2.22 பாரதம் போற்றும் பெண்மை

-ம.கொ.சி.இராஜேந்திரன்

bharat-matha

பாரத தேசத்தில் என்றும் உயிரோட்டமாய்  ஓடிக் கொண்டிருக்கும் பண்பாட்டு நதியில் பெண்மைக்கு மிகவும் போற்றத்தக்க இடமுண்டு. பெண்மையின் பேராற்றலைப் பாடும் காவியங்களாக சீதையின் கற்புத் திறன், கண்ணகியின் மாண்பு, திரௌபதியின் ஆற்றல் ஆகியன இம்மண்ணில் இன்றளவும் போற்றப்படுவது கண்கூடு. பேசும் தெய்வமாக, அரவணைக்கும் அன்னையாக, வாழ்க்கையில் நலம் புரியும் துணைவியாக, அன்பு காட்டும் சகோதரியாக, செல்ல மகளாக,  நம் நாட்டில் பெண்மையின் உயர்வு பெருமைப்படுத்தப்படுகிறது.

அதையொட்டி, இம்மண்ணில் தை, மாசி, பங்குனித் திங்களில் தோன்றிய மங்கையர்க்கரசிகளை நினைவூட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

திலகவதி நாயனார்

(தைத் திங்கள்- உத்திரம்)

thilakavathi

உடன்பிறந்தானாகிய மருள்நீக்கியார் (அப்பர்)  மீது கொண்ட அன்பினால், தன் வாழ்க்கை முழுவதும் தவக்கோலம் பூண்டு மண்ணுலகில் வாழ்ந்த  மங்கை இவர்.  பிறமதம் சார்ந்த சகோதரன் தாய்மதம் சேரும் வரை மலர்வனம் அமைத்து இறைத்தொண்டு செய்து காத்திருந்த காரிகை.

துயில் நீங்கி,  துயர் நீங்கி  சிவநாமச் சிந்தை பூண்ட சகோதரன் உளம் திருந்தி வரும் நன்னாளை எதிர்பார்த்திருந்தார் திலகவதியார். சூலை நோய் நீங்கி  ‘திருநாவுக்கரசர்’ என்னும் திருநாமத்தைப் பெற்று, இனிய செந்தமிழ்ப் பாக்கள் பாடும் புலவனாய் மருள்நீக்கியாரான சகோதரனை மாற்றி இம்மண்பதைக்குத் தந்த பெருமை பெண்களின் திலகமாக விளங்கிய திலகவதியாரையே சாரும்.

காரைக்கால் அம்மையார்

(பங்குனித் திங்கள்- சுவாதி)

karaikalammayarசைவ ஒழுங்கிற்கும், பக்தி மார்க்கத்துக்கும் வித்திட்ட முன்னோடியாக விளங்கிய பெருமை, பெண்குலத் தெய்வமான  காரைக்கால் அம்மையாரையே சாரும். கணவன் விரும்பாத மெய்யுடலை வேண்டாது பேயுருவம் வேண்டிப் பெற்று இறைவனின் திருவடி நிழலில் இன்றளவும் திருநடனம் காணும் பேறுபெற்ற பேய் மங்கை. “தாயுமிலி, தந்தையிலி, தான் தனியன்” ஆன இறைவனால் ‘அம்மையே’ என்று அன்புருக விளிக்கப்பட்ட வனிதை.

எல்லாவற்றுக்கும் உச்சமாக பக்தி இலக்கியத்துக்கு முன்னோடியாக மூத்த திருப்பதிகம் பாடி அக்காலச் சூழலில் புதுமையைப் படைத்த புரட்சிப் பெண் காரைக்கால் அம்மையார். 101 பாடல்கள் கொண்ட அற்புத்த் திருவந்தாதி, 20 பாடல்கள் ஒண்ட திருவிரட்டை மணிமாலை, 11 பாடல்கள் கொண்ட மூத்த திருப்பதிகம் ஆகிய இவரது திருமுறை இலக்கியங்கள் பெண்ணுலகுக்குப் பெருமை சேர்ப்பதோடு மட்டுமல்லாது, தேசத்திற்கு என்றும் வலிமையூட்டும் வழிபாட்டு மலர்களாக மணம் பரப்பும்.

எம்.எஸ்..பொன்னுத்தாயி

(நினைவு:  ஜனவரி 17, 2012)

ponnuthayi9-ஆவது வயதில் பயின்று, 13-ஆவது வயதில் மதுரை சித்திரைத் திருவிழாவில் வாசித்து தன் இசையால் கேட்பவர்களையெல்லாம் லயிக்க வைத்த முதல் பெண் நாதஸ்வரக் கலைஞர் எம்.எஸ்.பொன்னுத்தாயி அம்மாள். இசைக் கச்சேரியில் ஆண்கள் மட்டுமே வாசித்து வந்த நாதஸ்வர இசையை, தனியொரு பெண்ணாக அமர்ந்து வாசித்து முத்தமிழ்க்குப் பெருமை சேர்த்த பேரறிஞர் இவர்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோதும் வாசிப்பை நிறுத்தாத எம்.எஸ்.பொன்னுத்தாயி , தனது முதல் ரசிகரான கணவரின் மரணத்துக்குப் பின் வாசிப்பதை நிறுத்திவிட்டார். பல்லாயிரம் கச்சேரிகளில் வாசித்த எம்.எஸ்.பொன்னுத்தாயின் நாதஸ்வர இசை அவருக்கு 20 தங்கப் பதக்கங்களையும், நாதகான அரசி, கலைமாமணி எனப் பெருமைமிகு பட்டங்களையும் தேடித் தந்தது. நாதஸ்வரக் கலையில் தன்னிகரில்லாத பெயர் பெற்ற பொன்னுத்தாயி அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் பாடமாகவும், ஜப்பான் இசை அருங்காட்சியகத்தில்  படமாகவும் பிரகாசித்துக் கொண்டுள்ளார்.

கல்பனா சாவ்லா

(நினைவு:  பிப்ரவரி 1, 2003)

kalpana-chawlaபாரத தேசத்தின் வம்சாவளிக் குடும்பத்தில் பிறந்து, அமெரிக்காவின் கொலம்பியா விண்வெளி ஊர்தியில் 1997-இல் பறந்து, தன் 41-ஆம் வயதில் உலக மக்களின் நட்சத்திரமாக விளங்கிய நங்கை கல்பனா சாவ்லா. விண்வெளிக்குப் பயணம் செய்த இந்திய முதல் பெண்மணி, முதல் விண்வெளிப் பொறியாளர், 372 மணிநேரம் விண்வெளியில் இருந்தது எனப் பல சாதனைகள் புரிந்து சரித்திரத்தில் இடம் பிடித்த சாதனையாளர்.

2003-ஆம் ஆண்டு விண்வெளியில் 16 நாட்கள் ஆய்வுகள் முடித்து விண்கலத்தி ல் விண்வெளி வீர்ர்களுடன் திரும்பும்போது அமெரிக்காவின் டெக்ஸாஸ் விண்பரப்பில் வெடித்துச் சிதறி பலியானார், பாரதநாட்டுக்கும் பெண்குலத்துக்கும் பெருமை சேர்த்த கல்பனா சாவ்லா.

சரோஜினி நாயுடு

(பிறப்பு: பிப்ரவரி 10, 1879 – நினைவு:  மார்ச் 2,  1949)

sarojini-naiduஇளைஞர் நலன், பெண்ணுரிமை, விடுதலை, தற்கால இந்திய வாழ்க்கை நிகழ்வுகள், சமூகச் சூழல்கள், மலைகள், ஆறுகள், கோயில்கள் என கருப்பொருள்களைக் கொண்டு கவிதைகளைப் படைத்து  ‘இந்தியாவின் கவிக்குயிலாய்’ (நைட்டிங்கேல்) சிறகடித்தார் சரோஜினி நாயுடு.  12-ஆம் வயதில் சென்னை  பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மெட்ரிக் தேர்வில் முதலிடம் பெற்றவர். வங்காள பிராமணக் குடும்பத்தில் மூத்த மகளாகப் பிறந்த சரோஜினி, தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்ட மருத்துவரை, பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்று திருமணத் துணைவராக ஏற்றது அன்றைய நாளில் ஒரு புரட்சியாக அமைந்தது.

சுதந்திரப் போராட்ட வீர்ர், கவிஞர், இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர், உத்தரப்பிரதேச மாநில முதல் பெண் ஆளுநர் எனப் பல முதன்மைகளுக்கு பேர் பெற்ற சரோஜினி நாயுடுவின் பிறந்தநாள் மகளிர் தினமாக்க் கொண்டாடப்படுவது வியப்பில்லைதான். காந்தியடிகளால்  ‘மிக்கி மவுஸ்’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவரது வாழ்க்கை பெண்ணுலகுக்கு வழிகாட்டியாக அமைந்தது.

வை.மு.கோதைநாயகி

(நினைவு: பிப்ரவரி 20, 1960)

vai-mu-kothainayagi20-ஆம் நூற்றாண்டில் திபெத்தில் பிறந்து, பள்ளி, கல்லூரி செல்லாமலேயே தனது கல்வியறிவை கணவர் மூலமாகவும்,  மாமியார் மூலமாகவும்  வளர்த்துக் கொண்டவர். வை.மு.கோதைநாயகி.  குழந்தைகளுக்கு புதிய புதிய கதைகள் சொல்வதற்காக இட்டுக்கட்டி கதை சொல்லும் கட்டாயத்தில் கற்பனைத் திறனை விரித்தவர் பின்னாளில் 115 நாவல்களை எழுதிய சாதனைக்கு சொந்தக்காரரானார்.

காந்தியடிகளைச் சந்தித்த பின் பட்டாடையை விடுத்து,  மங்கலநாண்  தவிர, ஆடம்பரமான அணிகலன்களை அணிவதையும் தவிர்த்து,  தனது வாழ்நாள் முழுவதும்  கதர்ப்புடவையே உடுத்திய உத்தமப் பெண் வை.மு.கோதைநாயகி. விடுதலைப் போராட்டத்தின் போது 6 மாதம் சிறைத்தண்டனை, 100 ரூபாய் அபராதம் கட்ட மறுத்ததால் மேலும் நான்கு வாரங்கள் சிறைத்தண்டனை பெற்று பாரதத் தாயின் பேரன்பைப் பெற்ற புதல்வியானார்.

பத்திரிகையாளர், நாவலாசிரியர், தேசபக்தர், சமூகத் தொண்டர், பேச்சாளர், கவிஞர் என பன்முக ஆற்றல்களைப் பெற்ற பெண்ணரசியான வை.முகோதைநாயகியை நாவல்ராணி, கதா ஏக அரசி என்றெல்லாம் சமகால எழுத்தாளர்கள் போற்றினர். தனது  50 ஆண்டுகால வாழ்க்கையில் 35 ஆண்டுகளை எழுத்துலகில் பிரகாசித்து,  பெண்ணுலகில் புதுமைப் பெண்ணாக பெருமை பெற்றார் வை.மு.கோதைநாயகி.

தில்லையாடி வள்ளியம்மை

(நினைவு: பிப்ரவரி 22, 1898)

thillayadi-valliyammaiபாரத தேசத்தை ஒரு போதும் பார்த்திராது, கூலித் தொழிலாளியின் மகளாய்ப் பிறந்து உரிமைப் போராட்டத்தில் 16-ஆம் வயதில் உயிர்நீத்த ஒரு பெண்போராளிதான் தில்லையாடி வள்ளியம்மை. இந்தியர்களின் மீது விதிக்கப்பட்ட வரி, கொடுமைகளை எதிர்த்து தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் தலைமையில் நடந்த அறப்போராட்டத்தில் கலந்து கொண்டு தனது தாயுடன் சிறை சென்றபோது வள்ளியம்மைக்கு வயது 16.

சிறையில் கடுமையான வேலை செய்ததால் மெலிந்த தேகம் கொண்டவர் நோய்வாய்ப்பட்டார். அபராதம் கட்ட மறுத்து சிறைவாசத்தைத் தொடர்ந்தார். ஒருபுறம் படுத்த படுக்கையாக மருத்துவமனையில் தந்தை, இன்னொருபுறம் தாயுடன் வள்ளியம்மை. நிறவெறி பிடித்த வெள்ளைய அரசாங்கம் வள்ளியம்மையின் உடல்நிலை கண்டு அஞ்சி 3 மாதங்களுக்குப் பின் வெளியே அனுப்பியது. வெளியே வந்து பத்தே நாட்களில் மரணத்தைத் தழுவினார்.

போராட்டத்தின் போது, வெள்ளையன் ஒருவன் காந்திஜியை சுட முயற்சித்தபோது, காந்தியின் முன்னால் வந்து நின்று தன் மார்பைக் காட்டிய வீராங்கனை. குழந்தைக்கு தூளி கட்டுவது போல துணியில் தொட்டில் கட்டி அதில் வள்ளியம்மையைக் கிடத்தி அமர்ந்து காந்திஜியும், அவரது யூத நண்பர் போலக்கும் மருத்துவமனை கொண்டு சேர்த்தனர், “இத்தனை கஷ்டங்களுக்கும் நான்தானே?” என்ற காந்தியடிகளை நோக்கி மனோதிட்பத்துடன் ”துளியும் வருத்தமில்லை.அடுத்த பிறவியிலும் சுதந்திரப் போராட்ட வீராங்கனையாகப் பிறக்கவே ஆசைப்படுகிறேன்” என்று பதிலளித்த பாரத தேசத்துப் புரட்சிப்பெண் வள்ளியம்மை.

கஸ்தூரிபா காந்தி

(நினைவு: பிப்ரவரி 22, 1944)

kasturba-gandhiமகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கைத் துணையாக இல்லறத்தில் மட்டுமல்லாது தேசிய வாழ்க்கையிலும் துணைநின்று இந்திய குடும்பத்தலைவிகளின் வாழ்வுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் கஸ்தூரிபா காந்தி. தனது கணவரின் எல்லாவித சத்திய சோதனைகளுக்கும் சாட்சியாய் நின்று வாழ்வையே சமர்ப்பணம் செய்து காந்தியோடு இரண்டறக் கலந்த இல்லறத் துணைவி- இல்லறத் துறவி.

இனவெறிக்கு எதிராக தென்னாப்பிரிக்காவில் நடந்த போராட்டங்களிலும், இந்தியாவில் நடைபெற்ற  விடுதலைப் போராட்டங்களிலும் கணவருடன்  கலந்து கொண்டு தன்னில் இருந்த   ‘சுதந்திரப் போராட்ட வீராங்கனை’யையும் வெளிப்படச் செய்தவர்.

எளிய வாழ்வு மேற்கொண்டு  ‘கணவரின் (காந்திஜி) பாதையே எனது பாதை” என்ற கொள்கையில் தவமாக இருந்து, அவரது பணிகளுக்கெல்லாம் முன்மாதிரியாக, உசாத்துணையாக விளங்கிய உத்தமப்பெண் கஸ்தூரிபா காந்தி.

ருக்மணிதேவி அருண்டேல்

(பிறப்பு: பிப்ரவரி 29, 1904)

rukmanideviதனது 25 நாட்டிய நாடகங்களில் மரபு வழுவாத நாட்டியம், சிருங்காரம், பக்தி, கலையம்சம்,ஆன்மிகம்,இசை எனப் பல்வேறு பாரதிய விழுமியங்களை வெளிப்படுத்திய 20-ஆம் நூற்றாண்டில் கலைத்துறையில் சிறந்த பெண்மணி ருக்மணி தேவி அருண்டேல். 3-ஆம் வயதில் பரதக்கலை கற்றுக் கொண்டு கலாக்ஷேத்திராவுக்கு வடிவம் கொடுத்து நாட்டியக் கலைக்கு புத்துணர்வு ஊட்டிய புதுமைப்பெண்.

‘தேவதாசி நாட்டியம்’  என்று அந்நாளில் கருதப்பட்ட நாட்டியக் கலையை கற்றுக்கொள்ளும் தனது தைரியமான மனோதிடத்தை வெளிப்படுத்தி பரதக்கலைக்கு கௌரவம் தந்தவர். ஆங்கிலேயரான ஜார்ஜ் சிட்னி அருண்டேலை அவர் திருமணம் செய்தது அக்கால சமுதாயத்தில் புதுமையும் புரட்சியுமே ஆகும். 1977-இல் குடியரசுத் தலைவர் பதவி தன்னை நாடி வந்தபோது அதனை ஏற்க மறுத்து,  ‘தனது வாழ்க்கை முழுவதும் கலைக்கே அர்ப்பணமாக்கிய’ அருந்தவப் புதல்வி ருக்மணி தேவி அருண்டேல்.

எழுத்தாளர் லக்ஷ்மி

(பிறப்பு: மார்ச் 21, 1921)

lakshmiகுடும்பப் பாங்குடனும், ஆபாசமின்றியும், பெண்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி சிறுகதைகள், புதினங்கள், படைத்து பெண்ணுலகுக்குப் பெருமை சேர்த்தவர் லக்ஷ்மி. மருத்துவர் பட்டம் பெற்றும், அதனைத் தொடராமல் சமூகப் பிரச்னைகளை அலசும் எழுத்துக்களுக்கு வடிவம் கொடுத்து தீர்வு காணும் முயற்சியில் இறங்கியவர். திரிபுரசுந்தரி எனும் லக்ஷ்மி தனது எழுத்துக்களில் இயல்பான நடை நெருக்கமான உரையாடல்கள், அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களைப் போன்று கதாபாத்திரங்கள் படைத்து வாழ்வியல் விஷயங்களை எழுத்துலகின் மூலம் வெளிப்படுத்தியவர்  லக்ஷ்மி. 1000-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 150 நாவல்கள், 5 கட்டுரைத் தொகுப்புகள், 6 மருத்துவ நூல்கள் எழுதி தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொண்ட ஒரு குடும்பத்தலைவி தான் எழுத்தாளர் லக்ஷ்மி.  ‘ஒரு காவியம் போல’ என்ற அவரது நாவலுக்கு சாகித்ய அகாதெமி பரிசு கிடைத்தது, அவரது நதி போன்ற கதைகளின் நீரோட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரமாக அமைந்தது.

மேற்சொன்ன  ‘பெண்ணின் பெருமை’க்கு அடித்தளமிட்டவர்களைப் போன்றே சமீபத்தில் விளையாட்டில் சிறப்பு சேர்த்த தீபா கர்மாகர், சாக்ஷி மாலிக், தற்போது பி.வி.சிந்து என தொடரும் வலிமைமிகு பெண்களின் புகழுக்கு பாரத அன்னை என்றும் வழிகாட்டிக் கொண்டே இருப்பாள். ‘மங்கையராய் பிறப்பதற்கே நல் மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்பார் கவிமணி. அவ்வகையில் இம்மண்ணில் பிறந்திட்ட இந்தப் பெண்குல விளக்குகள் அனைவரும் நம் வணக்கத்துக்குரியவர்கள்.

 

 

குறிப்பு:

makochi திரு. ம.கொ.சி.ராஜேந்திரன், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர்.

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in தை-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s