2.19 பதினெட்டாம்படியும் நீதிமன்றப்படியும்…

-ஈரோடு என்.ராஜன்

சபரிமலையில் பக்தர்கள்

சபரிமலையில் பக்தர்கள்

மாளிகைபுரத்தம்மா, லோகமாதாவே சரணம் ஐயப்பா!

-இது சபரிமலைக்கு மாலையணிந்துள்ள ஒவ்வொரு ஐயப்பன்மார்களும் அழைக்கின்ற ஒரு சரணகோஷம். ஒவ்வொரு பெண்மணியையும் இறைவனின் வடிவமாக, பராசக்தியின் உருவாக வணங்கி வழிபட போதிப்பது ஐயப்ப தர்மம். அப்படிப்பட்ட ஐயப்ப ஸ்வாமியை பெண்களின் எதிரி என முத்திரை குத்த, சில இறைநம்பிக்கையற்ற கும்பல்கள் தொடர்ந்து முயற்சி செய்கின்றன். சில குறிப்பிட்ட ஊடகங்கள் அவர்களுக்கு துணையாகச் செயல்படுகின்றன.

ஆனால், 2015- 16 ஆண்டு நடைபெற்ற  திருவிழாக் காலத்தில் சுமார் 4.5 லட்சம் பெண்கள் அங்கு வந்து புனிதமான பதினெட்டாம்படி ஏறி ஐயப்பனை தரிசித்துச் சென்றிருக்கிறார்கள்.

சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பாக எல்லா  ஆண்டும், கோயில் நடை மூடப்படுகின்ற தை ஐந்தாம் தேதி  ‘ஸ்வச் சபரிமலை’ என்ற பெயரில் தூய்மைப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தை நான்காம் தேதி மாலை சன்னிதானம் வந்து தரிசனம் செய்து,  குருதி பூஜையையும் பார்த்துவிட்டு, அடுத்தநாள் தூய்மைப்பணியில் ஈடுபட வேண்டும். கடந்த ஆண்டு சுமார் 2,700 பக்தர்கள் இதில் பங்குகொண்டார்கள். அதில் 1,200-க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். இப்படி பெண்கள் சுதந்திரமாக செல்லக்கூடிய சபரிமலை பெண்களுக்கெதிரான கோயிலாக சித்தரிக்கப்படுவது ஏன்? இதற்கு யார் காரணம்?

திரேதாயுகத்தில் அவதரித்த ஸ்ரீதர்மசாஸ்தாவை,  பரசுராமர் சபரிமலையில் பிரதிஷ்டை செய்கிறார். அந்த விக்கிரகத்தில் கலியுகவரதனான ஐயப்பன் மறைந்ததாக அல்லது ஒன்றிவிட்டதாக ஐதீகம். திருவிழாக் காலங்களிலும்,  மாதாமாதம் முதல் ஐந்து நாட்களிலும் அங்கு பூஜைகள் நடைபெறுகின்றன., பக்தர்களும் தரிசிக்க வருகிறார்கள். மீதமுள்ள சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட நாட்கள் ஐயப்பனை விபூதியில் மூடி யோகத்தண்டும் கையில் கொடுத்து,  தியானக்கோலத்தில் விட்டுவிடுகின்றார்கள். அப்பொழுது கோயில் திறப்பதும் இல்லை, அங்கு பூஜையும் இல்லை. ஐயப்பன் தவத்தில் மூழ்கியிருப்பதாக நம்பப்படுகிறது.

எல்லா கோயில்களிலும் அதன் சுற்றுச்சுவருக்குள்ளேயே தாய் சந்நிதி இருக்கும். ஆனால், சபரிமலையில் உள்ள பெண்தெய்வமான மாளிகைபுறத்தம்மனின் கோயில் தனி இடத்தில் உள்ளது. மாயையின் வடிவமாக உள்ள இயற்கைக்கு – பெண்மைக்கு, ப்ரகிருதிக்கு- பரப்பிரம்மத்திடம் அனுமதி இல்லை. அதாவது மாயை நிலையை உணர்ந்து அதை கடந்து வருபவர்களால் மட்டுமே பிரம்மத்தை அடைய முடியும் என்பதுதான் பொருள். சபரிமலைக்கு தேங்காயில் நெய் நிறைத்து வருவதும் இக்கருத்தை மையமாக வைத்துத்தான்.

ஒரு மண்டலகாலம் விரதமிருந்து வைராக்கியம் பெற்று, சகல மோகங்களிலிருந்தும் விடுபட்டு (மாயையைக் கடந்து)  “நான் இறைவனிடம் ஒன்றிவிடுகிறேன் அல்லது  மோட்சம் அடைகிறேன். என் உள்ளத்தில் இறைவனைத் தவிர வேறொரு எண்ணமும் இல்லை. உடல் எனும் தேங்காயில் இருந்து, எனக்குள்ளிருந்த அகங்காரம் அல்லது மாயை என்ற தேங்காய் நீரை முற்றிலுமாக நீக்கிவிட்டு,  அதில் இறைவனை மட்டுமே நிறைக்கிறேன். நெய்யாக மாறிய நான் இறைவனிடம் சேர்ந்துவிடுகிறேன். பஞ்சபூதங்களாலான எனது உடலை அக்னியில் சமர்ப்பித்து விடுகிறேன். நான் அவனாகிறேன்”  (தத்துவமசி = அது நீ ஆகிறாய்.). இதுவே சபரிமலை யாத்திரையின் தாத்பரியம்.

இந்த யாத்திரை மேற்கொள்ள யார் விரும்பினாலும் அவர்களை  ஒரு மண்டலம் விரதத்தை  கடைபிடிக்க கட்டாயப்படுத்துகிறோம். ஐம்பது ஆண்டுகளாக போன ஐயப்ப சாமியானானாலும் சரி,  புத்தம் புதியதாக செல்லுகின்ற கன்னிசாமி என்ற ஐயப்பனானாலும் சரி,  விரதம் அனைவருக்கும் பொதுவானது, கடைபிடிக்க வேண்டியது.

ஸ்ரீ ஐயப்பன்

ஸ்ரீ ஐயப்பன்

ஒரு மண்டலம் என்பது தமிழகத்தில் 48  நாட்கள் என கணக்கிடப்படுகிறது. கார்த்திகை ஒன்று முதல் மண்டலபூஜை நடைபெறும் மார்கழி 11  வரையிலான மொத்தம் 41 நாட்கள் தான் ஒரு மண்டலம் என்பது. இந்த ஒரு மண்டலம் விரதம் எடுப்பவர்கள் தான் இருமுடியேந்தி பதினெட்டாம்படியைக் கடந்து ஐயப்பனை தரிசிக்க தகுதி படைத்தவர்கள். இது காலம்காலமாக போற்றிப் பின்பற்றுகின்ற நடைமுறை.

மேற்குறிப்பிட்ட ஒரு மண்டலகாலம் விரதத்தை அனுஷ்டிக்க முடியாதவர்கள் சபரிமலைக்கு வருவதில்லை.  பத்து வயது கடந்து ஐம்பது வயது வரையிலான  ‘யுவதி’ என்று அழைக்கப்படுகின்ற பெண்களால் இவ்விரதத்தை கடைபிடிக்க முடிவதில்லை. ஆகவே அவர்கள் சபரிமலைக்கு இக்குறிப்பிட்ட வயதில் வருவதைத் தவிர்க்கிறார்கள்.

இந்த்த் தவிர்ப்பை தடை என எடுத்துக்கொள்ளக் கூடாது. இன்றைக்கும் நம் வீட்டுப் பெண்கள் அவர்களது மாதவிடாய்க் காலத்தில் வீட்டிலுள்ள பூஜை அறைகளுக்கோ  அல்லது எதாவது கோயிலுக்கோ செல்வதில்லையே? எங்களுக்கு பூஜையறையில் நுழைய  தடை விதிக்கப்பட்டுவிட்டது என அவர்கள் குறை கூறுவதில்லை. மாறாக அந்த வேளைகளில் அவர்கள் அங்கு செல்வதைத் தாங்களே தவிர்க்கிறார்கள் என்பதே உண்மை.

இறைபக்திமிக்க எந்த ஒரு பெண்மணியும் இதுவரை இப்படி தவிர்க்கப்பட வேண்டிய காலத்தில், நான் சபரிமலைக்கு சென்றே தீருவேன் என கூறியதில்லை. எனவேதான், நமது பெண்கள் தற்பொழுது ஒன்று திரண்டு “நாங்கள் காத்திருக்கத் தயார் ” என கூறுகிறார்கள். ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஹிந்து இறைநம்பிக்கையுடைய பெண்கள் இந்த  ‘ரெடி டு வெயிட்’ என்ற அமைப்பு மூலமாக தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இறைபக்தியோ, ஹிந்து வாழ்க்கை நெறிமுறைகளோ தெரியாத, சபரிமலை எங்கிருக்கிறது,  அங்கென்ன விசேஷம் என்றும் தெரியாத  வெறும் காகித அமைப்பைக் கொண்ட சில சமூக விரோதிகள் ஒரு வழக்கை நீதிமன்றத்தில் தொடுத்திருப்பதால் தான் இன்று இத்தனை சர்ச்சை வந்துள்ளது.

காலம்காலமாக எந்த சர்ச்சைக்கும் உட்படுத்தாமல் இந்த சமுதாயம் பின்பற்றுகின்ற ஆச்சார அனுஷ்டானங்களைப் பற்றியும் அதன் நன்மைகளைப் பற்றியும் வழக்குத் தொடுப்பவர்கள் ஆராய்வதில்லை. அவர்களுக்கு,  இந்த தேசத்தின் மீதும் கலாச்சாரம்- பண்பாட்டின்மீதும் தொடர்ந்து போரிட்டுக்கொண்டிருக்கின்ற தேசவிரோத சக்திகள் தூக்கி  எறிந்த எலும்புத் துண்டும் (பணம்) சுய  விளம்பரமும் போதும்.  அவை கிடைப்பின் அவர்கள் எதற்கும் தயார்.

சபரிமலைக்கு தவிர்க்கப்பட வேண்டிய வயதுடைய  பெண்கள் வர வேண்டுமா,  வேண்டாமா என்பதை முடிவு செய்யும் உரிமை மதச்சார்பற்ற அரசுக்கோ,  நீதிமன்றத்துக்கோ இல்லை என்பதே நமது வாதம்.

காலத்திற்கேற்ப திருக்கோயில்களில் என்னென்ன மாறுபாடுகளை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும், ஆச்சார அனுஷ்டானங்களில் மாற்றம் வரவேண்டுமா என்பது போன்ற  விஷயங்களைப் பற்றி போதுமான சர்ச்சை நடத்தி அதை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள்,  கோயிலில் பிரதிஷ்டை செய்த தந்திரியும், ஆச்சார்ய சபைகளும் அக்கோயிலை சேர்ந்த பக்தர்கள் அமைப்பும் தான்.

சபரிமலை போன்ற கேரளாத்திலுள்ள கோயில்களில் இறை விருப்பத்தைத் தெரிந்துகொள்ள இறுதியில்  ‘தேவப்பிரசன்னம்’ கூட ஜோதிடர்கள் குழுவால் நடத்தப்படும். இப்படிப்பட்ட நெறிமுறைகளை விட்டுவிட்டு யாரோ ஒருவர் தொடுக்கின்ற வழக்கினால், நீதிமன்றங்கள் கோயில்களின் ஆச்சார அனுஷ்டானங்களை மாற்ற உத்தரவிடுமேயானால், அது எதிர்காலத்தில் தீமையையே விளைவிக்கும்.

இத்தருணத்தில் நீதிமன்றம் கேட்ட ஒரு கேள்வியைப் பற்றி நாம் அதிகமாக அக்கறை காட்டவேண்டும்.  “அங்கு வரக்கூடிய எல்லா ஐயப்பன்மார்களும் நாற்பத்தியோரு நாட்கள் விரதம் இருந்துதான் வருகிறார்களா?”  இது நீதிமன்றத்தின் கேள்வி.  இதற்க்கு ஆம் என்ற பதில் கொடுக்கும்படி ஐயப்ப பக்தர்கள் மாற வேண்டும், குரு ஸ்வாமிகள் அதை நன்கு கவனிக்க வேண்டும். அப்போதுதான் நமது தார்மிக நியாயம் வெல்ல முடியும்.

 

குறிப்பு:

erode-rajanதிரு. ஈரோடு என்.ராஜன், சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் அமைப்பின் அகில் பாரத பொதுச்செயலாளர்.

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in தை-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s