2.28 முன்னுதாரணமான பிரசாரகர்

-ஜெ.ஸ்ரீராம்

suriji-2

கி.சூரியநாராயண ராவ்

(பிறப்பு: 1924, ஆக. 20-

மறைவு: 2016, நவ. 18)

 

ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் அகில பாரத சேவா பிரமுக் சூர்யநாராயண ராவ் 2016, நவ. 18-இல் தனது 92 வயதில் பெங்களூரில் காலமானார். தென்பாரதத்தின் சங்க சிற்பி. தமிழகத்தில் சங்கம் வளரக் காரணமானவர் அவர். அவர் 1970 முதல் 1984 வரை தமிழகத்தின் மாநில அமைப்பாளராக ஆர்.எஸ்.எஸ். பணி வளர்த்தார். பின்னர் தென்பாரத ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பாளராக தென் மாநிலங்களில் சங்கப்பணிக்கு வழிகாட்டினார். அவர் சம்ஸ்கிருத பாரதி அமைப்பின் அகில பாரத தலைவராகவும் செயல்பட்டிருக்கிறார். அவர் தலைவராக இருந்தபோதுதான் சம்ஸ்கிருத பாரதி அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டது. சேவாபாரதியின் நிறுவனர்களுள் இவரும் ஒருவர்.

  

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்

-திருக்குறள்

-ஒரு செயலை செய்து முடிக்க அதற்கு பொருத்தமானவர்களிடம் அச்செயலைக் கொடுக்க வேண்டும் என்கிறது திருக்குறள்.

ஒரு காலத்தில் திராவிடம், நாத்திகம் பேசி தேசிய நீரோட்டத்தில் இணைய மறுத்து நாட்டைப் பிளவுபடுத்த திராவிட ஆட்சிகள் முனைந்தபோது, a hard nut to crack என்று கூறப்பட்ட உடைக்க முடியாத பாறையை உடைத்தெறிந்து தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கம்தான் என்று உணரவைக்க சங்கத் தலைமையால் அனுப்பப்பட்ட சிறு உளி தான் சூரிஜி.

1920 ஆகஸ்டு 20 அன்று மைசூரில் பிறந்த சூரியநாராயண ராவ் தனது கல்லூரிப் பருவத்தில் சங்க ஷாகா வர ஆரம்பித்தார். 1946-இல் கணிதத்தில் ஹானர்ஸ் பட்டப் படிப்பை முடித்ததும், சங்க பிரசாரகர் ஆன அவர், மூத்த பிரசாரகர் யாதவராவ் ஜோஷியின் அன்பான வழிகாட்டுதலால் ஈர்க்கப்பட்டார். இருவரும் இணைந்து கர்நாடக மாநிலத்தில் எல்லா இடங்களிலும் சங்க்க் கிளைகளைத் துவக்கி நடத்தினர். படிக்கும்போதும், சங்கப் பணியின்போதும் துணிவுள்ள நல்ல அமைப்பாளராக, சிறந்த சிந்தனையாளராக, லட்சிய பக்தி மிக்கவராக சூரிஜி உருவெடுத்திருந்தார்.

1948 காந்தி மறைவுக்குப் பிறகு சங்கம் தடை செய்யப்பட்டது. தடை நீக்கத்துக்குப் பிறகு குருஜியை கொலை செய்ய நாடு முழுவதும் சதிச் செயல்கள் திட்டமிட்டு அரங்கேற்றம் ஆயின. சாங்கியில் குருஜி வருகையின்போது அவரைத் தாக்கி கொலை செய்ய ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். அதுசமயம் காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றதால்,  பின்னால் பாதுகாப்புக்கு அடுத்த காரில் வந்த சூரிஜிக்கு கிடைத்த கல்லடிகள் ஏராளம். ஆனால் சாங்கிலியில் சூரிஜியை மலர்தூவி வரவேற்க ஏராளமான ஸ்வயம்சேவகர்கள் காத்திருந்தனர். கார் வேகமாக வந்ததால் தூவிய மலர்கள் பின்னால் வந்து கொண்டிருந்த சூரிஜியின் மீது பொழிந்தன. கல்லடிகளையும், மலர்த்தூவலையும் ஒரே நேரத்தில் ஒரே பாவனையுடன் ஏற்றார் சூரிஜி.

1970-களில் சக க்ஷேத்ர பிரசாரகராக (தென் பாரத இணை அமைப்பாளர்) தமிழகம் வந்த சூரிஜி, அன்றைய தமிழக நிலை கண்டு 71 முதல் பிராந்த பிராசாரகராகவே (மாநில அமைப்பாளர்) தனது பணியைத் துவக்கினார். தமிழகத்தில் சங்கப் பணிகள் வளர பல ஆன்றோர், சான்றோரைச் சந்தித்து சங்கப் பணியில் இணைப்பதில் தீவிர உழைப்பைச் செலுத்தினார்.

1975-ஆம் வருடம் நெருக்கடிநிலைக் காலத்தில் சங்கம் தடை செய்யப்பட்டிருந்ததால் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டு அக்காலகட்டத்திலும் சங்கத்தை திறம்பட, வெற்றிகரமாக வழிநடத்தினார். அதன்பிறகு சங்க கார்யகர்த்தர்களை உருவாக்குவதிலும் மிகச் சிறந்த பணியை அளித்தார்.

குமரியில் விவேகானந்தர் நினைவுச் சின்னம் அமைத்த சமயம் கருத்து வேறுபாட்டில் இருந்த சுவாமி சித்பவானந்தரை தனது சிறந்த தொடர்பால் நெருக்கமாக்கி 1980-களில் சங்கத்தின் சிக்ஷண வர்கவை (பயிற்சி முகாம்) திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் நடத்தும் அளவுக்கு நிலைமையை மாற்றினார். அதுசமயம் முகாமில் காலை முதல் இரவு வரை தங்கி சங்கத்தை நேரடியாக உணர்ந்த சுவாமி சித்பவானந்தர், 28.05.1980 அன்று முகாமில் ஸ்வயம்சேவகர்களை  “நீங்கள் பாக்கியவான்கள், தபோவனம் என்றும் உங்கள் தாய்வீடு” என்று கூறினார்.

அதேபோல 1980-களில் ‘துக்ளக்’ இதழில் முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் சமதுவுடன் சூரிஜியின் நேர்காணல் வெளியானபின், அதனைப் படித்த பலர் சங்கத்தை தங்கள் பகுதியில் துவக்க ஆர்வம் காட்டத் துவங்கினர்.

1969-இல் ஸ்ரீகுருஜியின் வழிகாட்டுதலில் கர்நாடக மாநிலம், உடுப்பியில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் அகில பாரத அளவிலான துறவியர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த மாநாட்டில் பல்வேறு சம்பிரதாயங்களைச் சார்ந்த மடாதிபதிகளையும் ஆன்றோரையும் இணைத்து சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த – தீண்டாமைக்கெதிரான-  தீர்மானத்தை நிறைவேற்றச் செய்தது அவரது சிறந்த பணிகளுள் ஒன்றாய் அமைந்தது.

எளிமை, நேர்மை, சிக்கனம், நேரம் தவறாமை, நல்லொழுக்கம், இனிய கனிவான அணுகுமுறை, லட்சியப் பிடிப்பு இவற்றை வாழ்வின் உயிர்மூச்சாக கொண்டு வாழ்ந்து காட்டியவர்.

ஒரு ஸ்வயம்சேவகர் அவரிடம் அவரது நகவெட்டி மிகப் பழையதாக இருப்பதைக் கண்டு அதற்குப் பதிலாக புதியது வாங்கிவிடலாமே என்று கேட்டார். அதற்கு சூரிஜி, “இதனை நான் எத்தனை நாளாக என்னுடன் வைத்திருப்பேன் என்று நினைக்கிறாய்?” எனக் கேட்க, அவரோ  “என்ன ஒரு பதினைந்து வருடம் இருக்குமா ஜி?” என்றார். “நான் இதனை ஐம்பது வருடமாகப் பயன்படுத்தி வருகிறேன்” என்று சொல்லி இருக்கிறார்.

இன்னுமொரு சம்பவம். அவரது ஜிப்பா கிழிந்த நிலையில் இருப்பதை கண்ணுற்ற சங்க நண்பர்,  பனிரெண்டு ஜிப்பாக்களை வாங்கித் தந்திருக்கிறார்.  ஆனால் “இந்த ஜிப்பாவை மீண்டும் தைத்துப் போட்டுக் கொண்டாலே இன்னும் ஆறு மாதம் பயன்படுத்திக் கொள்ளலாம்மே’’ என்று கூறி ஒரே ஒரு ஜிப்பாவை மட்டுமே வாங்கிக் கொண்டார். அவசியமில்லாமல் ஒரு பைசாகூட செலவழிக்கக் கூடாது என்பதில் மிக உறுதியாக வாழ்ந்து காட்டியவர் அவர்.

நினைவாற்றலிலும் மிகச் சிறந்து விளங்கியவர் சூரிஜி. ஒருவரை ஒருமுறை சந்தித்த பின் மிகச் சரியாக நினைவுகூரும் திறன் பெற்றிருந்தார். ஒருமுறை சென்னை காரியாலயத்தில் பேசிக் கொண்டிருந்தபொழுது ஒரு புத்தகம் தேவைப்பட்டது. அருகிலிருந்த என்னிடம்  “நீ மேலே சென்று வலதுபுற அலமாரியில் 2-ஆவது அடுக்கில் 7-ஆவது புத்தகத்தை எடுத்து வா” என்றார்.

சுவாமி விவேகானந்தரைப் பற்றி எப்பொழுது கேட்டாலும் புதுப் புது விஷயங்களைக் கூறுவார். இது எப்படி உங்களுக்கு சாத்தியம் என்று கேட்ட பொழுது,  “இது எல்லோராலும் முடியக் கூடிய விஷயம்தான், வாசிப்புப் பழக்கம் இதனைச் சுலபமாக்கி விடும்” என்றார்.  ‘ஞானதீபம்’ புத்தகத் தொகுப்பினை சுமார் நூறுமுறை படித்துள்ளார் என்பதே இவரது வாசிப்புப் பழக்கத்துக்கு எடுத்துக்காட்டு.

பரமபூஜனீய குருஜி அவர்களின் நூற்றாண்டு விழா சமயத்தில் கோவையில் அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களை சந்திக்கச் சென்றிருந்தோம். அருட்செல்வர் சூரிஜியை வரவேற்று பல்வேறு விஷயங்களைப் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவர் நடத்தி வந்த  ‘ஓம் சக்தி’ மாத இதழ் பற்றிய பேச்சு வந்தபோது, குமரியில் விவேகானந்த கேந்திர திறப்புவிழா சமயத்தில் மகாலிங்கம் ஐயா எழுதிய தலையங்கத்தை முழுவதுமாக சூரிஜி சொன்னார். அதைக் கேட்டு அருட்செல்வர் வியப்புடன் ஆனந்தமும் அடைந்தார்.

பழகுவதற்கு மிகவும் எளிமை, ஒருமுறை ஒப்புக்கொண்டால் நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொள்வது எனப் பண்பாட்டில் சிறந்து விளங்கினார். மூன்று முறை விபத்து நடந்து நடப்பது சிரமம் என்றாலும், தொடர்ச்சியாக அனைத்துப் பணிகளிலும் நிகழ்வுகளிலும் பங்கெடுத்துக் கொண்டிருந்தார். 75 வயதுக்குப் பிறகு மூத்த காரியகார்த்தர்கள் பொறுப்பைச் சுமக்காமல் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதற்கு முன்னோடியாக வழிகோலியவர்.

கம்பீரமான தோற்றம், தனது பார்வையிலேயே சூழ்நிலையை எடைபோடும் பாங்கு, தினசரி அதிகாலை எழல், பிரார்த்தனை, நிறைய எழுதுதல், வாசித்தல், யோகப்பயிற்சி, சங்கப் பிரார்த்தனை என இறுதிக்காலம் வரை சுறுசுறுப்பாக இருந்தார். இவரது காலத்தில் நாமும் வாழ்ந்தது பாக்கியம் எனக் கருதும் வகையில் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் சூரிஜி.

 

குறிப்பு:

திரு.ஜெ.ஸ்ரீராம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தென் தமிழக மக்கள் தொடர்புச் செயலாளர்.

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in தை-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s