2.24 விடுதலையின் போர்ப்படைத் தளபதி

-இல.நாராயணன்

netaji

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

(பிறப்பு: ஜன. 23, 1897)

 

உங்கள் ரத்தத்தைத் தாருங்கள்… உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன்’’

-என்று முழங்கியவர் நேதாஜி.

ஆறரை அடி உயரம்,  அப்பழுக்கில்லாத குழந்தைமுகம், அனைவரையும் கவர்ந்திழுக்கும் காந்தக்கருவிழிகள், சொக்க வைக்கும் செக்கச் சிவந்த மேனி…

தூய கதராடை, துள்ளும் புலி நடை… இதுதான் சுபாஷ் சந்திர போஸ்.

துறவியாக விரும்பி, ஞானியாக வாழ்ந்து, வீரனாக மாறி,  தியாகியாகப்  பரிணமித்து,  எரி நட்சத்திரமாய் உதிர்ந்து போன ஓர் உத்தமத் தலைவர்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் தன்னிகரில்லாத  தலைவர். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரும்,  சுவாமி விவேகானந்தரும் பிறந்த அதே வங்க மண்ணில் பிறந்தவர் நேதாஜி.

வங்கத்தில் கோடாலி என்னும் கிராமத்தில் 1897, ஜன. 23 ம் தேதி பிறந்தார்.  தந்தை  ஜானகிநாத் போஸ். தாய்பிரபாவதி தேவி 14 குழந்தைகளில் சுபாஷ் 9 வது குழந்தை.

16 வயதில் துறவியாக வேண்டும் என விரும்பிவீட்டை விட்டு  வெளியேறி சில மாதங்கள் சுற்றிஅலைந்தார். மீண்டும் வீட்டுக்கு வந்து படிப்பைத்துவங்கினார்.

கல்கத்தா மாநிலக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது,  இந்தியாவுக்கு  எதிரான கருத்துக்களைச் சொன்னதற்காக பேராசிரியர் ஓடென் என்பவரைத் தாக்கினார். அதனால் கல்லூரியில்இருந்து நீக்கப்பட்டார்.  லண்டன் சென்று ஐ.சி.எஸ்.படித்தார். 24 வயதில் அரச போகம் அனைத்தையும் தரும்  ஐ.சி.எஸ்.  பட்டத்தை உதறினார்.

35 ஆவது வயதில் கட்டாக் நகரில் தாம் பிறந்த மாளிகையை  தேசத்திற்காக  அர்ப்பணித்தார். 42 வதுவயதில்  அகில இந்திய காங்கிரஸ் தலைவர்  தேர்தலில் போட்டியிட்டார்.  நேதாஜியை எதிர்த்து பட்டாபி சீதாராமையாவை போட்டியிடச் செய்தார் காந்திஜி. நேதாஜிக்குக் கிடைத்த  வாக்குகள் 1,580. பட்டாபிசீதாராமையாவுக்கு கிடைத்தது 1,317. “பட்டாபியின் தோல்வி என் தோல்வி’ என்று அறிவித்துவிட்டு காங்கிரஸ் மாநாட்டுக்கே போகாமல் ஒதுங்கி நின்றார் காந்திஜி.

“சுபாஷ் சந்திரபோஸ் ஓர் ஓட்டைப் படகு’ என்றுராஜாஜி வர்ணித்தார். இதை எதிர்த்து சத்தியமூர்த்தி,முத்துராமலிங்கத் தேவர்,  காமராஜர்,  ஜீவானந்தம் போன்ற தமிழ்நாட்டு தீவிரவாத காங்கிரஸ் தலைவர்கள் சுபாஷை  ஆதரித்தனர். ஜவஹர்லால்நேரு, அச்சுத பட்டவர்த்தன் ஆகியோர் நடுநிலை வகித்தனர்.

காந்திஜியின் கோஷ்டியைச் சார்ந்த காரியக் கமிட்டிஉறுப்பினர்கள் 12 பேர்  ராஜினாமா செய்தனர். இதனால்மனமுடைந்த நேதாஜி, காங்கிரஸ் தலைவர்  பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு வார்தாவில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டி நேதாஜியை காங்கிரஸ் கட்சியின் அடிப்படை  உறுப்பினர் பொறுப்பிலிருந்தே மூன்று  ஆண்டுகளுக்கு விலக்கி வைத்தது.

அதன் பின்னர் சுபாஷ் ‘பார்வர்டு பிளாக்’ கட்சியைத்தொடங்கினார். முத்துராமலிங்க தேவரும், எஸ்.சீனிவாச ஐயங்காரும் தமிழகத்தில் அக் கட்சியின்தலைமைப் பொறுப்பேற்றனர்.

44 வயதில் தன் உயிரினும் மேலாகக் கருதிய பாரததேசத்தை விடுவிக்க  வேண்டும் என்பதற்காக வெளிநாடுகளுக்குச்  சென்றார். ஜெர்மனியிலும், ஜப்பானிலும், கிழக்காசிய நாடுகளிலும்  அலைந்து திரிந்து  தற்காலிக  சுதந்திர அரசை அமைத்து, இந்திய தேசிய ராணுவத்தை திரட்டி, போரிட்டு உலக வரலாற்றிலேயே ஒரு புதிய சாதனையைப் படைத்தார்.

ஆயுதப் போராட்டம் மூலம் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற வேண்டும்  என்ற  நோக்கத்துடன்  ஜெர்மனி சென்றுஹிட்லரைச் சந்தித்தார்.  இந்தியாவின் வருங்காலசர்வாதிகாரியை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன்  என்று ஜெர்மன் சர்வாதிகாரி சொன்னதற்கு, “”சுதந்திர  பாரதத்தை உருவாக்க மட்டுமே உங்கள் உதவியை நாடி வந்திருக்கிறேன்”என்று பதிலளித்தாராம் போஸ்.

ஜெர்மனியில் இருந்தபோது போஸ் துவக்கிய “இந்தியசுதந்திர  அரசு’ என்ற அமைப்புக்கு, ஜெர்மன் அரசு நிதிஉதவி அளித்தது. 1944 -ஆம் ஆண்டின் இறுதியில்  இந்தியநாட்டைச் சேர்ந்த மக்களிடமிருந்து திரட்டிய நிதியிலிருந்து  50 லட்சம்  யென் பணத்தை டோக்கியோவில் இருந்த ஜெர்மனி தூதரிடம் கொடுத்து கடனைக் கழித்தார் போஸ்.

அவரது தாரக மந்திரம் “ஜெய் ஹிந்த்’.  அதாவது “வெல்க பாரதம்’ .அதை நேதாஜிக்கு அறிமுகப் படுத்தியவர் செண்பகராமன் பிள்ளை என்ற  தமிழர்.

பர்மாவில் மேஜர் ஜெனரல் ஆங்சான் எனும் புரட்சித் தளபதி தலைமையில்  பர்மியப் புரட்சி  ராணுவம் ஜப்பானியரை  எதிர்த்துப் போராடியது. அந்தப் புரட்சிப் படையை ஒடுக்க நேதாஜியின் உதவியை ஜப்பானியர்நாடினர். ‘இந்திய தேசிய ராணுவம் (ஐ.என்.ஏ) என்பதுஒரு கூலிப்படை அல்ல’ என்று கூறி சுபாஷ் அவ்வாறு செய்ய மறுத்தார்.

ஜப்பானில் ஏற்கனவே இந்திய தேசிய ராணுவத்தைஅமைத்திருந்த ராஷ் பிஹாரி போஸ் உதவியுடன்மீண்டும் அதனை அமைத்து, அப்படையைக் கொண்டுபிரிட்டீஷ் இந்திய அரசு மீது போர் தொடுத்தார் நேதாஜி.அப்போது அவர் அளித்த முழக்கம் தான் ‘டில்லி சலோ’.துரதிர்ஷ்டவசமாக இரண்டாம் உலகப்போரில் ஜப்பான்அடைந்த வீழ்ச்சியால்  இந்திய தேசிய ராணுவத்தின்முயற்சி வீணானது.

1943ல் நேதாஜியின் படை பிரிட்டிஷாரிடமிருந்து அந்தமான் மற்றும்  நிக்கோபார் தீவுகளைக் கைப்பற்றியது. நேதாஜி செய்த முதல்  வேலை அந்தத் தீவுகளுக்கு “ஷாஹீத்’ (தியாகம்) மற்றும் “ஸ்வராஜ்’ (சுயராஜ்யம்) என்று பெயர் மாற்றியதுதான்.

1945, ஆக. 18 -ஆம் தேதி தைபேவில் ஒரு விமான விபத்தில் சுபாஷ்  சந்திரபோஸ்  இறந்தார் என அறிவிக்கப்பட்டது.  ஆனால்  தைவான் அரசோ  அப்படி அன்று ஒரு விமான விபத்தே நடைபெறவில்லை என்றது.  இதுவரை   நேதாஜி மறைவு குறித்து 12 கமிஷன்கள் விசாரித்துள்ளன. ஆனாலும் அவரது மரணம் இன்றும் மர்மமாகத் தான் உள்ளது.

.

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in தை-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s