4.18 ஆதியோகி

-தஞ்சை வெ.கோபாலன்

திருவையாறு பாரதி இயக்கம் கடந்த 2016 ஆகஸ்ட் 15-இல் கூடியபோது,  ‘வரலாறு பேசும் பயணம்’ எனும் குறிக்கோளை முன்வைத்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைத் தேர்ந்தெடுத்து விடுமுறை நாட்களில் அங்கெல்லாம் சென்று அந்தந்த இடங்களின் வரலாற்று ஆவணங்களைச் சேகரித்து ஒரு நூலாக வெளியிட திட்டமிட்டோம்.

அதன்படி 2016 ஆகஸ்ட் 15-இல் முதல் பயணமாக கல்லணைக்கு அருகிலுள்ள கோயிலடி எனும் இடத்துக்குச் சென்று வந்தோம். இந்த ஊர் 1930-இல் ராஜாஜி தலைமையில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தின் போது புகழ் அடைந்தது. சத்தியாக்கிரகிகள் படை தஞ்சை மாவட்டத்தினுள் காலடி எடுத்து வைத்த முதல் ஊர் இந்த கோயிலடி. அப்போதைய தஞ்சை மாவட்ட கலெக்டர் தார்ன் எனும் ஆங்கிலேயர்  ‘சத்தியாக்கிரகிகளுக்கு தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது, அப்படி கொடுத்தால் ஆறுமாத சிறை தண்டனை’ என்று அறிவித்திருந்தும் இந்த கோயிலடியில் இருந்த சாதாரண மக்கள் அவர்களுக்கு மாபெரும் வரவேற்பை அளித்தனர். இந்த நிகழ்ச்சியை அந்த ஊரில் நினைவுகூர்ந்த பிறகு,  நூற்றுக்கும் மேற்பட்ட வரலாற்றுத் தலங்களுக்குச் சென்று வந்தோம்.

அதன் தொடர்ச்சியாக 2017 ஜூன் 9,10,11 ஆகிய தேதிகளில் கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்திலுள்ள ஈஷா தியான மையத்துக்கும், வெள்ளியங்கிரி மலையடிவாரக் கோயில்,  நீலகிரி மாவட்டம்- கோத்தகிரி அருகிலுள்ள படுகா இனத்தார் குடியிருப்பு, ஆலயங்கள் போன்ற இடங்களுக்கும் சென்று வந்தோம்.

இந்தப் பயணத்தில் எங்கள் உள்ளங்கவர்ந்த இடம் ஈஷா தியான மையம்தான். அதிலும் அங்கு, சென்ற மகா சிவராத்திரி சமயம் நிறுவப்பட்டு பிரதமர் நரேந்திர மோடியால்  திறந்து வைக்கப்பட்ட  ‘ஆதியோகி’ சிலைதான் பிரமிப்பை ஏற்படுத்திய இடம்.

அதுவரை இந்தச் சிலை பற்றிய செய்திகளைப் படித்திருந்தாலும், நேரில் பார்த்தவுடன் உடலில் மின்சாரம் பாய்வதைப் போல ஓர் உணர்ச்சி, அந்த வெட்டப் பெருவெளியில் 112 அடி உயரத்துக்கு கரிய நிறத்தில் மார்பளவுச் சிலை கண்களை மூடி தியான நிலையில் இருக்கும் தோற்றம், அந்த முகத்தில் காணப்பட்ட ஒளி, அந்தச் சூழ்நிலை கொடுத்த அமைதி-  இவற்றை மறக்கமுடியாது.

பூமியைப் பிளந்து கொண்டு தலையும், மார்பும் மட்டும் தெரியும் வண்ணம் ஒரு மாபெரும் உருவம் எழுந்து வருவதுபோன்ற பிரமை. அதன் அடியில் நின்றுகொண்டு அண்ணாந்து பார்த்தபோது, வானத்தில் மிதந்து சென்று கொண்டிருந்த மேகக்கூட்டத்துக்கு மத்தியில் அந்தச் சிலை நம்மைக் கவர்ந்து இழுப்பது போன்ற ஓர் உணர்வு.

இந்தச் சிலையின் வரலாறுதான் என்ன என்பதை ஈஷா தியான மையத்தில் இருந்த சில அன்பர்களிடம் கேட்டோம்.  அவர்கள் சொன்னவை:

இந்த இடம் ஈஷா தியான மையத்துக்குச் சொந்தமான இடம். இங்கு தியானலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அங்கு தியானம் செய்யப்பட்டு வருகிறது. இந்த இடம் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான வெள்ளியங்கிரி மலைப் பிரதேசத்தின் அருகில் அடர்ந்த சோலைகளின் மத்தியில் அமைந்திருக்கிறது. ஓரிரு ஆண்டுகளுக்கு முன் இப்படியொரு சிலையை இங்கு நிறுவ வேண்டுமென்கிற எண்ணம் இவர்களுக்கு ஏற்பட்டதாம். அதனை செயலாக்கம் செய்திட வெறும் எட்டே மாதங்கள் ஆயிற்றாம். இந்த மார்பளவு பிரம்மாண்டம் எஃகினால் ஆனது. உயரம் 112 அடி என்றார்கள்.

அது சரி,  அது என்ன 112 அடி?  அதற்கு ஏதேனும் விளக்கம் உண்டா என்றோம்.

ஆம்! ஆன்ம விடுதலைக்கு 112 வழிமுறைகள் உண்டு என்றார்கள். மேலும் மானுட உடலில் 112 சக்கரங்கள் உண்டு என்றும் சொன்னார்கள். அப்படியென்றால் என்ன என்றபோது,   “அதை ஓரிரு நிமிடங்களில் விளக்கிட முடியாது. ஆன்மிகத் தேடலும், பொறுமையும், குருநாதர் அனுக்கிரகமும் கிடைத்தால் அவற்றை விரிவாகத் தெரிந்து கொள்ளலாம். அவற்றையெல்லாம் இங்கு நாங்கள் குருமுகமாகத் தெரிந்துகொண்டு வருகிறோம்” என்றார்கள்.

இந்தச் சிலை சிவபெருமானைக் குறிப்பிடுகிறதா என்று கேட்டோம். அவர்கள் சொன்னார்கள்-  “இல்லை, இது சிவனுடைய முகமோ, இந்த இடம் சிவாலயமோ இல்லை. இது ஒரு குறியீடு அவ்வளவே! இறையைக் காண வானத்தையோ, வேறு எவற்றையுமோ காணத் தேவையில்லை, உனக்குள்ளேயே இருக்கும் பல பாதைகளை உணர்ந்து கொண்டாலே போதும், அது உங்களுக்குள்ளேயே இருப்பதை உணரலாம்” என்றார்கள். புரிந்தது போலவும் இருந்தது, பிறகு எதுவும் புரியாதது போலவும் தெரிந்தது.

அப்போது அங்கு வந்த ஒரு பெண்மணி உரத்த குரலில் சொன்னார், “இந்தச் சிலையை இங்கே நிறுவிட அவர்கள் அழித்தது மழை தரும் காட்டை. மரங்களை அழித்துச் சிவனுக்குச் சிலை எழுப்பிட இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?” என்று உரக்கக் குரலெழுப்பிக் கொண்டிருந்தார். இளம் வயதுப் பெண், அந்த வயதுக்குரிய வீரியம் அவர் குரலில் இருந்தது. சுற்றிலும் இருந்த இளைஞர் கூட்டம் அவரது கூற்றை ஆமோதித்து ஆர்ப்பரித்தது.

அந்த இளைஞர்கள் கூட்டத்தின் மத்தியில் என்னைப் போன்ற முதியவர்கள் பதில் சொன்னால் அவர்கள் எதிர்வினை எப்படியிருக்கும் என்பது தெரிந்தும் என்னால் சும்மாயிருக்க முடியாமல் சொன்னேன், “ஆம்! நீ இருக்கும் இடமும், நான் இருக்கும் இடமும்கூட ஒருகாலத்தில் மரங்கள் அடர்ந்த சோலையாகத்தான் இருந்திருக்க முடியும். எல்லாக் காலத்திலும் நிலைமை ஒரே மாதிரியாக இருந்து விட முடியாது. “காடுகளை அழிந்து கழனிகளை உருவாக்கினான்” என்று சில மன்னர்களைப் பற்றிப் பெருமையுடன் சொல்கிறீர்கள். விளையும் வயலைத் தூர்த்து வீடுகள் கட்டிக்கொண்டு களிப்போடு வாழ்கிறீர்கள், ஆனால் உங்கள் மனதுக்குப் பிடிக்காத ஒரு செயலை வேறு ஒருவர் செய்துவிட்டாலோ, கூக்குரல் இடுகிறீர்கள்!” என்றேன்.

“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? காட்டை அழித்தது சரிதான் என்கிறீர்களா?” என்றான், உடனிருந்த ஒரு இளைஞன்.

“இல்லை! அப்படிச் சொல்லவில்லை. நாம் அழிக்கும் ஒவ்வொன்றுக்கும் மாற்றாக பல மடங்கு அதிகமாக மரம் செடி கொடிகளை பயிரிட்டு வளர்க்கலாம், அதற்கென்று இடம் இல்லாமலா போயிற்று? இங்கேயே கூட இன்னும் சில நாட்களில் ஏராளமான மரக்கன்றுகளை நடுவார்கள். அவை வளர்ந்து சோலையாக இந்த இடம் மாறக்கூடும். அப்போது மறுபடி இந்த இடம் ஒரு காடாக ஆகிவிடாதா? இங்கு வந்து கூக்குரல் எழுப்புகிறீர்களே, சித்தூர் காடுகளில் செம்மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுவதை எதிர்த்து யாராவது குரல் கொடுத்ததுண்டா? ஜவ்வாது மலைக் காடுகள் சிறிது சிறிதாக அழிந்து வருவது கண்டு யாராவது வருந்துவது உண்டா? அணைக்கட்டுகள் போன்ற நீர்ப்பாசனத் திட்டங்கள் கொண்டு வரும்போது காடுகள் அழிவது கண்களில் படவில்லையா? அங்கெல்லாம் புதிதாக அதிக அளவில் மரங்களைப் பயிராக்கி வளர்ப்பது உங்கள் கண்களில் படவில்லையா? ஒரு பக்கம் அழிவும், மறுபக்கம் மறு தோற்றமும் இருந்து கொண்டுதான் இருக்கும். இரவு வந்தால் பகலும் தொடர்ந்து வரத்தான் செய்யும்” என்றேன். இளசுகள், இந்தப் பெரிசிடம் எதற்கு வீண் பேச்சு என்றோ என்னவோ, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, பதில் சொல்லாமல் நழுவி விட்டார்கள்.

மறுபடி ஈஷா மையத்து அன்பர்களுடன் உரையாடல் தொடர்ந்தது. இதுபோன்ற மேலும் மூன்று சிலைகளை நிறுவிட கிழக்கு, மேற்கு, வடக்கு திசைகளில் இடம் தேடிக் கொண்டிருக்கிறார்களாம். அவை, காசி, மும்பை, தில்லி ஆகிய இடங்கள் என்றார்கள்.

இந்த சிலை சிவனின் முகம் என்று எண்ணும் வண்ணம், அந்த முகத்தில் அமைதி, கருணை, ஒளி ஆகியவை காணப்படுகின்றன. ஓர் இடத்திலாவது அங்க லட்சணங்கள் மாறுபடாமல் அத்தனை அழகாக கச்சிதமாக எப்படி செய்ய முடிந்தது, இத்தனை பெரிய அளவில்? கேள்வி மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது.

இந்தச் சிலையின் பின்புறம் இதன் உள்ளே செல்ல ஒரு கதவு இருந்தது. அது சிலையின் மேல்வரை செல்வதாகச் சொன்னார்கள். மேலே பார்த்தோம். அங்கே சந்திர பிரபையொன்று சிலையின் இடப்புறம் தலைமீதிருந்தது. அதன் அருகில் சில கைப்பிடிகள் காணப்பட்டன. அதுவரை உட்புறமாக ஏறிச்சென்று, அங்கு வெளிவந்து அந்தக் கைப்பிடிகளைப் பிடித்து மேலே ஏறலாமோ, என்னவோ தெரியவில்லை.

இந்தச் சிலைதான் உலகில் மிக ப்பெரிய சிவன் சிலையா என்றேன். இல்லை நேபாளத்தில் காத்மாண்டுவிற்கு 20 கி.மீ. தூரத்திலுள்ள கைலாஷ்நாத் மகாதேவர் சிலை 143 அடி (44 மீட்டர்) உயரம் என்றார்கள்.

இந்த பிரம்மாண்டத்துக்கு எதிரில்  ‘யோகேஷ்வர் லிங்கம்’ எனும் சிவலிங்கம் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டு நிறுவப்பட்டிருக்கிறது. இந்த பிரம்மாண்ட சிலைக்கு  ‘ஆதியோகி’  அதாவது முதல் யோகபுருஷன் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

அங்கு சிலர் வேதபாராயணம் செய்து கொண்டிருப்பதையும், அருகில் தீபம் எரிந்து கொண்டிருப்பதையும் கண்டோம். வேத ஒலியைக் கேட்டுக்கொண்டே அந்த மண்டபத்தினுள் சிலர் ஆழ்நிலை தியானத்தில் அமர்ந்திருப்பதையும் காண முடிந்தது.  “தென்புறம் நோக்கிக் கொண்டிருக்கும் இவரை தட்சிணாமூர்த்தி என்றும் கருதலாம், எனவே அவரே ஆதியோகி” என்றார் ஆசிரம நன்பர் ஒருவர்.

இப்போதிருக்கும் இந்த ஆதியோகி உருவம் இந்த வருஷம் பிப்ரவரி 24-ஆம் தேதி, மகாசிவராத்திரியன்று பிரதமர் நரேந்திர மோடி யால் திறந்து வைக்கப்பட்டது. இன்று உங்களிடம் வாக்குவாதம் செய்த இளைஞர் கூட்டத்தைப் போலவே அன்றும் இயற்கை ஆர்வலர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஒரு பொதுநல வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை ஈஷா யோக மையம் சட்டப்படி சந்திக்கிறது-  என்றனர் அங்கிருந்த அன்பர்கள்.

இந்தச் சிலைக்கு எதிரில் சமன்படுத்தப்பட்ட பெருவெளியில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அங்கிருந்து தியானலிங்க தரிசனம் செய்ய மாட்டு வண்டிகளில் பெஞ்சுகள் அமைக்கப்பட்டு ரூ. 10 வாடகையில் அழைத்துச் செல்கின்றனர். அந்த அமைதியான சூழ்நிலையில் மாட்டுவண்டியில் பயணம் செய்து தியானலிங்க தரிசனம் மனதுக்கு அமைதியைத் தந்தது.

ஈஷா யோக மையத்துக்கு எங்களை அழைத்துச் சென்றதவருக்கும்,  புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் அந்த ஆதியோகி சிலைக்கும் நன்றி சொல்லிக்கொண்டே அந்த சொர்க்கத்திலிருந்து திரும்ப வந்தோம்.

 

குறிப்பு:

திரு. தஞ்சை வெ.கோபாலன், தே.சிக. அமைப்பின் மாநில துணைத் தலைவர்; தஞ்சையில் பாரதி இலக்கிய பயிலரங்கை நடத்தி வருபவர்.

 

 

 

 

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஆடி-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s