3.13 சுசீலம் (சிறுகதை)

-நைத்ருவன்

 “நன்னாக் கேட்டுக்கோடா வரது! இந்த பத்து சொன்னா சொன்னதுதான். இதெல்லாம் மீறி செய்யணும்னு நெனச்சா எங்க உறவு ஜென்மத்துக்கும் இல்லைங்கிறதை மறந்துடாதே! அதோட தலைமுழுகிடுவேன் அவ்வளவுதான்” பொரிந்து தள்ளிய பத்மநாபன் படாரென்று தொலைபேசியைத் துண்டித்தார்.

“ ஏன்னா என்னாச்சு? யாருன்னா போன்ல? ஏன் இப்படி கோபப்படறேள்?“ படபடத்தாள் சரோஜம்மாள்.

“எல்லாம் இந்த வரதுதான். அவன் பையனுக்கு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றானாம்.  பசுவும் கன்னா பார்த்திருக்கானாம். கொஞ்சம் கூட வெக்கமில்லாமs சொல்றான். மடப்பய மடப் பய! சுத்த வெக்கங்கெட்ட ஜென்மம்!”

“ ஏந்தான் இப்படி புத்தி போறதோ உங்க தம்பிக்கு?  புத்தி கித்தி ஏதும் கெட்டுப் போயிடுத்தா? ஊர்ல உலகத்துல இல்லாத வழக்கமான்னா இருக்கு. உங்க தம்பி ஆம்படையாளாவது அவர்கிட்டே சொல்லப்படாதா? அவா என்ன சொல்றாளாம்?”  கேள்விகளை அடுக்கினாள் சரோஜா.

“அவளுக்கும் அவா புள்ளையாண்டானுக்கும் இதில சம்மதந்தானாம். கோபு ஆபீசுல எல்லாரும் அவனைப் பெருமையாப் பேசனாளாம். இப்படிப்பட்ட ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கிறதுக்கு பெரிய மனசு இருக்குன்னு சொல்றதை விட நல்ல மனசுன்னு சொல்லணுமாம். எல்லாம் கலிகாலம், அவாள்ளாம் ஆயிரம் சொல்லுவா;  நம்ம சாஸ்திரம் சம்பிரதாயம் என்ன சொல்றதுன்னு நாம பாக்க வேணாமா?”

“எந்த ஊராம் பொண்ணுக்கு? குழந்தைக்கு என்ன வயசாம்? ஏன் அவ ஆம்படையானுக்கு என்னாச்சாம்?” விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற குறுகுறுப்பில் கேள்விகளை வீசினாள் சரோஜா.

“கல்லிடைக்குறிச்சிக்குப் பக்கமாம். குழந்தைக்கு இன்னும் மூணுமாசம் கூட ஆகலையாம். ஆக்சிடென்ட்ல தவறிட்டானாம். புக்காத்துல வேற யாரும் இல்லையாம். அதனால அம்மா ஆத்துக்கே திருநெல்வேலிக்கு வந்துட்டாளாம்”.

***

கோயம்புத்தூரில் சேரில் சோகமாக சரிந்து உட்கார்ந்திருந்தார் வரதராஜன். மனதில் பல நினைவுகளும் குறுகுறுப்பாய் ஓடி வர மகனின் நிலை மனதிலாட மனது முள்ளாய் கீறியது போல வலிக்க, கண்கள் மெதுவாய் கண்ணீரை வடிய விட ஆரம்பித்திருந்தது.

ஒரு மகன், மகள் என அளவான குடும்பம் வரதராஜனுடையது. காஞ்சிபுரம் பக்கத்தில் ஒரு கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட அவர் வேலை காரணமாக கோயம்புத்தூரிலேயே வீடு வாங்கி செட்டிலாகிவிட்டார். கல்லூரிப் படிப்பை முடித்த மகள் திருமணத்தை  ஜாம் ஜாமென்று நடத்திய உடனே கல்லூரியில் பேராசிரியராக இருந்த மகனுக்கும் வரன் வர உடனே திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டார்.

திருவள்ளூரில் இருந்து வந்த மருமகள் இரண்டு நாளைக்குப் பிறகு தாய்வீடு செல்ல விரும்ப, சந்தோஷமாக குடும்பம் சம்மதித்தது. மகன் இரண்டு நாள்தானே ஆறது அடுத்த வாரம் போலாமில்லையா என்று சொல்ல, வரதராஜன் தான்  “கோபு, இங்க பாருடா, புது இடம், அசலாத்து மனுஷா, பொறந்த அகம் எங்கேயோ தூரத்தில. அவளுக்கும் மனசுல கொஞ்சம் சங்கடமாயிருக்கும். நீயும் அவகூட போய் இரண்டு நாள் இருந்து அழைச்சுண்டு வாயேன்” என்றார்.

சடகோபன் மனசில்லாமல் மனைவி கமலாவை அழைத்துக்கொண்டு திருவள்ளூர் பயணித்தான். இரண்டு நாள் கழிந்தும் மனைவி  ‘இன்னும் நாலு நாள் இங்கேயே இருக்கேனே’ எனச் சொல்ல,  ‘அப்ப சரி, நான் அடுத்த வாரம் வந்து உன்னை அழைச்சுண்டு போறேன், ரொம்ப நாள் லீவு எடுத்துண்டா காலேஜ்ல ஏதாவது சொல்லுவா; பசங்களுக்கும் பாடம் நின்னுபோயிடும்’ என்று சொல்லிவிட்டு தான் மட்டும் கிளம்பி வந்தான்.

சடகோபன் வீடு வந்து சேரவும் இடி மாதிரி பின்னாடியே கமலாவின் அகால மரணச் செய்தியும் வந்து சேர்ந்த்து. ஒரு வாரத்தில் முடிந்த திருமண வாழ்க்கை சடகோபனை மட்டுமல்ல, அந்த குடும்பத்தையே திகைக்கச் செய்ததால் மிகவும் நொடிந்து போனார்கள்.

இப்படி ஆறு மாதம் ஓடிப்போக அலுவலக நண்பரான சாம்பு,  “வரது எத்தனை நாளைக்குத்தான் இப்படியே எல்லாரும் சோகமா இருப்பேள். எல்லாம் மாறணும்னா சடகோபனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிவைக்கணும்டா’’ என்றார்.

“நீ சொல்றது சரிதான்;ஆனா முத கல்யாணத்துக்கு பெண் தேடறதே பெரும்பாடா இருக்கு. இதிலே ரெண்டாம் கல்யாணம், மூத்தவ ஒருவாரத்திலேயே போய் சேர்ந்திட்டா அப்படின்னா யார்ரா பொண்ணு குடுப்பா?” என்றார் வரதராஜன்.

“திருநெல்வேலியில எங்காத்துக்குப் பக்கத்திலே ஒரு பொண்ணு இருக்கா. அவளுக்கும் இது இரண்டாம் கல்யாணம்தான். பொண்ணு நல்ல பொண்ணு. சுசீலான்னு பேரு. கல்யாணம் ஆகி ஒரு வருஷம்தான் ஆச்சி, கைக்குழந்தை. அவ ஆம்படையான் ஆக்சிடென்ட்ல போய்ச் சேர்ந்திட்டான். புக்காத்திலே யாருமில்ல; அம்மா ஆத்துக்கு வந்துட்டா. அவ கல்யாணத்தைப் பத்தி யோசிக்கலை. நான்தான் அவகிட்டேயும், அவ அம்மாகிட்டேயும், பேசி சம்மதிக்க வைச்சிருக்கேன். பாவண்டா அந்தப் பொண்ணு;  சின்ன கைக்க்குழந்தையோட ரொம்ப கஷ்டம்டா. உங்குடும்பத்துல வாழ்க்கைப்பட்டா அவ நல்லா இருப்பான்னு தோணிச்சுடா” என்றார்.

ஓரமாய் நின்று கேட்டுக் கொண்டிருந்த அனுராதாவிடம்,  “ஏம்மா நீ என்ன சொல்ற?” என்றார். “நேக்கு இது சரியாத்தான் படறது, கோபு என்ன சொல்றான்னு ஒரு வார்த்தை கேட்டுக்கலாமே”.

“ஓ பேஷா, அவனை கேட்டுண்டே சொல்லுங்க,  நாளைக்கு வந்து பார்க்கிறேன்” என்று சொல்லி காபி டம்ளரை ஓரமாய் வைத்துவிட்டுக் கிளம்பினார் சாம்பு.

கல்லூரியிலிருந்து திரும்பிய கோபுவிடம் கேட்ட பொழுது  “அவ போய் ஆறு மாசம்கூட ஆகலையேம்மா” என்று நாற்காலியில் கண்மூடி சாய்ந்து கொண்டான். “புரியறதுடா உன்னோட கஷ்டம். எங்களுக்கும் உன்னை மாதிரிதாண்டா. ஆனா நம்மை விட அந்த பொண்ணோட நிலைமை ரொம்ப பாவண்டா. உனக்கு ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ கழிச்சு கல்யாணம் ஆனாக்கூட கவலையில்லை. அவ கைக்குழந்தையோட இருக்கா. அந்தக் குழந்தைக்கு விவரம் தெரிஞ்சப்புறம் கல்யாணம் பண்ணா அது ரொம்ப கஷ்டம்டா. சிரமத்துல இருக்கிறவாளுக்கு சரியான நேரத்துல உதவுறதுதாண்டா தர்மம். நீ யோசிச்சு சொல்லு, நான் அப்பாக்கும் உனக்கும் தோசை வார்க்கிறேன்” என்று எழுந்து சென்றாள் அம்மா.

தோசை விள்ளுவதும் மெதுவாகத் தள்ளுவதும் என்றிருந்தான் கோபு. அதைக் கவனித்த அவனது அப்பாவும், சங்கடமாய் சாப்பிடாமல் தோசை விள்ளலை மிளகாய்ப் பொடியில் தோய்த்துக் கொண்டிருந்தார்.  “இப்ப சாப்பிடு, யோசனையெல்லாம் அப்புறம் பண்ணலாம்’’ என்ற அனுவின் குரல் கேட்டு இருவரும் சுயமடைந்தனர்.

சாப்பிட்டு முடித்த கோபு, “அம்மா எனக்கு இது சரியாத்தான் தோண்றது. அவாளுக்கு இதுல முழுசா உடன்பாடான்னு கேட்டுக்கோ. அவசரப்பட வேண்டாம். பெரிசா பண்ண வேண்டாம். ஏதாவது ஒரு கோயில்ல சிம்பிளா பண்ணிக்கலாம்” சொல்லிவிட்டு தனது அறையை நோக்கி நகர்ந்தான். சாப்பிடாமலேயே அவள் வயிறு நிறைந்தது. நிறைவாய் கணவனின் முகத்தை ஏறிட்டாள் அனு.  அவரது முகத்திலும் ஆனந்தம் கண்களில் தளும்பிய கண்ணீரோடு.

“சரி அண்ணாகிட்டே கார்த்தாலே பேசிட்டு, சாம்பு சாயங்காலம் வரப்ப நம்ம முடிவைச் சொல்லிடலாம்” என அனு மௌனமாய் தலையசைத்தாள்.

***

உள்ளே நுழைந்த மனைவி அனுராதாவின் மடிசார் ஒலி அவரைச் சற்றும் சலனப்படுத்தவில்லை. அவரது அண்ணா கோபமாகப் பேசிய வார்த்தைகள் அவரது மனதை தைத்துக் கொண்டிருந்தன.

அனுவின் கண்கள் கணவனின் நிலையை எடை போட்டன. ஏதோ ஒரு தாக்குதல் மனதில் நிகழ்ந்திருக்கிறது என்று தெரிந்தது.  “ஏன்னா இந்தாங்கோ ராமர் கோயில் பிரசாதம். எல்லாப் பிரச்னையும் பகவானுக்குத் தெரியும்னா? அவனுக்குத் தெரியாதா எதை எப்ப செய்யணும்னு. ஏன் மனசைப் போட்டு அலட்டிக்கிறேள்? இப்ப என்ன ஆயிடுத்துன்னு இப்படி சோகமா உட்கார்ந்துண்டிருக்கேள்?”

“அண்ணாகிட்டே பேசினேன். இதென்ன ஊர்ல உலகத்துல இல்லாத வழக்கமா இருக்கு, இப்படியெல்லாம் பண்றதா இருந்தா எங்க உறவே இல்லேன்னு நெனச்சுக்கோன்னு, வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுங்கிற மாதிரி சொல்லிட்டு போனை வெச்சுட்டான். இப்ப என்னடி பண்றது?  நம்ம பையன் நிலைமையைப் பார்க்கவே சகிக்கலை. பார்த்துப் பார்த்து கட்டி வைச்ச பொண்ணு இவ்வளோ சீக்கிரம் பகவான்கிட்டே போய்ச் சேர்ந்திடுவான்னு யாருக்குத் தெரியும்?”

“ இந்தக் காலத்தில முத கல்யாணத்துக்கே பொண் கிடைக்கிறது குதிரைக் கொம்பா இருக்கு. சாம்பு சொன்னது நல்லதாத்தான் பட்டது. அந்தப் பொண்ணுக்குன்னு யாரும் இல்லை. வயசான அம்மாதான். அவளும் எத்தனை நாளைக்குத் துணைக்கு? இப்பவே கல்யாணம் பண்ணி வைச்சுட்டா,  நம்ம புள்ளையாண்டானுக்கும் ஒரு வாழ்க்கை கிடைக்கும்; அந்தப் பொண்ணுக்கும் ஒரு வாழ்க்கை கிடைக்கும். ஆனா அண்ணாக்கு இதெல்லாம் புரிய மாட்டேங்கிறதே; பகவான் என்ன வழி காட்டப் போறாரோ தெரியலையே நேக்கு”… வரதராஜனின் புலமபல் தொடர்ந்த்து..

“ நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க. பகவான் நம்மளைக் கைவிட மாட்டார். நிச்சயம் நல்ல வழி காண்பிப்பார். உங்க அண்ணாவே இதற்கு சம்மதம் சொல்லுவார் பாருங்கோ. நீங்க கவலையை விட்டுட்டு சித்த ராமர் கோயில்ல போய் உட்கார்ந்துட்டு வாங்க. அவங்கிட்டே பாரத்தைப் போடுங்கோ”

***

காஞ்சிபுரத்தில் நடந்த கோபப் பேச்சுக்களை பாதி புரிந்தும் பாதி புரியாமலும் கேட்டுக் கொண்டிருந்தாள் பத்மநாபனின் மகள் வயிற்றுப் பேத்தி காயத்ரி. தாய் சுசீலாவின் கைகளில் பிணைந்து கொண்டிருந்தன அவளது பிஞ்சு விரல்கள்.

மெதுவாகத் தாயின் கையிலிருந்து விடுபட்ட காயத்ரி, தாத்தாவின் அருகில் சென்றாள். “தாத்தா” மெதுவாகத் திரும்பினார் பத்மநாபன்.  “என்னடா காயூ?”  கொஞ்சலோடு கேட்டார். அவரது கோபம் பேத்தியின் குரலைக் கேட்டதும் சற்றே தணிந்தது.

“குழந்தையோட இருக்கிற ஒருத்தரை மாமா கல்யாணம் பண்ணிக்கக் கூடாதா தாத்தா?” காயத்ரி கேட்டதும் சுசீலா பதறினாள்.  “காயூ பெரியவாகிட்டே இப்படியெல்லாம் பேசக் கூடாது”.

“முளைச்சு மூணு இலை விடலை, அதுக்குள்ள பேச்சைப் பாரு” என சரோஜா சீற,  என்ன பதில் சொல்வது என யோசித்துக் கொண்டிருந்தார் பத்மநாபன். காயத்ரி அவரது கைகளைப் பற்றிக் கொண்டிருந்தாள்.

“ இல்லடா குழந்தை;  நமக்குன்னு சில பழக்கவழக்கங்களை நம்ம பெரியவா சொல்லி வச்சிட்டுப் போயிருக்கா. அதையெல்லாம் நாம விடாம கடைபிடிக்கணும். அப்பத்தான் பகவான் கடைசி காலத்துல தங்கிட்டே சேத்துப்பார். நம்ம குலதர்மம் மீறப்படாதுடா கண்ணா” என்றார்.

புரிந்தும் புரியாமலும் தலையாட்டிய காயத்ரியின் வலது கை மெதுவாக ரேழியின் மேலே சட்டத்தில் மாட்டியிருந்த பழைய படத்தைக் காட்டியது. “அது யார் தாத்தா?” என்றாள்.  “அது எங்க தாத்தா சடகோபன்”

“அதுக்குப் பக்கத்துல யாரு தாத்தா?” “ அது எங்கப்பா ராமானுஜம்”.

“அவா ரெண்டு பேரும் குடுமி வைச்சுண்டிருக்கா;  பஞ்சகச்சம் கட்டிண்டிருக்கா. ஏன் தாத்தா?”

“அதெல்லாம் நம்ம குடும்ம வழக்கம்டி கண்ணு. எங்க தாத்தா பெரிய வேத வித்வான் தெரியுமோல்லியோ? எங்க அப்பாவும் ஒண்ணும் குறைஞ்சவரில்லே. சம்ஸ்க்ருதத்திலே புலி”  பெருமை முகத்தில் தாண்டவமாடச் சொன்னார்.

“நீங்க ஏன் தாத்தா  குடுமி வைச்சுக்கலே, பஞ்சகச்சம் கட்டலே?”    பத்மநாபனுக்கு திடுக்கிட்டது. குழந்தையின் கைகளை மெதுவாக விடுவித்து விலகினார்.

“பெரியவாகிட்டே பேசுற பேச்சைப் பாரு” என்று சீறிய சரோஜாவின் கைகள் காயத்ரியை அலற வைத்தன. கண்ணீர் முட்ட அம்மா சுசீலாவின் மடியில் புதைந்தாள். சுசீலா குழந்தையை அணைத்துக் கொண்டாள்.

இத்தனையையும் பார்த்த பங்கஜம்மாளின் பகபகவென்ற சிரிப்பொலி அனைவரையும் திசை திருப்பி விட்டது.  “எதுக்கும்மா இப்ப இப்படி சிரிக்கிற?” சீறினார் பத்மநாபன். சரோஜாவின் முகம் அஷ்டகோணலாகியது. எந்த பாதிப்பும் இல்லாதவள் போலிருந்தாள் சுசீலா. காயத்ரி குறுகுறுவென்று பார்த்தாள்.

“  போடா முட்டாப்பயலே! எங்கொள்ளுப்பேத்தி கேட்ட கேள்விக்கு உன்னால பதில் சொல்ல முடியலை இல்ல? திருவளத்தான் மாதிரி முழிச்சிட்டு நிக்கற. குலதர்மம் சாஸ்திரம்னு பேசற. உங்கப்பா, தாத்தா செஞ்சதுல நீ எத்தடா செஞ்ச. லோக க்ஷேமத்துக்காக அவா நித்யம் மூணு வேளை சந்த்யாவந்தனம் பண்ணாளே நீ பண்ணினியா? வேதம் படிச்சாளே, நீ படிச்சியா? வெளியிலே எங்கேயும் சாப்பிடாம ஆச்சாரமா இருந்தாளே, நீ அப்படி இருந்தியா? நாலு பேருக்கு நல்லதைச் சொல்லவும் செய்யவும் செஞ்சாரே, அதைச் செஞ்சியா? அவா பண்ணினது எதையும் நீ பண்ணல. ஆனா அவா பண்ணின தர்மத்தை என்னவோ நீ மட்டுமே கட்டிக் காப்பத்தற மாதிரி பெருமை பீத்திக்கிறே!

“ சுசீலாவைப் பார்த்தியா? அவ ஆத்துக்காரர் போனதும் குழந்தையோட இங்க வந்துட்டா. வீட்டிலேயே அடைஞ்சு கிடக்குறா. எப்படி இருந்த குழந்தைடா அவ. இப்ப அவ மூஞ்சியை என்னிக்காவது பார்த்திருக்கியா? அவ படற கஷ்டம் பத்தி என்னைக்காவது நினைச்சுப் பார்த்திருக்கியா? ஏதோ நீ உண்டு, உன் வேலை உண்டுன்னு ஓடிண்டிருக்கே? உன் ஆத்துக்காரி சமையல் உள்ளேயும் நீ தாழ்வாரத்துலேயும் உட்கார்ந்திண்டிருக்கீங்க. இங்க ஒருத்தி குழந்தையோட தன் கஷ்டத்தை யார்கிட்டே சொல்றதுன்னு தெரியாம முழிச்சிண்டிருக்காளே, அவளைப் பத்தி என்னைக்காவது நினைச்சிப் பார்த்திருக்கேளா?

“இப்ப கூட்டுக் குடும்பங்கிறதே இல்லாமப் போச்சு. ஒங்கப்பா காலம் வரைக்கும் இங்க ஆத்துல எல்லாரும் ஒண்ணா இருந்தோம். இன்னைக்கி நீ ஒரு இடம். ஒந்தம்பி ஒரு இடம். ஒம்பசங்க ஒரு இடம்னு அவாவாளுக்கு சௌகர்யமா எங்கெங்கியோ போயிருந்துடறேள். நாளைக்கு ஒங்காலத்துக்கு அப்புறம் சுசீலாவும் கொழந்தையும் எங்கடா போயிருப்பா? ஒம் பொண்ணு கஷ்டத்தையே பார்க்க முடியாத நோக்கு, ஊரான் பொண்ணோட கஷ்டம் எங்க புரியப் போறது?

“ சாஸ்திரம் சம்ப்ராதயங்கிறது நம்ம நல்லதுக்காகத்தானே ஒழிய வெறுமே வறட்டுத்தனமா கத்திண்டிருக்கிறதுக்கில்ல. அதை மட்டும் நன்னா புரிஞ்சிக்கோ. வேதம் சத்யம்டா அது மாறாது. ஆனா சாஸ்த்ரம் சம்ப்ரதாயங்கிறது  ஒவ்வொரு காலத்துலேயும் சூழ்நிலைக்கு ஏத்தாப்பல மாத்தங்களை உள்ளே இழுத்துக்கிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானேன்னு சொல்லியிருக்கா பெரியவா. தனக்குன்னு இல்லாம பொதுவா லோகத்துக்கு நன்மை தரக்கூடிய விஷயங்களை அப்பப்ப சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி மாத்திக்கிறது தப்பில்ல. ஆனா உன்ன மாதிரி லோகக்ஷேமத்துக்கான சின்ன கர்மாவான சந்த்யாவந்தனம்கூட பண்ணாம இருக்கிறதுதான் மகாபாபம்.

“ ஒம் பொண்ணுக்குத் தான் நல்லது செய்யலை. பரவால்ல. இன்னொரு பொண்ணுக்கு நடக்க இருக்கிற நல்லதையாவது தடுக்காதே. அந்தப் பாபம் இன்னும் பல தலைமுறைக்கு வம்சத்தையே பாதிக்கும். ஒன் பசங்களும் பேரக்குழந்தைகளும் நன்னா இருக்கணும்னா, ஒன் தம்பியைக் கூப்பிட்டு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணச் சொல்லு. முடிஞ்சா ஒம் பொண்ணுக்கும் ஒரு வரனைப் பாரு…”

பங்கஜம்மாளின் சாட்டை வார்த்தைகளுக்கு பதில் பேச முடியாமல், பத்மநாபனும் சரோஜாவும் விக்கித்து நின்று கொண்டிருந்தார்கள். பாட்டியை விழுங்குபவள் போலப் பார்த்தாள் காயத்ரி.

***

தொலைபேசியை எடுத்த வரதராஜனிடம்,  “அந்தப் பொண்ணு எந்த ஊருன்னு சொன்னே, என்ன பேரு?” என்றார் பத்து.  “அண்ணா திருநெல்வேலிண்ணா, நம்ம குழந்தை பேருதான், சுசீலாண்ணா” என்றார்.

தன்னிச்சையாக எந்த சலனமுமில்லாமல் தூணில் சாய்ந்து கிடந்த தன் மகளைப் பார்த்தார்.  குரல் தழுதழுத்தது.  “அம்மா இந்த சம்பந்தத்தை உடனே  முடிக்கச் சொல்றா, அப்படியே பண்ணிடு” என்றார் பத்து.

“பகவானே”  ராமர் கோயில் திசை நோக்கித் திரும்பி வரதராஜன்  கையெடுத்துக் கும்பிட்டார்!

 

.

 

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in சித்திரை-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s