பது என்ற நிலைக்குத் தள்ளிவிட்டது; தமிழக விவசாயிகளை தள்ளாட விட்டுவிட்டது.

இறைக்கிற கிணறுதான் சுரக்கும் என்பார்கள். கிணற்றை இறைக்கிற வேலையே இல்லாமல், ஆறு, ஏரிகளிலிருந்து நீரை குழாய்களில் அனுப்பி மக்களைச் சோம்பேறியாக்கியதோடு அல்லாமல் ஒட்டுமொத்தமாக கிராமங்களில் உள்ள நீர்நிலைகளை அழித்துவிட்டார்கள். ஆழ்துளைக் கிணறு என்பது மிகப் பெரும் சாபக் கேடு. சமீபத்தில் தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் கூட தமிழகத்தில் அதிக அளவில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சுவது தவறு என்று  வருத்தத்தோடு குறிப்பிட்டிருந்தார்.

ஆறுகளில் மணல் அள்ளுவது வரைமுறையின்றி நடக்கிறது. ஆற்று மணல் நிலத்தடி நீரைக் காத்து நிற்கக் கூடிய ஒன்று என்ற உணர்வே இல்லாமல்தான், அது கொள்ளை போகும் இடங்களைச் சுற்றி உள்ளவர்கள் இருக்கிறார்கள். விவசாயிகளின் போராட்டங்களில் கடன் தள்ளுபடி என்ற காரணத்திற்குக் கொடுக்கப்படும் வேகம் இந்த மணல் கொள்ளையை எதிர்த்தோ, குடிநீர் நிறுவனங்களை எதிர்த்தோ நிகழ்வதில்லை. கட்சி சார்பு கொண்ட விவசாய சங்கங்கள் இதனை மிக சாமர்த்தியமாகக் கையாள்கிறதோ என்ற ஐயப்பாடு எழுகிறது.

காவிரி அரசியல்

நாம் காவிரி நீரை கர்நாடகம் நமக்குத் தரவில்லை என்பதை இனம், மொழி, அரசியல் சார்ந்தே காண்கிறோம். அது நீராதாரப் பிரச்னை என்ற நோக்கில் காண முயற்சிப்பதே இல்லை. இன்றளவும் தமிழகத்தில் பவானி ஆற்றுப் பாசனமாகட்டும், அமராவதி ஆற்றுப் பாசனம், மற்றெங்கிலும் நீர்ப்பங்கீடுப் பிரச்சினை இல்லை என்று கூறிவிட முடியுமா? யாரும் நீரை அடுத்தவருக்குத் தருவதைத் தடுப்பதில்லை என்று சொல்லிவிட முடியுமா? நமக்குக் கிடைக்கும் அதிக அளவு மழையைத் தொலைத்துவிட்டு,  அடுத்தவனைப் பார்த்து வசை பாடிக் கொண்டிருந்தால் என்ன பயன் ஏற்பட்டு விடப் போகிறது? எங்கு தொலைத்தாயோ அங்கு தேடிப் பார் என்று ஒரு சொலவடை ஒன்று, அதை நினைவில் கொள்வது நன்று.

ஊடகங்களும்  அரசு நிர்வாகமும் டெல்டா பகுதி விவசாயிகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்ற பகுதி விவசாயிகளுக்கு கொடுக்கிறார்களா என்பது கேள்விக்குறியே. காவிரி அரசியலால்தான் இந்த நிலை. வடதமிழகத்தின்  வட ஆற்காடு, தென் ஆற்காடு விவசாயிகளும் நெல் விளைவிக்கிறார்கள்- பெரிய அளவில் காவிரி போன்ற ஆற்று நீரை நம்பி அல்ல. இதனை முன்னாள் விவசாய சங்கத் தலைவரான நாராயணசாமி நாயுடுவும்  வருத்தத்தோடு குறிப்பிட்டிருந்தார். இன்றோ,  காஞ்சிபுரம் மாவட்டம் விவசாய நிலங்களை தொழிற்சாலைகளுக்கு தாரை வார்த்திருக்கிறது.

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்பது திராவிட இயக்கங்களின் கோஷம். எல்லாத் தொழிற்சாலைகளையும்  வட தமிழகத்துக்கே அளித்து விட்டால் தென் தமிழகத்துக்கு என்ன செய்வது என்ற புலம்பலும் உண்டு. உண்மையில், இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டுமே ஓரளவுக்கு நிலத்தடி நீரைக் கண்டடைய முடிந்திருக்கிறது. அங்கு பெரிய அளவில் சுற்றுச் சூழலும்  பெரிய அளவில் மாசடையாமல் இருக்கிறது.

மிக அதிக அளவிலான நிலத்தடி நீர் பல்வேறுபட்ட தொழிற்சாலைகளால் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. குடிநீர் பாட்டிலில் அடைத்து விற்கும் தொழிலில் பல குறு நிறுவனங்கள் போட்டியிட்டுக் கொண்டு தண்ணீரை பல வகைகளிலும் உறிஞ்சி எடுத்துக் கொண்டிருக்கின்றன.

மறைநீர் அபாயம்

கறிக் கோழி உற்பத்தியில் நீர் எவ்வளவு செலவழிக்கப்படுகிறது என்பது பலருக்கும் தெரியும். வளைகுடா நாடுகளுக்கு தினமும் ஏற்றுமதி செய்யும் முட்டைகளின் அளவு 70 லட்சம். ஒரு 60 கிராம் முட்டை உற்பத்தி செய்ய 190 லிட்டர் மறை நீர் தேவை. 1.1 டன் எடை கொண்ட கார் தயாரிக்க 4 லட்சம் லிட்டர் நீர் தேவைப்படுகிறது. ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10 லிட்டர் மறைநீரும், 250 கிராம் பருத்தி ஆடை தயாரிக்க 500 லிட்டர் மறைநீரும் தேவைப்படுகிறது.

சீனா ஆடை உற்பத்திக்கு அளித்துவந்த சலுகைகளை இதன் காரணமாகவே குறைத்து அநேகமாக நிறுத்திவிட்டு இன்று எதிர்காலத்தில் மக்களின் பிரச்சினையாக இருக்கப் போகிற உணவு உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்துகிறது. ஆனால் நாம் சீனாவின் இந்த நிலைப்பாட்டால் ஆடை உற்பத்தியில் ஏற்படும் இடத்தை அடையத் துடிக்கிறோம். இப்படி நாம் யாருக்காகவோ தயாரித்து ஏற்றுமதி செய்யும் பொருளுக்கு, நமது நீர்வளத்தை தாரை வார்த்துக் கொண்டிருக்கிறோம்.

விளைபொருள் விலை என்ன?

ஏதோ ஒரு முறை தக்காளி விலை கிடைக்காமல் வீதியில் கொட்டப்பட்டால் சரி, எத்தனை முறை இப்படி நடந்தது? சின்ன வெங்காயம் விவசாயிடம் ரூ. 25-க்கு வாங்கப்பட்டது ரூ. 150-க்கு விற்கப்படுகிறது. இந்த முறை சின்ன வெங்காயம் அதிக உற்பத்தியானதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். என்ன உற்பத்தி செய்ய வேண்டும், எவ்வளவு பரப்பில் பயிரிட வேண்டும் என்ற தெளிவான கொள்கை விவசாயிகளிடம் இல்லை என்று சொல்வதா?  இல்லை அவர்களை வழிநடத்தும் வேளாண் துறையிடம் இல்லை என்று சொல்வதா?

பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் பாடுபட்டு உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தியாகிகள். அவர்களுக்கு உரிய மதிப்பினை சமூகம் அளிக்கிறதா என்பது கேள்விக்குறியே ! பணமிருந்தால் உணவு கிடைத்துவிடும் என்ற மனநிலை சமூகத்தில் விரவிக் கிடக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி இந்த விவசாயிகளுக்காக வழிகாட்ட வேண்டிய விவசாய சங்கங்கள் அரசியல் ரீதியாக, கொள்கை ரீதியாகப் பிளவுபட்டுக் கிடக்கின்றன.

வேலை உறுதி திட்டம் என்னும் எமன்

இலவசம் இந்த தமிழகத்தைப் பிடித்த சாபக்கேடு. அதோடு சேர்ந்து கொண்டது  மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம். அதுவும் 100 நாளாக இருந்தது இன்று 150 நாட்களாக அதிகரிக்கப்பட்டுவிட்டது. விவசாயக் கூலி வேலைகளுக்கு ஆள் கிடைப்பதைக் குறைத்து, அவர்களின் கூலியை அதிகமாக்கி விவசாயியின் மென்னியை இறுக்கியதைத் தவிர வேறெந்த சாதனையையும் இந்தத் திட்டங்கள் செய்யவில்லை.

மக்களைச் சோம்பேறியாகவும் பொறுப்பற்றவர்களாகவும் ஆக்கியிருக்கிறது இந்த வேலை உறுதித் திட்டம் என்று வேண்டுமானாலும் சொல்லலாம். இன்றைக்கு விவசாயிகளுக்கு குரல் கொடுப்பதில் முன்னிற்பவர்களாக ஊடகவெளியில் காட்டிக் கொள்வோர் பலரும், விவசாயிகளை வில்லன்களாகவும், கூலித் தொழிலாளிகளை அவர்களிடம் வதைபடுபவர்களாகவும் காட்டி விவசாய அழிவுக்கு முதலில் சாலை அமைத்தவர்கள்தான்.

இவற்றுக்குத் தீர்வு என்ன என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. இன்று நாட்டில் உள்ள அத்துணை பிரச்னைகளுக்கும் தீர்வு காண முயல்வதாகட்டும், திட்டங்களைச் செயல்படுத்துவதாகட்டும், தொலைநோக்குப் பார்வை என்பது இல்லை என்பது மட்டும் தெளிவு.  ஆனால் அதனை நோக்கி நகர முற்படுவதும் சில ஆலோசனைகளைச் சிந்திப்பதும் சாத்தியமே.

கூட்டுப் பண்ணை முறை

நிலப் பரப்பளவு அதிக அளவில் இருந்தால்தான் விவசாயம் என்பது ஓரளவுக்காவது லாபத்தை ஈட்டுவதாக இருக்க முடியும். அதற்காக நில உச்ச வரம்புச் சட்ட்த்தை நீக்கலாமா? நீக்கலாம்.  ஆனால்,  இன்றைய சூழ்நிலையில் பணத்தினை அதிக அளவில் சேர்த்து வைத்திருக்கும் அரசியல்வாதிகளுக்கும், வணிகர்களுக்கும் வேண்டுமானால் அது பயனளிக்கக் கூடும். சிறு, குறு விவசாயிகளுக்கு இதனால் பயன் கிடைக்காமல் போய்விடக் கூடும். ஆகையால் இன்று விவசாயத் தொழிலில் உள்ளவர்களுக்கும் அவர்களின் சந்ததிக்கும் மட்டும் விலக்களிக்குமாறு திருத்தம் செய்யலாம்.

இன்று பெரிய நிலப்பரப்பைப் பெற கூட்டுப்பண்ணை முறையை மேற்கொள்ளலாம்.. வேலை மற்றும் செலவுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். இதற்கு,  இன்றைய சூழலும், மனநிலையும்  நிச்சயம் பெரிய தடையாக இருக்கும் ஆனால் அதனைத் தகர்த்தெறிவது அத்தியாவசியத் தேவை என்பதனை உணர்ந்தால், இதனைச் சாதிக்க முடியும்.

மனை வணிகத்துக்கு கட்டுப்பாடு

ஒரு நகரத்தைச் சுற்றி இருக்கும் கிராமங்களில் உள்ள விவசாய நிலம் விவசாயத்திற்காக அல்லாமல் வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்படுவதை தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும். அண்மையில் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தடையுத்தரவுகளும் வழிகாட்டுதல்களும் கவனத்தில் கொள்ளத் தக்கவை.

விவசாய நிலம் காக்கப்பட்டால்,  அந்த நகரத்துக்குத் தேவையான உணவு சுற்றியுள்ள கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும். விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் இது பயனுள்ளதாக அமையும். சக்தி சேமிப்பு, காலவிரயம் தவிர்ப்பு, நியாயமான விலை, தேவையான உற்பத்தி என்றிருக்கும்.

அடுத்து,  நாட்டு மாடு வளர்ப்பு ஊக்குவிக்கப்பட வேண்டும்; அவற்றின் மேய்ச்சல் நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; பாரம்பரிய வழியிலான விவசாயத்திற்கு சிறிது,  சிறிதாக நாம் மாற வேண்டும். ஏற்றுமதியிலும்கூட  பாரம்பரிய- இயற்கை வழி உற்பத்தியிலான பொருட்களுக்குத்தான் மதிப்பு என்கிற போது,  நமது மக்களின் ஆரோக்கியத்திற்காக இந்த மாற்றத்தை நாம் செய்தே ஆக வேண்டும்.

நீர்மேலாண்மை, நீர்நிலைப் பராமரிப்பு போன்றவை விவசாயிகளின் கூட்டமைப்பின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக மாற்றப்பட வேண்டும். ஆற்று மணல் அள்ளுவது முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும். கட்டடங்கள் கட்டுவதற்கு மாற்றுத் தொழில்நுட்பங்களை பரிசீலிக்கலாம்.

ஆபத்தான ஆழ்துளைக் கிணறுகள்

கட்டுப்பாடின்றி ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பது  நிறுத்தப்பட வேண்டும். ஏற்கனவே இருக்கும் ஆழ்துளைக் கிணறுகள் படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும்.

குடிநீர் விற்பனை நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். குடிநீர் விற்பனை தடை செய்யப்பட்டு, அரசே அதனை சேவை அடிப்படையில் வழங்க வேண்டும். நீர்  அனைவருக்கும் பொதுவானது என்பது சட்டமாக்கப்பட வேண்டும். அதன்மீது அரசாங்கமோ, தனியார் நிறுவனமோ உரிமை கொண்டாடும் நிலை இருக்கவே கூடாது.

நீர்நிலைகள் பராமரிக்கப்பட்டு, கிடைக்கும் மழைநீரை முற்றிலுமாக சேமிக்க வழி காண வேண்டும். தடுப்பணைகளை விட ஆற்றங்கரைகளின் இருபுறமும் நிலத்தடி நீரை சேமிக்கும் விதமாக வனங்களை உருவாக்க வேண்டும். கரைகளிலுள்ள ஆக்கிரமிப்புகள்  பாரபட்சமின்றி அகற்றப்பட வேண்டும்.

பணப்பயிர்கள் என்ற ரீதியில் நெல்லையும் கரும்பையும் அதிக உற்பத்தி செய்வதை விட நீர் குறைவாகத் தேவைப்படும் தானிய வகைப் பயிர்களுக்கு உடனடியாக மாறுவதன் மூலம் நீர்த் தேவையை சமாளிக்கலாம். நெல் உற்பத்தியை குறைந்த பரப்பளவில் மேற்கொள்ளலாம். ஏற்கனவே ஏராளமான அளவு அரிசி அரசால் வீணடிக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே.

விவசாயிகள் கூட்டமைப்பு தேவை

குறைந்தபட்சம் 10 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த அமைப்பு கீழ்க்கண்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்:

  1. நீர்நிலைப் பராமரிப்பு, நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு போன்றவற்றைச் செய்யலாம்.
  2. சூழ்நிலை, தேவை, சந்தைப்படுத்துவது போன்றவை குறித்து விவாதித்து என்ன பயிரிடுவது என்ற ஆலோசனையை அளிக்கலாம். கலப்புப் பயிர்முறையை ஊக்குவிக்கலாம்.
  3. பாரம்பரிய முறையில் தானிய பாதுகாப்புக் கூடங்களை பொதுவாக ஏற்படுத்தலாம்.
  4. அமைப்பின் மூலமாக விவசாய உற்பத்திப் பொருள்களை நேரடியாக சந்தைப்படுத்தலாம். காதி விற்பனை நிலையம் போல விவசாய விற்பனை நிலையங்களை அமைக்கலாம். இதற்கு அரசாங்கம் வரிவிலக்கு உறுதியளிக்க வேண்டும்.
  5. நெல்லாக விற்காமல் அரிசியாக்கி இந்த அமைப்பே விற்கலாம். இதற்காக பல அமைப்புகள் ஏற்கனவே இருக்கும் அரிசி ஆலைகளை குத்தகைக்கு எடுக்கலாம். அல்லது புதிய ஆலையை கூட்டுறவு முறையில் நிறுவலாம். இதுபோல ஒவ்வொரு விவசாய உற்பத்திப் பொருளுக்கும் விவசாயிகள் இணைய வேண்டும். இதற்காக அரசாங்கம் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடனை அளிக்க முன்வரவேண்டும்.
  6.  உற்பத்தியாகும் பொருளுக்கான விலையை இந்த அமைப்பு மூலமாக  நிர்ணயிக்கலாம். இது வேளாளர்களை வணிகர்களாக மாறுவதாக இருக்கிறது. இதுகாலம் மட்டும் அறமற்ற வணிகத்தாலேயே விவசாயம் வீழ்ந்தது; விலைவாசியும் உயர்ந்தது. எனவே விவசாயிகள் மனதில் கொள்ள வேண்டியது,  இன்று இயற்கை விவசாயப் பொருள்கள் என்று சொல்லி விலையை வானத்தின் எல்லைக்கு உயர்த்த முனைவது அல்ல, நியாயமான விலை விவசாயிக்கும் நுகர்வோருக்கும் பயனளிக்கக் கூடியதாக அமைய வேண்டும்.
  7. குஜராத்தின் அமுல் கூட்டுறவு அமைப்பு நமக்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களையும் மொத்தமாகக் கலைத்து விட்டு, மத்திய அரசு புதிய கூட்டுறவு சங்கங்களை உருவாக்கலாம். அரசியல்வாதிகள் அதில் தலையிடாமல் இருக்க, முக்கியமாக மாநில அரசு ஊழலைப் புகுத்தாமல் இருக்க, என்ன வரைமுறைகள் செய்ய முடியுமோ அதனைச் செய்ய வேண்டும்.
  8. முதலில் கட்சி சார்பு கொண்ட விவசாய சங்கங்களிலிருந்து விவசாயிகள் வெளியேற வேண்டும். சிறு விவசாய அமைப்புகளை ஒருங்கிணைக்கும், கட்சி சாராத ஒரு விவசாயிகளின் குழு மட்டுமே தேவை.
  9. வாழ்க்கையில் போராட்டம் என்பது மிக முக்கியமான ஒன்று. அது நமது செயலில் வெற்றி பெற உழைப்போடு கலந்து இருக்க வேண்டுமே தவிர சாலையில் இறங்கி கோஷமிடுவது, அல்லது வித்தியாசமாக ஏதாவது செய்து மற்றவரின் கவனத்தை நம் பக்கம் திருப்ப முயற்சிப்பதோ அல்ல.
  10. மறை நீர், மற்றும் பல இயற்கை வளங்களை மனதில் இருத்தி எதை உற்பத்தி செய்ய வேண்டும், எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும் என்பதனை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக முடிவெடுக்க வேண்டும். வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதை விட நம் வளங்களை குறைந்த விலைக்குத் தொலைப்பது கேடானது என்பதனை உணர வேண்டும்.

கிராம ராஜ்யம்

இந்தியாவில் தயாரிப்பது என்பது முதலில் இந்தியர்களுக்காக என்று அமைய வேண்டும். மாபெரும் தொழிற்சாலைகளை நிறுவி கிராமப்புற மக்களை இடம்பெயரச் செய்வதை விட,  சிறு தொழில்களை கிராமத்தில் செய்ய வைப்பதே சாலச் சிறந்ததாக அமையும். அதற்கு நாம் அதீத உற்பத்தி என்ற நிலையிலிருந்து கீழிறங்கி வர வேண்டும். தேவைக்கான உற்பத்தி என்பதாக அது இருக்க வேண்டும்.

கிராமராஜ்யமே ராமராஜ்யமாக மலர வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்ற முயற்சிப்பதே, ஒட்டுமொத்தமாக விவசாயிகளின் அனைத்து சிக்கல்களுக்கும் சரியான தீர்வாக இருக்கும்.

 

 

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஆடி-2017 and tagged . Bookmark the permalink.

Leave a comment