2.18 உடலின் மொழி

-நைத்ருவன்

food1

உடல்மொழியை (Body Language)  நமது எண்ணங்களை மற்றவர்களுக்குத் தெளிவுற  அறியச் செய்ய பயன்படுத்துகிறோம். இதற்காக எத்தனையோ புத்தகங்கள்,  வகுப்புகள்  எனப் பல வழிகாட்டுதல்கள் நமக்கு எளிதாக தற்காலத்தில் கிடைக்கின்றன. இது  சமூகத்தில் நமக்கு ஓர் இடத்தைப் பெற்றுத் தர பயனுள்ளதாக அமைகிறது.

நாம் இங்கு சிந்திக்கப்போவது உடலின் மொழி (Language of Body) பற்றி. நாம் நமது சிந்தனைகளை,  விருப்பங்களை, தேவைகளை  மற்றவர்களுக்கு விளங்கவைக்க மொழி என்ற ஒன்று உள்ளது. அதுபோலவே நமது உடல் அதன் எண்ணங்களை, தேவைகளை, விருப்பங்களைத் தனது மொழியில் பேசுகிறது.

ஆயினும் நமது மனமொழி ஆதிக்கம் செலுத்தி அதனின்றும் நம் சிந்தனையை விலக்கி வைப்பதால், உடலின் மொழியை அறிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளவும் தலைப்படாமல் இருக்க நாம் பழகிவிட்டோம். நமது மனமொழியை சிறிது அமைதிப்படுத்திவிட்டு உடலின் மொழியை கவனிக்கத் தொடங்கினாலே அதன் மொழி நமக்குப் புரிந்துவிடும்.

ஒரு குழந்தை மற்றும் தாயின் உரையாடல் மற்றவர்களுக்குப் புரியாமல் போகலாம். ஆனால் அவர்கள் இருவருக்கும் நன்றாகவே புரியும். அதுபோலத்தான் உடலின் மொழியும் கூர்ந்து நோக்கில் நமக்குப் புரியத் துவங்கிவிடும்.

தாகம் எடுக்கிறது என்கிறோம், பசிக்கிறது என்கிறோம். இவை எவ்வாறு நமக்குத் தெரிகிறன்றன? இது உடலின் மொழி; அது தனது தண்ணீர்த் தேவையையும் ஆற்றல் தேவையையும் நமக்கு விளக்கிவிடுகிறது. ஆனால் நம்மில் பலருக்கும் தெரிந்த உடல்மொழியின் இந்த இரு வார்த்தைகளையுமே பலநேரங்களில் புறந்தள்ளிவிட்டு யாரோ ஒருவர் சொன்னதை, மனம் நம்புவதை, சொல்வதை பின்பற்றத் தொடங்கிவிடுகிறோம்.

உதாரணமாக, நாள் ஒன்றுக்கு இரண்டு லிட்டர் தண்ணீரை கண்டிப்பாக ஒருவர் குடிக்க வேண்டும் என்று கூறப்படுவது. ஆனால் உடல் தனது மொழியில் தாகம் என்ற வகையில் தனது தண்ணீர்த் தேவையை தெரிவிப்பதைப் புறந்தள்ளி விடுகிறோம். குளிர்சாதன அறையில் பணிபுரிபவரின் தண்ணீர்த் தேவையும், கொதிக்கும் வெயிலில் தார்சாலை அமைக்கும் பணியாளரின் தண்ணீர்த் தேவையும் வேறு வேறு. இரண்டு லிட்டர் தண்ணீர் என்பது முன்னவர்களுக்கு வெகு அதிகம்; பின்னவர்க்கு வெகு குறைவு. இங்கு தாகம் எடுக்கும்போது தண்ணீர் அருந்துவதுதானே சரியான முறையாக இருக்கும்?

மூன்று வேளை சரியான நேரத்துக்கு உணவெடுத்துக்கொள்ள வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் உணவு உடலின் ஆற்றலுக்காக இடப்படும் எரிபொருள். உடல் தனது தேவையை பசி என்ற மொழியில் தெளிவாகச் சொல்கிறது. வாகனத்துக்கு எரிபொருள் நிரப்பும்பொழுது எப்படி நிரப்புகிறோமோ அதே முறைதான் இங்கும் பின்பற்றப்பட வேண்டும். குறித்த நேரத்தில் உணவு என்ற நிலையில் எரிபொருள் வீணாகித்தான் போகும். சரியான நேரத்தில் உணவென்பது பசித்தநேரம் தானே தவிர, கடிகாரம் காட்டும் நேரம் அல்ல என்று நாம் எப்பொழுது புரிந்துகொள்ளப் போகிறோம்?

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.

(குறள்- 944)

பொருள்:  முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்க.

-என்ற திருக்குறள் கூறுவதும் இதுவே அல்லவா?

பலருக்கும் காய்ச்சல், தலைவலி என்றாலே பயம் மிகுந்துவிடுகிறது; சாதாரண பயம் அல்ல மரண பயம். ஊடகங்கள் வாயிலாக அறிந்த பல நோய்களின் அறிகுறிகளும் விளைவுகளும் நமது மனக்கண்ணில் திரையிடப்பட்டுவிடுகின்றன. இந்த பயமே பல மருத்துவமனைகளுக்கும் முதலீடுகளாகி வருமானங்களை அள்ளிக் குவிக்கிறது.

food2அது மட்டுமல்ல, ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனிருப்பவர்கள் அனைவரும் மருத்துவர்களாகி விடுகின்றனர். ஆளாளுக்குச் சொல்லும் நோய்கள்,  மருத்துவமுறைகள் மனதில் கலக்கத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்க இயலாது. காய்ச்சல் என்பது, உடலில்ஏற்பட்டுள்ள ஏதோ ஒரு நோய்க்கு எதிராக உடல் போராடும்பொழுது உண்டாவதுதான். அந்நேரம் உடலுக்கு அதிக வேலை இல்லாமல் ஓய்வு அளிப்பதே சிறந்த வழிமுறையாகவும் முதலுதவியாகவும் இருக்கும். தேவை எனில் நல்ல மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்கலாம்.

தலைவலிக்கு ஆயிரக்கணக்கான காரணங்கள் இருக்கும். தண்ணீர் பற்றாக்குறை, பசித்த நேரத்தில் உணவருந்தாது போனது,  மன அழுத்தம் எனப் பல்வேறு காரணிகள் இருக்கலாம். உடலின் மொழி அறிந்துவிட்டால் இதற்கான தீர்வு கிடைத்துவிடும் மனதில் வீண் பயத்துக்கும் இடம் இருக்காது.

உடல் தனது களைப்பை, ஆற்றல் இழப்பை, தனக்குத் தேவைப்படும் ஓய்வை சோர்வு எனும் தனது மொழியில் வெளிப்படுத்துகிறது. சோர்வில்லாமல் உழைப்பது நல்லதாயிருக்கலாம்; ஆனால் சோர்வைப் புறந்தள்ளி உழைப்பது சரியானதாக இருக்காது. உடல் சோர்வடையும் தருணத்தில் அதற்கு சரியான ஓய்வை அளிப்பதே நாம் நமது உடலுக்குச் செய்யும் நன்மையாக அமையும்.

தூக்கம் கண்ணைச் சுற்றுகிறது என்றால், உடல் உறுப்புகள் அனைத்தும் ஓய்வுக்கு ஏங்குகின்றன என்றுதானே பொருள்? சரியான நேரத்துக்கு தூங்கச் செல்வதைவிட உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் ஒன்று வேறில்லை. முன்னிரவில் உறங்கி அதிகாலையில் விழிப்பதே உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும். இரவு நெடுநேரம் வேலை செய்வது பெருமையல்ல; அது உடலின் இளமைக்குச் செய்யும் துரோகம்.

தாய்மொழியில் சிறந்தவராய் இருப்பதும் பன்மொழி வித்தகராய் இருப்பதும் பெருமைதான். ஆனால் உடலின் மொழி அறிந்திருப்பதே நமது வாழ்வுக்கு ஆதாரம். எனவே உடலின் மொழி கற்றிட முனைந்திடுவோம். இளமையோடு நீடு வாழ்வோம்.

.

 

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in தை-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s