-ஆசிரியர் குழு
ஜி.எஸ்.டி.யின் நாயகர்கள்:
1. அடல் பிஹாரி வாஜ்பாய்
ஜிஎஸ்டி என்ற கருத்தாக்கம், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்களான ஐ.ஜி.படேல், பிமல் ஜலான், ரங்கராஜன் ஆகியோர் அடங்கிய பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவால், 1999-இல் முன்வைக்கப்பட்டது. அதையடுத்து மேற்கு வங்க நிதியமைச்சராக இருந்த அஸிம்தாஸ் குப்தா (மார்க்சிஸ்ட் கட்சி) தலைமையில் ஜிஎஸ்டி வடிவமைப்புக் குழுவை வாஜ்பாய் அறிவித்தார்.
மேலும், நாடு முழுவதும் ஒரே வரி முறைக்கான ரவிதாஸ் குப்தா குழுவை வாஜ்பாய் அமைத்தார். 2003-இல் வரி சீர்திருத்தத்திற்கான விஜய் கேல்கர் குழுவையும் அவர் அமைத்தார். 2005-இல் கேல்கர் குழு தனது அறிக்கையை அளித்தது. அப்போது மன்மோகன் சிங் பிரதமர் ஆகியிருந்தார்.
- மன்மோகன் சிங்
மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்க்கான 80 சதவீதப் பணிகள் நிறைவடைந்தன. அவரது நிதியமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் ஆகியோர் ஜிஎஸ்டி பணிகளைத் தொடர்ந்தனர். ஆயினும் மேற்கு வங்கத்தில் 2011 தேர்தல் தோல்வியை அடுத்து அஸிம்தாஸ் குப்தா ஜிஎஸ்டி குழுவின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். அது ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு தடையானது.
உண்மையில், ஜிஎஸ்டி வரிமுறையை அமலாக்கும் துணிவு இல்லாததால் காங்கிரஸ் அரசு அதற்காக தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. பிரதமர் மன்மோகன் சிங்கின் கரங்கள் கட்சி அரசியலுக்குக் கட்டுப்பட்டதால் அவரது ஆட்சி, ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கான பெருமையை இழந்தது.
- அஸிம்தாஸ் குப்தா:
மேற்கு வங்க அரசில் 1987 முதல் நிதியமைச்சராக இருந்த பொருளாதார நிபுணரான அஸிம்தாஸ் குப்தாவை ஜிஎஸ்டி குழுவின் தலைவராக வாஜ்பாய் நியமித்தது அற்புதமான முடிவு. அவர்தான் பிற மாநில நிதியமைச்சர்களுடன் தொடர்ந்து பேசி, திட்டத்தை 80 சதவீதம் வடிவமைத்தார். தனது பணியில் அரசியல் குறுக்கிட அவர் அனுமதிக்கவில்லை.
- நரேந்திர மோடி:
குஜராத் முதல்வராக இருந்தபோது ஜிஎஸ்டி-க்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தவர் நரேந்திர மோடி. அன்றைய மத்திய அரசு அவருக்கு எதிராக பல கீழ்த்தரமான சதிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், ஜிஎஸ்டி குறித்து அவருக்கு சந்தேகங்கள் இருந்தன. எனினும், 2014-இல் பிரதமரானவுடன் அவரது பார்வை மாறியது. நிதியமைச்சர் அருண் ஜேட்லி, கொள்கை வடிவமைப்புக் குழுவான நிதி ஆயோக் உறுப்பினர்கள் ஆகியோரின் ஆலோசனையை ஏற்று, ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கான நடவடிக்கைகளை அவர் விரைந்து மேற்கொண்டார். இப்பணியில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நிதியமைச்சர்களும் பங்கேற்கச் செய்தார். 2016-இல், நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேற்றப்பட்டது.
அதன் விளைவாகவே, 1999-இல் உதித்த யோசனை, 2017-இல் ஜிஎஸ்டி வரி சீர்த்திருத்தமாக முகிழ்த்தது. இப்போது ‘ஒரே நாடு- ஒரே வரி’ என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதில், ஒவ்வொரு மாநில சட்டப் பேரவையிலும் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றிய அரசுகளுக்கும் பொறுப்புண்டு.
ஜி.எஸ்.டி. அறிமுகம் வரலாற்றுச் சாதனை
-பிரணாப் முகர்ஜி
2017 ஜூன் 30-ஆம் தேதி நள்ளிரவு கூடிய நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தில், (அப்போதைய) ஜனாதிபதி முகர்ஜி, முறைப்படி ஜி.எஸ்.டி. வரிவிதிப்பைத் துவங்கி வைத்தார். அப்போது அவர் ஆற்றிய உரையிலிருந்து…
இன்னும் சிறிது நேரத்தில் (2017, ஜூலை1 முதல்), சரக்கு மற்றும் சேவை வரி அமலாகிறது. மதிப்பு கூட்டப்பட்ட வரி விதிப்புகளில் மாற்றம் செய்யப்பட்டு, ஜி.எஸ்.டி.,யை உருவாக்கும் நடவடிக்கை, 2001-இல் துவங்கியது. அப்போது, ஜி.எஸ்.டி.,யை உருவாக்குவதற்கான பரிந்துரை வழங்கப்பட்டது.
2006-இல், மற்ற வரிகளுக்கு மாற்றாக ஒரே வரியைக் கொண்டு வருவது பற்றி, விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாநில நிதியமைச்சர்கள் இடம் பெற்ற குழு உருவாக்கப்பட்டது.
கடந்த, 2009-ஆம் ஆண்டு முதன்முதலாக, இந்தக் குழு செயல்பாட்டிற்கு வந்தது. 2010-இல் நான் நிதியமைச்சராக, இருந்தபோது, ஜி.எஸ்.டி.யை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்தினேன். குஜராத், மஹாராஷ்டிரா எனப் பல மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தினோம். மாநில முதல்வர்கள், நிதியமைச்சர்கள், அதிகாரிகள் எனப் பல தரப்பினருடன், பல சுற்று விவாதங்கள் நடந்தன.
2016-இல், நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேற்றப்பட்டது. மாநில சட்டசபைகளிலும் மசோதாக்கள் நிறைவேறின. ஜி.எஸ்.டி.,யில், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பரிந்துரைத்த பல மாற்றங்களை, மத்திய அரசு ஏற்றுள்ளது. மத்திய – மாநில அரசுகள் இணைந்து, ஜி.எஸ்.டி.,யை உருவாக்கியுள்ளன; இது, மிக முக்கியமானது. ஒருமித்த கருத்துக்களின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பொருட்களுக்கு வரி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டன.
மாநில அரசுகள் பரிந்துரைத்த மாற்றங்களை ஏற்று, வரி விகிதம் முடிவு செய்யப்பட்டது. அரசியல் வேறுபாடுகள் மற்றும் குறுகிய மனப்பான்மையைப் புறந்தள்ளி, நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான, ஒரே விதமான வரி உருவாக்கப்பட்டுள்ளது; இது, நம் ஜனநாய வலிமையை காட்டுகிறது.
முந்தைய வரி விதிப்பு முறை, நம் ஏற்றுமதிக்குச் சிக்கலாக இருந்தது. அது, தற்போது மாறியுள்ளது. பல இடையூறுகளை, சிக்கல்களைக் கடந்து, ஜி.எஸ்.டி. அமலாகி உள்ளது. இது செயல்படும் விதத்தின் மூலம், அடுத்த நிலைக்குச் செல்லும். மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சி செய்து இதை சாதித்து காட்டியுள்ளன. ஜி.எஸ்.டி., என்ற வரலாற்று சிறப்பு மிக்க வரி விதிப்பு முறையை கொண்டு வருவதற்காக, கடுமையாகப் பாடுபட்ட அனைவருக்கும் என் நன்றி.