2.17 வியத்தகு விஞ்ஞானி இரண்டாம் சந்திரகுப்தர்

-ஆதலையூர் த.சூரியகுமார்

 

தில்லி இரும்புத் தூண்

தில்லி இரும்புத் தூண்

சுமார்  1600 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் குப்தர்களின் ஆட்சிக்காலம் தொடங்குகிறது. இந்தக் காலகட்டத்தில்தான்,  கல்வி, கட்டடக்கலை, இலக்கியம், விஞ்ஞானம் என்று அனைத்துத் துறைகளிலும் நாட்டில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டது.

இந்திய வரலாற்றில் குப்த வம்சம் சுமார் 300 ஆண்டுகள் (பொ.யு.பி:  240 முதல் 600 வரை) ஆட்சி செய்தது. குப்தர்கள் காலத்தை இந்திய வரலாற்றின் பொற்காலம் என்று அலங்கரிக்கிறார்கள். ஸ்ரீகுப்தரால் தொடங்கப்பட்டது, இந்த சாம்ராஜ்யம். தொடர்ந்து கடோத்கஜ குப்தர், முதலாம் சந்திரகுப்தர் என்று வாழையடி வாழையாகத் தொடர்ந்தது.

குப்தர்கள் காலத்தில்தான் ராமாயணம், மகாபாரதம் ஆகியவை நூல்களாகத் தொகுக்கப்பட்டன. 18 புராணங்களும் கூட, இவர்கள் காலத்தில்தான் தொகுத்து எழுதப்பட்டன.

சமஸ்கிருத மொழியின் அருமை, பெருமைகளைப் புரிந்து கொண்டவர்களாக குப்த வம்ச மன்னர்கள் விளங்கினார்கள். பொற்காலம் என்று போற்றப்பட்ட ஒரு வம்சத்தின் அரசர்கள், ஒரு மொழியைப் போற்றுகிறார்கள். அதுதான் இந்த மொழியின் வளமையின் வலிமை.

காளிதாஸ், பாசர், விசாக தத்தர் போன்ற காலத்தை வென்ற காவியக் கலைஞர்கள் வாழ்ந்த காலம் அது. அவர்களின் படைப்புகள்தான் பாரத தேச இலக்கியத்தின் பன்முகத்தை காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இலக்கியத்தில் மட்டுமல்ல, வானியலிலும் குப்தர்கள் வானளாவ அதிகாரம் பெற்றிருந்தார்கள். ஆர்ய பட்டர், வராகமிகிரர் போன்ற கணித வானவியல் அறிஞர்கள் பண்டைய பாரததேசத்தின் அறிவியல் புலிகளாக சீறினார்கள்.

மருத்துவத்தின் மகத்துவமும் குப்தர்கள் காலத்தில் புதிய உச்சத்தைத் தொட்டு நின்றது. சரகர், சுஸ்ருதர் போன்றவர்கள் மருத்துவத்தில் ஞான உபதேசம் அருளினார்கள். அறுவைச் சிகிச்சையில் அவர்களை அடித்துக்கொள்ள அன்று ஆளில்லை.

சமுத்திர குப்தரின் படைத்தளபதியான ஹரிசேனர் என்பவர் பொறித்த அலாகாபாத் தூண் கல்வெட்டுகள்தான், பெரும் புகழுக்குரிய குப்தர்களின் பெருமையை பறைசாற்றுகின்றன. பாரத தேசத்தின் பண்பாட்டு வேர்களை அடி காண முடியாத ஆழத்தில் பதித்துவிட்டுச் சென்றவர்கள் குப்தர்கள்.

***

 

இரண்டாம் சந்திரகுப்தர் - நாணயங்கள்

இரண்டாம் சந்திரகுப்தர் – நாணயங்கள்

குப்த பேரரசில் இரண்டாம் சந்திரகுப்தர் முக்கியமானவர். பலபேருக்கு அவரை ஆடசியாளராகவே தெரியும். அவருக்கு பல முகங்கள் உண்டு. அதில் ஒரு முகம் தான அவருடைய விஞ்ஞான முகம்.

அந்த முகம்…இதோ..

உலக விஞ்ஞானத்துக்கெல்லாம் தலையாயது நமது இந்திய விஞ்ஞானம்தான். இது வெறும் வார்த்தையல்ல. வரலாறு. உலக விஞ்ஞானிகள் எத்தனையோ, புதிய, புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். கடலுக்கு அடியில் நீந்தியிருக்கிறார்கள். வானத்தின் மேலே பறந்திருக்கிறார்கள். பூமியின் ஆழத்தை ஊடுருவிச் சென்று புதையல் தேடியிருக்கிறார்கள்.

இவையெல்லாம் நாம் ஆச்சரியப்பட்டு பெருமூச்சுவிடும் விஞ்ஞானம் தான்.

ஆனாலும் உலக நாடுகள் ஒன்றிணைந்து நம் அறிவியல் சாதனைகளோடு போட்டி போட்டால் கூட இந்தியாவின் சாதனையை சமன் செய்துவிட முடியாது.   இதோ ஓர் ஆணித்தரமான ஆதாரம்.

ஆணித்தரமானது என்றால், ஆணியை வைத்தே ஆதாரம். ஆணி செய்கிற இரும்பை வைத்தே ஆதாரம். இரண்டாம் சந்திர குப்தனின் அறிவியல் சரித்திரத்தில் இடம் பெற்ற ஆதாரம்.

தில்லியில் (தற்போதைய குதுப்மினார் அருகே) ஓர் இரும்புத்தூண் இருக்கிறது. எல்லோரும் இதனை  ‘ தில்லி இரும்புத் தூண்’  என்றுதான் சொல்வார்கள். துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்றால், தில்லிக்கு அருகில் மேகரூலி என்ற இடத்தில் இந்த இரும்புத் தூண் உள்ளது. “சந்திரகுப்த விக்ரமாதித்யா” என்ற பட்டப்பெயர் கொண்ட  இரண்டாம் சந்திரகுப்தர் தான் இந்த இரும்புத்தூணை நிறுவினார்.

6,000 கி.கி. எடையும், 23 அடி உயரமும் கொண்ட இந்த இரும்புத் தூண் நிறுவப்பட்டு 1600 வருடங்கள் ஆகிவிட்டது  (தோராயமாக பொ.யு.பி. 402). இதன் அடித்தள விட்டம் 17 இன்ச்; உச்சியில் விட்டம் 12 இன்ச். கடவுள் விஷ்ணுவைப் போற்றும் வகையில் இதனை நிறுவியதாக தூணில் பிராமி எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ள சுலோகங்கள் கூறுகின்றன. அறிவியல் ஆச்சரியம் என்னவென்றால், வெட்டவெளியில், வெயிலிலும், மழையிலும் நனைந்து காயும் இந்தத் தூண் 1600 ஆண்டுகளாகத் துருப்பிடிக்கவில்லை. இது நமது பண்டைய உலோகவியல் திறனை வெளிப்படுத்துகிறது.

ஆரம்பத்தில் உதயகிரியில் (ம.பி.) நிறுவப்பட்ட இத்தூண், பொ.யு.பி. 1233-இல் துக்ளக் வம்ச ஆட்சியின்போது வெற்றிச்சின்னமாக அங்கிருந்து பெயர்க்கப்பட்டு, தில்லி கொண்டுவரப்பட்டு, தற்போதுள்ள இடத்துக்கு இடம் மாற்றப்பட்டது.  உலகத்தின் எந்த விஞ்ஞானியாலும் இப்படியொரு இரும்புத்தூணை நிறுவ முடியவில்லை. இது ஏன் துருப்பிடிக்கவில்லை என்ற காரணத்தைக் கண்டுபிடிக்க பல நூற்றாண்டுகளாக உலக விஞ்ஞானிகள் திக்கித் திணறியிருக்கிறார்கள்.

***

 

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு

காலம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும் என்பார்கள். ஆனால் இந்த இரும்புத்தூண் விஷயத்தில் அது கைகூடவில்லை. காலம் தன் விரல்களால் கூட இந்த இரும்புத்தூணைத் தொட முடியவில்லை.

பல நூறு ஆண்டுகளைத் தாண்டியும், அந்த்த் தூண் இன்று நிறுவியது போல காட்சியளிக்கிறது என்பது காலம் தனக்குத்தானே செய்து கொண்ட சமரசம். ஆம், உலகின் எல்லாப் பொருட்களையும் அரித்து, சலித்து கொன்று குவிக்கக்கூடிய ‘அரிப்பின்’ காரணங்களால் இரும்புத் தூணை உரசிக்கூட பார்க்க முடியவில்லை.

இந்த இரும்புத்தூண் துருப்பிடிக்காமல் இருக்கும் காரணத்தைக் கண்டறியப் போய், பலபேர் பலவிதமான கதைகளை அள்ளிவிட்டார்கள். ‘இந்த இரும்பத் தூண் மனிதனால் நிறுவப்படவே இல்லை. வேற்றுகிரக வாசிகள் இந்தியாவுக்கு வந்தபோது அவர்கள் தங்களது நினைவாக பூமியில் நிறுவிச் சென்றிருக்கிறார்கள் என்று கூட கூறினார்கள்.

இந்திய விஞ்ஞானம். அதுவும் 1600 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி அதி உன்னதமாக இருந்திருக்கிறது பார்த்தீர்களா?!.  ‘இப்படியொரு படைப்பை மனிதன் உருவாக்கியிருக்கவே முடியாது’  என்பதுதான் உலக விஞ்ஞானிகளின் கருத்து என்றால், இந்தியர்கள் மனிதர்கள் அல்லவே- தெய்வங்கள் தானே?

சமீபத்தில் ஒரு வழியாக இரும்புத்தூண் இது நாள் வரை துருப்பிடிக்காமல் இருப்பதற்கான காரணம் கண்டறியப்பட்டுவிட்டது. ஒரு காரணம் மிக முக்கியமானது. மிகச் சுத்தமான உலோகம் வெளிப்புறக் காரணிகளால் அரிக்கப்படுவதில்லை.  பாஸ்பரஸ் கலந்த, கரி (கார்பன்) குறைந்த சுத்தமான தேனிரும்பினால் அந்தத் தூண் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

தூண் உருவாக்கப்பட்ட இரும்புக் கலவையில் உள்ள பாஸ்பரஸ் காரணமாக, வெளிப்புற காற்றில் உள்ல பிராணவாயுவுடன் (ஆக்ஸிஜன்) இரும்பு வினைபுரியும்போது ஒருவித மேல்பூச்சு போன்ற ஒரு திண்மம் தூணில் படிகிறது. அயர்ன் ஹைட்ரஜன் பாஸ்பேட் ஹைட்ரேட்  (FePO4-H3PO4-4H2O) என்ற வேதிப்பெயருடைய அந்தப் பூச்சு தான் இரும்புத் தூணை 1600 ஆண்டுகளாக துருப் பிடிக்காமல் காத்து வந்திருக்கிறது.

மேலும், பொருட்களோ, தூணோ அவை துருப்பிடிக்காமல் இருக்க, பொருட்களின் வெளிப்புறம் சமதளமாக வழவழப்பாக செய்யப்பட்டிருப்பது அவசியம். மேடு பள்ளங்களுடனும் சில டிசைன்களுடனும் செய்யப்படும் உலோகப்பொருட்கள் அரிமானத்திற்கு ஆளாகின்றன. மேடு பள்ளங்களில் அல்லது சொரசொரப்பான பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் துருப் பிடிப்பதை துரிதப்படுத்திவிடும்.

***

inscription_on_iron_pillar_delhi

இரும்புத் தூணில் பொறித்துள்ள சுலோகம்

இன்று பொருட்களை வழவழப்பாக செய்வதற்காக பாத்திரங்களின் மேற்புறத்தில் வெள்ளீயம் பூசுகிறார்கள். இவ்வாறு வெள்ளீயம் பூசப்பட்ட பாத்திரங்கள் சில வருடங்களுக்கு மட்டும் துருப்பிடிக்காமல் இருக்கும்.

தில்லி இரும்புத்தூண் துருப்பிடிக்காமல் இருக்க இதுபோன்ற மேம்போக்கான மேல்பூச்சுகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. அந்த இரும்பு தானே இயற்கையுடன் வினை புரிந்து துருவேற்றத்துக்கு (ஆக்சைடு) எதிரான மேல்லிய இழை போன்ற பூச்சை உருவாக்க்கிக் கொண்டிருக்கிரது.  அந்த அலவுக்கு நமது முந்தைய கொல்லர்கள் உலோகவியலில் திறமை வாய்ந்தவர்களாக இருந்துள்ளனர். இதனைப் படைத்த பேரரசர் இரண்டாம் சந்திரகுப்தர் உன்னதமானவர். அதனால்தான் நம் பண்டைய அறிவியலுக்கு இரும்புத்தூண் சரித்திர சாட்சியாக விளங்குகிறது.

 

குறிப்பு:

suryakumarமுனைவர் திரு. ஆதலையூர் த.சூரியகுமார், மதுரையில் பணியாற்றும் ஆசிரியர்; எழுத்தாளர். தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளர்.

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in தை-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s