3.6 மறுவாழ்வு (சிறுகதை)

-சுப்ரபாரதிமணியன்

மேகம் கறுத்து இருட்டாக்கியது. நான்கு நான்காய் இரு பக்கங்களிலும் எட்டு அறைகள் இருந்தன. அந்த ’ ‘லைன் வீட்டில்’’  மேற்குப் பக்கம் குளியலறை,  கழிப்பறை போன்று ஏதோ தென்பட்டது. முத்துலட்சுமி பரபரவென்று குளியலறைப் பக்கம் எரிந்து கொண்டிருந்த குண்டு பல்பைப் பார்த்தாள். எட்டு வீட்டுக் கதவுகளும் எந்த நிலையில் உள்ளன என்று பார்க்கிற மாதிரி நின்றாள்.

“வலது பக்கம் மூணாவதா இருக்கற ரூம்ல போயி இரு” அவன் கைகாட்ட அவள் நகர்ந்தாள். அவளின் பக்கம் வெளியிலிருந்து வந்தவள் நின்றாள்.

“வாம்மா”

முத்துலட்சுமி தயங்கி கிழக்குச் சுவரின் அழுக்கைப் பார்த்தபடி நகர்ந்தவள் நின்றாள். அந்தத் தெருவின் அழுக்கையெல்லாம் கூட்டிச் சேர்த்த மாதிரி அதன் வலது பக்க மூலை இருட்டாகியிருந்தது. 

“வாம்மா”

“முத்துலட்சுமி நானு”

“ஆமா முத்துலட்சுமிதா……. இங்க வா”

மழையின் ஈரத்தை காற்று சுமந்து கொண்டுவந்து அவளையும் தள்ளியது. அவள் மேலே ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த கூரையைப் பார்த்தபடி அறையின் மூலைக்குச் சென்றாள்.

“பெனாசிர்….தங்கறதுக்கு எடமில்லாம பஸ் ஸ்டாண்டுல நின்னுட்டிருந்தாங்க. ரூமுக்குள்ளக் கூட்டிட்டுப் போ. நீ ஒருத்திதானே அதிலிருக்கறே. என்ன ஏதுன்னு விசாரி. எங்காச்சும் பனியன் கம்பெனியில சேத்துவிடு. தேறாதுன்னா பஸ்சுக்குக் காசு கொடுத்து ஊருக்குத் தாட்டி வுட்டுரு. தேவையாயிருந்தா காசு தர்ரேன்”

நான் பாத்துக்கறேன். போண்ணா”

“மழை வர்றமாதிரி இருக்கு. நான் பாத்துக்கறன். ஏதாச்சுன்னா போன் பண்றேன்”

உள் அறை அழுக்கில் மிதந்து கொண்டிருந்தது. ஒரு பிளாஸ்டிக் கயிற்றில் புடவைகள் தாறுமாறாய்க் கலைந்து தொங்கின. அவற்றின் வர்ணங்கள் வெவ்வேறு வகையாய் திரிந்து கிடந்தன. மர மேஜை ஒன்றின் மீது இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி வெளிச்சமற்று உட்கார்ந்திருந்தது. அதைச்சுற்றிலும் கசங்கியப்  புடவைகள் தாறுமாறாய்க் கிடந்தன. சேலை மலைகளுக்கு மத்தியில் தொலைக்காட்சிப் பெட்டி உட்கார்ந்திருந்தது.

வலது பக்க மூலையில் ஒரு பம்ப்  ஸ்டவ்வும் சில பாத்திரங்களும் இறைந்து கிடந்தன. வடச்சட்டி ஒன்று அதன் மசித்தனங்களுடன்  குப்புறக் கவிழ்ந்து கிடந்தது.

“என்ன சாப்புட்டியா”

“சாப்புட்டேன்”

“எங்க..”

“ஓட்டல்லதான்…. ஒருத்தர் வாங்கிக் கொடுத்தார்”

என்ன .. ஒருத்தர் வாங்கிக் கொடுத்தார். இந்த அண்ணன் இங்க கொண்டாந்து வுட்டார்”

“ ஆமாங்க…”

“ஒருத்தன் சாப்பாடு போட்டான். ஒருத்தன் ஸ்கூட்டர்லெ கூட்டியாந்தான். என்னம்மா இது. வெளையாட்டு மாதிரியா.”

“ஊர்ல இருந்து வந்துட்டேன்”

“செரி பெரிய கதையாத்தா இருக்கணும்… ரெண்டு ஷிப்ட் செக்கிங் பண்ணிட்டு வந்தேன். ஒடம்பு சோர்ந்து போச்சு. உன் கதைய காது குடுத்து கேக்க முடியாது. காலையில் சொல்லு. அப்புறம் என்ன பண்றதுன்னு முடிவு பண்ணிக்கலாம்.  பாயி ஒண்ணு எடுத்துப் போட்டுப் படு. காலையில பேசிக்கலாம். எம் பேரு பெனாசிர்”

“பாக்கிஸ்தான் பிரதமர்”

“ஆமா பிரதமர்தான். இங்க ஓடி வந்து ஒளிஞ்சு கெடக்கறன். அது வேற பெனாசிர். நான் மண்ணுக்குப் பிரயோஜனமில்லாத பெனாசிர்”

“என்ன அப்பிடி சொல்றக்கா,  என் பேரு முத்து……. முத்துலட்சுமி”

“செரி…. தூங்கப் பாரு. தண்ணி குடிக்க வேணும்னா,  பிளாஸ்டிக் கொடத்திலே  இருக்கு..”

ஓரத்தில் சிதைந்து நூல் தொங்கிக் கொண்டிருந்த பாயை பெனாசிர் எடுத்து உதறினாள். தூசு போல் குப்பை மேலெழும்பி,  பின் தரையில் ஒட்டிக் கொண்டது.

முத்துலட்சுமி உடம்பை குறுக்கிக் கொண்டு சுவரில் சாய்ந்து கொண்டாள். சுவரின் குளிர்ச்சியை உணர்ந்தவள் மாதிரி கண்களை மூடிக் கொண்டாள்.

அவள் கையில் மாத நாவலொன்று இருந்தது. மடித்து வைத்த பக்கத்திலிருந்து எதையோ தொடர்பவள் போல் கண்களைக் கசக்கியபடி பார்த்தாள்.

“என்ன படிக்கறியா”

“கதைப் புத்தகம் அக்கா”

“படிச்ச பொண்ணா இப்படி திடுதிப்புன்னு ஓடி வாரது”

“நெலமை அப்பிடிக்கா”

“செரி காலையில  பேசிக்கலாம். நாலு நாளா கடுசான மழை. இன்னைக்கும் மின்னலடிக்குது. நான் தூங்கறேன். பல்பை ஆப் பண்ணிடு.. அப்புறம்”

புத்தகத்தை மூடிவைத்துவிட்டு நிமிர்ந்தாள் முத்துலட்சுமி. எறவானத்தில் பிளாஸ்டிக் பைகள். தலைகோதி. சின்னதும் பெரியதுமாய் பிளாஸ்டி தாள்கள் தென்பட்டன. கையை நீட்டியபோது  ஏர்பேக்கின் அடியிலிருந்த மரப்பாச்சி தான் இருப்பதைக் காட்டியது. கிளம்பும்போது அதை எடுத்து வைத்திருந்தாள். அம்மா சின்ன வயதில் கொடுத்தது. விளையாட  ஏதாவது கேட்கிற போது அதைத்தான் அம்மா தருவாள். அதிலிருப்பது ஒரு குழந்தையின் உருவமா.. அமைதியாய்  நிற்கும் ஏதாவது பெண் தெய்வமா.. எதுவாக இருந்தாலும் சிறு துணை போல் அது அவளுடனே இருந்திருக்கிறது. இப்போது வேற்றூருக்கும் அவளுக்குத் துணையாகி விட்டது. அதற்கு சிறு சேலைகட்டி, பூ வைத்து கூட வேடிக்கை பார்த்திருக்கிறாள். அதன் மர வர்ணம் சிதையாமல் அப்படியே இருப்பது அவளுக்கு ஆச்சர்யமே தந்திருக்கிறது. வீட்டுப் பொருட்களுடன் ஒன்றாக இருந்தது. தன் பொருட்களுடன் இனியும் ஒன்றாகி விட்டது என்பது பற்றி யோசித்த போது கொஞ்சம் கண் அயர்ச்சி வந்து விட்டது.

தலைக்கு மேல் தெரிந்த கண்ணாடி  ஓட்டில் மின்னல் வெளிச்சத்தைக் காட்டிவிட்டுப் போனது. மேகம் கறுப்பாய் உள் நுழைந்து பின் சற்றே வெளிச்சமாக்கிப் போனது. பேருந்தில் உறங்கியது கொஞ்ச நேரத்திற்கு தூக்கத்தைத் தள்ளி வைக்கும். அதுவரை எறவானத்தையும், முகட்டையும்  பார்த்திருக்க வேண்டும். எல்லாவற்றிலும் அழுக்கும் கறுப்பு நிறமும் சேர்ந்த அறையாக இருந்தது.

அறைக்கதவு படபடவென்று தட்டும் சப்தம் கேட்டது. இடியை பக்கத்தில் கொண்டு வந்து  முழக்கிவிட்டுப் போனது போல் இருந்த்து. பெனாசிர் எழுந்து பார்க்கவில்லை. முத்துலட்சுமி சேலை நுனியை இடுப்பில் செருகிக் கொண்டு  கதவைத் திறந்தாள்.

“என்ன புதுசா இருக்கே. பெனாசிர் இல்லையா”

பெனாசிர் எழுந்துவந்து முத்துலட்சுமியின் அருகில் நின்றாள். கொஞ்சம் உடம்பை நிமிர்த்தினால் தலை முட்டும் என்கிற மாதிரி ஓடு தாழ்ந்திருந்தது.அதன் வரிவரியான செதில்கள் தலையை சொரசொரவைக்கும்

“என்ன செண்பகக்கா…..”

“வெளிய வர்றியா, அந்த மொதல் வீட்லே இருக்கிற ஒரியாக்காரன் பொண்டாட்டி தரையில விழுந்து அழுகறா”

“என்னவாமா”

“காந்தி நகர்ல குடிக்கிற எடத்துல –பார்லே  இந்த மழையிலே செவர் விழுந்து செத்துப் போயிட்டானாமா அவ புருசன்”

“ஒரு ஆளா”

“நெறைய இருக்கற மாதிரி இருக்கு. நாப்பது பேர் குடிச்சிருட்டிருந்திருக்காங்க. பலரும் வெளிமாநிலத்து ஆளுக ”

“நாம என்ன பண்றது”

“வெளிய வந்தா யோசிக்கலாம் பெனாசீரு” வானம் பொத்துக் கொண்டு ஊற்றுவதற்குத் தயார் என்பது போல் வெகுவாகக் கறுத்திருந்தது. சேலையை உடம்போடு சேர்த்து இறுக்கிக் கொண்டு பெனாசிர் வெளியே வந்தாள்.

முத்துலட்சுமி ஊரை விட்டு ஓடி வந்ததற்குக் காரணம்  அவளது முறைப்பையன் சிவகுமார் பெரும் குடிகாரனாக மாறி இருப்பதுதான். சின்ன வயதிலிருந்து அவனுக்குத்தான் அவள் என்றாகி விட்டது. அந்த நினைப்பு சுகத்தையெல்லாம் மறந்துவிட்டு சிவகுமார் எப்படியோ பெரிய குடிகாரனாகிவிட்டான்.. தினமும் ஒரு குடிகாரனை தெருவிலோ உறவினர் வீட்டிலோ எதிர்கொள்வது சிரமமாக இருந்தது.  இன்னும் கணவனாக அவனை எதிர்கொள்ள பயப்பட்டே  அவள் ஊரை விட்டு ஓடி வந்திருந்தாள் . .கண்ணில் படாமல் அவன் இருந்தால் அதுவே ஆறுதல். அவன் திருந்தி வந்தாலோ, மறுவாழ்வு இல்லம் போனாலோ ஆறுதலாக இருக்கும் என்பதை அவனிடமும் அவள் சொல்லியிருப்பதை நினைத்துக் கொண்டாள்.

“வெளிய வந்தா யோசிக்கலாம்’’’’ என்று செண்பகக்கா சொன்னதை  மனதில் கொண்டு வந்து நினைத்துப் பார்த்தாள். மூச்சு சீராகிக் கொண்டிருப்பதைப் போல் உணர்ந்தாள்.

 

குறிப்பு:

சுப்ரபாரதிமணியன்

திரு. சுப்ரபாரதிமணியன், திருப்பூரில் வசிக்கும் முன்னணி தமிழ் எழுத்தாளர்.  ‘கனவு’ இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in சித்திரை-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s