3.20 நாட்டு வைத்தியம்-கீழானதா?

வி.பி.முருகானந்தன்

“மூடப் பழக்க வழக்கங்கள், சடங்கு சம்பிரதாயங்கள் என்ற பெயரில் நாட்டுக்குள்ளே படிப்பறிவில்லாதவர்கள் மட்டுமல்ல, படித்தவர்கள் கூட பல நேரங்களில் நாட்டு மருத்துவம் போன்ற தவறான மருத்துவ முறைகளால் பாதிக்கப்படுகிறார்கள்” என்று,  சமீபத்தில் நண்பர் ஒருவர் தனிப்பட்ட செய்தி ஒன்றை எனது மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார். அவரது ஆதங்கம் ஓரளவு சரிதான். அநேக  அரைகுறை நாட்டு வைத்திய சிகாமணிகளால் பிரச்னைகள் வரத்தான் செய்கின்றன.

தேவையற்ற நாட்டு மருந்துகளை எடுத்துக் கொள்கிற பொழுது அது  ‘கிட்னி பெயிலியர்’ அளவிற்கும்கூட  கொண்டுபோய் விடும் அபாயம் உள்ளதாக நண்பர் குறிப்பிட்டிருந்தார். அதுவும் உண்மையே.

அதே சமயம் ஒரு சின்னக் கேள்வி… நாம் யோசிப்பதற்கு. காரில் ஒரு அவசரப் பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். இப்போது வாகனத்தை ஓட்ட ஒரு வாடகை ஓட்னர் தேவை. இரண்டு ஓட்டுனர்கள் கிடைக்கிறார்கள். ஒருவருக்கு வெறும் 2 ஆண்டு அனுபவம், இன்னொருவருக்கோ 20 ஆண்டு அனுபவம். யாரை முதலில் தேர்ந்தெடுப்போம்?  20 ஆண்டு அனுபவம் உள்ளவரைத் தானே? அதற்காக 2 ஆண்டு அனுபவம் உள்ளவர் மோசமானவர் என்று அர்த்தமல்ல.

அது போலவே, ஆங்கில மருத்துவம் என்பதன் வயது என்ன?  சுமார் 200 ஆண்டுகள் தானே?  நம்முடைய சித்தமும், ஆயுர்வேதமும் தோன்றிய காலம் யாருக்கேனும் தெரியுமா? அநாதி காலம் தொட்டு ஒரு மருத்துவ முறையை கோடிக்கணக்கான மக்கள் தொடர்ந்து பின்பற்றுகிறார்கள் என்றால், அது சரியானதாக இல்லாமல், உடல் நலனிற்கு ஊறு விளைவிப்பதாக இருந்திருந்தால் இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்திருப்பது சாத்தியம்தானா?  நிதானமாக யோசிப்போமே?

இரண்டாவதாக, மற்றவர்கள் என்ன சொன்னாலும் நமது சுய அனுபவத்துக்கு முக்கியத்துவம் எப்போதும் அதிகம். அந்த வகையில் எனது சுய அனுபவம் ஒன்று…

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பற்களில் சொத்தை விழுந்து கடுமையான வலி ஏற்ப்படவே,  பல் (ஆங்கில) மருத்துவரை அணுகினேன். நான்கு கடைவாய்ப் பற்களை உடனடியாக அகற்றிவிட்டு செயற்கைப் பற்களை மாட்டிவிட்டார். கூடவே எச்சரிக்கையும் செய்தார். ” உங்களுடைய மேல் வரிசைப் பற்களில் ஒன்றிரண்டில் சொத்தைக்கான ஆரம்பம் காணப்படுகிறது… பற்கள் வலுவிழந்து வருவதையே இது காட்டுகிறது.. வருங்காலத்தில் மேலும் பல பற்கள் விழுந்து விடுவதைத் தவிர்க்க முடியாது…பரவாயில்லை… ஒரு கட்டத்தில் எல்லாப் பற்களையும் எடுத்துவிட்டு பல் செட் வைத்தால் போகிறது.  இப்பொழுதுதான் பல் செட் பொருத்துவது சாதாரணமாகிவிட்டதே? ” என்றார் சிரித்தபடி. எனக்கு பகீரென்றது

அப்போதுதான் யதேச்சையாக,  அரதப்பழசான நாட்டு மருத்துவப் புத்தகம் நண்பர் மூலமாகக் கிடைத்தது. உடனே ஆவலாக ஏதேனும் நல்ல வழி கிடைக்காதா  நம் பற்களை காப்பாற்றிக் கொள்ள  எனத் தேடியதில் கிடைத்தது ஒரு எளிய வழி.

அது… கடுக்காய்ப் பொடியோடு கருவேலம்பட்டைப் பொடியைக் கலந்து வெறும் கைவிரலால் நன்றாக ஈறுகளை அழுத்திவிட்டு தேய்க்க வேண்டும் என்பது! பற்கள் சுத்தமாவதுடன், ஈறுகளில் உள்ள கெட்ட நீரும் வெளியேறுகிறது இப்படி செய்வதால்.

இதோ இன்றைக்கு 6 ஆண்டுகள் ஆயிற்று.. பற்கள் எந்த விதமான சேதாரமும் ஆகாமல் இரும்பைப் போல உறுதியாகவே இருக்கின்றன.

இன்னொருமுறை அதே பல் மருத்துவரிடம் வேறு ஒரு வேலையாக போயிருந்தபோது அவரே ஆச்சரியப்பட்டுக் கேட்டார்..”என்ன மாயம் சார்…இது?”

இது ஒரு உதாரணமே.

இன்னொரு உதாரணம் .. “ஆயிரக் கணக்கில், லட்சக் கணக்கில் செலவாகும்” என ஆங்கில மருத்துவர்கள் சொல்லி அனுப்பிய முதுகுத்தண்டு,  கழுத்து வலி பிரச்னைகள் எல்லாம் மொத்தமாய் வெறும் 300 ரூபாயில் (சத்தியமங்கலம்) புளியம்பட்டிக்கு அருகே நொச்சிக்குட்டையில் உள்ள ஒருவர், எண்ணெய் தேய்த்து நீவிவிடுகிற 10 நிமிட சிகிச்சையில்  சரியாகிறது. இப்படி ஏராளமாய் என்னால் அடுக்கிக் கொண்டே போக முடியும்.. அதுவல்ல எனது நோக்கம்.

நவீன மருத்துவக் கருவிகளின் துணை கொண்டுதான் இன்றைய ஆங்கில மருத்துவம்  (அலோபதி) இயங்குகிறது. ஆனால் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளோ நீண்ட நெடுநாளைய அனுபவத்தை அடிப்படையாக்க் கொண்டவை.

இரண்டுமே சரியான மருத்துவம் தான்.. என்றாலும், முன்னது கைவிட்ட அநேக நோய்களை பின்னது சரி செய்திருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும்.. கடைசிக்கு ஆயுள் நீட்டிப்பிற்காகவாவது சாத்தியக் கூறுகள் உண்டு…

‘ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி’ என்கிற நமது நாட்டுப்புற வழக்கத்தையே இன்றைய நவீன மருத்துவமும் உறுதி செய்கிறது. வேறென்ன சான்று தேவை?

முன்னது, அவசரமான, அவசியமான சிகிச்சைகளுக்கு உடனடி பலன் அளிப்பது. பின்னது, பக்க விளைவுகள் அற்ற பூரண குணமாக்கத்திற்கு நீண்ட கால பலன் அளிப்பது.

எந்த ஒரு மருத்துவம் என்றாலும், இறுதியாக மருத்துவரையும், அவரது அனுபவத்தையும் சார்ந்தும் வியாதி குணமாவது மாறுபடும் என்பதும் சரிதான்.

ஆக, நாட்டு வைத்தியம் என்கிற கேலிப்பேச்சு அநாகரிகமானது. சொல்லப்போனால் இன்று நாம் கொண்டாடும் ஆங்கில மருத்துவம் தோன்றி சில நூறு ஆண்டுகள்தான் ஆயிற்று. அதற்கு முன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் நம்மைக் காப்பாற்றி வந்ததே நமது நாட்டு வைத்தியம்தான் என்பதை வெகு சுலபமாக நாம் மறந்ததுதான் காலக்கொடுமை. தற்போதைய தேவை, நவீன வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் நாட்ட மருத்துவத்தை ஆராய்ச்சிபூர்வமாக மாற்றுவது தான். அதற்கு அரசாங்கங்கமும், கல்வி நிறுவனங்களும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

 

குறிப்பு:

திரு. வி.பி.முருகானந்தன், மனிதவள மேம்பாட்டு ஆலோசகர், திருப்பூரில் வசிக்கிறார்.

 

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in சித்திரை-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s