4.6 வரலாற்றில் மறைக்கப்பட்ட மகாத்மா

– இளங்குமார் சம்பத்

பண்டிட் தீனதயாள் உபாத்யாய

பண்டிட் தீனதயாள் உபாத்யாய

(பிறப்பு: 1916, செப். 25 – பலிதானம்: 1968,  பிப். 11)

 

சிறந்த அறிவாளி, உயர்ந்த சிந்தனையாளர், தீவிர தேசபக்தர், அமைதியான இயல்பு, இனிமையான பேச்சு, ஆடம்பரம்- விளம்பரம் இல்லாதவர், சொல்லும் செயலும் ஒன்றானவர், நல்வினை மட்டுமே அறிந்தவர்; செய்தவர், எதிர்வினை அறியாதவர், எளிமையின் இலக்கணம் – இப்படிப்பட்ட ஒருவர் பேரும் புகழும் செல்வமும் செல்வாக்கும் மிகுந்து காணப்படும் அரசியல் துறையில் இருந்தார் என்பதை நீங்கள் அறிவீர்களா?

ஆம். அவர்தான் பண்டிட் தீனதயாள் உபாத்யாய.

அரசியல் என்பது துர்நாற்றமடிக்கும் சாக்கடை என்று இகழப்பட்ட காலத்தில் அதை சுத்தம் செய்து சீர்படுத்துவேன் என்று வந்துதித்த அரசியல் ஞானி.

1916-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் நாள் உத்தரப்பிரதேசம்,  மதுராவிற்கு அருகே ஒரு கிராமத்தில் மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தார். ஆறு வயதிலேயே பெற்றோரை இழந்த தீனதயாள்,  ரயில்வே துறையில் பணிபுரிந்த தன் தாய்மாமன் அரவணைப்பில் வளர்ந்தார்.

வறுமையான குடும்ப சூழலில் வீட்டு வேலைகளையும் கவனித்துக்கொண்டு படித்தார். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். மாமா ரயில்வே துறையில் பணியாற்றியதால் இவர் பிரயாணம் பெரும்பாலும் ரயிலிலேயே இருந்தது. இறுதிக்காலம் வரை ரயிலிலே பயணம் செய்தார்.

பட்ட மேற்படிப்பிற்காக ஆக்ரா சென்றபோது ஸ்ரீ நானாஜி தேஷ்முக் என்ற சங்க பிரசாரகர் (நானாஜி) மூலம் ஆர்.எஸ்.எஸ். அறிமுகமாகியது. சங்கக் கருத்துக் கனலும் டாக்டர்ஜியாலும் (ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்), நானாஜியாலும் பெரிதும் கவரப்பட்ட தீனதயாள் 1942 முதல் சங்க பிரசாரகர் (முழு நேர ஊழியர்) ஆகி தேசப் பணியாற்றி வந்தார்.

சுதந்திரத்திற்குப் பின் நமது அரசியலானது நமது இயல்பான ராஷ்ட்ர வாழ்க்கையை சரியாக பிரதிபலிக்கும் வண்ணம் ஒரு அரசியல் இயக்கம் துவங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் 1951-ல் டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி அவர்களால் துவக்கப்பட்ட ‘ஜனசங்கம்’ என்ற அரசியல் இயக்கத்தில் பணியாற்றிட  குருஜி (ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவர்) அவர்களால் அனுப்பிவைக்கப்பட்ட ஸ்வயம்சேவகர்களுள் தீனதயாள்ஜியும் ஒருவர்.

திட சிந்தனை, தெளிவான நோக்கு, அயராத உழைப்பு, பலனை எதிர்பாராத கடமை உணர்வு இவற்றை தீனதயாள்ஜியிடம் கண்ட டாக்டர் முகர்ஜி 1952-ல் இவரை ஜனசங்கத்தின் அகிலபாரத அமைப்பு பொதுச் செயலாளராக நியமித்தார்.

1953-ம் ஆண்டு மே மாதம் ஜம்மு காஷ்மீர் போராட்டத்தில் சிங்கம் போல் சிறை சென்ற டாக்டர் முகர்ஜி மர்மமான முறையில் மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து ஜனசங்கத்தை வழிநடத்தும் மாபெரும் பொறுப்பு தீனதயாள்ஜியின் தோளில் அமர்ந்தது.

தனது அப்பழுக்கற்ற தேசபக்தியால், கிருஷ்ண பரமாத்மா கூறியபடி ‘கருமமே கண்ணாக’ கட்சிப் பணியாற்றி வந்தார். காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஜனசங்கம் நாடு முழுக்க வியாபித்திருந்தது.

1967-ம் ஆண்டு கேரளாவில் கோழிக்கோட்டில் நடந்த ஜனசங்கத்தின் ஆண்டு பொதுசபாவில் அவர் அகில பாரதத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

‘செங்கோட்டை’ என வர்ணிக்கப்படுமளவிற்கு கம்யூனிஸ்ட்கள் ஆதிக்கம் பெற்றிருந்த கள்ளிக்கோட்டையில் ‘காவி’ ஊர்வலம் லட்சம் பேருடன் நடைபெற்றது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களின் கண்களை உறுத்தியிருக்க வேண்டும்.

பிப்ரவரி 11, 1968 – லக்னோவிலிருந்து பாட்னா செல்லும் ரயில் பயண வழியில் மொகல்சராய் என்ற ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

நிச்சயமாக இது ஒரு அரசியல் படுகொலை. ஆம். இதுவரை விசாரிக்கப்படாத, துப்பு துலக்கப்படாத, குற்றவாளிகள் கைது செய்யப்படாத விசித்திரமான ஓர் அரசியல் படுகொலை.

சிறுவயதில் ரயிலில் ஆரம்பித்த அவர் வாழ்க்கைப் பயணம் ரயிலிலேயே முடிவடைந்தது நெஞ்சை விம்மவைக்கும்  சோகமாகும்.

***

பண்டிட் தீனதயாள் உபாத்யாய ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவகர். தான் ஓர் அரசியல் கட்சியின் அகில பாரத பொறுப்பாளர் என்ற அகந்தை சிறிதும் இல்லாதவர்.

பண்டிட்ஜி நாகபுரி சங்க சிக்ஷ வர்கவிற்கு (ஆர்.எஸ்.எஸ்.சின் வருடாந்திர  பயிற்சி முகாம்)  செல்லும் வழக்கமுடையவர். ஒருமுறை சங்க சிக்ஷவர்கவில் உணவருந்திவிட்டு,  தட்டைக் கழுவிட வரிசையில் சென்றபோது குறும்புக்கார இளைய ஸ்வயம்சேவகர் ஒருவரின் விளையாட்டுத்தனமான செயலினால், தீனதயாள்ஜி கையில் இருந்த தட்டு கீழே விழுந்து விடுகின்றது. சில ஸ்வயம்சேவகர்கள் ஏளனமாக சிரிக்கின்றனர். தீனதயாள்ஜி கீழே விழுந்த தட்டை கையில் எடுத்துக்கொண்டு ஏதும் நடக்காததுபோல், வரிசையின் கடைசியில் போய் நின்று தட்டை வந்து கழுவிச் சென்றார். மதிய உணவிற்குப் பின் நடைபெற்ற அமர்வில், பௌதிக் கொடுப்பவராக தீனதயாள்ஜியைக் கண்ட அந்த விளையாட்டு ஸ்வயம்சேவகர்களுக்கு அதிர்ச்சி. நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் தீனதயாள்ஜியிடம் மன்னிப்பு கோரினர். தீனதயாள்ஜி ஏதும் நடக்காததுபோல் அந்த ஸ்வயம்சேவகர்களிடம் அன்பு பாராட்டினார்.

அன்பானவர், சாந்தமானவர் என்றால் அமைப்பின் ஒழுங்கில் கடுமையானவர். 1966-ல் மத்திய அரசு கொண்டுவந்த மன்னர் மானிய ஒழிப்பு சட்டத்திற்கு ஜனசங்கம் ஆதரவு கொடுத்தது. அச்சமயம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜனசங்கத்திற்கு 8 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் 6 பேர் இச்சட்டத்தை எதிர்த்தனர். கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று தீனதயாள்ஜி கூறினார். ஆனால், அந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் மசோதாவிற்கு எதிர்த்து வாக்களித்ததால் கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயலுக்காக அந்த 6 எம்.எல்.ஏ.க்களையும் கட்சியை விட்டு நீக்கி நடவடிக்கை எடுத்தார் தீனதயாள்ஜி.

அந்தக் காலத்தில் முதன்முறையாக 8 உறுப்பினர்களை கொண்ட கட்சி 6 உறுப்பினர்களை நீக்குவது என்பது சாதாரண காரியமல்ல. ஆனால், கட்சியின் ஒழுங்கே முக்கியம் எனக் கருதிய தீனதயாள்ஜி இக்கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டார்.

தீனதயாள்ஜி சிறந்த பேச்சாளர் அல்ல. மேலும் அவர் பேசிக் கொண்டிருப்பவரும் அல்ல. செயல் – செயல், அது ஒன்றே அவர் தாரக மந்திரம். தன் உதாரணமே சிறந்த உதாரணம் என்பதற்கு தீனதயாள்ஜி வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்.

1962 பொதுத் தேர்தலில் நாகபுரியில் ஜனசங்கத்தில் பணிபுரிந்த ஒரு கார்யகர்த்தர் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்றிருந்தார். இவர் நல்லவர்தான். ஆனால், வாய்ப்பு மற்றொருவருக்கு கிடைத்தது. ஆகவே வெறுப்படைந்த இந்த நபர், டெங்கடிஜி (இவர் பாரதீய மஸ்தூர் சங்கத்தை நிறுவியவர்)  அவர்களிடம் போய் புலம்பியிருக்கிறார். “நான் இவ்வளவு நாள் பணி செய்தது ஜனசங்கம் கண்ணுக்கு தெரியவில்லையா? எனது சேவை கட்சிக்கு தேவையில்லையா?” என்ற ரீதியில் மிகவும் வருத்தப்பட்டு கோபமாகப் பேசியுள்ளார்.

டெங்கடிஜியோ,  “நண்பா, நீ இங்கு புலம்புவதில் பிரயோசனமில்லை. வேண்டுமானால் தில்லி சென்று தீனதயாள்ஜியைப் பார்த்து முறையிடு” என்று கூறினார். அந்த நண்பரும் உடனே தில்லி சென்று ஜனசங்க கார்யாலயம் சென்று, தான் தீனதயாள்ஜியை சந்தித்து பேச வந்துள்ள விவரத்தைக் கூறினார்.

அவரைச் சந்தித்த தீனதயாள்ஜி, “சாப்பிட்டாயா?” என்று கேட்டு அவருக்கு உணவுக்கு ஏற்பாடு செய்தார். “இன்று பகலில் எனக்கு ஏற்கனவே திட்டமிட்ட பணிகள் உள்ளன. ஆகவே மாலை 6 மணிக்கு மேல் நிதானமாகப் பேசலாம்” என்று கூறிவிட்டு அவர் பணியைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டார்.

தேர்தலுக்கான நோட்டீஸ், போஸ்டர் இவைகளை பகுதிவாரியாக பிரித்தனுப்பும் வேலை, அச்சு இயந்திர வேலை, இடையே சந்திக்க வந்தவர்களுக்கு அவர்களது பணி குறித்து கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தார். தீனதயாள்ஜி எப்பொழுது சாப்பிட்டார், டீ அருந்தினார் என்று தெரியாது.

ஆனால், நாகபுரி நண்பர், கார்யாலயத்திலிருந்த ஒருவரிடம், “தீனதயாள்ஜி இவ்வாறு ஓய்வின்றி தேர்தல் பணி செய்கின்றாரே, அவர் எங்கு போட்டியிடுகிறார்?” என்று கேட்டார். அதற்கு அந்த நண்பரோ, தீனதயாள்ஜி போட்டியிடவில்லையே” என்றார். “அப்படியானால் தீனதயாள்ஜி ஏன் சாப்பிடாமல் கொள்ளாமல் இப்பணிகளை செய்து கொண்டிருக்கிறார்?” என்று வினா எழுப்பினார்.

அதற்கு அந்த தில்லி பிரமுகர் “மற்றவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கே தீனதயாள் இவ்வளவு பணியும் செய்கிறார்” என்றார். மாலையிலும் நாகபு ரிகாரருக்கு டீ கிடைத்தது.

சுமார் 6 மணியளவில் தீனதயாள்ஜி குளித்து முடித்து இவரிடம் வந்து, “என்ன நண்பரே, சாப்பிட்டீர்களா? நன்கு ஓய்வு எடுத்தீர்களா? இப்ப, நான் தயார். நாளை காலை வரை கூட பேசலாம்” என்றார்.

ஆனால் நாகபுரி நண்பரோ, பண்டிட் ஜியின் செயல்களைக் கண்டு அதிலே விளக்கமும் பெற்றுவிட்டபடியால், “பண்டிட்ஜி, ஒன்றுமில்லை, தங்களை பார்த்துவிட்டு செல்லவே வந்தேன்” என்று கூறிவிட்டு தனக்கு தேர்தலில் போட்டியிட அனுமதிக்காதது பற்றி மூச்சு கூட விடாமல் திரும்பிவிட்டார்.

***

1965-ம் ஆண்டு இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மகத்தான ஆண்டு. இந்த ஆண்டுதான் தீனதயாள்ஜி படைத்த ‘ஏகாத்ம மானவ தரிசனம்’ என்ற சிரஞ்சீவி தத்துவத்தை ஜனசங்கத்தின் விஜயவாடா மாநாட்டிலே முன்வைத்தார்.

முதலாளித்துவம், சோஷலிசம் ஆகிய இரு கருத்துக்கள் தான் பொருளாதாரத்திற்கு ஆதரவாக இருக்கக் கூடியவை என உலகம் ஏற்று இருக்கக்கூடிய நிலையில், அவை இரண்டுமே மானிட சமுதாயத்தின் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்த்திட முடியாத- குறைவான கருத்துக்களே என விளக்கினார்.

“மனிதன், வெறும் உடம்பல்ல. அவன் உடம்பு, மனம், புத்தி, ஆன்மா ஆகியவற்றால் ஒருங்கிணைக்கப்பட்டவன்.  ஆகவே மனித இனம், தனிமனிதன் ஆகியோருடைய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்திடும் முழுக்கருத்து ஒன்றை பாரதம் உலகுக்கு அளிக்க வல்லது” (தான் அளித்ததாக அவர் கூறவில்லை) என்று ஏகாத்ம மானவ தரிசனம்’ என்ற பெயரிலே உயரிய தத்துவத்தை உலகிற்கு வழங்கினார். நமது பொருளாதார வளர்ச்சிக் கட்டமைப்பில் சுதேசி சிந்தனையே அடிக்கல்லாக இருக்க வேண்டும் என்றார்.

‘பாஞ்ஜசன்ய’ வார இதழ், ‘ஸ்வதேஷ என்ற தினசரி-க்கு ஆசிரியராகப் பணிபுரிந்தார். ஆதிசங்கரரின் வாழ்க்கை குறித்தும், சந்திரகுப்த மௌரியன் குறித்தும் ஹிந்தியில் புத்தகம் படைத்துள்ளார். சங்க ஸ்தாபகர் டாக்டர்ஜி அவர்களின் வாழ்க்கை சரித்திரத்தை மராட்டியிலிருந்து மொழிபெயர்த்துள்ளார்.

பாரதத்தாயின் பணியைத் தவிர வேறு  ஒன்றும் அறியாத பரமபக்தரின் புகைப்படங்கள் கூட கிடையாது. அவர் அதைக் கூட விரும்பவில்லை. ராம சேவையில் ஆஞ்சனேயன் போல, பாரதமாதா சேவையில் தன்னை ஆகுதியாக்கிக் கொண்ட பண்டிட் தீனதயாள்ஜி அவர்களின் இன்னுயிரை கயவர்கள் கயமைத்தனமான 1968 பிப்ரவரி 11-இல் கவர்ந்தார்கள். பாரத அன்னை தன் தவப்புதல்வர்களிலே ஒரு மாணிக்கத்தை இழந்தாள்.

தேசப்பணியில் புகழின் உச்சியிலிருந்த போதும் ஒரு புகைப்படம் கூட விட்டுச் செல்லாத பண்டிட் தீனதயாள்ஜி ஒரு மகாத்மா தானே!

 

குறிப்பு:

திரு. இளங்குமார் சம்பத்,  ஸ்வதேசி ஜாக்ரண் மன்ச் அமைப்பின் தமிழக செயலாளர்.

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஆடி-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s