3.16 கத்தியைத் தீட்டாதே, புத்தியைத் தீட்டு

-மருத்துவர் பி.துளசிதாஸ்

கணாதர்

 இது ஒரு பின்னோக்கிய பயணம். நமது முன்னோர் விட்டுச் சென்றுள்ள இலக்கியங்கள், சிற்பங்கள், கோயில்கள், கோட்டைகள், கட்டடங்கள், விஞ்ஞான, சோதிட, ஆன்மிக சாஸ்திரங்களை நோக்கும்போது, இந்நாட்டில் விஞ்ஞான வளர்ச்சி சிறப்பாக இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.  கணிதம், கட்டுமானப் பணிகள் சிறப்பாக விளங்கியிருக்க வேண்டும், சிற்பம், கை வேலைப்பாடுகளில் தேர்ந்த வல்லுநர்களாக இருந்திருக்க வேண்டும். அரசாங்கம், மக்கள் நலன்,  சமூகக் கடமைகள் ஆகியவற்றில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட நீதிமான்கள் அரசர்களாக இந்த நாட்டில் இருந்திருக்க வேண்டும். நமது முன்னோர்  சிறந்த சிந்தனை சக்தியும், கற்பனை சக்தியும் கொண்டவர்களாக இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவு. ஆனால், இந்தியர்களுக்கு இந்தியாவின் பெருமை தெரியவில்லை என்பதே கசப்பான உண்மை.

25 ஆண்டுகளாக கோயில் மரத்தடியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு பிச்சைக்காரன் இறந்தபோது அவனை அந்த மரத்தடியிலேயே புதைத்து விடுவது என முடிவெடுத்துத் தோண்டியபோது, மண்ணுக்கடியில் இருந்து, தங்கக் காசுகளும் வைர, வைடூரியங்களும் நிறைந்த பெட்டி கண்டெடுக்கப்பட்டது.  25 ஆண்டுகளாக அந்த புதையல் மேல் நின்று கொண்டு தன் கால்களுக்கு கீழே என்ன இருக்கிறது என அறியாமல் பிச்சை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறான் அவன். இன்றைய இந்தியர்களின் நிலையும் அதே பிச்சைக்காரனின் நிலைதான்.

இந்தியா பலதுறைகளில் சிறந்து விளங்கி, பணக்கார நாடாக இருந்ததால் தானே, கிறிஸ்டோபர் கொலம்பஸ் 1492-ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டு அரசியின் ஆசியுடன் இந்தியாவுக்கு குறுக்கு கடல்வழி கண்டுபிடிக்கப் புறப்பட்டார்?

அது வரை உலகம் தட்டையானது என நம்பிக் கொண்டிருந்த ஐரோப்பியர்கள், மத்தியில் உலகம் உருண்டை என்ற கருத்து பரவ ஆரம்பித்த சமயம், இந்தியாவையும் சீனாவையும், ஐரோப்பாவுடன் இணைத்த மத்திய கிழக்கு பகுதி இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால், புதிய கடல் வழிகளைக் கண்டுபிடிக்கும் கட்டாயம் வந்தது. இத்தாலியில் பிறந்த கொலம்பஸ், ஒரு சிறந்த மாலுமி. உலகம் உருண்டை என நம்பியதால், மேற்கு நோக்கி கடல்வழிப் பயணம் செய்தால் கிழக்கில் இருக்கும் ஆசியாவை அடையலாம் என நம்பினார். அவருடைய முதல் பயணத்தில் அவர் சென்றிறங்கியது இன்று வெஸ்ட் இண்டீஸ் என்று அழைக்கப்படும் தீவுகளை. அங்கு ஏற்கனவே வாழ்ந்திருந்த மக்களை அவர்களின் நிறம் காரணமாக  ‘சிவப்பு இந்தியர்கள்’  என அழைத்தார். சிவப்பு சீனர்கள் என அவர் அழைக்கவில்லை; இந்தியா அவர் மனதில் நிறைந்திருந்ததே அதற்குக் காரணம். புதிய ஒரு உலகத்தை கண்டுபிடித்தாலும், இந்தியாவுக்கு கடல்வழி கண்டுபிடிக்க கொலம்பஸ் தவறி விட்டார். இந்தியாவுக்கு குறுக்கு கடல்வழி கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஐரோப்பியர்களுக்கு மேலோங்கியது.

1498-ஆம் ஆண்டு போர்ச்சுகீஸ் நாட்டைச்சார்ந்த வாஸ்கோ ட காமா என்பவர், இந்தியாவுக்கு கடல் வழி கண்டுபிடிக்கும் எண்ணத்தோடு புறப்பட்டார். அவர் தனது கப்பல்களை ஆப்பிரிக்க்க் கண்டத்தின் மேற்கு கரையை ஒட்டி செலுத்தி, சுற்றி கிழக்குக் கரையில் மலிந்தி என்ற துறைமுகத்தை அடைந்தார். அங்கிருந்து எப்படி அரபிக் கடலைக் கடந்து இந்தியாவை அடையலாம் என யோசனையில் இருக்கும் போது, அவரது கப்பலை விட பல மடங்கு பெரிய ஒரு கப்பல் அங்கிருந்து புறப்படத் தயாராக இருப்பதைக் கண்டு, அந்த்த் தலைவனிடம் பேச்சுக் கொடுத்து, இந்தியா செல்லும் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார். அந்தப் பெரிய கப்பல் குஜராத்தைச் சார்ந்தது. அந்தக் கப்பலைப் பின்தொடர்ந்து அரபிக் கடலைக் கடந்து, இந்தியாவின் மேற்கு கடற்கரையை அடைந்து, கோழிக்கோடு என்ற இடத்தில் தரை இறங்கினார். அவருக்கு வழிகாட்டிய கஞ்சி மாலம் என்பவர் இன்றைய குஜராத்தில் உள்ள மாந்த்வி என்ற ஊரைச் சார்ந்தவர்.

இந்தியாவுக்கு முதன்முதலில் கடல் வழியாக வந்தடைந்த ஐரோப்பியர் வாஸ்கோ ட காமா தான். இரண்டாவது முறை அவர் நிறைய கப்பல்களுடனும் போர்த் தளவாடங்களோடும் இந்தியா வந்து, கோழிக்கோடு, கொச்சி மற்றும் இன்றைய கோவாவையும் கைப்பற்றி போர்ச்சுகீசிய காலனியை அமைத்தார். போர்ச்சுகீசியர்களைத் தொடர்ந்து,  டச்சுக்காரர்களும், பிரெஞ்சுக்காரர்களும் கடல் வழி வந்து வணிகம் மேற் கொண்டனர். ஷேக்ஸ்பியர் எழுதிய  ‘மெர்ச்சன்ட் ஆஃப் வெனிஸ்’  நாடகத்தில், அதன் நாயகனுடைய மூன்று கப்பல்கள் இந்தியாவிலுருந்த நிறைய பொருட்களோடு திரும்பி வந்தன. அதனால் நாயகன் அந்தோனியோ பெரும் பணக்காரனாகி விட்டான் என்ற முறையில் முற்றுப்பெறுகிறது.

இந்தியாவுடன் வணிகம் வைத்துக் கொண்டால், ஐரோப்பாவில் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்பது அந்தக் காலக் கருத்தாக இருந்தது. இந்தியாவுடன் வணிகத் தொடர்பு கொள்ள கடைசியாக நமது கரையை அடைந்தவர்கள் ஆங்கிலேயர்கள்.  ‘ஆட்டைப் பிடித்து, மாட்டைப் பிடித்து, மனிதனைப் பிடித்தான்’ என்ற கூற்றுக்கு இணங்க, இந்தியாவுடன் வணிகம் செய்ய பொ.யு.பி. 1773-இல் புறப்பட்ட ஆங்கிலேய ஈஸ்ட் இந்தியா கம்பெனி, படிப்படியாக்க் காலூன்றி, வேரூன்றி, இந்தியாவை பொ.யு.பி. 1858-இல் அடிமைப்படுத்தி தங்கள் காலனியாக மாற்றிக் கொண்டது.

1835-ஆம் ஆண்டு மெக்காலே தலைமையில் கூடிய ஆங்கிலக் குழு, மேற்கத்திய ஆங்கிலக்கல்வி தான் இந்தியாவுக்கு சிறந்தது  என முடிவெடுத்து,  ஆங்கிலக் கல்வி கூடங்கள் நாடு முழுவதும் திறக்கப்பட்டன. அதன் விளைவு இந்திய கலாச்சாரம், இந்திய விஞ்ஞானம், இந்திய இறையியல், இந்திய ஆன்மிகம், இந்திய தத்துவம், இந்திய இலக்கியம், இந்தியக் கலைகள், நடனம், இசை, சரித்திரம் மற்றும் சமஸ்கிருதம் போன்றவை அறவே பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஆங்கில கல்விக் கூடங்களில் அவை பயிற்றுவிக்கப்படாமல் செய்யப்பட்டன. அதன் விளைவு கடந்த ஒன்றரை நுற்றாண்டுகளாக இந்திய மாணாக்கர்கள் யாரும் இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, ஆன்மிகம், இறையியல், தத்துவம், கலைகள், கணிதம், விஞ்ஞானம், சமஸ்கிருதம் ஆகியவற்றைக் கற்றுக்கொள்ளவில்லை.

இந்தியர்கள் பல சிறந்த விஷயங்களில் உலகில் முதன்மை வகித்திருந்தார்கள்; இந்தியா உலகிலேயே மிக அதிகமாக பொருள்களையும், கைவேலைப்பாட்டு பொருள்களையும் தங்கம், வெள்ளி, வைரம், பட்டு போன்றவற்றையும் ஏற்றுமதி செய்து பணக்கார நாடாக விளங்கியது. பொதுக்காலம் (Common Era) ஆரம்பித்த போதிலிருந்தே இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் (GDP) 25-30 சதவீதமாக இருந்து வந்துள்ளது (Angus-maddison). நமது அண்டை நாடான சீனாவும் நமக்கு போட்டியாக 25-30 சதவீதம் மொத்த உற்பத்தி திறன் பெற்று சிறந்து விளங்கியது. உலகில் 100 பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு சந்தையில் வந்தால் அதில் 25-30 பொருள்கள் இந்தியாவில் செய்யப்பட்டதாக இருக்கும்; மேலும் 25-30 பொருள்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும். மீதமிருக்கும் 40-50 பொருள்கள் மற்ற நாடுகளில் செய்யப்பட்டதாக இருக்கும்.

தொழில்நுட்பத்திலும், இயற்கை வளங்களிலும்,  வியாபாரத்திலும் சிறந்து விளங்கிய இந்தியா Angus Maddison (1926-2010) என்ற ஆங்கிலேய பொருளாதார வல்லுநரின் கணக்குப்படி 2000 ஆண்டுகளாக உலகிலேயே மிகப் பெரிய பணக்கார நாடாகத் திகழ்ந்திருந்தது என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த உண்மை நமது கல்வித் திட்டத்திலிருந்து மறைக்கப்பட்டதால் நமக்குத் தெரியவில்லை. ஒன்றன் பின் ஒன்றாக ஏற்பட்ட இஸ்லாமிய படையெடுப்புகளால் இந்திய விஞ்ஞானம் கடந்த 1000 ஆண்டுகளாய் பின்னடைந்தது உண்மையே! ஆனாலும் ஆங்கிலேயர்கள் 18-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் காலடி வைக்கும் வரையில் இந்தியாவின் மொத்த உற்பத்தித்திறன்   25 சதவீதமாகவே இருந்தது.

நாளந்தா பல்கலைக்கழகம்

ஆங்கிலேயர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து, கல்விமுறையை தலை கீழாக மாற்றி, இந்தியர் மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி 1947-இல் விட்டுச்சென்ற போது இந்தியாவின் மொத்த உற்பத்தித் திறன் 2 சதவீதம்! இந்தியாவின் பொருளாதாரத்தைச் சூறையாடி பணக்கார நாடாகியது  பிரிட்டன். அக்டோபர், 2016 கணக்கெடுப்பின் படி, ஆறாவது இடத்தில் இருந்த பிரிட்டனின் மொத்த உற்பத்தித் திறனை முறியடித்து அந்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது. 200 வருடங்களாக இந்தியாவை அடிமையாக வைத்திருந்த பிரிட்டனை 69 ஆண்டுகளில் முறியடித்தது பெரும் சாதனையாகும்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் நாம் நமது கல்வி முறையை மாற்றாமல் அதே மேற்கத்திய கல்வி முறையை வைத்திருப்பது பெரும் அவலம்! கொடுமை! உலகிலேயே முதல் பல்கலைக்கழகம் நமது நாட்டில் தக்ஷசீலம் என்ற இடத்தில் 2700 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது. இன்று தக்ஷசீலம், பாகிஸ்தானில் உள்ளது. சாணக்கியர் என்று கூறப்படும் கெளடில்யர் எனப்படும் விஷ்ணுகுப்தன் பயின்ற பல்கலைக் கழகம் இது.  உலகின் பல பாகங்களில் இருந்து மாணாக்கர்கள் இங்கு வந்து சமஸ்கிருதத்தில் கல்வி கற்றுச் சென்றிருக்கின்றனர். விஞ்ஞானம், கணிதம், தத்துவம், நுண்கலைகள், என பல துறைகள் இங்கு இயங்கி, மாணாக்கர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.

இன்று அலாஹாபாத் என அழைக்கப்படும் பிரயாகையில் இயங்கிய நாளந்தா பல்கலைக்கழகம், உலகின் இரண்டாவது பல்கலைகழகம். ஆசியாவிலிருந்தும், மத்திய கிழக்கில் இருந்தும் பல மாணாக்கர்கள் இங்கு வந்து பயின்றிருக்கிறார்கள். இப்படி உலகத்துக்கு முன்னோடியாக பல்கலைக்கழகங்கள் தொடங்கிய இந்தியாவுக்கு, மேற்கத்திய கல்வித் திட்டம்தான் சரியானது என முடிவெடுத்த ஆங்கிலேயர்களின் உள் நோக்கம், அவர்களுடைய ஈஸ்ட் இந்தியா கம்பனியில் வேலை செய்ய ஆங்கிலம்  தெரிந்த குமாஸ்தாக்களை உருவாக்குவதும், மேற்கத்திய மோகம் பிடித்த இந்தியர்களை மதம் மாற்றுவதும் தான். இந்தியர்களை எப்போதும் அடிமைகளாக வைத்திருக்க இதை விட சிறந்த வழியில்லை, என திட்டமிட்டு செய்த சூழ்ச்சி இது. விளைவு, இன்றும் மேற்கத்திய கல்வி முறையில் பயின்ற இந்தியர்கள், நமது முன்னோரின் சாதனைகளையும், சிறப்பினையும் சிறிதும் அறியாதவர்களாக,  ‘இந்தியச் சிந்தனை, இந்திய தத்துவம், இந்தியக் கலைகள்’ என்றாலே அவற்றை இகழ்ந்து நோக்கும் தாழ்வு மனப்பான்மை நிறைந்தவர்களாக மாறி இருக்கின்றனர்.

மேலை நாட்டுப் புத்தகங்களை பல துறைகளிலும் படித்துப் பட்டம் பெறுவதால்,  மேலை நாட்டு விஞ்ஞானிகளை இந்தியர்கள் நாயக வழிபாடு செய்வதையும் காணலாம். சுதந்திரம் அடைந்து 69 ஆண்டுகள் ஆன போதும், பல துறைகளில் மிக வேகமாக வளர்ந்த போதும், இந்தியர்கள் தங்கள் தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுதலை அடையவில்லை.  ‘ஆங்கிலேயர் ஆட்சி சிறப்பாக இருந்தது; இந்தியர்களுக்கு கல்வி அளித்தது ஆங்கிலேயர்கள் தான்; இந்தியர்களுக்கு சிந்திக்க்க் கற்றுக் கொடுத்ததே ஆங்கிலேயர்கள் தான்” என இன்றும் நம்புவோர் இந்நாட்டில் உண்டு. இந்த பொய்ப் பிரசாரத்தில் கிறிஸ்தவ மதத்துக்கும் பெரும் பங்கு உண்டு.

வைசேஷிகம்

‘அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள்’ –  என்பது ஒளவையார் கூற்று. அணுவைக் கண்டுபிடித்தது யார் என இணையதளத்தில் தேடினால் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜான் டால்டன் என்பவரது பெயர் வரும். பக்கத்திலேயே கி.மு. 400-களில் டெமோக்ரிடஸ் என்ற கிரேக்கர் தான் அணுக் கொள்கையை முதன்முதலில் முன்வைத்தவர் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கும். நியூசிலாந்தைச் சார்ந்த எர்ணஸ்ட் ரூதார்போர்டின் பெயர் அடுத்து வரும். ஆனால் அணுவை விளக்கி அதற்கு ‘பரமாணு’ என பெயர் கொடுத்தது இந்தியாவைச் சார்ந்த ‘வைசேஷிகர்கள்’ எனக் கூறப்படும் தத்துவச் சிந்தனையாளர்கள் தான். சுமார் பொ.யு.மு. 600-ஆம் ஆண்டு வாழ்ந்த  ஆச்சாரிய கணாத கஷ்யப் என்பவர், ஆறு தரிசனங்களில் ஒன்றான வைசேஷிக தரிசனத்தை முன்வைத்தவர். பொருளை சிறு,  சிறு பாகங்களாக பிரித்துக் கொண்டே வந்தால் கடைசியில் பிரிக்க முடியாத ஒரு ‘துகள்’ வரும்; அதைத் தான் வைசேஷிகள் ‘பரமாணு’ எனக் குறிப்பிட்டனர்.

‘ஆறு தத்துவ தரிசனங்கள்’ இந்தியர்களுக்குத் தெரியாத பாடமாகும். இந்தியாவிலிருந்து எழுந்த 6  தரிசனங்களை இந்தியர்களுக்குத் தெரியாது என்றால், விந்தையாக இல்லையா? சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியர்கள் தத்துவ சிந்தனைகளிலும், தத்துவ அலசல்களிலும் சிறந்து விளங்கியிருக்கிறார்கள். இந்தியாவில் எழுந்த தத்துவச் சிந்தனைகள் முறைப்படுத்தப்பட்டு ஆறு தத்துவ தரிசனங்கள் (Shad Darshanas) என முன்வைக்கப்படுகின்றன.

தரிசனம் என்றால் ‘பார்க்கும் கலை’ என்று பொருள். சாதாரண மனிதர்கள் பார்க்கும் பார்வைக்கும், ரிஷிகள் பார்த்த உள்நோக்கிய பார்வைக்கும் வேற்றுமை உண்டு. ஆறு தரிசனங்கள் முறையே 1. சாங்கியம் 2. நியாயம் 3. வைசேஷிகம் 4. யோகம் 5. பூர்வ மீமாம்சம் 6. வேதாந்தம் ஆகியவை. இவற்றில் மூன்றாவதாகக் கூறப்பட்ட வைசேஷகம் தான் ‘அணுக்கொள்கை’யை முதன்முதலில் எடுத்தியம்பியது.

370 சூத்திரங்கள் கொண்ட  ‘வைசேஷிக சூத்திரம்’ என்ற புத்தகத்தை மஹரிஷி கணாத கஷ்யப் எழுதியுள்ளார். அணுத் துகள்கள் தான் இந்த பிரபஞ்சத்தின் அஸ்திவார கட்டுமானத் தொகுதிகள் என்பது இவர்தம் கொள்கை. அது இன்றைய விஞ்ஞானக் கருத்தோடு ஒத்துப்போகிறது.

திருமூலரின் பல பாடல்களில் (திருமந்திரம் – 668, 2008, 2010, 2281, 2440, 2468) அணுவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. உரையாளர்கள் ஆத்மா அணுவைப் போல மிக நுண்ணியது எனப் பொருள்படப் பாடியதாக நினைக்கிறார்கள். அணுவைப் பற்றிய அறிவு இந்தியர்களிடம் இருந்தபோதும் அதை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான ஆய்வுக்கூடம் அமைக்கச் தவறியது, சுமார் 1000 ஆண்டுகள் நாம் வெளிநாட்டவர் பிடியில் இருந்ததால் தான்.

பொ.யு.பி.1001 (CE) முதல் ஒன்றன் பின் ஒன்றாக இஸ்லாமியப் படையெடுப்பு நடந்தது. பொ.யு.பி. 1760 முதல் 1870 வரை தொழில்புரட்சிக் காலம் என்று கூறப்படுகிறது. இந்த நூற்றாண்டுக் காலத்தில் ஐரோப்பாவில் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மனிதன் செய்து வந்த கடினமான வேலைகள் எளிதாயின; நிறைய மனிதர்கள் தேவைப்பட்ட செயல்கள், இயந்திரங்களால், வேகமாகவும், குறைவான மனித கரங்களோடும் செய்து முடிக்கப்பட்டன. அந்த இயந்திரப் புரட்சி மேலை நாடுகளில் நடந்து கொண்டிருந்த போது, இந்தியா அதனை நழுவ விட்டது. காரணம் நாம் ஐரோப்பியர் பிடிக்குள் சிக்குண்டு இருந்தது தான்.

தஞ்சை பெரிய கோயில்

ஐரோப்பியர்களும் சரி, ஆங்கிலேயர்களும் சரி, இந்தியாவின் வளங்களை உறிஞ்சிக் குடிக்க வேண்டும் என்று நினைத்தார்களே தவிர, இந்தியா வளர வேண்டும் என்று நினைக்கவில்லை. மேலும் பொ.யு.பி.1858 முதல் 1947 வரை பிரிட்டனின் காலனியாக இருந்த காலகட்டத்தில் 25 % ஆக இருந்த மொத்த உற்பத்தித் திறன் 2 % ஆகச் சரிந்தது. உலகத்திலேயே பெரிய பணக்கார நாடாக இருந்த இந்தியா, உலகத்திலேயே மிக ஏழ்மையான நாடாக வீழ்ந்தது.

இயந்திரப் புரட்சியைத் தவற விட்டதும், ஏழ்மையும் சேர்ந்து இந்தியாவை திக்கு முக்காடச் செய்தன. நிறைய விஞ்ஞான உண்மைகள் நமது புத்தகங்களில் புதைந்து கிடக்கின்றன. இந்தியர்களின் கல்வித்திட்டத்திலிருந்து அவை முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டதும், சமஸ்கிருதம் கல்விக் கூடங்களில் கற்பிக்கப் படாததும், மேற்கத்திய புத்தகங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும், இந்தியர்கள் அவற்றை அறியாமல் போனமைக்கு காரணங்களாயின.

குறிப்பு;

மருத்துவர் பி.துளசிதாஸ்

மருத்துவர் திரு. பி.துளசிதாஸ், சென்னையில் வசிக்கும் அலோபதி மருத்துவர்; காது-மூக்கு-தொண்டை சிகிச்சை நிபுணர்.

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in சித்திரை-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s