3.2 இறைவனை வழிபடு

 

கவிஞர் குழலேந்தி

 

ஆதி சங்கரர்

இறைவனை வழிபடு, இறைவனை வழிபடு,
இறைவனை வழிபடு அறிவிலியே!
மறைபல மனனம் செய்வதனாலுன்
மாரகம் தவிர்ந்து போய்விடுமா?

பொருள் மிக விரும்பும் மூடா, மூடா!
பொதியெனும் ஆசை அகற்றிவிடு!
தருமமுரைக்கும் கடமையினைச் செய்
தடைந்திடும் பொருளில் மகிழ்வுறுக!

மங்கையர் தனமும் நாபியும் கண்டு
மதியினை இழந்து பதறாதே!
அங்கம் முழுதும் மாமிச வடிவம்
என்பதை மனதில் எண்ணிடுக!

தாமரை இலைமேல் தண்ணீர் போல
சஞ்சலமின்றி வாழ்ந்திடுக!
பூமியை ஆளும் துயரும் நோயும்
புன்மையும் முழுதும் உணர்ந்திடுக!

செல்வம் சேர்கையில் அண்டும் சுற்றம்,
சேவகனாகப் பணியாற்றும்!
வல்லமை குன்றி மூப்படைந்தாலோ
வார்த்தை கூறவும் ஆளில்லை!

பிராணன் உடலில் உள்ள வரைக்கும்
பிரியம் இருக்கும் உன் மீது!
பிரேதமாக நீ சாய்ந்து விட்டாலோ
பிரிய மனைவியும் தள்ளி நிற்பாள்!

அன்புறு மகனை பகையாய் மாற்றும்
அம்சம் பொருளின் இயல்பன்றோ?
பொன்னும் பொருளும் என்றும் துன்பம்,
இன்பம் மெய்யாய் ஒன்றுமில்லை!

பாலகன் ஆசை விளையாட்டின் மேல்,
பதினென் வயதில் கன்னியர் மேல்!
காலம் கடந்த கிழவனின் ஆசை
கவலையில்; கடவுளைப் பிடித்தவர் யார்?

யாருன் மனைவி? யாருன் பிள்ளை?
யாரிடமிருந்து நீ வந்தாய்?
சாரும் மானிட வாழ்க்கை விந்தை
தத்துவ மிதனை எண்ணிப் பார்!

நல்லவர் நட்பால் நலியும் பற்று,
பற்றற்றவர்க்கு மயக்கமில்லை!
வல்லவர் அவர்க்கே வாய்மை விளங்கும்,
வழியது ஒன்றே முக்திக்கு!

செல்வம் இன்றேல் சுற்றம் இல்லை,
தண்ணீர் இன்றேல் குளமில்லை!
பொல்லாக் காமம் முதியோர்க்கில்லை,
தத்துவ மறிந்தால் வினையில்லை!

செல்வம், பந்தம், இளமைச் செழிப்பால்
செருக்கினை அடைந்து ஆடாதே!
எல்லாம் காலன் முன்னால் சாம்பல்,
எனவே இறையை எண்ணிடுக!

பகலும் இரவும் தினமும் மாறும்,
பருவம் பலமுறை மாறிவரும்!
அகலும் ஆயுள்; இகழும் காலம்;
ஆசைப் பிணைப்பு போவதில்லை!

இன்னருள் சங்கர பகவத்பாதர்
இருளில் உழன்ற பண்டிதனை
நன்னிலை அடைய பன்னிரு பாவால்
பண்ணிய மாலையை அருளினரே!

இறைவனை வழிபடு, இறைவனை வழிபடு,
இறைவனை வழிபடு அறிவிலியே!

 

குறிப்பு:

ஸ்ரீ ஆதிசங்கரர் இயற்றிய  ‘பஜகோவிந்தம்’ த்வாதச மஞ்சரிகா ஸ்தோத்திரத்தின் தமிழாக்கம் இது.

ஆதிசங்கரர் ஜெயந்தி: சித்திரை 17- புனர்பூசம் 17 (02/05/2017).

திரு. கவிஞர் குழலேந்தி, பத்திரிகையாளர்; தேசிய சிந்தனைக் கழ்கத்தின் மாநில பொதுச் செயலாளர்.

 

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in சித்திரை-2017 and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s