4.22 நினைவில் இருத்துவோம்!

-ஆசிரியர் குழு

ஆடி-2017  இதழில் வெளியாகியுள்ள பெட்டிச் செய்திகள்:அடியார்க்கும் அடியேன்!

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

-சுந்தரர்

(ஏழாம் திருமுறை- திருத்தொண்டத் தொகை)

(சுந்தர மூர்த்தி நாயனார் குருபூஜை: ஆடி- சுவாதி)


ஆப்பும் குரங்கும்

நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி

   நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடிப்

பூப்பிளக்க வருகின்ற புற்றீசல்போலப்

   புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்

காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்

    கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே

ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனைப் போல

   அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே!

-பட்டினத்தார்

(பட்டினத்தார் குருபூஜை: ஆடி- உத்தரம்)

 


அரவிந்த அமுதம்

  • எந்த எதிர்ப்பு இருந்தாலும், இறைவனின் சித்தப்படி நடக்க வேண்டியது எதுவோ அது நடந்தே தீரும். எனவே அச்சமற்றிரு.
  • ஒருவன் ஆசையில்லாமல் செயல்பட முடியும்; பற்றுதல் இல்லாமல் செயல்பட முடியும்; அகங்காரம் இல்லாமல் செயல்பட முடியும். தேவை, உள்ள உறுதி மாத்திரமே.
  • நமக்குள் இருக்கும் இருளை முதலில் வெளியேற்றினால்தான், உண்மையான தெய்வீகத்தை முதலில் உணர முடியும்.
  • எந்த தேசத்தின் இளைஞர்கள் மனதில் கடந்த காலம் குறித்த பெருமிதம், நிகழ்காலம் குறித்த வேதனை, எதிர்காலம் குறித்த பொற்கனவுகள் நிறைந்துள்ளதோ, அந்த தேசம்தான் முன்னேற்றமடையும்.
  • எதையும் வெறுக்காதே! எதற்கும் அஞ்சாதே! யாரையும் ஒதுக்காதே! உன் பணியைச் செய்.

-மகரிஷி அரவிந்தர்

(மகரிஷி அரவிந்தர் பிறந்த நாள்: 1872, ஆக.15) 

 


பெண்மை வாழ்க!

அடக்கம், பொறுமை, தியாகம், பிறர்நலம், இரக்கம், அழகு, ஒப்புரவு, தொண்டு முதலியன அமைந்த ஒன்றே பெண்மையாகும். பெண்கள் மகளாகத் தோன்றினார்கள், மனைவியாக வாழ்ந்தார்கள், தாயாகத் தொண்டு செய்தார்கள், தெய்வமாகக் காட்சியளிக்கிறார்கள். பெண்மை என்பது தோல் போர்த்திய உடல் மட்டும் அன்று. அவ்வுடலினுள்ளே உள்ள நுண்மை, இறைமை, பெண்மையை உணர வேண்டும். அத்தகைய பெண்மை வாழ்க!

-திரு.வி.கல்யாணசுந்தரனார்

(1883, ஆக. 26- 1953,  செப். 17)

 


காமராஜர் வாழ்வில்

காமராஜர் முதல்வராகப் பொறுப்பேற்ற முதல் நாளில் கோப்புக்களைப் பார்க்க அமர்ந்தார் காமராஜர்.  அவருக்கு முன்னால் கோப்புகள் இரண்டு வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.   “இது என்ன வரிசை?’’ என அவர் கேட்க, நேர்முக உதவியாளர்   “முதல் வரிசையில் உள்ளவை முக்கியமானவை;  இரண்டாவது வரிசையில் உள்ளவை முக்கியம் இல்லாதவை” என்று கூறினார்.  அதைக் கேட்டு அதிர்ந்துபோன காமராஜர்  “முதல்வருக்கு வரும் கோப்புகளில் முக்கியம் இல்லாதவையும் உண்டா என்ன? எனக்கு வரும் ஒவ்வொரு கோப்பும் முக்கியமானதுதான். அவற்றை நான் உடனுக்குடன் பார்த்து அனுப்ப வேண்டும், அதுதான் முக்கியம்” என்றாராம்.

(காமராஜர் நினைவு நாள்: 1975, அக். 2)


தேசபக்தரின் குறள் நாட்டம்

தமிழறிஞர்களெல்லோரும் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும்.  1330 குறள்களையும் பொருளுடன் உணர்ந்திலாத தமிழர் முற்றத் துறந்த முனிவரேயாயினும்,  என்னைப் பெற்ற தந்தையேயாயினும்,  யான் பெற்ற மக்களேயாயினும்,  யான் அவரைப் பூர்த்தியாய் மதிப்பதுமில்லை; நேசிப்பதுமில்லை”

-வ.உ.சிதம்பரம் பிள்ளை

  (வ.உ.சி. பிறந்த நாள்: 1872, செப். 5)


இலக்கியத்தின் இலக்கணம்

தமிழரசு (ம.பொ.சி. நிறுவிய இயக்கம்) இயக்கத்தாருக்கு இலக்கியம் என்பது பொழுதுபோக்குக்குப் பயன்படும் பொருளல்ல. கடந்தகாலத் தமிழகம் எப்படி இருந்தது என்பதைக் காட்டும் கண்ணாடி: இன்றைய தமிழகத்தின் பண்பாட்டுத் தரத்தை உரைத்துப் பார்க்கப் பயன்படும் உரைகல்: எதிர்காலத் தமிழகத்துக்குத் தேவைப்படும் செல்வங்கள் எல்லாம் நிரம்பியுள்ள களஞ்சியம்.

ம.பொ.சிவஞானம்

(ம.பொ.சி. நினைவு நாள்: 1995, அக். 3)

 

 


Quotable Quote

All power is in the human mind.

We can master anything, simply by giving our attention to it.

Sister Nivedita

(28 October 1867 – 13 October 1911)

 


 

 

 

 

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஆடி-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s