3.19 காளமேகப் புலவரின் சொற்சிலம்பம்

 

-லட்சுமி ரவி

காளமேகப் புலவர்

எண்ணங்களை வெளிப்படுத்த உருவானதே மொழி.  இன்று சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் பல நாடுகளில் மொழியே உருவாகியிராத போது, நாம் நம் தாய்மொழியான தமிழ் மொழியில் புலமை பெற்று, கவிபாடி இனிமை சேர்த்துக் கொண்டிருந்தோம்.

எழுத்து, அசை, சீர், தளை, சொல், தொடர் என்பதாக விரிவுபடுத்தப்பட்டு, இலக்கணம்’என்ற வரைமுறையோடு வளர்ச்சியடைந்துள்ளது தமிழ் மொழி.  ஆனால், நாட்டின் தென்கோடியில் இருக்கும் நாம் இன்று, வடமொழி அறிய வாய்ப்பின்றி, ஆங்கில அறிவும் போதுமானதாக இன்றி, நாட்டின் ஏனைய மொழிகளின் அறிமுகமும் இன்றி, தமிழ் மொழியின் அழகை அனுபவிக்க மனமும் இன்றி, ஒருவித திரிசங்கு நிலையில் தான் உள்ளோம். குறைந்தபட்சம், நமது தாய்மொழியின் அழகையேனும் அனுபவிக்கலாமே?

தமிழ் மொழி, ஆழமும் அகலமும் கொண்ட ஆழி போன்றது. அதில் அமிழ்ந்து தேடினால், ஏராளமான ஆணிமுத்துக்கள் ஆங்காங்கே தென்படும். தமிழ் மொழியை விருப்பத்துடன் படிக்கத் துவங்கினால், அதில் ஓர்  ஈடுபாடு ஏற்படுவது உறுதி. அதற்கான ஒரு சிறு முயற்சியாக, 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த  காளமேகப் புலவரின் சில செய்யுள்களை இங்கு காணலாம். இரட்டுற மொழிதல் எனப்படும் சிலேடைக்கு காளமேகப் புலவர் தான் ஆதர்ஷம்.

செவிவழிக் கதை: காளமேகப் புலவரின் இயற்பெயர் வரதன். இவர் திருவரங்கத்தில் சமையல் வேலை செய்தவரின் மகன். சமண சமயத்தைச் சேர்ந்த இவர் திருவானைக்கா கோயிலில் சிவத்தொண்டு செய்துவந்த மோகனாங்கி என்ற நாட்டியக்காரியின் மேல் மையல் கொண்டு சைவ மதத்திற்கு மாறினார். ஒருமுறை  இத் தாசியின் வரவிற்காக இக்கோயிலில் காத்திருந்த வரதன் உறங்கி விட்டார்.

அதே நேரம் ஓர் அந்தணர் இக் கோயிலில் சரஸ்வதி தேவியின் அருளைப் பெற தவம் இருந்திருக்கிறார். அவரது தவத்தை மெச்சும் பொருட்டு, சிறுமி உருக்கொண்டு, தாம்பூலத்தை வாயில் குதப்பியபடி வந்த சரஸ்வதி, அந்தணரை எழுப்பியிருக்கிறாள். அவர் கண் விழித்தவுடன், தன் வாயில் உள்ள தாம்பூலச் சாற்றைத் துப்ப அவர் வாயைத் திறக்கும்படி கூறியிருக்கிறாள். ஆனால், அந்தணன் கோபம் அடைந்துவிட்டார். உடனே, சரஸ்வதி அருகில் உறங்கிக் கொண்டிருந்த வரதனை எழுப்பி, வாயை திறக்கச் சொல்லியிருக்கிறாள். தாசியை எதிர்பார்த்தபடி இருந்த வரதன், அவள்தான் என்று எண்ணி, வாயைத் திறக்க, அவர் வாயில் தாம்பூலச்சாற்றை உமிழ்ந்திருக்கிறாள் சரஸ்வதி.

அன்றுமுதல், தேவியின் அனுக்கிரகம் கிடைக்கப் பெற்றவராக,  கல்லாமலேயே கவி மழை பொழியத் தொடங்கிய வரதன் காளமேகம்’ என்று அழைக்கப்பட்டிருக்கிறார் என்பது செவிவழிக் கதை.

தமிழ் மொழி மேல் ஆதிக்கம் செலுத்திய, இப்புலவரின் சிலேடைப் பாடல்களும், நகைச்சுவைப் பாடல்களும்,  படிப்பவரின் உள்ளத்தில் தமிழ் மீது காதலை உண்டுபண்ணும் என்பது திண்ணம்.

இரட்டுற மொழிதல்: சிலேடை என்பது இரட்டுற மொழிதல் அணி எனப்படுகிறது. எந்த மொழியிலும் ஒருசில வார்த்தைகள், ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களைக் கொண்டிருக்கும். அதைக் கொண்டு, ஒரு சொல்லோ, சொற்றொடரோ, இருபொருள் தரும்படி எழுதுவது சிலேடையாகும். தமிழில் ஒருசொற் பன்மொழி பல உண்டு என்பதால், சிலேடை எழுதுவது ஒரு கலையாகவே வழங்கியுள்ளது. காளமேகப்புலவர், அநேக செய்யுள்களை சிலேடையில் எழுதியுள்ளார்.

ஓர் உதாரணம், தேங்காயையும், நாயையும்  சிலேடையாக்கி எழுதியுள்ள செய்யுள் இது…

மூலச் செய்யுள்:

ஓடு மிருக்குமத னுள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது  சேடியே
தீங்காய தில்லாத் திருமலைராயன் வரையில்
தேங்காயு நாயுமிணைச்  செப்பு.  

பிரித்துப் படிக்க:

ஓடும் இருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும்

நாடும் குலை தனக்கு நாணாது – சேடியே

தீங்கு ஆயது இல்லாத் திருமலைராயன் வரையில்

தேங்காயும் நாயும் இணைச் செப்பு.

விளக்கம்:

நாய் சில நேரம் ஓடும்; பின் சில நேரம் நின்று இருக்கும், தேங்காய்க்கு ஓடு இருக்கும்.

நாயின் உள் நாக்கு வெள்ளையாய் இருக்கும். தேங்காயின் உள்புறம் வெள்ளையாய் இருக்கும்.

நாய் குலைப்பதற்கு வெட்கப்படுவதேயில்லை (நாணம்). தேங்காய் குலையில் தொங்குவதால் வளைவதில்லை (நாணாது).

தோழி..! தீமை இல்லாத திருமலைராயன் வாழும் மலைப்பகுதியில், தேங்காயும், நாயும் ஒன்று.

என்ன அழகான ஒப்புமை! வார்த்தை ஜாலத்தால் படிப்பவரை வசியம் செய்கிறார் காளமேகப் புலவர்.

மற்றொரு உதாரணம்:

     வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?

     இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை மங்காத

     சீரகத்தை தந்தீரேல் வேண்டேன் பெருங்காயம்

     ஏரகத்துச் செட்டியா ரே!

இந்தப் பாடலை மேலோட்டமாகப் பார்த்தால், ஏரகத்துச் செட்டியாரிடம், வெங்காயம், சுக்கு போல் சுருங்கிவிட்டால் வெந்தயத்தால் எதுவும் ஆகாது.  இந்த சரக்கைக் கொண்டு என்ன செய்ய முடியும்? கெட்டுப்போகாத சீரகம் தந்தால், பெருங்காயம் வேண்டாம் என்று பலசரக்கு வாங்குவது போலத் தோன்றும்.

ஆனால் இதில் பொதிந்துள்ள உட்கருத்து வேறு! காயம் என்றால் உடம்பு. வெங்காயம் என்றால் வெற்றுடம்பு. இந்த உடம்பு சுக்கு போல் சுருங்கும் என்னும் போது, வெந்தயம் என்பது உயிரைத் தக்க வைத்துக்கொள்வதற்கான அயச் செந்தூரம்! அந்த வெந்தயத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது? இங்கு – இந்த பூமியில் இவ்வுடலை சுமந்திருப்பதால் என்ன பயன்? அதற்கு பதிலாக, சீரகம் – அகம் எனில் உள்ளம். சீரான உள்ளம் தந்துவிட்டால், அல்லது அகம் எனில் வீடு. சிறந்த வீடுபேற்றைத் தந்துவிட்டால், இந்தப் பெருங்காயம் வேண்டாமே! பெரிய உடல் வேண்டாமே என்று திருநீறு மலையான சுவாமிமலையில் குடிகொண்டுள்ள முருகப் பெருமானிடம் வேண்டுவதுபோல் எழுதியுள்ளார் காளமேகப் புலவர்.

போட்டிப் பாடல்: க’ என்ற எழுத்தை மட்டும் கொண்டு பாடல் எழுதப்பட வேண்டும் என்ற போட்டியில் காள்மேகப் புலவர் பாடிய பாடல்:

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை

கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க கைக்கைக்குக்

காக்கைக்குக் கைக்கைக்கா கா.

 பிரித்துப் படிக்க:

     காக்கைக்கு ஆகா கூகை; கூகைக்கு ஆகா காக்கை:

     கோ க்கு கூ காக்கைக்குக் கொக்கு ஒக்க கைக்கைக்குக்

     காக்கைக்குக் கைக்கு ஐக்கு ஆகா.

கூகைக்கு (ஒருவித ஆந்தை) இரவில் கண் தெரியாது. அதனால் காக்கை கூகையை இரவில் வெல்லும். காக்கையை கூகை பகலில் வெல்லும். ‘கோ’ எனில் அரசன். கூ எனில் புவி. ஒரு அரசன் தன் நாட்டைப் பகைவர்களிடமிருந்து காக்கும் போது, கொக்கு காத்திருப்பதைப்போல காத்திருந்து எதிரியின் பலவீனம் அறிந்து இரவில் காக்கையைப் போலவும், பகலில் ஆந்தையைப் போலவும் தக்க நேரம் வரும் வரைக் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில், கையாலாகிவிடும் (கைக்கு ஐக்கு ஆகா).

-என்று பொருள்.  இதுவல்லவா சொற்சிலம்பம்!

இத்தனை நயம்மிக்க பாடல் வரிகளைப் படிக்கப் படிக்க, நமக்குள்ளும் ஒரு ரசனை உற்பத்தியாவது உறுதி. தமிழ்த் தேன் பருகிய உணர்வு தோன்றுவதும் உறுதி. நமது தாய்மொழியின் சிறப்பை உணர்ந்து அதைப் பயன்படுத்துவோம்.

 

குறிப்பு:

திருமதி லட்சுமி ரவி, தஞ்சாவூரில் வசிக்கும் இல்லத்தரசி. பாரதி இலக்கியப் பயிலரங்கின் மாணவி.

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in சித்திரை-2017 and tagged . Bookmark the permalink.

3 Responses to 3.19 காளமேகப் புலவரின் சொற்சிலம்பம்

  1. அருமை..
    காளமேகப் புலவர் பற்றியும், அவர் இயற்றிய ஒருசில பாடல்களுக்கும் அருமை உரை பகன்றீர்..
    வாழி தங்கள் பணி..

    Like

  2. Manivannan says:

    கூகைக்கு (ஒருவித ஆந்தை) பகலில் கண் தெரியாது. அதனால் காக்கை கூகையை பகலில் வெல்லும்.
    திருத்தம் வள்ளுவர் குறளும உண்டு
    பகல் வெல்லும் கூகையை காக்கை இகல்வெல்லும்
    வேந்தர்க்கு வேண்டும் பொழுது

    Like

  3. மணிவண்ணன் ஏகாம்பரம் says:

    உங்கள் பதிவை என் முக நூலில் பதிவுட்டுள்ளேன் திருத்தமுடன் முக நூல் மனிவன்னன் ஏஹம்பரம் என்று இருக்கும்

    Like

Leave a comment