4.4 கடைக்கோடியில் பிறந்து தலைமகன் ஆனவர்!

-வ.மு.முரளி

ஏ.பி.ஜே.அப்துல் கலாம்

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்

(பிறப்பு: 1931, அக். 15- மறைவு: 2015, ஜூலை 27)

 

 விஞ்ஞானி ஒருவர் நாட்டின் தலைமகனாக, குடியரசுத் தலைவராக உயர்வது என்பது மிகவும் அபூர்வம். அத்தகைய அரிய சாதனையாளர், பாரத மக்களின் உள்ளம் கவர்ந்த விண்வெளிப் பொறியியல் விஞ்ஞானி ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்.

தமிழகத்தின் கடைக்கோடியான ராமேசுவரம் தீவில், ஏழ்மை மிகுந்த இஸ்லாமியக் குடும்பத்தில், படகு உரிமையாளரான ஜெயினுலாப்தீன்- ஆஷியம்மா தம்பதியரின் கடைசி மகனாக, 1931, அக். 15-இல் பிறந்தார் ஆவுல் பக்கீர் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாம்.

4 சகோதரர்கள், ஒரு சகோதரியுடன் பிறந்த கலாமின் பால்ய வாழ்க்கை வறுமை நிரம்பியது. பள்ளி செல்லும் வயதிலேயே பத்திரிகை விநியோகப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

ராமேஸ்வரத்திலேயே ஆரம்பக் கல்வி பயின்ற கலாம், ஸ்வார்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பிற்பாடு, திருச்சியிலுள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் பி.எஸ்சி. பட்டம் (1954) பெற்றார். ஆயினும் அவருக்கு இயற்பியலில் அதிக ஆர்வம் இருக்கவில்லை. அதைப் படித்த மூன்றாண்டுகளும் வீணாகிவிட்டதாகவே அவர் கருதினார்.

1955-இல் சென்னை எம்.ஐ.டி.யில் சேர்ந்த கலாம், அங்கு விண்வெளிப் பொறியியலில் பட்டம் பெற்றார் (1960). அவருக்கு ராணுவத்தில் சேர்ந்து போர்விமானியாக வேண்டும் என்பதே கனவாக இருந்தது. ஆனால் அதற்கான தேர்வில் தரவரிசையில் 9-வது இடம்தான் அவருக்குக் கிடைத்தது.

அக்னி ஏவுகணை

எனவே, படிப்பு முடித்தவுடன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பில் (DRDO) விஞ்ஞானியாகச் சேர்ந்தார். சென்ற புதிதிலேயே ராணுவத்துக்கான சிறிய ரக ஹெலிகாப்டர் (Hovercraft) ஒன்றைத் தயாரித்துக் கொடுத்தார். எனினும் அவருக்கு அப்பணி திருப்தி அளிக்கவில்லை. அவரது தேடல் தீவிரமானது.

இதனிடையே, விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசியக் குழுவிலும் (INCOSPAR) கலாம் இடம் பெற்றிருந்தார். அக்குழு  விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் தலைமையில் 1962-இல் உருவாக்கப்பட்டு, விண்வெளித் துறையில் இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டி வந்தது.

1963-64-இல் அமெரிக்காவின் விர்ஜீனியாவிலுள்ள நாஸா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கும், கிரீன்பெல்லில் உள்ள கோடார்ட் விண்வெளி மையத்துக்கும் கலாம் சென்று வந்தார்.

அதன்பிறகு, பரிசோதனை ராக்கெட் திட்டத்தை 1965-இல் கலாம் துவக்கினார். அவரது திட்ட வரைவுக்கு 1969-இல் அரசின் அனுமதி கிடைத்தது. அவரது திறமையை உணர்ந்த விக்ரம் சாராபாய், அவரை அதே ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (ISRO) அனுப்பிவைத்தார்.

திருவனந்தபுரம் இஸ்ரோ, கலாமின் கர்மபூமியானது. அங்கு செயற்கைக்கோள் ஏவூர்தி-3 (Satellite Launching Vehicle: SLV-III) திட்டத்தின் இயக்குநராக கலாம் பொறுப்பேற்றார். அதுவரை செயற்கைக்கோள்களை ஏவ, வெளிநாடுகளையே நமது நாடு சார்ந்திருந்தது.

அத்திட்டத்தில் பலகட்டங்களில் தோல்விகளைச் சந்தித்தபோதும், இடைவிடா முயற்சியாலும் கடின உழைப்பாலும், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ராக்கெட் வெற்றியடைந்தது. அதுகுறித்து தனது சுயசரிதையான  ‘அக்னிச்சிறகுகள்’ நூலில் விவரித்திருக்கிறார் கலாம்.

1980-இல் இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட ரோகிணி செயற்கைக்கோளை, நமது ராக்கெட்டே சுமந்துகொண்டு விண்ணைச் சாடியது. அது வெற்றிகரமாக இயங்கி, சரியான சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தியது. எஸ்எல்வி தொழில்நுட்பம் உள்ள நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்தது.

போக்ரான் -2 அணுவெடி சோதனை

அப்போதுதான் கலாம் தனது சுயத்தை உணர்ந்தார். அதன்பிறகு ராக்கெட் விஞ்ஞானியாக அவர் நிகழ்த்திய சாதனைகள், இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கச் செய்தன.

1970 முதல் 1990 வரை கலாமின் பணிகள் செயலூக்கம் மிகுந்தவையாக இருந்தன. செயற்கைக்கோள்களை அனுப்புவதுடன் ராக்கெட் தொழில்நுட்பம் நிற்கவில்லை. அதன் அடுத்தகட்டமாக, நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான ஏவுகணைகளை உருவாக்கும் திட்டங்கள் துவங்கின. அதற்காக இந்திய அரசு சில ரகசியமான திட்டங்களை கலாம் தலைமையில் ஒப்படைத்தது.

புராஜக்ட் டெவில், புராஜக்ட் வேலியன்ட் ஆகிய பெயர்களில், திரவ எரிபொருளில் இயங்கும் ராக்கெட் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணைகளை உருவாக்கும் திட்டங்கள் அவை. ஆரம்பத்தில் தோல்வியைத் தழுவினாலும், பின்னாளில் அக்னி ஏவுகணையின் வெற்றிக்கு அவை அடித்தளமிட்டன.

1974-இல் விஞ்ஞானி ராஜா ராமண்ணா தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, ராஜஸ்தானின் போக்ரானில் இந்தியாவின் முதல் அணுவெடி சோதனையை நடத்தியது. அப்போது ராணுவ ஆராய்ச்சி அமைப்பின் (Terminal Ballistics Research Laboratory- TRBL) பிரதிநிதியாக கலாம் அங்கு ராஜா ராமண்ணாவால் அனுப்பிவைக்கப்பட்டார்.

அரசு நிர்வாகத்திடம் போராடி, நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதில் கலாம் எப்போதும் சளைத்ததில்லை. 1980-களில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஆர்.வெங்கட்ராமனிடம் கலாம் அளித்த ஏவுகணைத் திட்டம் அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு பிடித்துப் போக, 1982-83-இல் இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டளை ஏவுகணை அபிவிருத்தித் திட்டம் (Integrated Guided Missile Development Programme- IGMDP) கலாம் தலைமையில் துவங்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான ஐம்பெரும் ஏவுகணைகளை உருவாக்கும் மாபெரும் திட்டம் அது.

கவச வாகன (டாங்கி) தடுப்பு ஏவுகணையான  ‘நாக்’, தரையிலிருந்து தரையிலக்கைத் தாக்கும் ‘பிருத்வி’, தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்கும்  ‘ஆகாஷ்’, வாகனத்திலிருந்து வான் இலக்கைத் தாக்கும்  ‘திரிசூல்’, இடைத்தூர தாக்குதல் ஏவுகணையான  ‘அக்னி’ ஆகியவைதான் அந்த ஐந்து ஏவுகணைகள்.

கலாம் தலைமையிலான விஞ்ஞானிகளின் தொடர்ந்த உழைப்பால், நாக் (2010), பிருத்வி (1988), ஆகாஷ் (1990), திரிசூல் (1985), அக்னி (1989) ஆகியவை வெற்றியடைந்தன. இந்த ஏவுகணைகள் ராணுவத்திலும் இடம்பெற்று, நமது நாட்டின் பாதுகாப்பை வெளிநாட்டு உதவியின்றி உறுதிப்படுத்தியுள்ளன.

1992 முதல் 1999 வரை பிரதமரின் அறிவியல் ஆலோசகராக கலாம் செயல்பட்டார். அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, 1998-இல் போக்ரானில் மீண்டும் அணுவெடி சோதனை நடத்தப்பட்டது. அதனை முன்னின்று நடத்தினார் கலாம். அதன்மூலமாக, உலகின் அணுசக்தி நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றது.

இருதயவியல் நிபுணர் சோமராஜுவுடன் இணைந்து 1998-இல் ரத்தக்குழாய் அடைப்பு நீக்கும் விரிப்பானை  (Stent) கலாம் உருவாக்கினார். அது  ‘கலாம்- ராஜு ஸ்டென்ட்’ என்று அழைக்கப்படுகிறது. ஊரகப் பகுதி மக்களுக்குப் பயன்படும் வகையில் அவர்கள் இருவரும் 2012-இல் உருவாக்கிய கையடக்க கணினி,  ‘கலாம்- ராஜு டேப்லெட்’  என்று அழைக்கப்படுகிறது. ராக்கெட் வடிவமைப்பில் பயன்படும் எடை குறைந்த- அதேசமயம் வலிமை மிகுந்த உலோகக் கலவை மூலமாக செயற்கைக்கால்களைத் தயாரிக்க, கலாம் அளித்த ஆலோசனையே காரணம்.

ஜனாதிபதி கலாம்

அப்துல் கலாமின் சிறப்பை உணர்ந்த அப்போதைய வாஜ்பாய் அரசு, 2002 குடியரசுத் தலைவர் தேர்தலில் அவரை தங்கள் தரப்பு வேட்பாளராக அறிவித்தது. அத்தேர்தலில் வென்று 11-வது குடியரசுத் தலைவரான அவர், 2002 ஜூலை 25 முதல் 2007 ஜூலை 25 வரை அப்பொறுப்பை வகித்தார்.

தனது பதவிக் காலத்தில் நாடு முழுவதும் பயணித்து, கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச் சந்தித்து அவர்களின் உயர்வுக்கு வழிகாட்டினார் கலாம்.  ‘கனவு காணுங்கள்’ என்ற அவரது முழக்கம் இளைஞர்களுக்கு புத்துணர்ச்சி அளித்தது.

குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விலகிய பிறகும் அவரது கல்விப் பயணம் தொடர்ந்தது. பல உயர் கல்வி நிறுவனங்களில் வருகைப் பேராசிரியராகப் பணிபுரிந்த அவரது மரணமும்கூட, மாணவர்களிடையே இருந்தபோதே நிகழ்ந்தது.

2015, ஜூலை 27-இல், மேகாலய மாநிலம், ஷில்லாங்கில் ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்ட கலாம், தனது 83-வது வயதில்  மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த தேசமும் கண்ணீர் சிந்தியது. ஒரு விஞ்ஞானி மக்கள் தலைவரான சரித்திரத்தை உலகம் கண்டது.

அப்துல் கலாம் அறிவியல் ஆராய்ச்சிக்காகவும், விண்வெளித் துறை வளர்ச்சிக்காகவும் தனது வாழ்வையே தியாகம் செய்தவர். அதற்காகவே அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. உயர்ந்த பதவிகளை அலங்கரித்தபோதும் எளிய வாழ்க்கை வாழ்ந்த கலாம், அனைத்து மதங்களையும் நேசித்து, நல்ல குடிமகனுக்கு முன்னுதாரணமாக விளங்கினார்.

அமெரிக்காவின் ஹூவர் பதக்கம் (2009), இங்கிலாந்தின் ராயல் சொஸைட்டியின் கிங் சார்லஸ் பதக்கம் (2007), இந்திய அரசின் சாவர்க்கர் விருது (1998), பத்மபூஷண் (1981), பத்ம விபூஷண் (1990), பாரத ரத்னா (1997) உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்ற கலாம், 40 பல்கலைக்கழகங்களின் கௌரவ முனைவர் பட்டங்களையும் பெற்றுள்ளார்.

கலாம் பிறந்த நாளான அக்டோபர் 15-ஐ  தமிழக அரசு இளைஞர் எழுச்சிநாளாக அறிவித்துள்ளதுடன், கலாம் பெயரில் சுதந்திர தின விழாவில் பரிசினையும் வழங்கி வருகிறது. ஒடிஸாவிலுள்ள ஏவுகணை சோதனை மயமான வீலர் தீவுக்கு ‘அப்துல் கலாம் தீவு’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கலாம் சிறந்த விஞ்ஞானி, மக்கள் தலைவர் மட்டுமல்ல, அற்புதமான எழுத்தாளரும்கூட. அவரது அக்னிச்சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள், எனது வானின் ஞானச்சுடர்கள் உள்ளிட்ட 9 நூல்களும் இளைஞர்களாலும் மாணவர்களாலும் வெகுவாக விரும்பிப் படிக்கப்படுகின்றன. அந்த நூல்கள் வாயிலாக தனது லட்சியத்தை இளம் உள்ளங்களில் தொடர்ந்து விதைத்து வருகிறார் அவர்.

எளியவர்களும் வாழ்வில் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்த விஞ்ஞானியான அப்துல் கலாம், அறிவியல் உலகுக்கு புதிய கௌரவத்தை ஏற்படுத்தியவர்; உலக அரங்கில் பாரதத்தின் புகழ் சிறக்கவும் காரணமானவர். அவரது நினைவுகள், நமக்கு என்றும் நல்வழி காட்டும்.

குறிப்பு:

திரு. வ.மு.முரளி பத்திரிகையாளர்.

நன்றி:  தினமணி -இளைஞர்மணி

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஆடி-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s