3.4 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 2

-ம.வே.பசுபதி

பகுதி -2    

தொல்காப்பியர்

தொல்பழந்தமிழ் நூல்களாக நமக்குக் கிடைத்திருப்பனவற்றுள் மிகப் பழமையானது தொல்காப்பியமேயாகும். அதன் காலம் பொ.மு. ஐந்தாம் நூற்றாண்டென்பர். தொல்காப்பியம் இலக்கண நூலேயாயினும், தமிழிலுள்ள அனைத்து இலக்கிய மூலக்கூறுகட்கும் மூலவிதைகள் அந்நூலிலேயே உள்ளன. அது கருதியே தமிழிலக்கிய வரலாற்றாசிரியர்கள் அனைவரும் தொல்காப்பியத்தை முதன்மைப்படுத்தியே இலக்கிய வரலாற்றாய்வு மேற்கொள்வதை மரபாகக் கொண்டுள்ளனர். அம் மரபுபற்றி, தேடலை தொல்காப்பியத்திலிருந்தே நாமும் தொடங்குவோம்.

தொல்காப்பியத்தின் பாயிரம் எனப்படும் அணிந்துரையைப் பாடியவர் தொல்காப்பியரின் ஒருசாலை மாணாக்கராகிய பனம்பாரனார் என்னும் புலவராவார். நூல் வழங்கும் எல்லையைப் பாயிரத்தில் குறிப்பிட வேண்டும். பனம்பாரனார் வேங்கடம் முதல் குமரிவரை தொல்காப்பியம் புழங்க உரியது என்கிறார். காரணம் இந்த எல்லை தமிழ் கூறும் நல்லுலகம்.”உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” என்றபடி இங்கே உலகம் என்ற சொல் பெருநிலப்பரப்பைக் குறிக்காது; கல்வி- கேள்விகளில் சிறந்த ஆன்றோரையே குறிக்கும்.

தொல்காப்பியர் இந்திரனுடைய ஐந்திரம் என்ற வியாகரணத்தை முற்றக் கற்றுத் தேர்ந்த புலமையாளர் என்கிறார். ஐந்திர வியாகரணம் என்பது பாணினி வியாகரணத்துக்கும் பதஞ்சலி வியாகரணத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் விளங்கிய இலக்கண விளக்க நூல். அது சமஸ்கிருத இலக்கணம். அது மட்டுமன்று. எழுத்துகளின் பிறப்பைக் கூறும் பிறப்பியல் என்ற இயலில் எழுத்துகளின் உள்ளொலி இயக்கம் பற்றி அந்தணர்கள் வேதத்தில் உள்ளது என்கிறார் தொல்காப்பியர். “ஐந்திரம் என்ற சமஸ்கிருத வியாகரணத்தைப் படித்த தொல்காப்பியர் வேதத்தையும் படித்திருப்பாரல்லவா? என்ற நம் ஐய வினாவுக்கு அந்த இடம் விடை சொல்கிறது.

இந்தச் செய்திகள் பொ.மு. ஐந்தாம் நூற்றாண்டையொட்டிய காலகட்டத்தில் மொழி ரீதியான பேதமின்மை என்கிற தேசியத்தின் ஓரங்கமாகிய கோட்பாடு தழைத்துச் செழித்திருந்ததை உணர்த்துகிறது.

பாரதமென்னும் இந்தப் பெருநாடு முழுவதும் பரவிய மொழி சமஸ்கிருதம். அதற்கிணையான வளப்பமுடைய மொழி தமிழ். இவ்விரு மொழிகளே பாரதம் முழுமைக்கும் கோலோச்சிய மொழிகளாக விளங்கின. அதனாலேதான் சமஸ்கிருதத்தை வடமொழி என்றும், தமிழைத் தென்மொழி என்றும் குறிப்பிட்டழைக்கும் பழக்கம்- மரபு, இருந்தது; தொடர்கிறது. தொல்காப்பியரும் சமஸ்கிருதச் சொற்களை “வடசொற்கிளவி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மொழிபேதமற்ற பெருநாடாக பாரதம் விளங்கியமைக்கு தொல்காப்பியத்திலிருந்தே மேலும் பல சான்றுகளைச் சொல்ல முடியும். தொல்காப்பியர் மட்டும் ஐந்திர வியாகரணம், வேதம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்த புலமையாளர் அல்லர். தொல்காப்பியத்தைப் பரிசீலித்த அதங்கோட்டாசான் என்ற தொல்காப்பியரின் ஒருசாலை மாணாக்கரைப் பற்றிப் பனம்பரனார் குறிப்பிடும்போது “அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்” என்கிறார். அதங்கோடு என்பது சேரல நாடாகிய கேரளாவின் திருவிதாங்கோடு; திருவிதாங்கூர். அந்தவூரில் ஆசிரியத் தொழில் செய்தவர் என்பது அதங்கோட்டாசான் என்ற பெயரின் பொருள். அவர் தன் மாணாக்கர்களுக்கு என்ன பாடம் சொல்லிக் கொடுத்தார் என வினவினால் அவர் தர்மத்தை விடாமல் சொல்லிக் கொடுத்தார் என்ற விடை  ‘அறம் கரை நாவின்’ என்ற அடையால் கிடைக்கிறது.

வேதம் நான்கிற்கும் அறம் என்ற ஒரு பெயருண்டு. ”வேதத்தை விட்ட அறமில்லை” என்பார் திருமூலர்.  ‘வேதத்தில் சொல்லப்படாத தர்ம்ம் வேறில்லை’ என்பது திருமூலர் வாக்கின் பொருளாகும். எனவே வேதத்தை விடாமற் சொன்ன நா, அதன்கோட்டாசானின் நா என்றாகிறது. அதனால் திருவிதாங்கோட்டில் வேதபாடத்தை விடாமற்சொன்ன ஆசான் அதங்கோட்டாசான் என்ற செய்தி புலப்படுகிறது.

பிற்காலத்து அகப்பொருள் நூலாசிரியராகிய நாற்கவிராச நம்பி, கல்வியை வேதக்கல்வி, அல்லாக்கல்வி என இரண்டாகப் பகுத்துரைப்பார். வேதமல்லாத இலக்கண, இலக்கிய, சாத்திர, தோத்திர, புராண, இதிகாச, பிறதுறைக் கல்விகள் யாவும், அல்லாக் கல்வியுள் அடங்கும். அதங்கோட்டாசான் மாணாக்கர்களுக்கு கற்பித்த கல்வி வேதக்கல்வி.

அகத்தியரிடம் தமிழ்க் கல்வி கற்றுக்கொண்ட தமிழ் மாணாக்கர்கள் பன்னிருவரில் அதங்கோட்டாசானும் ஒருவர். அவர் வேதக்கல்வி போதித்த ஆசிரியராக விளங்கினாரென்றால் அது தொடர்பான அவரின் தகுதி என்ன என்ற்றிவதற்கு ஆர்வம் எழத்தான் செய்யும். பனம்பாரனார் ‘நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்’ என்கிறார். ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களில் முழுப்புலமை பெற்றவர் அதங்கோட்டாசான் என்பது அதன் பொருள். அதாவது அதங்கோட்டாசான் சதுர்வேத பண்டிதர். சதுர்வேத பண்டிதர்கள் வேதம் ஓதுவதற்குக் கற்றுத் தரும் ஆசிரியர்கள் அல்லர். இவர்கள் சொல்லிக் கொடுப்பது உயர் ஆராய்ச்சிக் கல்வி.

வேதம் ஓதுதலை “வேத அத்யயனம்” என்பர். வேதாத்யயனம் செய்யும் கல்வியைக் கற்றுக் கொடுப்பவர்களை உபாத்யாயர் என்பர். உப அத்யயனம் செய்பவர்கள் உப அத்யயனர். தமிழில் இச்சொல்  ‘உவாத்தி” என வரும். பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக் கோவையுள் முதன்முதலாக இச்சொல் வருகிறது. உவாத்தியர் என்ற சொல் பழகு தமிழில்  ‘வாத்தியார்” என மருவி வழங்கப்படுகிறது. கணாந்தாம் வேதாத்யயனம் செய்ய வல்லவர் கனபாடிகள் எனக் குறிப்பிடப்படுவார்கள்.

வேதம் ஓதுதலுக்கு கற்றுக் கொடுப்பதில் உச்ச நிலையினர் கனபாடிகள்; வேதக் கல்வியாகிய உச்சநிலை ஆராய்ச்சிக் கல்வியைக் கற்றுக் கொடுப்பதில் உச்சநிலையினர் சதுர்வேத பண்டிதர்கள். இவற்றுள் சதுர்வேத பண்டிதராக விளங்குவதே அதிஉச்சநிலை. எனவே பனம்பரனார்  ‘நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்’ என்று மட்டும் குறிப்பிடாமல்,  ‘நான்மறை முற்றிய நாவின்’ என்றும் சிறப்பித்துச் சொல்கிறார் என்பது தெளிவாகிறது.

அதங்கோட்டாசான், அகத்தியரிடம் தமிழ் கற்றார் என்பதுதானே பெருஞ்சிறப்பு? அதைக் குறிப்பிடாமல் வேதக்கல்வியில் மேம்பட்டவராக அடையாளப்படுத்தியது பொருந்துமா எனில், மிகப் பொருந்தும்.

ஐந்திரம் என்ற வடமொழி இலக்கணத்தில் நிறைந்த புலமையாளரின் நூலாகிய தொல்காப்பியத்தை ஆய்ந்து ‘இது குற்றமற்ற நூல்” என நிலந்தருதிருவின் பாண்டியன் அவையத்தில் சான்று பகரவேண்டிய பொறுப்புடையவர் வேதக்கல்வியில் கரைகண்ட போதனாசிரியர் எனக் குறிப்பதுதானே மிகப் பொருத்தம்? தொல்காப்பியரின் தமிழ் இலக்கண நூலை ஆராய்வதற்கு இருவரும் அகத்தியரிடம் பயின்றவர்கள் என்பது அடிப்படைத் தகுதி. எனவே சிறப்புத் தகுதியை மட்டும் பனம்பாரனார் வெளிச்சமிட்டுக் காட்டினார்.

இன்றைக்காயினும், சரி, என்றைக்காயினும் சரி, தேசிய ஒருமை உணர்வதற்கும், துய்ப்பதற்கும், உணர்வில், குருதியில் கலப்பதற்கும் ஆன தடைக்கற்களில் பெருங்கல், மொழிபேத உணர்ச்சியே எனில் அது மிகையாகாது. தொல்காப்பியர் காலத்திய மொழிபேதமற்ற நிலைமைக்கான சான்றுகளாக மேலும் சிலவற்றைப் பின்னரும் பார்ப்போம்.

(வளரும்)

 

குறிப்பு:

ம.வே.பசுபதி

திரு. ம.வே.பசுபதி,  தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலத் தலைவர்.

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in சித்திரை-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s