2.7 கருப்புப் பணத்துக்கு எதிராக தேசத்தின் யுத்தம்

-சேக்கிழான்

தை மாதம் வெளிவரும் இரண்டாவது இதழ்...

அட்டைப்படக் கட்டுரை

2016 நவம்பர் 8– இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனை நாள். அன்றுதான், தன் மீதான நாட்டு மக்களின் நல்லெண்ணத்தையும் அன்பையும் மொத்தமாக அடகு வைத்து, அதி தீவிரமான சோதனைக் களத்தில் இறங்கினார் பிரதமர் நரேந்திர மோடி.

நாட்டில் புழக்கத்தில் இருந்த சுமார் ரு. 15.44 லட்சம் கோடி மதிப்புள்ள ஆயிரம், ஐநூறு உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் 2017 மார்ச் 31-க்குப் பிறகு செல்லாது என்று அவர்  நவ. 8, இரவு 8.15 மணியளவில் அறிவித்தபோது ஒட்டுமொத்த நாடே அதிர்ந்தது. ஆயினும் அதன் பின்னணியில் பிரதமர் குறிப்பிட்ட காரணங்கள் உண்மையானவை என்பதை உணர்ந்த நாட்டு மக்கள், அவரது அறிவிப்பை ஏக மனதாக ஆதரித்தனர்.

தற்போது இந்த விஷயத்தில் அரசை கடுமையாக எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் கூட, முதல்நாளில் மோடியின் அறிவிப்புக்குக் கிடைத்த மகத்தான வரவேற்பைக் கண்டு,  தாங்களும் அதை ஆதரிப்பதாக அறிவித்தன.

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

தனது அறிவிப்பின்போது டிச. 30 வரையிலான 50 நாட்களுக்குள் மக்கள் தங்களிடமுள்ள ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை வங்கியில் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர், இதனால் ஏற்படும் அசௌகரியங்களை நாட்டுநலன் கருதி மக்கள் தாங்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். நாட்டில் உள்ள கருப்புப் பணம், வெளிநாட்டினர் புழக்கத்தில் விட்டுள்ள கள்ளப்பணம் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தவிர, புழக்கத்திலிருந்து ஒழிக்கப்படும் 1000, 500 ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக புதிய 2000 ரூபாயும் அறிமுகம் செய்யப்பட்டது. மக்கள் தங்கள் தேவைக்கு பழைய நோட்டுகளை வங்கியில் அளித்து, ஆதார் எண்ணைக் காண்பித்து, புதிய நோட்டுகளைப் பெறலாம் என்று அறிவித்த பிரதமர், அதற்கும் கட்டுப்பாடுகளை விதித்தார்.

வங்கியில் இருக்கும் பணம் குடிமகனுடையது. அதை அவர் பெற வரையறை விதிக்க அதீதத் துணிவு வேண்டும். நாட்டு மக்கள் மீது நம்பிக்கை வைத்து இந்தக் கண்டிப்பான உத்தரவை அமல்படுத்தினார் பிரதமர். அதன் நோக்கம், கருப்புப்பணம் பதுக்கியவர்கள் புழக்கடை வாயிலாக தாங்கள் குவித்த பணத்தை வெள்ளையாக்கிவிடக் கூடாது என்பதே. அதை மக்கள் உணர்ந்தார்கள். எனவேதான், தங்கள் பணத்தை வங்கியில் செலுத்தவும்,. புதிய ரூபாய் நோட்டுகளைப் பெறவும் சிரமம் பாராமல் நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள் மக்கள்.

மோடியின் திடீர் அறிவிப்பால் ஏ.டி.எம்.களிலும் பணம் எடுக்க முடியாத நிலைமை. புதிய நோட்டுக்கு ஏற்றபடி அவற்றை சரிப்படுத்தவே 2 வாரங்கள் ஆகின. அவை சரியானபோதும் ஒரு நாளுக்கு ரூ. 2000 மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டது. பல வங்கிகளுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் போதிய வரத்து இல்லாததால் பல ஏ.டி.எம்.கள் செயல்படாமலேயே இருந்தன. ஜனவரி முதல் வாரம் வரையிலும் ஏ.டி.எம்.கள் முழுமையாக இயங்கவில்லை.

ஆயினும் மக்கள் சிறு புலம்பலோடு அதைக் கடந்தார்கள். இத்தனைக்கும் அவர்களைத் தூண்டிவிட்டு அரசுக்கு எதிராகப் போராடச் செய்ய பல வகைகளில் முயற்சிகள் நடைபெற்றன. சிற்சில இடங்கள் தவிர, மோடி எதிர்ப்பாளர்களின் சதிவலையில் பொதுமக்கள் விழவில்லை. ஏனெனில் அவர்கள் – மோடி மேற்கொண்டிருப்பது கருப்புப் பணத்துக்கு எதிரான தேசத்தின் யுத்தம் என்று உணர்ந்திருந்தார்கள்.

அப்படித்தான் மோடி அறிவித்த 50 நாட்களும் கடந்து போயின. அதன் நிறைவாக 2016 டிச. 31-இல் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி,  “கருப்புப் பணத்துக்கும் ஊழலுக்கும் எதிராக அரசுடன் ஒருங்கிணைந்து மக்களும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்” என்று குறிப்பிட்டார். அது முற்றிலும் உண்மையே. ஏனெனில் இந்தப் போராட்டம் மக்களின் பங்களிப்பில்லாமல் நிறைவேறி இருக்குமா என்பது சந்தேகமே.

மோடி இருக்கும் இடத்தில் வேறு எவர் இருந்திருந்தாலும் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்திருக்க மாட்டார் என்பது மட்டுமல்ல, அவருக்குக் கிடைத்த ஆதரவு யாருக்கும் கிடைத்திருக்காது என்பதும் நிதர்சனம். தனக்கென வாழாத பிரதமர் மோடி என்பதை மக்கள் நம்பிய காரணத்தால்தான், அவரது கசப்பு மருந்தை அவர்கள் கஷ்டப்பட்டு விழுங்கினர்.

இந்த யாகத்தில் எத்தனையோ இடையூறுகள். பல கஷ்டங்கள். பணம் எடுக்க வரிசையில் நின்றபோது இறந்தவர்கள் பலர். அதற்கு அவர்களது உடல்நலக் குறை காரணமாக இருப்பினும், ரூபாய் நோட்டு செல்லாத விவகாரத்தால்தான் அவர்கள் வரிசையில் நிற்க நேர்ந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால், நாட்டில் புழங்கும் கள்ள நோட்டுகளால் உள்நாட்டில் ஏற்படும் கலவரங்கள், கொலைகள், பயங்கரவாதச் செயல்களை ஒப்பிடுகையில் இந்த மரணங்கள் இயல்பானவை என்பதை மக்கள் புரிந்துகொண்டார்கள். எனவேதான், எவ்வளவு வெறியூட்டப்பட்டபோதும், அவர்கள் நிலை பிறழவில்லை.

மொத்தத்தில் இது தேசத்தின் யுத்தம்- ஊழலுக்கு எதிராக, கருப்புப் பணத்துக்கு எதிராக, கள்ள நோட்டுகளுக்கு எதிராக. அவர்கள் இதற்காகத்தான் இத்தனை நாட்கள் காத்திருந்தார்கள். அதற்கான வாய்ப்பை பிரதமர் மோடி வழங்கினார் என்பதுதான் உண்மை. தினசரிக் கூலியும் கோடீஸ்வரனும் ஒரே நாளில் ஒரே அந்தஸ்துக்கு தற்காலிகமாகவேனும் வந்ததை அவர்கள் கண்கூடாகப் பார்த்தார்கள். அரசை ஏமாற்றும் வரி ஏய்ப்பர்களை அடையாளம் காட்ட இந்த நடவடிக்கை உதவும் என்பதை புரிந்துகொண்டதால் மக்களை திசைதிருப்ப எதிர்க்கட்சிகளால் முடியவில்லை.

எனவேதான்,  “எந்த அரசுமே செய்யத் துணியாத கடினமான முடிவு இது. மக்களின் ஆதரவில்லாமல் இத்தகைய நடவடிக்கைகள் ஒருபோதும் வெற்றிபெற முடியாது. ஆனால்,  உலக நாடுகள் எதிலுமே காணாத முன்னுதாரணமாக இந்தியாவில் இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு அமோகமாக இருந்து வருகிறது. உலகிற்கே நாம் அரிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளோம். தற்போது ஒளிமயமான தேசத்தின் புதிய விடியலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் (தினமணி- 1.1.2017) மோடி.

ஆக, நவ. 8-இல் துவங்கிய தேசத்தின் யுத்தம் அதன் முதல் கட்டத்தை டிச. 30-இல் நிறைவு செய்துவிட்டது. பினாமிகள் ஒழிப்பு, கருப்புப் பணம் பதுக்கியவர்கள் மீது தீவிர நடவடிக்கை எனப் பல அதிரடிகள் தொடர உள்ளதாக ஏற்கனவே மோடி அறிவித்திருக்கிறார். அவற்றால் சாமானியனுக்கு எந்தச் சிரமமும் இல்லை. கொழுத்த பணமுதலைகள் மீதான அரசின் நடவடிக்கையை அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

உயர் மதிப்பு ரூபாய்களின் அபாயம்:

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை அரசாங்கங்கள் செல்லாது என்று அறிவிப்பதன் காரணம், பொருளாதாரத்தில் அவற்றின் பங்களிப்பு வீக்கமாக மாறிவருவதை அரசு உணர்வது தான்.

500-1000-rs-notes

பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள்

பிரபல பொருளாதார வல்லுநர் அஜித் வடேகர், உயர் மதிப்பு நோட்டுகள் சாதாரணப் புழக்கத்துக்கு உதவுவதில்லை; அவை சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கே பயன்படுகின்றன” என்கிறார் (ஆதாரம்: லிவ் மின்ட்).  அதாவது அரசுக்குத் தெரியாமல் செல்வத்தைப் பதுக்கவே அவை பெருமளவில் பயன்படுகின்றன.

ஐரோப்பிய மத்திய வங்கி கடந்த 2016 மார்ச்சில், உயர் மதிப்பு கொண்ட 500 யூரோ நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்துவதாக அறிவித்தது. அமெரிக்காவிலும் 100 டாலர் பெறுமான உயர்மதிப்பு நோட்டுகளை அச்சிடுவதைக் குறைக்க வேண்டும் என்று முன்னாள் நிதி அமைச்சர் லாரன்ஸ் சம்மர்ஸ் (வாஷிங்டன் போஸ்ட் -2016) அரசை அறிவுறுத்தினார்.

நமது நாட்டிலும் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதே ரிசர்வ் வங்கி ரூ. 1000, ரூ. 500 நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று அரசுக்கு யோசனை கூறியது. இதை அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரமே ஒரு நேர்காணலில் தெரியப்படுத்தினார் (தினமணி – 9.11.2016). ஆனால், அதைச் செயல்படுத்தும் துணிவும் நேர்மையும் அந்த அரசுக்கு இருக்கவில்லை.

தவிர, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆடசியில்தான், 2005 முதல் 2015 வரையிலான பத்தாண்டுகளில் உயர் மதிப்பு நோட்டுகளின் எண்ணிக்கை பல மடங்காகப் பெருகியது. உயர் மதிப்பு நோட்டுகளின் எண்ணிக்கை 2004-ஆம் ஆண்டில் 34 சதவீதமாக இருந்தது. அடுத்த 6 ஆண்டுகளில் இது 79 சதவீதமாக உயர்ந்து, 2014-ஆம் ஆண்டில் 86 சதவீதமாக அதிகரித்தது என்கிறார் பொருளாதார நிபுணர் எஸ்.குருமூர்த்தி (தினமணி 25.12.2016).

“2004-ஆம் ஆண்டில் இருந்தே நமது நாட்டு பொருளாதாரத்தில், வேலைவாய்ப்பைப் பெருக்குவதில் முன்னேற்றத்தை ஏற்படுத்தாமல் சொத்துகளின் (நிலம், தங்கம், பங்குச் சந்தை) மதிப்பில் போலியான வளர்ச்சி காட்டப்பட்டு வந்தது. நமது உண்மையான பொருளாதார நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு பெருமளவிலான பணம் புழக்கத்தில் இருந்தது.  இதனால் பல்வேறு சொத்துகளின் விலை செயற்கையாக உச்சத்தைத் தொட்டது. அதிகாரபூர்வமற்ற பணத்தின் புழக்கம் அதிகரித்ததே இதற்குக் காரணம். இது உண்மையான வளர்ச்சி இல்லை. நாட்டில் கணக்கில் வராத பணம் அதிக அளவில் தொடர்ந்து புழங்குவது நீண்ட காலத்தில் பொருளாதாரச் சீரழிவுக்கு வழி வகுக்கும்” – என்கிறார் எஸ்.குருமூர்த்தி.

2000-rs-notes

புதிய 2000 ரூபாய் நோட்டுகள்

எனவேதான் பணவீக்கத்தையும் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளின் பதுக்கலையும் முறியடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டி வந்தது. உதாரணமாக, 2004-05-இல் ரூ. 1000 நோட்டுகளின் மதிப்பு ரு. 42 ஆயிரம் கோடியாகவும், ரூ. 500 நோட்டுகளின் மதிப்பு ரூ.  ரூ. 1.53 லட்சம் கோடியாகவும் இருந்தது. (மொத்தம் ரூ. 1.95 கோடி)  அப்போது ஒட்டுமொத்த ரொக்கப் பணத்தின் மதிப்பு ரூ. 3.68 லட்சம் கோடி மட்டுமே. இதில் உயர் மதிப்பு நோட்டுகளின் சதவீதம் 53 %. அதுவே 2015-16-இல் ஒட்டு மொத்த ரொக்கத்தின் மதிப்பு ரூ. 16.42 கோடியாகவும், அதில் உயர் மதிப்பு நோட்டுகளின் (ரூ. 500- 7.85 லட்சம் கோடி, ரூ. 1000- ரூ. 6.33 லட்சம் கோடி) மதிப்பு ரூ. 14.18 லட்சம் கோடியாகவும் மாறியது. இதன் சதவீதம் 86%. இது 2016 மார்ச் நிலவரம். அதன்பிறகு புழக்கத்தில் விடப்பட்ட உயர்மதிப்பு நோட்டுகளின் எண்ணிக்கை தெளிவாகத் தெரியவில்லை. ஆயினும் ஒரு கணக்கின்படி, ரூ. 15.44 லட்சம் கோடி உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் இருப்பதாகத் தெரிகிறது.

ரிசர்வ் வங்கி ஆண்டுதோறும் வெளியிடும் ரூபாய் நோட்டுகள் எவ்வாறு புழக்கத்தில் இருக்கின்றன என்பதை, அவை வங்கிகளுக்கு திரும்ப வருவதைக் கொண்டு ஆய்வு செய்வது வழக்கம். அவ்வாறு வங்கியில் இருந்து வெளியான ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளில் ரூ. 5 லட்சம் கோடி வங்கிக்குள் மீண்டும் வராமலேயே புழக்கத்தில் இருந்ததை ரிசர்வ் வங்கி கண்டுபிடித்தது. அதாவது அவை சிலரது கருவூலத்தில் மூட்டை மூட்டையாகச் சேர்ந்துவிட்டன. அது கணக்கில் வராத பணமாகி விடுவதால் அதனால் அரசுக்கு வரியும் கிடைக்காது. தவிர உள்நாட்டில் பணவீக்கத்துக்கும் சட்டவிரோதமான செயல்பாடுகளுக்கும் காரணமாகிறது. அவற்றை வங்கி சுழற்சிக்குக் கொண்டுவர ஒரே வழி, அவற்றை மதிப்பிழக்கச் செய்வதுதான். அதையே அரசு தற்போது வெற்றிகரமாகச் செய்துள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் நாயகர்கள்:

உர்ஜித் படேல்

உர்ஜித் படேல்

பிரதமர் மோடி எடுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பின்புலத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்சித் படேல், மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சக்திகாந்த தாஸ், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் இருந்தனர்.

இதனை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமும் தகுந்த நேரத்தில் கூறி அனுமதி பெற்றிருக்கிறார் மோடி.

சக்திகாந்த தாஸ்

சக்திகாந்த தாஸ்

இவ்வாறு மிக குறிப்பிடத் தகுந்த சிலரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் ரகசியமாகத் திட்டமிட்டு இதனை அரங்கேற்றியது பிரதமர் மோடியின் செயல்திறனுக்கு எடுத்துக்காட்டு.

முந்தைய ஆளுநர் ரகுராம் ராஜன் இருந்தபோதே  பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ரிசர்வ வங்கி ஆறு மாதங்கள் முன்னரே திட்டமிட்டது.

அருண் ஜேட்லி

அருண் ஜேட்லி

ஆயினும், அவர் அரசின் விமர்சகராக எதிர்க்கட்சித் தலைவர் போல நடந்து கொண்டதால், புதிய ஆளுநர் பொறுப்பேற்ற பிறகே இதனை அமல்படுத்தி இருக்கிறார் மோடி.

அரசு நடவடிக்கை தோல்வியா?

இப்போது ஒட்டுமொத்தமான ரூ. 15.44 லட்சம் கோடியில் சுமார் ரூ. 14 லட்சம் கோடி (91 %) வங்கிக் கணக்குகளுக்கு வந்துவிட்டது. எனவே, அரசுக்கு இதனால் எந்த லாபமும் இல்லை என்று சில புத்திசாலிகள் மதிப்பிடுகின்றனர். அரசின் திட்டம் தோல்வியடைந்துவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர். அவர்களின் கருத்து தவறு   என்பதை கீழ்க்காணும் புள்ளிவிவரங்களைப் பரிசீலித்தாலே உணரலாம்.

 1. 2016 நவ. 8 முதல் டிச. 27-க்குள் வங்கிக் கணக்குகளுக்கு, செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் வாயிலாக சுமார் ரூ. 14 லட்சம் கோடி வந்துள்ளது. இதன்மூலமாக, ஆங்காங்கே ஒளிந்திருந்த பல லட்சம் கோடி பணம் வெளிப்படையாகியுள்ளது. இப்போது ஒவ்வொருவர் கணக்கிலும் உள்ள பணத்தைக் கொண்டு தோராயமாகவேனும் அவர்களது ரொக்க இருப்பைக் கணக்கிட முடிகிறது.
 2. அரசு ஏற்கனவே அறிவித்தபடி, வங்கிக் கணக்கில் ரு. 2.5 லட்சத்துக்கு மேல் செலுத்தப்பட்ட பணத்துக்கு கணக்கு கேட்கப்பட்டு, அதற்கு 45 % வருமான வரி விதிக்கப்படும். அதன்மூலமாக அரசுக்கு சுமார் ரூ. 4 லட்சம் கோடி முதல் ரூ. 6 லட்சம் கோடி வரை வரி வருவாய் கிடைக்கக் கூடும்.
 3. இதற்கு முன் வருமான வரி செலுத்தியவர்களின் (ரூ. 2.5 லட்சம் வருமானத்துக்கு அதிகமானவர்கள்) எண்ணிக்கை ஒரு கோடி மட்டுமே. தற்போது வங்கிகளில் வரவு வைத்த பணத்தின் மூலமாக வரி ஏய்ப்பர்கள் கண்டறியப்பட்டு வரி வசூல் கூடுதலாகும். அநேகமாக 20 கோடி பேர் வருமான வரி செலுத்தும் வாய்ப்பு உள்ளது. இது அடுத்துவரும் ஆண்டுகளிலும் தொடரும் என்பதால் அரசுக்கு ஆண்டுதோறும் வரி வருவாய் அதிகரிக்கும்.

  நன்றி: மதி தினமணி 9.11.2016

  நன்றி: மதி
  தினமணி 9.11.2016

 4. அரசு தானாக முன்வந்து வருமானத்தை அறிவிக்குமாறு ஒரு திட்டத்தை அறிவித்தது (ஐ.டி.எஸ்.). 1.6.2016 முதல் 30.9.2016 வரையிலான காலகட்டத்தில், இதுவரை மறைக்கப்பட்ட வருவாயை அரசுக்கு வெளிப்படுத்தி 45 % வரியுடன் அரசின் நடவடிக்கையிலிருந்து தப்பலாம் என்று பிரதமர் அறிவித்திருந்தார். செப். 30-க்குப் பிறகு கருப்புப் பணமாக (கணக்கில் வராத பணம்) வைத்திருப்போருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். அதன்படி சுமார் 64,275 வருமான வரி தாக்கல்கள் செய்யப்பட்டு ரூ. 65,250 கோடி வருமானம் வெளிப்படுத்தப்பட்டது. அதனால் அரசுக்கு வரியும் கிடைத்தது. ஆனால், அரசு எதிர்பார்த்த அளவுக்கு (ரூ. 5 லட்சம் கோடி) அது இல்லை. எனவே, தற்போதைய வங்கிக் கணக்குகளில் உள்ள ரொக்க இருப்பை ஆராயும்போது வரி ஏய்ப்பர்கள் அனைவரும் வரி வசூல் வட்டத்துக்குள் வருவர். அதையடுத்து, வருமான வரி வரம்பை அதிகரிக்கவும், அதன் சதவீதத்தைக் குறைக்கவும் அரசு திட்டமிட இயலும்.
 5. ரூ. 10 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோரின் எண்ணிக்கை 24 லட்சம் மட்டுமே என வருமான வரித்துறையில் உள்ள புள்ளிவிவரம் கூறுவதை பிரதமர் மோடி தனது டிச. 31 உரையில் சுட்டிக் காட்டியுள்ளார். இது எவ்வளவு மோசடியானது என்பதை அனைவருமே அறிவோம். அடுக்குமாடிக் குடியிருப்புகளும் கார்களும் கோடிக் கணக்கில் பெருகிவரும் நாட்டில், உண்மையான வருமானத்தை வெளிப்படுத்தத் தயங்கும் நடுத்தரவர்க்க மனநிலையே ஊழலுக்குக் காரணமாகிறது. மேல்தட்டு மக்களும் சொத்துகளைக் குவிப்பதில் காட்டும் அக்கறையை வரி செலுத்துவதில் காட்டுவதில்லை. இந்த மோசடிக்கு தற்போதைய வங்கிக் கனக்கு புள்ளிவிவரங்கள் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றன.
 6. மார்ச் 31 வரை கெடு கொடுத்தும் வங்கிக் கணக்கிற்கு வராதுபோகும் சுமார் 1.5 லட்சம் கோடி பணம் அரசுக்கு இயலாபகவே சொந்தமாகிவிடும். அந்தப் பணத்தை ஒவ்வொரு வீடாகச் சென்று அரசு பறிமுதல் செய்ய வேண்டியதில்லை. மாறாக திரும்ப வராத பணத்தை அரசு அச்சிட்டு தனது கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.

  எதிர்பார்த்த விளைவு: சந்தையில் வீழ்ச்சி

  எதிர்பார்த்த விளைவு:
  சந்தையில் வீழ்ச்சி

 7. தவிர, உயர் மதிப்பு நோட்டுகளில் 90 சதவீதம் வங்கிக்கு திரும்பி இருப்பதேகூட நாட்டு மக்கள் இன்னமும் சீர்கெட்டுவிடவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. அரசு நடவடிக்கைக்கு அஞ்சி சில இடங்களில் ரூபாய் நோட்டுகள் எரிக்கப்பட்டதை செய்தியாகக் கண்டாலும் அதன் அளவு மிகவும் சொற்பம். இதில் செல்வந்தர்கள் தங்கள் ஊழியர்கள் அல்லது கூலியாட்கள் மூலமாக தங்கள் பணத்தை வேறு பெயர்களில் (பினாமி) செலுத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது. எனினும், அதுவும் வங்கிக் கணக்கில் வந்திருப்பது நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்லதே.
 8. வங்கிகளில் இருந்து கிடைத்த தகவலின் படி, சுமார் 60 லட்சம் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் மட்டும் ரூ. 7 லட்சம் கோடி பணம் இருப்பது உறுதியாகி உள்ளது. இதன்மூலமாக அரசுக்கு வரி கிடைப்பது உறுதி. இனிமேல் அவர்கள் அரசை வரி ஏய்க்க முடியாது.
 9. பூஜ்ஜிய இருப்பு வங்கிக் கணக்காக ஏழைகளுக்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட 25.6 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகளில் இப்போது தானாகவே பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளது. தவிர, பணம் படைத்தவர்கள் ஏழைகளின் கணக்குகளில் பணத்தை செலுத்தி தப்ப முயன்றதும் தெரிய வந்திருக்கிறது. சுமார் 4.86 லட்சம் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் ரூ. 87 ஆயிரம் கோடி முதலீடாகியுள்ளது. இவை குறித்து அரசு கண்காணித்து, ஆராயத் துவங்கி உள்ளது. “ஜன்தன் வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதும், அதை யார் செலுத்தி இருந்தாலும் அது கணக்கை வைத்துள்ள ஏழைக்கே சொந்தம்” என்று கூறி இருக்கிறார் மோடி. அதற்கான சட்ட நடவடிக்கைகளும் துவங்கப்பட்டுள்ளன.
 10. இதற்கு முன் வருமான வரித் துறை இலக்கில்லாமல் இருளில் அம்பெய்து கொண்டிருந்தது. தற்போது வங்கிப் பண இருப்பு, வரி செலுத்துவோரை அடையாளம் காட்டியுள்ளது. தவிர, வங்கிகளின் ரொக்கக் கையிருப்பு உயர்ந்துள்ளதால் கடனளிப்பு அதிகரிக்கவும், வட்டிவிகிதம் குறையவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அது ஜனவரி 2-ஆம் தேதியே நடைமுறைக்கும் வந்துவிட்டது.

உள்நாட்டு உற்பத்தி எண்ணும் ரொக்கம் அச்சிடலும்

ஒரு நாட்டில் எவ்வளவு ரொக்கப் பணத்தை அச்சிடுவது என்பதற்கு வரையறை உள்ளது. அது அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியச் சார்ந்தது. இதற்கென மொத்த உள்நாட்டு உற்பத்தி எண் (Gross domestic product -GDP) கணக்கிடப்படுகிறது.  ஒரு நாட்டின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்படுகின்ற மொத்தப் பொருட்கள், அளிக்கப்படும் சேவைகளின் ஒட்டுமொத்த சந்தைப் பெறுமதியே மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகும். இந்த ஜி.டி.பி.யில் 10 சதவீதத்துக்கு மிகாமல் ரொக்கமாக அச்சிடுவது நல்லது என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து. அரசின் முன்னள் நிதித்துரை செயலாளர் எம்.ஆர்.சிவராமன், “ரொக்கம்: ஜி.டி.பி. விகிதமானது 7 சதவீதமாக இருப்பது நல்லது’’ என்கிறார்  (ஆதாரம்: இன்டர்நேஷனல் பிசினஸ் டைம்ஸ்).

நமது நாட்டின் ஜி.டி.பி. மதிப்பு 2014-15-இல் 126.54 லட்சம் கோடியாக இருந்தது. அதுவே 2015-16-இல் 134.19 கோடியாக உயர்ந்தது. 2016-17-இல் இது 7.3 சதவீதம் வளர்ச்சி (ரூ. 144 லட்சம் கோடி) காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குத் தகுந்த வகையில் மட்டுமே ரொக்கம் புழக்கத்தில் இருக்க வேண்டும். ஆனால், நவ. 8-க்கு முந்தைய நிலையில், நமது நாட்டில் ரொக்கப் பணப் புழக்கத்தின் மதிப்பு ரூ. 17.77 லட்சம் கோடி (13%). இதற்கு அடிப்படைக் காரணம், உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையே. அதுவே பதுக்கலுக்கு காரணம்.

எனவே, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு தற்போதைய அரசு, நீக்கப்பட்டா நோட்டுகள் அனைத்துக்கும் நிகரான புதிய நோட்டுகளை அச்சிடப் போவதில்லை. இதை நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஏற்கனவே தெரிவித்திருக்கிறார். அரசின் இலக்கு ரூ. 10 லட்சம் கோடி முதல் 12 லட்சம் கோடி வரை இருக்க்க் கூடும் (7%- 10%).

விமர்சனங்களும் புலம்பல்களும்:

வங்கி முன்பு வாடிக்கையாளர்கள் கூட்டம்

ஏடிஎம் முன்பு வாடிக்கையாளர்கள் கூட்டம்

மோடி அரசு மேற்கொண்ட கருப்புப் பணத்தின் மீதான துல்லியத் தாக்குதல், எதிர்பார்த்த விளைவுகளை அளிக்கத் துவங்கி விட்ட்து. ஆனால், அரசின் எதிர்ப்பாளர்களும், வரி ஏய்ப்பர்களின் நண்பர்களும் அரசை கடுமையாக குறை கூறுகிறார்கள். அவர்களின் விமர்சனங்கள் சரியானவை தானா என்று பார்ப்போம்.

 1. முதலில் இந்த நடவடிக்கையை பாஜக நண்பர்களுக்கு முன்கூட்டியே பிரதமர் சொல்லிவிட்டார் என்று புகார் கூறினர் அரவிந்த் கேஜ்ரிவாலும் ராகுலும். அது உண்மையானால், நாட்டில் ஆங்காங்கே பாஜகவினரிடமிருந்தும் கருப்புப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது எப்படி? அடுத்து நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கே தெரியாமல் இந்த நடவடிக்கையை பிரதமர் மேற்கொண்டார் என்று முன்னுக்குப் பின் முரணாக ராகுல் குற்றம் சாட்டினார். அவரது கருத்து, பிரதமர் எதேச்சதிகாரமாக நடந்திருக்கிறார் என்பதாகும். இதில் எதை எடுத்துக் கொள்வது? ஜேட்லிக்கே தகவல் தெரிவிக்காத பிரதமர் பிற பாஜக நண்பர்களுக்கு மட்டும் எப்படி தகவல் தெரிவிப்பார்? இதற்கு எதிர்ப்பாளர்களிடம் பதில் இல்லை.
 2. இந்த நடவடிக்கை முன்யோசனையற்றது; திட்டமிடாமல் எடுத்த அவசரச் செயல் என்கிறார் ப.சிதம்பரம். அவருக்கு பிரஸார் பாரதியின் தலைவர் ஏ.சூர்யபிரகாஷ் சரியான விளக்கம் (தினமணி 24.12.2016) அளித்திருக்கிறார். மே 22-ஆம் தேதி அகில இந்திய வானொலியில் ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில்மோடி ஆற்றிய உரையில், நாட்டு மக்கள் மின்னணு பணப் பரிமாற்ற முறைகளுக்கு மாறுவது அவசியம் என்று கூறியிருப்பதையும்,  “இந்த மின்னணு பணப் பரிமாற்ற சேவைகளைப் பயன்படுத்த நாம் பழகிவிட்டால், நமக்கு ரொக்கப் பணம் தேவைப்படாது. வர்த்தகம் ரொக்கமில்லாமலேயே தன்னியல்பாக நடைபெறும். அதன்மூலமாக சட்ட விரோதமான பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும். நாட்டில் ஆதிக்கம் செலுத்திவரும் கருப்புப் பணத்தின் மதிப்பும் குறையும்”  என்று கூறியதையும் சூர்யபிரகாஷ் சுட்டிக்காட்டி இருக்கிறார். தவிர, ஏழைகளுக்கு ஜன்தன் வங்கிக் கணக்குகள், வங்கிக் கணக்கில் ஆதார் இணைப்பு, செல்போன் இணைப்பு என்ற முத்தரப்பு  ‘ஜாம்’ நடவடிக்கையை அரசு திட்டமிட்டு மேற்கொண்டிருக்கிறது. நாட்டு மக்கள் பெரும்பாலோருக்கு வங்கிக் கணக்கு துவங்கிய பிறகே, ஆதார் எண்கள் மூலமாக போலி கணக்குகளைக் கட்டுப்படுத்திய பிறகே, உயர் மதிப்பு நோட்டுகள் செல்லாது என்ற நிலையை அரசு மேற்கொண்டது. உண்மையில் இந்த நோக்கத்துக்காக சுமார் 1.5 ஆண்டுகள் திட்டமிட்டுச் செயல்பட்டிருக்கிறார் பிரதமர்.
 3. திடீரென அறிவித்ததால் பலரும் கஷ்டப்படுகிறார்கள் என்று நீலிக் கண்ணீர் சிந்துகிறார் மமதா பானர்ஜி. இதுபோன்ற கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கையை முன்கூட்டியே அறிவித்துவிட்டுச் செயல்படுத்த இயலாது. இப்போதே கூட, நவ. 8 இரவு கணக்கில் காட்டப்படாத பணத்தை மறைக்க தங்க நகைகளை பலர் வாங்கிக் குவித்தனர். அதையும் தற்போது அரசு ஆராய்கிறது. தவிர, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் எல்லை தாண்டி துல்லியத் தாக்குதல் நடத்திய நாளிலிருந்து (செப்டம்பர் 29) ஒருவார காலத்துக்குள், மோடி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில் ‘கருப்புப் பணத்துக்கு எதிரான துல்லியத் தாக்குதல் விரைவில் அரசால் நடத்தப்பட உள்ளது’ என்று அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது. பிரதமரின் திடீர் அறிவிப்பை மக்கள் புரிந்துகொண்டு செயல்பட்டனர். ஆனால், இந்த அறிவிப்பால் பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகள், ஏழைகள் பாதிக்கப்படுவதாகக் கூறி, தங்களை வெளிப்படுத்துகின்றனர் என்றுதான் கருத வேண்டி இருக்கிறது.
 4. புழக்கத்திருந்து நீக்கப்பட்ட பணம் முழுவதும் புதிய ரூபாய் நோட்டுகளாக அச்சிடப்பட்டு மக்களுக்கு திரும்பக் கிடைக்க 9 மாதம் ஆகும் என்று பயம் காட்டினார் முன்னாள் நிதி அமைச்சர் ப.சி. இது ஓரளவு உண்மையே. நீக்கப்படும் அனைத்து நோட்டுகளின் மதிப்புக்கு குறைந்த மதிப்புள்ள நோட்டுகளை அச்சிட்ட பிறகே இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டுமானால், அந்தத் தகவல் கசிந்துவிடும் என்பது ப.சி. அறியாததல்ல. இருப்பினும், உடனடித் தேவையை உத்தேசித்தே ரூ. 2000 புதிய நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. மக்களின் தேவையை அவை பூர்த்தி செய்ய இயலவில்லை. தவிர அதற்கு சில்லறை கிடைக்காமல் மக்கள் திண்டாடினர். இதற்கு அரசு தகுந்த முன்னேற்பாடு செய்திருக்கலாம். குறைந்தபட்சம், ஏ.டி.எம்.களை புதிய நோட்டுக்குத் தக்கவாறு மாற்றி அமைத்திருக்கலாம். இருப்பினும், மக்களின் சிரமத்துக்கு வங்கி நிர்வாகத்தில் உள்ள சில கருப்பாடுகளும் காரணம் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். அவர்களை ஏன் எந்த எதிர்க்கட்சியும் கண்டிப்பதில்லை? தவிர, புழக்கத்திலிருந்து நீக்கப்பட்ட ஒட்டுமொத்த உயர்மதிப்பு நோட்டுக்களுக்கும் நிகரான ரூபாய் நோட்டுகள் கண்டிப்பாக அச்சிடப்படாது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெளிவுபடுத்தி இருக்கிறார். டிச. 19 நிலவரப்படி சுமார் ரூ. 5.92 லட்சம் கோடி புதிய நோட்டுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அடுத்து ரூ. 500 நோட்டுகளாக சுமார் 4 லட்சம் கோடி அச்சிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ரூ. 10 லட்சம் கோடிக்கு மேல் ரொக்கப் பணத்தை புழக்கத்தில் விடாது என்று தெரிகிறது. அதன் நோக்கம், ரொக்கமற்ற பரிவர்த்தனைக்கு மக்களை- முழுமையாக இல்லாவிடிலும் இயன்ற வரை – மாற்றுவதே. மேலும், நாட்டின் ஜி.டி.பி.யில் 10 சதவீதத்தை மிகாமல் ரொக்கக் கையிருப்பை (ரூபாய் நோட்டுகள்) அச்சிடலாம். அதைவிட மிகுதியாக முந்தைய காங்கிரஸ் அரசு அச்சிட்டு செய்த தவறை இந்த அரசு கண்டிப்பாகச் செய்யாது (காண்க: பெட்டிச் செய்தி-1).

  demonetisation-1

  வங்கி முன்பு வாடிக்கையாளர்கள் கூட்டம்

 5. அரசுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்காது என்று ஊடக மேதாவிகள் கூறுகின்றனர். அவர்களுக்கு பிரதமர் மோடி கூறியிருப்பதே தெளிவான பதில். “இந்த நடவடிக்கையால் மாபெரும் உடனடி லாபத்தை அரசு எதிர்பார்க்கவில்லை. அதற்காக இதனை அரசு மேற்கொள்ளவும் இல்லை. நமது நோக்கம், நமது பொருளாதாரத்தையும் கருப்புப் பணத்தால் கட்டுண்டுள்ள நமது சமுதாயத்தையும் சுத்தப்படுத்துவதாகும். இது நீண்டகால சீர்திருத்தத்திற்கான முதல்படி” என்றார் மோடி. (தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்- 29.12.2016). இனிவரும் நாட்களில் அரசு மேற்கொள்ளும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கான வலிமையான ஆதாரம் இப்போது எழுப்பப்பட்டுவிட்ட்து.
 6. அடுத்து, கிராமப்புறங்களில் வங்கிக் கட்டமைப்பு போதிய அளவு இல்லாததால் கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதாகும். கடந்த 70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் 60 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் கட்சி இதைக் குறையாக முன்வைக்கிறது- இதற்குக் காரணமே தாங்கள்தான் என்பதை அறியாமல். தற்போது நாட்டில் 27 பொதுத் துறை வங்கிகள், 19 தனியார் துறை வங்கிகளைச் சேர்ந்த 1,38,626 வங்கிக் கிளைகள் செயல்படுகின்றன.இவற்றில் சுமார் 51 ஆயிரம் கிளைகள் ஊரகப் பகுதிகளில் உள்ளன. அதேபோல நாட்டிலுள்ள 1.97 லட்சம் ஏ.டி.எம்.களில் 33 ஆயிரம் கிராமப் பகுதிகளில் உள்ளன. இவை போதுமானவை அல்ல என்பது உண்மையே. இந்த நிலையை மாற்ற தற்போதைய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அது முழுமையடைய இன்னும் 3 ஆண்டுகள் ஆகலாம். அதுவரை அரசின் துல்லியத் தாக்குதலைத் தள்ளிப் போட முடியாது. இது ஒருபுறமிருக்க கிராமப்புற வங்கிகளில் இதுவரை காணாதவகையில் பெருமளவு வங்கிக் கையிருப்பு கூடியிருக்கிறது. வரும் நாட்களில் இந்தக் கையிருப்பு கிராம மக்களுக்கு அளிக்கப்போகும் லாபங்கள் அதிகமாக இருக்கும்.
 7. ரொக்கமற்ற பரிமாற்றம் (Cashless Transaction- Digital India) என்பதை மோடி முன்வைத்தபோது, அரசு தனது இலக்கை மாற்றுவதாக எதிர்க்கட்சியினருடன் கூடிக்கொண்டு ஊடகங்கள் புலம்பின. இதற்கு சரியான விளக்கத்தை ஏற்கனவே பார்த்துவிட்டோம். ஆனாலும், அரசை கேலி செய்ய ஊடகங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக பல ஏ.டி.எம்.கள் (சுமார் 40 சதவீதம்) இயங்கவில்லை. இதனை Cashless India என்று கேலி பேசி மகிழ்ந்தனர் ஊடக அறிஞர்கள். இதற்கு, திரை மறைவில் மோசடிப் பேர்வழிகளுடன் கைகோர்த்துக்கொண்டு கட்டுக்கட்டாக 2000 ரூபாய் நோட்டுகளை அள்ளி வழங்கிய வங்கி அதிகாரிகளும் ஒரு காரணம். இதை அரசு நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. இப்போதும்கூட, அரசு நடவடிக்கையால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் விரைவில் போராட்டம் நடத்தப் போவதாகவும் வங்கி அலுவலர் சங்கங்கள் சில அறிவித்துள்ளன. இதன்மூலமாக இடதுசாரி கட்சிகள் அரசின் நல்ல திட்டத்தை சீர்குலைக்க முயற்சிப்பதை ஏன் யாரும் கண்டிப்பதில்லை?

  அரசியல் ரீதியான எதிர்ப்பு? மமதாவும் கேஜிவாலும்

  அரசியல் ரீதியான எதிர்ப்பு?
  மமதாவும் கேஜிவாலும்

 8. அரசின் நடவடிக்கையால் பணப்புழக்கம் குறைந்து, வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது முக்கியமான புகார். இது ஒதுக்கப்பட முடியாத புகார். இதை அரசு முன்கூட்டியே எதிர்பார்த்திருந்தது. அதனால்தான் 50 நாட்களுக்கு நாட்டு மக்கள் சிரமங்களை சகித்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இப்போது நிலைமை சீரடைந்து வருகிறது. வங்கியில் பணப் புழக்கம் சிறிது சிறிதாக அதிகரிக்கிறது. ஏ.டி.எம்.களிலும் முன்னிருந்த நீண்ட வரிசை இப்போது இல்லை. ஜனவரி இறுதிக்குள் அனைத்தும் சரியாகிவிடும். வலியில்லாமல் அறுவைச் சிகிச்சை செய்ய முடியாது. அதற்காக, அகற்றியே ஆக வேண்டிய கட்டியை அகற்றாமல் வேடிக்கை பார்க்க முடியாது; கூடாது.
 9. நவ. 8 முதல் டிச. 30-க்குள் அரசும் ரிசர்வ் வங்கியும் பல தடவை விதிமுறைகளை மாற்றி மக்களை அலைக்கழித்தன என்பது மற்றொரு புகார். இதற்கு பிரதமர் தெளிவான பதில் அளித்திருக்கிறார். செயல்படும் உணர்வுள்ள அரசானது மக்களிடமிருந்து கிடைக்கும் எதிர்வினைகள், ஆலோசனைகளை உடனடியாக அமல்படுத்தும் என்றார் அவர். அப்படித்தான் இந்த 50 நாட்களும், அரசின் பணமதிப்பு நீக்கத் திட்டத்தில் ஒவ்வொரு நடவடிக்கையையும் எடுத்துள்ளது. இதுவரை உலகில் எந்த நாடும் செய்யாத மாபெரும் பொருளாதார நடவடிக்கை இது. இதற்கு முன்மாதிரியும் இல்லை. எனவே, தவறுகள், பிழைகளைத் திருத்திக் கொண்டு முன்னேறும் செயல்திட்டமே இங்கு கையாளப்பட்டது. மோசடிப் பேர்வழிகள் இதில் பயன் பெற்றுவிடக் கூடாது என்பதே அரசின் இலக்கு. எனவேதான், தினசரி தேவைக்கேற்ப, பிரதமருக்கு மக்கள் அளித்த ஆலோசனைகளுக்கு ஏற்ப விதிமுறைகள் மாற்றப்பட்டன.
 10. சமுதாயத்தில் சிறிய எண்ணிக்கையில் உள்ள பதுக்கல்காரர்களைக் களைய ஒட்டுமொத்த தேசமும் சிரமப்பட வேண்டுமா, அனைவரையும் சந்தேகக் கண்ணுடன் அரசு பார்க்கலாமா என்ற கேள்வி, பார்க்க புத்திசாலித்தனமாகத் தோன்றும். ஆனால், சாமானிய மக்கள் ஏன் அவ்வாறு யோசிக்கவில்லை என்பதை இந்தக் கேள்வி கேட்பவர்கள் உணரவில்லை. சாமானிய குடிமக்கள் அரசின் நோக்கத்தை தெளிவாக உணர்ந்தார்கள். ஆனால், எதிர்ப்பாளர்களோ அதில் குறையும் உள்நோக்கமும் காண விழைகிறார்கள். இதுதான் வேறுபாடு. அனைவரையும் சோதிக்கும்போதுதான் குற்றவாளிகள் சிக்குவார்கள் என்ற சராசரி உண்மையும்கூட அறியாத அரசியல் எதிர்ப்பாளர்கள், இத்திட்டத்தின் இயல்பான குறைபாடுகளைப் பெரிதுபடுத்தி, தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொண்டார்கள். மிக விரைவில் அரசு தனது துல்லியத் தாக்குதல் நடவடிக்கையின் பலன்களை முழுமையாக வெளியிடும்போது, அவர்களுக்கு உரிய பதில் கிடைக்கும்.

இது முதல் முறையல்ல..

உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்படுவது இந்தியாவில் முதல்முறையல்ல. உள்நாட்டுப் பொருளாதாரத்தை விழுங்கும் வகையில் ரொக்கப் பணம் பதுங்கும்போது, அதை முறியடிக்க உலக நாடுகள் கையாளும் வழக்கமே இது. நம் நாட்டிலும் 1946-இல் ரூ. 1000, ரூ. 10,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட்து. பிறகு 1954-இல் தான் ரூ. 1000, ரூ. 5000, ரூ. 10,000 புதிய நோட்டுகள் வெளியிடப்பட்டன.

பிறகு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த ஜனதா கட்சியின் ஆட்சிக் காலத்தில் 1978 ஜன. 16-இல் ரூ. 1000, ரூ. 5000, ரூ. 10,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. முந்தைய நடவடிக்கைகளுக்கும் தற்போதைய நடவடிக்கைக்கும் உள்ள வேறுபாடு, மொத்த ரொக்கத்திலிருந்து நீக்கப்படும் நோட்டுகளின் மதிப்பு இம்முறை மிகவும் அதிகம் என்பதே.

இதற்கு முன் புழக்கத்திலிருந்து நீக்கப்பட்ட உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ஒட்டுமொத்த ரொக்கத்தில் 10 சதவீதம் கூட இருந்ததில்லை. தவிர அப்போதைய இந்தியப் பொருளாதாரத்தின் அளவும் மிகச் சிறியது. ஆனால், இம்முறையோ, புழக்கத்திலுள்ள ரொக்கப் பணத்தில் 86.4 சதவீதம் அளவுக்கு உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள், அதுவும் மிக குறைந்த 50 நாட்களில் புழக்கத்திலிருந்து அகற்றப்பட்டன. இவற்றின் எண்ணிக்கை மட்டுமே,  சுமார் 2,203 கோடி நோட்டுகள்! இவற்றில் சுமார் ரூ. 14 லட்சம் கோடி வங்கிகளுக்கு வந்துவிட்டதாக டிச. 27-ஆம் தேதி புள்ளிவிவரம் கூறுகிறது.

வங்கியில் இந்த நோட்டுகளைச் செலுத்த அளிக்கப்பட்ட காலக்கெடு டிச. 30-உடன் முடிவடைந்தாலும், மார்ச் 31, 2017 வரை, ரிசர்வ் வங்கியில் தகுந்த விளக்கம் அளித்து, அதற்கான வரியைச் செலுத்தி பணத்தை மாற்ற முடியும். (வெளிநாடு வாழ்  இந்தியர்களுக்கு இந்தக் கால அவகாசம் 2017 ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது). அதுவரை, இந்த நோட்டுகளை அதிக அளவில் வைத்திருப்பது பொருளாதாரக் குற்றம் என்று அறிவித்து டிச. 28-இல் அவசரச் சட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளது. செல்லாது என்று அறிவிக்கப்பட்ட உயர்மதிப்பு நோட்டுகளின் முகமதிப்புக்கு இனி ரிசர்வ் வங்கி பொறுப்பாகாது என்பதே அந்த அவசரச் சட்டத்தின் பொருள். அதாவது, மார்ச் 31-க்குள் வங்கிக்கு மீதமுள்ள 1.44 லட்சம் கோடி உயர்மதிப்பு நோட்டுகள் வராவிட்டால் அவை, அரசுக் கணக்கில் பறிமுதலானவை ஆகிவிடும். அவற்றை வைத்திருந்தாலும் அவை மார்ச் 31-க்குப் பிறகு வெறும் வண்ணத்தாள்கள் மட்டுமே.

இதற்கு முந்தைய அரசுகள் போலல்லாது தற்போதைய அரசு அறுதிப் பெரும்பான்மை பெற்ற அரசாக இருப்பதால், கொள்கை முடிவுகளை துணிவுடன் தொடர்வதிலும், பொருளாதாரச் சீர்திருத்தங்களில் தயக்கமின்றி ஈடுபடவும் முடிகிறது. ஆகவேதான், மோடியின் இந்த அதிரடி நடவடிக்கை, இந்தியப் பொருளாதாரத்தைப் புதுப்பிக்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

 

பண மதிப்பிழப்பின் உடனடி நன்மைகள்:

அரசின் பண மதிப்பிழப்பு (Demonetisation) நடவடிக்கையால் நாட்டில் புழங்கி வந்த கள்லநோட்டுகள் செல்லாது போயின. ஒரு புள்ளிவிவரத்தின்படி சுமார் ரூ. 9,000 கோடி கள்ள நோட்டுகள் புழங்கி வந்துள்ளன. மேற்கு வங்க மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் கள்ள நோட்டு என்று தெரிந்தாலும் அவை பயன்பாட்டில் இருந்தன. அவை முடக்கப்பட்டதால் உடனடி நன்மையாக பயங்கரவாதிகள், நக்ஸலைட்களின் செயல்பாடுகள் குறைந்தன.

அமைதி திரும்பிய காஷ்மீர்

அமைதி திரும்பிய காஷ்மீர்

உதாரணமாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஆறு மாதங்களாக காவல்துறையினர், ராணுவத்தினர் மீது நடத்தப்பட்டு வந்த கல்வீச்சு சம்பவங்கள் நவ. 8-க்குப் பிறகு நின்று போயின. கல்வீச்சு நடத்தும் இளைஞர்களுக்கு கூலியாக கள்ள நோட்டுகள் வழங்கப்பட்டன. அதற்கு தினசரி கூலியாக ரூ. 1000 வரை அளிக்கப்பட்டது. கள்ள நோட்டுகள் செயலிழந்த்தாலும், உயர்மதிப்பு நோட்டுகள் மதிப்பிழந்ததாலும், அவற்ரை கூலியாக்க் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால், ஸ்ரீநகரில் அமைதி திரும்பியது. இதனை பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறி இருக்கிறார். மும்பையில் குற்றங்கள் குறைந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார் (தி ஹிண்டு- 27.11.2016).

சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் தலைமறைவாக இயங்கும் நக்சலைட்கள் பலர் தங்களிடம் இருந்த உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்ததால் அரசிடம் தாங்களாக முன்வந்து சரண் அடைந்துள்ளனர் (எகனாமிக் டைம்ஸ்- 29.11.2016).

ஹவாலா முறைகேடுகள் கட்டுக்குள் வந்துள்ளன. ஹவாலா முறை மூலமாகவே நமது நாட்டுப் பணம் வெளிநாட்டு வங்கிகளுக்கு கடத்தப்படுகிறது. ஏற்கனவே வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள பல லட்சம் கோடி பனத்தை மீட்டு வரும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ள நிலையில் உள்ளூர் ஹவாலா தரகர்கள் முடக்கப்படுவது முக்கியமானதாகும் (இந்தியா டுடே- 10.11.2016).

செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூ. 100, ரூ. 500 நோட்டுகளைப் பயன்படுத்தி உள்ளாட்சி அமைப்புகளில் வரி நிலுவையைச் செலுத்த அரசு அனுமதி அளித்ததால், நாடு முழுவதும் பெரும்பாலான உள்லாட்சி அமைப்புகளின் வங்கி இருப்பி அதிகரித்திருக்கிறது. உதாரனமாக, ஹைதராபாத் மாநகராட்சியில் மட்டுமே, நவ. 8-க்குப் பிந்தைய 4 நாட்களில் ரூ. 160 கோடி வசூலானது. இது சாதனை அளவாகும்.

உரை கல்: 

pranab-mukerjeeகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

(கணக்கில் வராத பணத்தையும் கள்ளநோட்டுகளின் புழக்கத்தையும் அரசின் இந்த உறுதியான நடவடிக்கை தடுக்கும்)

arunthathi-bhattacharyaஎஸ்.பி.ஐ தலைவர் அருந்ததி பட்டாசார்யா

(நம்மைப் போன்ற ஒரு பெரிய நாட்டில் பண  மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர் செயல்பாடாகும்.  கருப்புப் பணத்தை ஒழிப்பதில் இது மிகவும் துணிவான நடவடிக்கை)

nithish-kumarபிகார் முதல்வர் நிதிஷ்குமார்

(சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளை மத்திய அரசின் இந்த நடவடிக்கை தடுக்கும்).

 

அடுத்தது என்ன?

மக்கள் வங்கிகள் முன்னும் ஏ.டி.எம். இயந்திரங்களின் முன்னும் நீண்ட வரிசையில் காத்துக் கிடப்பதாக அரசின் விமர்சகர்கள் புகார் கூறியபோது, பிரதமர் மோடி கூறிய வாசகம் முக்கியமானது. “சுதந்திரம் பெற்ற நாளிலிருந்தே அரசின் எந்தத் திட்டத்தைப் பெற வேண்டுமாயினும், சான்றிதழ் பெற வேண்டுமாயினும், மக்க்ள் வரிசையில் காத்திருக்கவே செய்தார்கள். தற்போது மக்கள் வங்கி முன்பு நிற்பதே கடைசியாக இருக்கும். இனி அவர்கள் வரிசையில் காத்திருக்கத் தேவை ஏற்படாத வகையில் அரசின் நடவடிக்கைகள் இருக்கும்” என்றார் மோடி. மின்னணு பணப் பரிமாற்ற முறைக்கு மக்களை மாற்ற அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் கூட அரசு நடவடிக்கையின் ஓர் அங்கமே.

அதற்காக மக்களை மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு ஊக்குவிக்க அரசு பரிசுத் திட்டங்களையும் அறிவித்துள்ளது. இதற்காக ரூ. 340 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. உண்மையிலேயே, பற்று அட்டை, கடன் அட்டைகளைப் பயன்படுத்துவதும், பணப்பை (வாலட்) செயலிகளைப் பயன்படுத்துவதும் பெருமளவு குற்றங்களைக் குறைக்கும். தவிர, ஒவ்வொரு விற்பனையும் வர்த்தகச் செயலும் வங்கிக் கணக்கிற்கு வருவதால் வர்த்தகர்கள் வரி ஏய்க்க முடியாது. இதுவரை, பல லட்சம் ஈட்டும் வியாபாரிகள் முறையான வரி செலுத்தவில்லை. அவ்வாறு இனிமேல் செய்ய முடியாது.

இந்நிலையில் நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் 2012-இல் கூறிய முக்கியமான ஒரு கருத்தைப் புரந்தள்ல முடியாது. “கருப்புப் பொருளாதாரத்தை முறியடிக்க உயர் மதிப்பு ரொக்கம் மதிப்பிழப்பு தீர்வாகாது. பினாமி சொத்துகள், தங்கம் என பதுக்கல் இருக்கும் வரை கருப்புப் பணத்தைக் குறைக்க முடியாது. வருமான வரித் துறை கணக்கீட்டின் படி கருப்புப் பண்மாக 6 சதவீதம் மட்டுமே ரொக்கமாக உள்ளது” என்று அந்த வாரியம் கூறியது.

பறிமுதலான கருப்புப் பணக் குவியல்...

பறிமுதலான கருப்புப் பணக் குவியல்…

எனவேதான் அடுத்து, பினாமி பெயர்களில் சொத்துகள் வாங்கிக் குவித்தவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று அறிவித்திருக்கிறார் பிரதமர். அனேகமாக 5 மாநிலத் தேர்தல் முடிந்த பிறகு அரசின் கடும் நடவடிக்கையை இத்திசையில் எதிர்பார்க்கலாம். அரசியல்வாதிகள், நடிகர்கள், பெரு வணிகர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் தங்கள் குடும்பத்தினர் பெயரில் மட்டுமல்லாது மாற்றார் பெயரிலும் சொத்துகள் வாங்குவது வழக்கமாக உள்ளது. அவர்கள் அரசு நடவடிக்கையை திசைதிருப்பக் கையாளும் இத் தந்திரம் அரசு நடவடிக்கையால் முறியடிக்கப்படும். அதாவது, யாருடைய பெயரில் சொத்து இருக்கிறதோ அவரே அதன் உண்மையான உரிமையாளராகி விடுவார் என்று அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, தனது பெயரில் ஒருவர் பினாமி சொத்து வாங்கி இருப்பதாக யாரேனும் புகார் செய்தால், அவ்வாறு சொத்து வாங்கியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான சட்டத் திருத்தங்கள் 2016 நவம்பருக்கு முன்னமே நிறைவேற்றப்பட்டுவிட்டன!

அதேபோல தங்கக் கட்டுப்பாடு சட்டம் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது. அதாவது ஒரு குடும்பத்தினர் குறைந்தபட்சம் எவ்வளவு தங்க நகைகளை வைத்திருக்கலாம் என்பதற்கு ஏற்கனவே 1968-ஆம் வருடத்திய சட்டம் உள்ளது. அதை அரசு தீவிரமாக அமல்படுத்தினால், கருப்புப் பணத்தை தங்கமாகப் பதுக்குவதைத் தடுக்க முடியும். இதிலும் கூட சாமானிய மக்களுக்கு எந்தச் சிரமமும் இருக்கப் போவதில்லை.

அவரும் நாட்களில் வருமான வரித் துறையினர், அமலாக்கத் துறையினர், மத்தியப் புலனாய்வு அமைப்பினர் ஒருங்கிணைந்து நடத்தும் சோதனைகள் நாடு முழுவதும் நடத்தப்பட உள்ளன. ஏற்கனவே அத்தகைய நடவடிக்கைகள் துவங்கிவிட்டன. மணல் மாஃபியா வேலூர் சேகர் ரெட்டி, சென்னை ஈ.டிஏ. குழுமம், முன்னாள் தலைமை செயலர் ராம மோகன ராவ், அன்னிய செலாவணி தரகர் பாரஸ்மல் லோதா ஆகியோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஓர் உதாரணம்.

2016 டிச. 28 வரை நடத்தப்பட்ட 983 ரெய்டுகளில் சுமார் ரூ. 4172 கோடி கனக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவை தொடர்பாக 5027 விசாரணை நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் 477 வழக்குகள் சிபிஐயால் பதியப்பட்டுள்ளன. இந்த ரெய்டுகளில் சிக்கிய புதிய 2,000 ரூபாய் நோட்டுகளின் குவியல் மூலமாக வங்கியாளர்கள்- கருப்புப்பண முதலைகள்- ஹவாலா பேர்வழிகளின் கூட்டணியை மக்கள் உணர முடிந்தது. தவறு செய்த சுமார் 1200 வங்கி அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இதுவரை நடந்த கருப்புப் பண நடவடிக்கைகளின் விளைவை மேற்கண்ட கடும் நடவடிக்கைகளால் தடுக்க முடியாது. ஆனால், அவர்களை வரிவிதிப்புக்குள் கொண்டுவருவதும் பறிமுதல் நடவடிக்கையும் அரசால் செய்யக் கூடியதாகும். அதேசமயம், இனிவரும் நாட்களில் ரூ. 2 லட்சத்துக்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்பட உள்ளதால், முன்னர் நடந்த பதுக்கல் தொடர்வது சிரமமே. இதுவே தற்போதைய மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் உச்சகட்ட நன்மையாகும்.

மொத்தத்தில், ரத்தசோகையால் பீடிக்கப்பட்ட நோயாளி போல, கருப்புப் பணப் பொருளாதாரத்தால் உள்ளூற சக்தி குறைந்திருந்த இந்தியா தற்போது புத்திளமைக்கான கசப்பு மருந்தை விழுங்கிவிட்டது. வரும் நாட்களில் இந்தியப் பொருளாதாரம் மேம்படும்போது, இநதக் கசப்பு மருந்தின் வீரியம் புலப்படும். அரசியல் ரீதியாக ஆபத்தானது என்ர போதிலும் கட்சி அரசியலை மீறி துணிவுடன் சிர்திருத்தத்தை மோடி மேற்கொள்வதால், அடுத்து வரும் அரசின் தொடர் நடவடிக்கைகள் நமது பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கையும் உருவாகிறது.

 

குறிப்பு:

திரு. சேக்கிழான், பத்திரிகையாளர்.

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in தை-2017 and tagged . Bookmark the permalink.

1 Response to 2.7 கருப்புப் பணத்துக்கு எதிராக தேசத்தின் யுத்தம்

 1. எம்.தினேஷ் says:

  நல்ல கட்டுரை. பிற பத்திரிகைகளில் வெளிவராத தகவல்கள் பல உள்ளன. பிரதமர் மோடியின் முயற்சி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இதைப் படித்தவுடன் ஏற்படுகிறது. இந்தக் கட்டுரையை எழுதியவருக்கு நன்றி.
  -எம்.தினேஷ்,

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s