2.27 ஜாதி நமது மனதில்தான் இருக்கிறது

-ஸ்ரீ செண்டலங்கார சம்பத்குமார ராமானுஜ ஜீயர் சுவாமிகள், மன்னர்குடி

நேர்காணல்: ஸ்ரீ.பக்தவத்சலம்

திருப்பூர் பக்தர்களை அரவணைத்து ஆசி வழங்கிய மன்னர்குடி ஸ்ரீ செண்டலங்கார சம்பத்குமார ராமானுஜ ஜீயர் சுவாமிகளுடன் சிறு  கலந்துரையாடல்:

jeyar-2

ஸ்ரீ செண்டலங்கார சம்பத்குமார ராமானுஜ ஜீயர் சுவாமிகள்

நாம்: தங்களைப் போன்றே ஜீயர்கள் அனைவரும் இப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் செல்கிறார்களா?

ஜீயர்: எல்லா ஜீயர் சுவாமிகளும் ஸ்ரீமத் ராமானுஜர் வழியில் அவர் ஆற்றிய பணிகளை தங்கள் அளவில் செவ்வனே செய்து வருகிறார்கள். மேலகோட்டை எதிராஜ ஜீயர் நம்மைப் போலவே செல்கிறார்,  ஆந்திராவில் இருக்கக்கூடிய ஸ்ரீமான் நாராயண ஜீயர் இந்தியா முழுக்க கிராமம் கிராமமாகச் செல்கிறார். ஸ்ரீமத் ராமானுஜர் தாழ்த்தப்பட்டவர் அல்லது தலித் என்றோ யாரையும் அழைத்ததில்லை; மாறாக  ‘திருக்குலத்தார்’ என்றே அழைத்து வந்திருக்கிறார். நாம் மக்களுக்கு ஆன்மிகப் படியில் பின்பற்ற வேண்டிய அடிப்படை அறங்களைப் புரிய வைப்பதற்காகவே மக்களைச் சந்தித்து வருகிறோம்.

நாம்: தீண்டாமை என்பது இந்து மதத்திற்கு அவப்பெயரைத் தந்துவிட்டது. அதனை மாற்றும் முயற்சி என்று உங்கள் பயணத்தைக் கருதலாமா?

ஜீயர்: தீண்டாமை என்பது ஹிந்து மதத்தில் இல்லை. மனித மனங்களில்தான் இருந்தது. ஸ்ரீமத் ராமானுஜர் அன்றே இது தவறென்று எடுத்துணர்த்தி எல்லோரும் சமபாவனையோடு இருக்க வேண்டும் என்று சொல்லி,  திருக்குலத்தோருக்கும்  கோயிலில் சென்று வழிபாடு செய்ய உரிமை ஏற்படுத்தித் தந்தார். இன்று மனங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. நாம் நமது கடமையை எம்பெருமானார் வழியில் மேற்கொண்டிருக்கிறோம். அவ்வளவே!

நாம்: உங்கள் மடத்துக்கென்று சம்பிரதாயங்கள், விதிமுறைகள், கட்டுப்பாடுகள் இருக்கும். இதுபோன்ற பயணங்கள் அம்மாதிரியான விதிமுறைகளை மீற வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளதா? அதற்கு எந்த மாதிரியான எதிர்வினை ஏற்பட்டிருக்கிறது?

ஜீயர்: இந்த பயணங்களே ஸ்ரீமத் ராமானுஜர் வழியில் மேற்கொள்வதுதானே?  இதில் என்ன இடர்பாடுகள், விதிமீறல்கள் ஏற்பட முடியும்? ஆச்சாரியன் திருவுளப்படி எல்லாம் சிறப்பாக நடந்தேறும்.

நாம்: நாகப்பட்டினம் அருகில் கரிமேடு என்ற கிராமத்தில் சமீபத்தில் மதமாற்றம் (நாள் தேவை) பிரச்னை ஏற்பட்டதே? அங்கு உங்கள் செயல்பாடுகள் எவ்வாறு அமைந்தது?

ஜீயர்: நாம் அங்கு பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம்,  பேனா, பென்சில்,  ரப்பர் போன்ற பொருள்களைக் கொடுத்து உதவுவதற்காகச் சென்றிருந்தோம். அப்பொழுது அந்த கிராமத்தில் தடையுத்தரவு போடப்பட்டிருந்தது. ஆனால் குழந்தைகள் நம்மை அவர்கள் இல்லத்துக்கு வரும்படி அழைத்தார்கள். அவர்களின் விருந்தினனாக அவர்கள் இல்லத்துக்குச் சென்றேன். திருக்குலத்து மக்கள் அவர்கள். அங்கு அவர்களுக்காக லக்ஷ்மி ஹோமம் போன்ற பூஜைகளைச் செய்து வைத்தோம். அவர்களோடு கலந்துரையாடினோம். அவர்கள் மிகுந்த சந்தோஷத்தோடும் நிறைவான மனதோடும் இருந்தார்கள். மக்களின் சந்தோஷமும், அமைதியும் அங்கு இயல்பு நிலை ஏற்பட வழியுண்டாக்கியது. இது நமது கடமை; அதனைச் செய்தோம் அவ்வளவே.

நாம்: எதிர்த்தரப்பாளர்கள் உங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா?

ஜீயர்: அவர்களையும் அழைத்திருந்தோம். ஹோமத்திற்கு அவர்களும் உதவி புரிந்தார்கள். அமைதி திரும்பியது.

நாம்: இனி மீண்டும் பிரச்னை அங்கு வர வாய்ப்புள்ளதா?

ஜீயர்: வராது; வரக் கூடாது. அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடக்க வேண்டும்; நடந்து கொண்டிருக்கின்றன.

நாம்: இப்போது தமிழ்நாட்டில் இந்து விரோதப் போக்கு அதிகரித்திருக்கிறதே?

ஜீயர்: அறுபதுகளில் தொடங்கிய இந்த பிரசாரத்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அது சுயநலத்துக்காக நடந்தது. இன்றைக்கும் அதுதான் காரணம். சுயநலத்திற்காக இன, மொழி வேறுபாட்டினை மக்களிடையே விதைக்கிறார்கள். அவர்களின் சுயநலத்தை மக்கள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். நாம் நமது கடமையைச் செய்தால் மக்கள் நம்மோடு இருப்பார்கள்.

நாம்: சாதி வேறுபாடில்லாமல் அனைவரும் அர்ச்சகராகலாம் என்பதில் உங்களின் கருத்து என்ன?

ஜீயர்: வேதம் பயின்று, ஆத்ம, தேக சுத்தியோடு தகுதியுடையவர்கள் எவராயினும் அவர்கள் அர்ச்சகராகலாம். அர்ச்சகர் இல்லாத கோயில்களில் இதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம். கொள்கையளவில் இது நமக்கு ஏற்புடையதே.

நாம்: திருக்குலத்தாரின் குழந்தைகளுக்கு வேதங்களைக் கற்றுத் தரும் அமைப்பு இருக்கிறதா?

ஜீயர்: மேலகோட்டையில் இருக்கிறது. ஸ்ரீரங்கத்திலேயும் இருக்கிறது. விரும்புபவர்களை நாம் சேர்த்துவிடலாம்.

நாம்: ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவில் நமது நடவடிக்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?  ஏதேனும் திட்டம் இருக்கிறதா?

ஜீயர்: திட்டங்கள் ஏட்டளவில் இல்லாமல் செயலாக வர வேண்டும். ஸ்ரீமத் ராமானுஜர் என்ன சொல்கிறார்?  ஜாதிபேதம் இல்லை,  யாரெல்லாம் நாராயணா என்று சொல்கிறார்களோ அவர்களெல்லாம் ஒன்றுதான் என்றுதானே?, இதை நடைமுறைப்படுத்தினாலே போதும், எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.

நாம்: ஜாதியை ஒழிக்க முடியுமா?

ஜீயர்: ஜாதி நமது மனதில்தான் இருக்கிறது,  நாம் நினைத்தால் தான் ஜாதி, நினைக்கவில்லை என்றால் இல்லை.

நாம்: இன்றைய இளைஞர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

ஜீயர்: முதலில் நமது அடிப்படை தர்மங்களைப் புரிய வைத்தாலே போதுமானது. விருப்பமுள்ளவர்கள் தாங்களாகவே ஆன்மிகத்தின் அடுத்த படிகளை நாடுவார்கள். அடிப்படை அறங்கள் மிக முக்கியமாகச் சொல்லித் தரப்பட வேண்டும்.

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in தை-2017. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s