2.29 ஊடகத்தில் தனியொருவன்

-சத்தியப்பிரியன்

cho-1

சோ.எஸ்.ராமசாமி

(பிறப்பு: 1934, அக். 9- மறைவு: 2016, டிச. 7)

அப்போது ஊடகங்களின் தாக்கம் இந்த அளவுக்குக் கிடையாது. அதேபோல எதற்கெடுத்தாலும் ஆசிரியப்பணி ஆற்றும் முகநூல் எழுத்தாளர்கள் போன்ற அரைகுறை மேதாவிகளும் அப்போது கிடையவே கிடையாது. மக்களுக்குச் செய்தி சொல்வதென்றால் பத்திரிகைகள், நாடகம், ரேடியோ, சினிமா இவற்றின் மூலமே சொல்ல முடியும். இதில் ரேடியோ முற்றிலும் அரசு சார்ந்த ஊடகமாக இருந்தது.  சினிமா கொஞ்சம் பெரிய மீடியம்- பொருளாதாரம் சார்ந்தது. கவிஞர் கண்ணதாசனே தனது கருத்துக்கள் எதையும் சொல்லமுடியாமல் கூலிக்கு மாரடிக்க வேண்டியிருக்கிறது என்று புலம்பியபோது அவரது நண்பர் ஒருவர் சொந்தப்படம் எடுக்கச் சொல்லி எடுத்ததுதான் மாலையிட்ட மங்கை. பத்திரிகை துறையிலும் சந்தைப்படுத்துதல் ஓர் எழுத்தாளனுக்கு மிகுந்த சோர்வை அளிக்கக் கூடிய சமாச்சாரம். எனவே சோ என்று அறியப்படும் சோ.எஸ்.ராமசாமி நாடகத்தைத் தனது கருவியாகக் கையில் எடுத்தார்.

அவருடைய குடும்பச் சூழலும் அதற்கு முக்கிய பங்கினை அளித்தது என்றுதான் சொல்ல வேண்டும். சோ.ராமசாமியின் தந்தை ஆரம்பத்தில் வக்கீல் தொழில் செய்தாலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகச் சீரிய முறையில் விவசாயம் செய்து, பாரத தேசத்தில் விவசாயிகளுக்கான  ‘பாரத் க்ரிஷிக் ரத்னா’ என்ற மிக உயரிய விருதைப் பெற்றவர். இஸ்ரேலின் சாகுபடி முறைகளை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், பலருக்குத் தனது விவசாயம் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்தவர். அதேபோல அவருடைய தாய்வழிப் பாட்டனாரான திரு.டி.எம்.அருணாசல ஐயர் என்பவரும் மிகப் பெரிய வக்கீலாக இருந்தார். மனுக்களுக்கு வரைவு தயாரிப்பதில் நிபுணர். தந்தைவழிப் பாட்டனாரான வக்கீல் திரு.ராமநாத ஐயரின் பல சட்டப் புத்தகங்கள் இன்றளவும் சட்ட வல்லுனர்களால் முக்கியமான சட்டப் புத்தகங்களாகக் கருதப்படுகின்றன. பின்னர் தனது வக்கீல் தொழிலை விட்டுவிட்டு காஞ்சி மடத்தில் பரமாச்சாரியார் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகர சுவாமிகளுடன் தன்னை இணைத்துக் கொண்டுவிட்டார். எனவே இவர்களின் ஒட்டுமொத்த அறிவினையும், செல்வாக்கையும் முன்னிறுத்துபவராக சோ ராமசாமி விளங்கினார்.

ஆரம்பத்தில் ஒரு வழக்கறிஞராகத் தனது பணியைத் துவங்கிய அவர், நாடகத்தைக் கையில் எடுத்ததற்கு முக்கிய காரணம் ஒட்டுமொத்த பாரதக் கலாசாரத்தின் மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை. இதனை,  பிற்காலத்தில் தனிப்பெரும் ஆளுமையாக கோலோச்சிய அவரது  ‘துக்ளக்’ பத்திரிகையில் அவர் எழுதிய  ‘எங்கே பிராமணன்? மகாபாரதம்’ போன்று சில ஹிந்து தர்மங்களை முன்வைக்கும் நெடுந்தொடர்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

துக்ளக் இதழ் ஒன்றை முழுமையாகப் படித்தால் போதும் நாம் சோவுடன் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தும். இதுதான் அவரது வெற்றி. அவரைத் தனது அரசியல் எதிர் அணியாகக் கருதிய திரு. கருணாநிதி தான் நடத்திய முரசொலி தினசரியால் கூட இதனைச் சாதிக்க முடியாமல் போனது என்றுதான் சொல்ல வேண்டும்.

முதலில் அவர் கையில் எடுத்துக் கொண்ட விஷயத்தைப் பார்ப்போம். சில விஷயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்வதென்றால் சலிப்பு ஏற்படும் என்றாலும் பரவாயில்லை, சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியால் உருவான மாயத் தோற்றம்தான் ஆரிய- திராவிட மாயை. அது இப்போது முற்றிலும் உடைக்கப்பட்டது என்றாலும், 70 ஆண்டுகளுக்கு முன்னர் அதன் தொடர்பாக எழுந்த அரசியல் மாற்றங்களில் முக்கியமானது தமிழகத்தில் தோன்றிய நீதிக் கட்சி. இது குறித்து நீண்ட கட்டுரை எழுத வேண்டும் என்பதால் இப்போது அதன் தொடர்ச்சியாக எழுந்த திராவிட கட்சிகளை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

ஈரோடு. ஈ.வே.ராமசாமி நாயக்கரின் எழுச்சி முற்றிலும் பாரதிய கலாசாரத்தை எதிர்க்கும் ஒற்றைக் குரலாக விளங்கியது. இந்த ஒற்றைக் குரல் மெல்ல மெல்ல பிராமண எதிர்ப்புக் குரலாக மாறியது. அதனை வெறுப்பு அரசியலின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும். நீதிக் கட்சி பின்னல் வேறுவித பரிணாமம் அடைந்து  திராவிடர் கழகமாக மாறியது. அதுவும் நீர்த்து அரசியல் லாபங்களுக்காக உருவான தி.மு.க. போன்ற கட்சிகளும் ஆரிய- திராவிட பேதத்தை மறையாமல் பார்த்துக் கொண்டன. அந்த ஒற்றைக் குரல் அடுத்த காலகட்டத்தில் திரு.கருணாநிதியின் குரலாக மாறிப் போனது.

ராஜகோபாசாரியார், பெரியார் இருவரும் இரு முனைகளின் உச்சத்தில் இருந்தாலும் பெரியாரின் குரலை எதிர்க்கும் எதிர்க்குரலாக ராஜாஜி என்றுமே இருந்ததில்லை. சொல்லப் போனால் ஒரு கட்டத்தில் சுய தேவைகளுக்காக ஈ.வே.ராவின் இன்னொரு குரலாக ராஜாஜி மாறவேண்டிய நிர்பந்தம் உருவானது.

ஆனால் ஈ.வே.ராவின் ஒற்றைக் குரல் கருணாநிதியின் குரலாக மாறியபோது அதனை எதிர்க்கும் குரலாக சோ எழுந்தார். விதூஷகம், அங்கதம் இவற்றைத் தாண்டி அவரது நாடகங்களில் அவர் என்ன சொல்ல வேண்டும் என்று நினைத்தாரோ அதனைச் சொல்வதாகவே அவை இருந்தது. இந்த நிலைப்பாட்டின் காரணமாகவே ஜெயலலிதா பல தவறுகளைத் தெரிந்தே செய்தபோது அவற்றைக் கடுமையாக விமர்சனம் செய்தபடியே  அவருக்கு இறுதி வரையில் உற்ற நண்பராகத் திகழ்ந்தார். இது திராவிட இயக்கத்தின் தலைவர் திரு.வீரமணிக்கும் கருணாநிதிக்கும் இடையிலான நட்பு, புரிதல் போன்றது.

அவருடைய அரசியல் நிலைப்பாடு மூன்று தலைவர்களுடன் முடிந்தது என்றுதான் சொல்ல வேண்டும். மறைந்த தமிழக முதலமைச்சர் காமராஜர் மீது அவருக்கிருந்த பற்று இறுதி வரை மாறவே இல்லை. காங்கிரசின் பல நிலைப்பாடுகளை அவர் கடுமையாக எதிர்த்த போதிலும் அவர் இறுதி வரை காமாரஜரைப் போற்றியபடி இருந்தார். காங்கிரஸ் ஒருகாலத்தில் தன்னிச்சையான கட்சியாக, ஜனநாயக மரபுகளை மீறாத கட்சியாக இருந்தவரையில் அதனிடம் நம்பகத்தன்மை மிகுந்து காணப்பட்டது. இந்த நம்பகத்தன்மையே அவர் காமராஜர் மீது கொண்ட பற்றுக்குக் காரணமாக இருக்கலாம்.cho-2

ஏனென்றால் பின்னால் காந்தியுடன்  எவ்விதத் தொடர்பும் இல்லாதவர்கள் எல்லாம் குறுக்குவழியில் வந்த ஒரு பெயர் காரணமாக ‘காந்தி’ என்ற சொல்லையும் பெயருடன் சேர்த்துக் கொள்ளத் தொடங்கினர். முற்றிலும் காந்தியக் கொள்கைகளுக்கு நேர்மாறாக செயல்படக் காரணமான இந்திரா காந்தியை பிரதம மந்திரி பதவிக்கு முன்னிறுத்தியவர் காமராஜர். தமிழகத்தில் மீண்டும் தேசியச் சிந்தனை என்பது திருவாளர்கள்.சி.என்.அண்ணாதுரை, நெடுஞ்செழியன், கருணாநிதி போன்ற தலைவர்களால் வேண்டுமென்றே பின்னுக்குத் தள்ளப்பட்டு பிரிவினைவாதம் மேலோங்கியபோது எந்த தேசியத்துக்காகத் தனக்கு கிடைக்கவிருந்த பதவியை உதறி காமராஜர் இந்திராவுக்கு வழங்கினாரோ அந்தத் தேசியவாதம் முறியடிக்கப்பட்டது. தேசியம் என்ற பரந்த சிந்தனைதான் சோ காமராஜரை உயர்த்திப் பிடிக்கக் காரணமானது. தூய்மையானவர், ஊழலற்ற ஆட்சி அளித்தவர் ஆகிய பெருமைகளை விட தேசிய நீரோட்டத்துக்கு தனது சுய லாபங்களை இழக்க முன்வந்த காமாராஜரின் தியாகமே சோவால் பெரிதும் போற்றப்பட்டது.

ஜெயலலிதா விஷயத்திலும் அவர் இதனைத்தான் செய்தார். அதற்கு முக்கிய காரணமாக இருந்தது அவர் விடுதலைப் புலிகள் மீது எடுத்த நிலைப்பாடு. இடதுசாரிகளிடமும் ஒருவகை எதிர்ப்பு மனப்பான்மை விடுதலைப்புலிகள் விஷயத்தில் இருக்கும். இடதுசாரிகளும் பிரிவினைவாதம் மூலம் இலங்கை துண்டாடுவதை எதிர்ப்பவர்கள். ஆனால் ஒருங்கிணைவது என்பது அவர்களைப் பொருத்த வரை தேசியம் என்பது கிடையாது. கொள்கை சார்ந்த கட்சி சார்ந்த ஒருங்கிணைப்பு. ஒரு தீவிர இஸ்லாமியனுக்கு இருக்கும் ஒருங்கிணைப்புச் சிந்தனைதான் இடதுசாரி கட்சிகளுக்கும் இருக்கிறது. இலங்கையில் இறுதியாக நடந்த சண்டைகளை சோ ராமசாமி இறுதி வரையில் போர் என்று ஒப்புக்கொள்ளவே இல்லை. ஒரு நாடு தனது நாட்டைத் துண்டாட நினைக்கும் இனவாத சக்திகளின் மீது நிகழ்த்திய ராணுவ நடவடிக்கை என்றுதான் அதைக் கூறி வந்தார். இந்த இடத்தில் சோவுக்கும் இடதுசாரி இயக்கங்களுக்கும் இருக்கும் பேதம் என்னவென்றால், சோ தேசியத்துக்காக எதையும் விட்டுக் கொடுப்பவர். இடதுசாரிகள் சுயநலனுக்காக தேசியம் என்ற சிந்தனையை விட்டுக் கொடுப்பவர்கள்.

சோ.ராமசாமி அவர்கள் திரு. நரேந்திர மோடி பிரதம மந்திரியாக வருவதற்கு ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. இந்த இடத்தில்தான் சோ.ராமசாமி எதிர்க்கட்சிகளாலும், ஏனைய இடதுசாரி சிந்தனையுடைய பத்திரிகைகளாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அரசியல் தரகர் என்று கூசாமல் அவப்பெயர் சூட்டினார்கள். துக்ளக் பத்திரிகையை முழுமையாகப் படித்தவர்களுக்கும்,  ஒவ்வோர் ஆண்டும் அந்தப் பத்திரிகையின் சாராம்சம் போல பொங்கல் விடுமுறையில் அவர் ஆற்றும் நெடிய உரையினையும் கேட்டவர்களுக்கும் தெரியும், அவர் எப்படிப்பட்டவர் என்று.

அவரை முழுமையாகப் புரிந்து கொண்டவர்கள் இப்படி அவதூறு பரப்ப மாட்டார்கள். தனக்குச் சரி எது என்று படுகின்றதோ அதனைக் குறித்துத் தெளிவான அபிப்பிராயமும், அதனை அடுத்தவரிடம் கொண்டு செல்வதில் அவர் காட்டும் முனைப்பும் விடாமுயற்சியும் அபாரமானவை.

மோடிஜியிடம் இருந்த நெருப்பை ஐந்தாறு வருடங்களுக்கு முன்பே கணித்து விட்டவர் சோ ராமசாமி. குஜராத்தில் அசைக்க முடியாத நல்லாட்சியை இரண்டு ஆட்சிக்காலமாக மோடி கொடுத்துவந்ததும், மற்ற மாநிலங்களும் எட்டாத பொருளாதார உயரங்களை குஜராத் எட்டியதுமே காரணமன்றி மோடியிடம் சோ ராமசாமிக்குத் தனி புரிதலோ, விருப்போ இருப்பதற்கு வாய்ப்பில்லை. தான் எதனை சரி என்று எண்ணுகிறாரோ- அவ்வாறு எண்ணும் எண்ணம் என்றுமே தர்மம் சார்ந்ததாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம்- அதனை சோ இறுதி வரைக்கும் நம்பியதோடு மட்டுமில்லாமல் அனைவரிடமும் கொண்டு சென்றார். அவருடைய எதிர்ச் சிந்தனையில் உள்ள ஒருசில திராவிடக் கட்சிகளும், இடதுசாரிக் கட்சிகளும் அவர் வைக்கும் வாதங்களுக்கு எதிர்வாதம் வைப்பதற்கு என்றே துக்ளக் பத்திரிகையை விடாமல் படித்து வந்தனர்.

அவருடைய கொள்கைகள் இறுதியாக தமிழக சாக்கடை அரசியல் நிலையில் நீர்த்துப் போனாலும் இறுதி வரை அவர் காட்டிய நேர்மையும், துணிவும் அசாத்தியமானது. துக்ளக், மறைந்த பாரத பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் கொண்டுவந்த நெருக்கடி நிலைமை காலத்தில் அனுபவித்த அடக்குமுறை தமிழக வரலாற்றுப் பக்கங்களில் தவிர்க்க முடியாத பதிவுகளை ஏற்றிச் சென்றது. கடும் தணிக்கை அமலில் இருந்த 1975-77  காலகட்டத்தில் துக்ளக் பத்திரிகையில், 1951 அன்று வெளிவந்த சர்வாதிகாரி படத்தின் திரைப்பட விமர்சனத்தை எழுதிய சோ.ராமசாமிக்கு நையாண்டியையும் மீறிய துணிச்சல் பெரிதாக வெளிப்பட்டது. அதேபோல அவருடைய  ‘முகமது பின் துக்ளக்’ நாடகம் நாடகமாக நடிக்கப்பட்ட போதும் சரி பிறகு அது திரைப்படமாக வந்தபோதும் சரி, ஆளும் வர்க்கத்தினரால் பல எதிர்ப்புகளைச் சந்தித்தது. அதனை எதிர்த்து உயர்நீதி மன்றத்தை நாடி 22 இடங்களில் தணிக்கைக் குழுவினரின் வெட்டுப் பட்டு அந்தத் திரைப்படம் வெளிவந்தது. அந்தத் துணிவு அவருடன் இறுதி வரையில் இருந்தது. எவருமே சற்றும் சிந்தித்துக் கூட பார்க்காத தருணத்தில் திரு. நரேந்திர மோடியை பிரதம மந்திரி வேட்பாளராக முன்னிறுத்தியதுடன் மட்டுமல்லாமல் அதனை முனைப்பாக நாடு முழுவதும் கொண்டுசென்று அதில் வெற்றியும் பெற்றார்.

அவருடைய திரையனுபவங்களைக் கேள்விப்பட்டால் கூட அவருடைய தனிப்பட்ட துணிச்சல்தான் நினைவுக்கு வருகிறது. ‘காதலா காதலா’ திரைப்படம் எடுத்து வந்த நேரம்- பாலுமகேந்திராவுக்கும் திரைத் தொழிலாளர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டு அது கடும் சண்டையாக மாறி பெப்சி அமைப்பினர் ஒட்டுமொத்தமாக படப்பிடிப்புகளை நிராகரித்தனர். அப்போது கமலஹாசன் துணிச்சலுடன் தான் நடித்துக் கொண்டிருந்த காதலா காதலா படத்தைத் தொடர்ந்து தயாரிப்பதில் கவனம் செலுத்தினார். கமலஹாசன் பக்கம் நியாயம் இருந்ததால் சோ ராமசாமி அவர்கள் தானே வலிய அந்த படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார். அதனைக் கண்டு வியந்து போன கமலஹாசன் மளமளவென்று அந்தப் படத்தில் சோவிற்கென்று ஒரு கதாபாத்திரத்தை அமைத்து உடனடி வசனம் எழுதி நடிக்க வைத்தார். அவருடைய திரையுலகப் பயணம் என்பது ஒரு நிலைக்குப் பின்னர் வெறும் பொழுதுபோக்கோடு நின்று விடாமல் தனது அரசியல் கருத்துக்களை ஏந்திச் செல்லும் கருவிகயாகவே மாறிப் போனது.

மேடை நாடகமாக நடிக்கப் பட்டபோதும் அதன் பின்னர் திரைப்படமாக வந்தபோதும் திமுகவினரால் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளானதுதான் அவருடைய முகமது பின் துக்ளக். அதற்குப் பிறகு அவர் நடித்தப் பெரும்பாலான படங்களில் அவர் அரசியலை நையாண்டி அடிப்பவாராகவே வந்து போனார். இன்றளவும் முகமது பின் துக்ளக் திரைப்படத்துக்கு பழைய படம் என்ற அந்தஸ்தைக் கொடுத்துத் தள்ளி வைக்காமல் புத்தம்புதிய படம் போல வைத்திருப்பதற்கு நமது அரசியல்வாதிகளுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

‘கங்கா கௌரி’ என்ற திரைப்படத்தில் சோ ராமசாமி நாரதராக வருவார். அப்போது சனீஸ்வரனாக வரும் ஓ.ஏ.கே.தேவருக்கும் சோவுக்கும் நடக்கும் உரையாடல் நடுவில் சோ இப்படிக் கூறுவார்.

“பட்டங்கள் என்றால் கேட்டுத்தான் பெறுவது என்பது இப்போதாவது தெரிந்து கொண்டாயே? ஆனால் இதற்கெல்லாம் வழி எனக்கென்ன தெரியும்?”

சோ ராமசாமி இறுதிவரையில் தமிழக அரசின் கலைமாமணி விருதை நக்கலடித்தபடி இருந்தார். இதன் முரண் நகை என்னவென்றால் இவருக்குச் சாதகமான அரசும் சரி, இவருக்கு எதிர்க் கருத்துக்களைக் கொண்ட அரசும் சரி, இந்த விருதை இறுதி வரை அவருக்கு வழங்கவே இல்லை. எதற்கும் சாய்ந்து கொடுக்காத சோ.ராமசாமியின் இந்த உறுதிதான் அவரைத் தமிழக அரசியல் களத்திலும், அவர் அதிகம் நேசித்த கலைத்துறையிலும் தனிச் சிறப்பு மிக்க மனிதராக முன்னிறுத்தியது.

நாடகம், எழுத்து, அரசியல் என்று பல துறைகளில் தனது தனிப்பெரும் முத்திரையைப் பதித்த சோ.ராமசாமியின் மறைவு ஈடு செய்யமுடியாத இழப்பு என்பது வெறும் சம்பிரதாய வார்த்தைகள் இல்லைதான்.

 

குறிப்பு:

prabakarதிரு. சத்தியப்பிரியன் (எ) சேலம் இரா, பிரபாகர், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளர்.

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in தை-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s