4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும்

-ஆடிட்டர் ச.சிவசுப்பிரமணியன்

சுதந்திரம் பெற்று கடந்த 70 வருடங்களாக நாட்டின் மைய நிர்வாகமும் மாநில நிர்வாகமும் நடத்துவதற்கு ஏதுவாக நேர்முக வரி, மறைமுக வரி விதிப்பின் மூலம் அரசுக்கு நிதி ஆதாரம் பெற வழிவகை செய்யப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. அந்த வரி விதிப்பு முறையில் கடந்த 2017 ஜூலை 1 அன்று மிகப் பெரிய மாறுதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை பலமுனை மறைமுக வரிவிதிப்பு செயல்பாட்டில் இருந்து வந்த- மத்திய கலால் வரி (Central Excise), சுங்க வரி (Customs) (பகுதி), மத்திய விற்பனை வரி (CST), மதிப்பு கூட்டு வரி (VAT), கேளிக்கை வரி (Entertainment Tax), நுழைவு வரி (Entry Tax),  கொள்முதல் வரி (Purchase Tax), ஆடம்பர வரி (Luxury Tax) ஆகிய இவை அனைத்திற்கும் மாற்றாக சரக்கு மற்றும் சேவை வரி (GST) என்ற ஒற்றை வரி  விதிப்பு முறை அமலுக்கு வந்துள்ளது.

இதன் நடைமுறைகள் குறித்தும், சாதக- பாதகங்கள் குறித்தும் இங்கு சுருக்கமாக காணலாம்.

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் நோக்கம்:

 • நாடு முழுவதும் ஒரே சீரான வரி விகிதம்
 • வரியின் மீதான வரி விளைவை (Cascading Effect) குறைத்தல் அல்லது நீக்குதல்.
 • நுகர்வு அடிப்படையில் வரி
 • ஒரே மாதிரியான படிவங்கள் நாடு முழுவதும் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துதல்.

மூன்று பிரிவுகள்:

இந்த வரிவதிப்பில் மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன, மத்திய ஜி.எஸ்.டி.  CGST (Central GST),  மாநில ஜி.எஸ்.டி. SGST (State GST) மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. IGST (Integrated GST) ஆகியவை.

இங்கு விற்பனை  ‘பொருள்/ சேவை விநியோகம்’ (Supply) என்று அழைக்கப்படும்.  அதாவது மாநிலத்தில் விற்பனை (சப்ளை) செய்யும் பொழுது வரி வசூல் செய்வது (CGST- 50% , SGST-50%) என்று பிரித்து வரவு வைக்கப்படும். உதாரணமாக GST 5%  வரி வதிப்பை  ஒருவர் தமிழ்நாட்டில் பதிவுபெற்று தமிழ்நாட்டில் பதிவுபெற்ற மற்றொரு நபருக்கு விற்றால் CGST  2.5% மற்றும் SGST 2.5% என்று வசூல் செய்வார்.

இதுவே அவர் வெளி மாநிலத்தில் உள்ள வேறு நபருக்கு விற்பனை (Supply) செய்தால் IGST 5% என்று வசூல் செய்வார்.  வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு இந்தியாவில் உள்ள நபர் IGST என்ற வரி செலுத்தவேண்டும்,

இந்த வரி விதிப்பில் மது (Alcohol),  பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் மின்சாரம் ஆகியவை வராது. அதற்கு தற்போதைய நடைமுறை சட்டமே பொருந்தும்.

இது தவிர GST Compensation Cess 12% வரி விதிப்பு பான் மசாலா, புகையிலைப் பொருட்கள், நிலக்கரி, சுத்திகரிக்கப்பட்ட நீர் (Aerated Water), மோட்டார் கார் ஆகியவற்றுக்கு உண்டு. இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அடிப்படை சுங்க வரி, கல்வி மற்றும் உயர்கல்வி செஸ், IGST மற்றும் GST cess உண்டு.

பதிவுச் சான்று:

உள்மாநிலத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமாக வியாபாரம்/ சேவை செய்பவர்கள், வெளியூரில் விற்பனை செய்பவர்கள், இறக்குமதி செய்து விற்பனை செய்பவர்கள், Casual Traders, Input Service Distributor, Electronic Commerce operator (அமேசான், பிளிப்கார்ட் போன்றவை) ஆகியோர் கட்டாயமாக  https:/www.gst.gov. in இணையதளம் மூலம் பதிவுக்கு விண்ணப்பித்தால்,  3 நாட்களுக்குள் PAN Based GST எண் வழங்கப்படும். இதற்கு பதிவுக் கட்டணம் இல்லை.  ஒரு மாநிலத்தில்  உள்ள நபர் மற்றொரு மாநிலத்திலும் வியாபாரம் செய்வாராயின், மாநில வரியாக தனித்தனியாக பதிவு மேற்கொள்ள வேண்டும்.

உள்ளீட்டு வரி வரவு (Input Tax Credit):

 • பதிவு பெற்ற வணிகர் தாங்கள் கொள்முதல் அல்லது பெறப்பட்ட சேவைகளில் செலுத்திய வரியினை, தாங்கள் வசூல் செய்த வரியினைச் செலுத்தும் பொழுது கழித்துக்கொண்டு மீதமுள்ள தொகையை மட்டும் அரசுக்குச் செலுத்தினால் போதும்.
 • ஒரு வருடத்திற்குள் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பாக 01.07.2017-இல் உள்ள பொருட்களுக்கு உண்டான வரியினையும் வரவு வைத்துக்கொள்ளலாம்.
 • இது தவிர07.2017 அன்று உள்ள இருப்பு சரக்கிற்கு எக்சைஸ் வரி பிடிக்கப்பட்டதாக இருந்தால், அதன் 60 % அல்லது 40% வரியினை வரவு வைத்துக் கொள்ள வேண்டும். இது இரண்டாம் விற்பனை, மூன்றாம் விற்பனை வணிகர்களிடம் மறைமுகமாக இருந்தாலும் வரவு அனுமதி உண்டு. ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு வரிவிலக்கு பெற்றனவாயினும், அவர்கள் கொள்முதல், சேவை பெறும்பொழுது செலுத்திய வரிகள் திரும்ப அவர்களுக்கு அளிக்கப்படும்.

கணக்கு தாக்கல் (Return Filing):

வரி செலுத்துவோர், இணையதளம் மூலமாகவே கணக்கு தக்கல் (வரி ரிட்டன்) தாக்கல் செய்ய வேண்டும்.  ஒவ்வொரு மாதமும் 10-ஆம் தேதிக்குள் முந்தைய மாதத்தின் விற்பனை, சேவை புரிந்தவை மட்டும் தாக்கல் செய்ய வேண்டும்.  15-ஆம் தேதி கொள்முதல் மற்றும் பெறப்பட்ட சேவையில் வரவு வணிகரின் பதிவுத் தளத்தில் வெளியாகும் (Reflect). அதைச் சரிபார்த்து, அதில் தவறு இருந்தால் நேர் செய்யும் வாய்ப்பு அளிக்கப்படும்.  20-ஆம் தேதி வரி செலுத்த வேண்டி இருந்தால், இணைய வழி, பற்றுஅட்டை  NEFT/ RTGS; OTC (ரூ. 1,00,000/-வரை வரிகளில் நேரடியாகச் செலுத்தும் வசதி) மூலம் செலுத்த வேண்டும்.

இணக்க வரி (Compounding Tax):

வருடாந்திர மொத்த விற்பனைத் தொகை ரூ. 75 லட்சம் வரை உள்ளவர்கள் இணக்க வரி செலுத்தலாம். அவர்களுக்கான பட்டியல்:

 • வணிகர்கள் – 1%
 • உற்பத்தியாளர்கள் – 2%
 • உணவகங்கள் – 5%

இவர்களுக்கு வரி வசூல் கிடையாது:

சிறு வணிகர்கள்  (ரூ. 1.50 கோடி வரை) HSN குறியீட்டினை நமூனாவில் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.  இவர்களுக்கு உள்ளீட்டு வரி வரவும் கிடையாது.

மாநிலங்களிடை சரக்கு மாற்றம்:

பொருட்களை வெளிமாநிலத்தில் உள்ள அதே நிறுவனத்தின் கிளைக்கு மாநிலங்களிடை சரக்கு மாற்றம் செய்தாலும் (Inter State Stock Transfer)  வரியிட்டுத் தான் அனுப்ப வேண்டும்.

Reverse Charge Merchant:

GST  சட்டத்தில் பதிவு பெறாத வணிகர்களிடம் இருந்து பொருள்/சேவை பெறும் பொழுது, பதிவு வணிகர் தாமே ரூ. 5,000-க்கு மேற்பட்ட பொருட்களுக்கு/ சேவைகளுக்கு அதற்கான வரியை 15-ஆம் தேதிக்குள் செலுத்தி ITC எடுத்துக் கொள்ளலாம்.  மேலும் அட்வகேட் பீஸ்,  Sea Freight,  வாடகை ( GTA Service) உள்பட 12 சேவைகளுக்கு சேவை பெறுபவரே வரி செலுத்த வேண்டும்.

ஒப்பந்த வெளிப்பணி (Job Work) என்னும் சேவை    

ஒரு பணியை குறிப்பிட்ட கூலிக்கு செய்து தரும் ஒப்பந்த வெளிப்பணியாளரின் (Job worker) வருட விற்பனை ரூ. 20 லட்சத்திற்கு மேல் சென்றால் அவர் பதிவு பெறுவது அவசியம்.  வெளிமாநில Jobwork/ சேவை என்றாலும்,  எவ்வித உச்சவரம்பின்றி பதிவு  செய்ய வேண்டும்.   Job workக்கிற்கு அனுப்பப்படும் பொருட்களுக்கு Delivery சலான் மற்றும்  E Way பில் ஆகியவை அனுப்பிட வேண்டும்.

ஒரு Job worker நமக்கு மட்டுமே  Jobwork செய்கிறார் என்றால் அவருடைய விபரம் மற்றும் முகவரியை நமது பதிவுச் சான்றிதழில் பதிவு செய்து கொள்ளலாம்.  அவ்வாறு செய்தால் Jobworker தனியாக பதிவு செய்ய தேவையில்லை.

Jobwork-க்கு அனுப்பியதில் கழிவு மீதம் இருந்தால் அதற்கு அந்த உற்பத்தியாளர் வரி செலுத்த வேண்டும்.  ஒரு  Invoice-இல் ரூ. 50,000-க்கு மேல் வரியுள்ள பொருட்களை பதிவு பெறாத வணிகருக்கு விற்றால் அவருடைய முழு முகவரி மற்றும் Delivery செய்யும் இடம், மாநிலம், மாநில எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். முண்பணம் பெற்றால் அதற்கான வரியினை அந்த மாதமே செலுத்த வேண்டும்.  அதற்கான ரசீது தர வேண்டும்.

இணக்க மதிப்பீடு (Compliance Rating):          

முறையாக விதிமுறைகளைக் கவனித்து ரிட்டர்ன் தாக்கல் செய்யும் வணிகர்களுக்கு 0 முதல் 10 புள்ளிகள் வரை அவரவர்  சட்ட விதிகளின் இணக்கத்தைப் பொருத்து இணக்க மதிப்பீடு வழங்கப்படுகின்றது.  தற்பொழுது நடைமுறையில் உள்ள . C. F. E. JJ  படிவங்கள் நீக்கப்பட்டுள்ளன.

மாதாந்திர / காலாண்டு அறிக்கை தாக்கல் செய்ய கால தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளும் ரூ.100 வீதம் அதிகபட்சமாக ரூ. 5,000 வரை அபராதம் செலுத்த நேரிடும்.

ஆண்டு விபர அறிக்கையை அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் தாக்கல் செய்யாதவர்களுக்கு நாள் ஒன்றுக்கு  ரூ.100 வீதம் விற்பனைத் தொகையில் 0.25% வரை அபராதம் விதிக்கப்படும்.

ஜி.எஸ்.டி.யின் நன்மைகள்:

 • ஆரம்பத்தில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும் ஜி.எஸ்.டி. வரவேற்கத்தக்க நடவடிக்கை. சிறிது காலத்திற்கு பிறகே எளிதாகப் பணியாற்ற இது வழிவகுக்கும்.
 • இது வரை இருந்த பல வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ‘ஒரே வரி, ஒரே நாடு’ என்ற நிலை வந்திருப்பதால், புதிதாக வணிகப் பதிவு செய்யும் நடைமுறை எளிதாகிறது.  இதில் வணிகர்கள் தாங்கள் செலுத்தும் கொள்முதல் வரி முழுவதும் விற்பனை/ சேவை வரிகளைச் செலுத்தும் போது கழித்து மீதம் செலுத்தினால் போதும். அதாவது வணிகர்களின் லாபத்திற்கு மட்டுமே வரி என்பது நிலையானது.
 • வணிக அதிகார வர்க்கத்தின் தலையீடு, முறையற்ற வணிகம், லஞ்சம் ஆகியவை இதனால் பெருமளவில் குறையும்.
 • மறைமுக வரியான கலால் வரி (Excise), சேவை வரி முதலியவை இரண்டாம் விற்பனையாளர்களுக்குத் தெரியாமல் இருந்தது தவிர்க்கப்பட்டு, அனைவரும் ஒரே மாதிரி வரியிட்டுக் கொள்ள முடியும்.

புதிய முறையின் குறைபாடுகள்:

 • சிறு வணிகர்கள், சேவை புரிபவர்கள் பதிவு வட்டத்தினுள் வருவதால் அவர்களுக்கு ஆரம்பத்தில் சிறிது நடைமுறைச் சிக்கல், பொருட்செலவு அதிகரிக்கும். சிறு தொழில் முனைவோர் ஜி.எஸ்.டி. பதிவு பெறாமல் இருந்தால் பெரிய வணிகர்கள் அவர்களுடன் வணிகம் புரியத் தயங்குவார்கள்.
 • உணவுப் பொருட்கள், மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான வரியினை, ரூ. 50 லட்சத்திற்குக்  குறைவாக உள்ளவர்களுக்குத் தவிர்த்திருக்க வேண்டும்.
 • உணவுப் பொருட்களுக்கான வரி விகிதத்தை மேலும் குறைத்திட வேண்டும்.
 • திருப்பூர், சிவகாசி போன்ற சிறுதொழில் செய்யும் ஊர்களில் ஒப்பந்த அடிப்படையில் வெளிப்பணி செய்து தரும் Jobwork நிறுவனங்கள் அதிகம் உள்ளன.  அவர்கள் ஜி.எஸ்.டி. பதிவு செய்து நடைமுறைபடுத்துவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.  அதற்குப் பதிலாக, அவர்களை principle நிறுவனங்களின் துணை நிறுவனங்களாகப் பதிவு செய்து இந்த இடைநிலை வரி தவிர்க்கப்பட வேண்டும்.
 • அரசியல் வியாபாரிகளும், ஊடகங்களும், இந்த வரிவிதிப்பு வியாபாரிகளை பாதிப்பது போன்று பிரசாரம் செய்வதற்கு வழி வகுக்காமல், மாநில அளவில் ஆலோசனைக் குழு பட்டய கணக்காளர்களின் சங்கங்களுடன் இணைந்து அமைத்து, குறைகளை அவ்வப்பொழுது களைய ஆவண செய்திருக்க வேண்டும்.

அரசு என்ன செய்ய வேண்டும்?

வரிவிதிப்பில் முனைப்பு காட்டும் அரசு, மக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் ஒவ்வோர் ஊரிலும் வாரந்தோறும் குறைதீர்ப்பு முறைக்கு மையம் அமைத்து,  அவ்வப்பொழுது வரும் சிக்கல் தீர்க்கவும், சிறு வியாபாரிகள் கணிணி வணிகம் நடைபெறுவதில் உள்ள சிக்கல்களைக் களையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெருவாரியான பொருட்களின் வரி விகிதங்கள் குறைக்கப்பட வேண்டும். அப்பொழுது தான் மக்களின் சுமை குறையும். வரி விகிதங்கள் அதிகரிப்பது ஏய்ப்புக்கே வலிகோலும்.

வரி விதிப்பிலும் வரி வசூலிலும் முனைப்புக் காட்டும் அரசுகள், அந்த வரித் தொகையை செலவு செய்வதிலும் தனி கவனம் செலுத்த வேண்டும்.

சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளான பின்னரும், மாநகராட்சி, நகராட்சி, மாநில, மத்திய நிதி நிலை அறிக்கைகள் பற்றாக்குறை அளவிலேயே உள்ளன. இது  மிகவும் வருந்தத்தக்கது.  இந்த பற்றாக்குறை நிவர்த்திக்கு கால அளவீடு நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

இந்த மறைமுக வரியில் தெரிவிக்கப்படும் அளவு சதவிகிதம், தொகை போன்றவை அரசு அளிக்கும் சொத்து வரி ரசீதுகளில் வெறும் வருடம் மட்டுமே குறிப்பிடப்படுவதால், பெருமளவில் லஞ்சம், வரிஏய்ப்பு நடைபெற்று வருகிறது. சொத்து வரி ரசீதுகளில்  கட்டட அளவு,  வரிவிகிதம்,  வருடம் மற்றும் தொகையைக் குறிப்பிட்டால் அளவுக்கதிகமாகவே வரி வசூல் செய்ய முடியும். உள்ளாட்சி அமைப்புகளின் பற்றாக்குறை நிலையும் மறையும்.

 

குறிப்பு:

ஆடிட்டர் திரு. ச.சிவசுப்பிரணியன், திருப்பூரில் செயல்படும் பட்டயக் கணக்காளர்; திருப்பூர் அறம் அறக்கட்டளையின் தலைவர்.

 

 

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஆடி-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s