4.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 3

-ம.வே.பசுபதி

தொல்காப்பியர்

2.16 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-1

3.4 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 2

சாதிப்பதற்கான தொழில்கள்;  சாதிப்பதற்கான ஆசாரங்கள்;  அவற்றின் அடிப்படையில் அமைந்தவை சாதிகள். மனிதர்களிடம் மட்டும் சாதிப்பிரிப்பு இருக்கிறது என்பது தவறு. விலங்கினங்கள் இரத்தினங்கள் முதலிய இயங்கு திணைகளிலும் சாதிகள் உள்ளன.

பரந்துபட்ட பாரத தேசம் முழுமையிலும் இருந்த, இருக்கிற சாதிப்பெயர்கள்,  தொல்காப்பியத்துள்ளும் குறிப்பிடப்பட்டுள்ளன. இச்சாதியினரை மேலோர்-  கீழோர் என தொல்காப்பியர் வரையறுப்பதற்குக் காரணங்கள் உள்ளன. வேதம் ஓதுதல், ஓதுவித்தல், வேள்வி செய்தல், செய்வித்தல், தானம் செய்தல், ஏற்பது என்பவையான ஆறு தொழில்களுக்கும் உரியவர்கள் அந்தணர்கள். திருவள்ளுவ நாயனாரும் அந்தணர்களை அறுதொழிலோர் எனக் குறிப்பர். ‘அந்தணாளர்க்குரியவும் அரசர்க்கு ஒன்றிய  வரூவம் பொருளுமாறுளவே’ என்னும் தொல்காப்பிய நூற்பா, அந்தணர்க்குரிய ஆறு தொழில்களில் ஓதல், வேள்விகள் செய்தல், வேள்விகள் செய்வித்தல், ஈதல் என்ற நான்கும் அரசர்களுக்கும் உரியன எனத் தெரிவிக்கிறது.

வேதம் ஓதுவதனாலும், வேள்விகள் செய்வதனாலும் தேசம் முழுமைக்கும் இறையருளும் மழை வளமும் கிடைக்கும். தேசநலனுக்குகந்த நற்செயல்கள் செய்யும் பிரிவினர் ஆகையால் அந்தணர்களும் அரசர்களும் முதன்மைப்படுத்தப்பட்டனர். செம்மல், நெடுந்தகை என்ற சிறப்பு அடைமொழிகளும் இவர்கட்கு உரியன என்பது தொல்காப்பியர் கருத்து.

தொல்காப்பியர் அரசர்,  அந்தணர்களை மட்டும் மேலோர் எனச் சொல்லவில்லை; ’மேலோர் மூவர்க்கும்’  என்கிறார்; வணிகர்களையும் மேலோர் என்கிறார். தேசநலனுக்குகந்த ஓதல், வேட்பித்தல், ஈதல் என்ற மூன்று கடமைகள் வணிகர்க்கும் உரியன. ஆக, தேசநலன் கருதும் செயல்களைக் கடமையாகக் கொண்டவர்களையே தொல்காப்பியர் மேலோர் எனச் சிறப்பித்துச் சொல்கிறார் என்பது தெளிவாகிறது.

மற்றொரு கோணத்தில் சிந்திக்கும்போது, ”எல்லோருக்கும் மேலான மேலோராக வேளாளரைத்தான் குறிப்பிட வேண்டும்” என்ற எண்ணம் வரும். உழுவார் உலகத்தார்க்கு ஆணி; ‘மேழி பிடிக்கும் கை வேல்வேந்தர் நோக்கும் கை’ என்றெல்லாம் பலபடியாகப் புகழ்பெறும் வேளாளர்களின் சிறப்பு , நிலத்தினும் பெரிது; வானினும் உயர்ந்தது. ‘வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்” என்றபடி விருந்தோம்பல் பண்பாட்டை உயிர்க்குணமாகக் கொண்டவர்கள் வேளாளப் பெருமக்கள்.  “மேலோர் மூவர்க்கும் புணர்த்தகரணம் கீழோர்க்காகிய காலமும் உண்டே” என்னும் நூற்பாவில் தொல்காப்பியர் வேளாளரைக் கீழோர் எனக் குறிப்பிட்டது, எண்ணிக்கை வரிசையில் நான்காவதாக உள்ளவர்கள் என்ற காரணத்தாலன்றி வேறெக் காரணத்தாலுமன்று.

தொல்காப்பியத்துள் கூறப்பட்ட குறவர், கானவர், வலைஞர் முதலாகிய திணைநில மக்கள் பாரதத்தின் பலபகுதிகளிலும் உள்ளவர்களேயாயினும் திணைநில மக்களாக அவ்வப் பகுதிகளில் குறிக்கப் பெறுபவர்களல்லர்; பொதுமக்களாகவே கருதப்படுபவர்கள் ஆவர். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் நானிலங்களையும் கூறி, இவ்விந்நிலத்திற்கு இன்னின்னார் உரியர் எனத் தொல்காப்பியம் பகுத்தும் வகுத்தும் பகிர்கிறது.

அந்தணர்கட்கு முப்புரிநூல், கமண்டலம், திரிதண்டம், மணைப்பலகை ஆகியன உரியன என்பதும், பாரதம் முழுவதும் பரவியுள்ள பார்ப்பனர்களின் புற அடையாளங்களே. இவற்றுள் திரிதண்டம் அந்தணத் துறவிகளாகிய முக்கோற்பகவர்களுக்கு உரியதாகும் என்பது கலித்தொகை முதலிய பழந்தமிழ் இலக்கியங்களிலும் காணப்படும் செய்தியாகும்.

”அந்தணாளர்க்கு அரசு வரைவின்றே” என்ற மரபியல் நூற்பாவில் அந்தணர்கள் அரசர்களாகவும் விளங்கலாம் என்ற கருத்து கூறப்பட்டுள்ளது. இது வடபாரத வரலாறுகளை உளங்கொண்டு எழுதிய இலக்கணமாகும். புராண இதிகாசங்களிலும் இச்செய்திக்கான சான்றுகள் உள. இராவணன் புலத்தியன் மரபில் வந்தவன் என்பதையும் கருதலாம். எழுத்து மற்றும் சொல்லிலக்கணங்கள் தமிழுக்கானவை. பொருளிலக்கணச் செய்திகளில் பல ஏகபாரதச் சிந்தனை உடையவை என்னும் கருத்தை உற்றறியாத நிலையில்,  “அந்தணர்க்கு அரசு வரைவின்றே” என்னும் நூற்பாவிற்கு “அமாத்திய (அமைச்சர்) நிலையும், சேனாபதி நிலையும் பெற்ற அந்தணர்க்கு அரசர் தன்மையும் வரைவில” எனப் பொழிப்புரை எழுதி, அஃதாவது, மந்திரி புரோகிதனாகிய வழிக்கொடையும், கிடையும் கவரியும் தாரும் முதலாயின அரசராற் பெற்று அவரோடு ஒரு தன்மையராகியிருத்தல்” என விளக்கவுரையும் எழுதினார் இளம்பூரனார். இக்கருத்தும் வடபாரதத்தை உள்ளடக்கிய கருத்தேயாகும்.

கப்பல் பயணமும் தொல்காப்பியர் காலத்தில் இருந்திருக்கிறது. முந்நீர் வழக்கம் மகவே நாடில்லை” என்ற நூற்பாவை கடல்பயணம் அக்காலத்தில் இருந்தமைக்குச் சான்றாகச் சொல்வர். மணிமேகலையில் ஆதிரையின் கணவன் கடற்பயணம் மேற்கொண்ட வரலாறு.  “கடலோடு நாவாய்” எனத் திருவள்ளுவ நாயனாரும் கூறினார். பல சான்றுகள் உள்ளன.

காலில் சேறல் (நடைப்பயணம்) கலத்தில் சேறல்(கடற் பயணம்) ஊர்தியில் சேறல் (வாகனப் பயணம்) என்னும் மூன்று வகைப் பயண முறைகளைத் தொல்காப்பியத்துள்ளும் காணலாம். பிறநாடுகளுடன் தொடர்பில் இருந்த தமிழர்கள்,  வடபாரதத்தினருடன் நெருங்கிய தொடர்பிலேயே இருந்திருக்கின்றனர்.  “பிரம்ம, க்ஷத்ரிய, வைசிகர்” என்ற முச்சாதிப்பெயர்கள் வடபாரத வழக்கிலிருந்தவை. அவற்றின் தமிழ்ப் பெயர்கள் அந்தணர், அரசர், வணிகர் என்பவை. பிரம்ம, க்ஷத்ரிய, வைசிக என்ற மூன்றில் தொல்காப்பியர் “வைசிகர்” என்ற வடபாரதச் சொல்லை மட்டும் தம் நூற்பாவில் கையாண்டுள்ளார். சான்று ‘வைசிகன் பெறுமே வாணிப வாழ்க்கை’

வணிகரைக் குறிக்கும் சொல்லாகிய வைசிகன் என்ற சொல்லைத் தொல்காப்பியர் கையாண்டதிலிருந்து வணிகர்களே வடபாரதத்தினருடன் மிகுந்த தொடர்பில் இருந்தவர்கள் என அறியலாம். அத்தொடர்புகள் காரணமாக அவர்கள் தம்மை வைசிகர் எனச் சொல்லிக் கொள்ளும் பழக்கம் உடையவர்களாக விளங்கினர் என ஊகிக்கலாம்.

வானியல், மண்ணியல், பயிரியல் முதலிய பலதுறை அறிவுகளை மரபு வழியாகவும் அனுபவ வழியாகவும் அறிந்து மேலாண்மை செய்பவர்கள் வேளாண் பெருமக்கள். வேளாண்மை என்பது உதவி, ஈகை, தியாகம், வாய்மை என்னும் பல பொருள் தரும் ஒரு சொல். இவை அனைத்தும் உழுதொழிலாளரிடம் உள்ளமை பற்றியே அவர்கள் வேளாளர் எனப்பட்டனர். பலதுறை மேலாண்மை, பலகுணச் செயற்பாடு முதலிய பெரும்பணிகள் அவர்கள்பால் குவிந்துள்ள படியினாலே வேதம் ஓதுதல், வேள்வி செய்வித்தல் ஆகியவை அவர்களுக்கு விலக்கப்பட்டதெனக் கருதலாம். “வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல்லென மொழிப் பிறவகை நிகழ்ச்சி” என்ற தொல்காப்பிய நூற்பாவும் இக்கருத்தை உட்கொண்டதேயாகும்.

ஆக நால்வருணத்தவர்களின் கடமைகளும் செயல்களும் பாரதம் முழுமைக்குமானவையாகவே, தொல்காப்பியம் சொல்லும் செய்திகள் அமைந்துள்ளன.

(வளரும்)

 

குறிப்பு:

ம.வே.பசுபதி

திரு. ம.வே.பசுபதி, தேசிய சிந்தனைக் கழகத்தின் தமிழகத் தலைவர்.

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஆடி-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s