2.13 இரும்பு மனுஷியின் ஃபீனிக்ஸ் பயணம்

-காம்கேர் கே. புவனேஸ்வரி

செல்வி ஜெ.ஜெயலலிதா

செல்வி ஜெ.ஜெயலலிதா

செல்வி ஜெ.ஜெயலலிதா

(பிறப்பு: 24.12.1948 – மறைவு: 05.12.2016)

‘ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள்’ என்று பெண்களின் பெருமையைச் சொல்லி அவர்களின் தியாகங்களுக்கு புகழாரம் சூட்டி ஆண்கள் எல்லா துறைகளிலும் பல்லாண்டு காலமாக  ஜெயித்துக்கொண்டிருந்த காலத்தில்- பெண்களுக்கு முன்னிற்கவும் தெரியும், வெற்றியடையவும் பிடிக்கும், ஆளுமைகளின் உந்துசக்தியாகவும் அவர்களின் பின்புலமாகவும் மட்டுமே இல்லாமல் ஆளுமை செலுத்தவும் முடியும், வெற்றியடையவும் தெரியும் என்று-  கலை, அரசியல், வர்த்தகம் என பல்வேறு துறைகளில் முன்னேறிய பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

அந்த எண்ணிக்கை இன்று அதிகரித்து வந்தாலும், ஆணாதிக்கம் மேலோங்கி இருந்த அந்தக் காலத்திலேயே பண்பில் சிறந்த பெண்ணாகவும், நடிப்பில் நடிகையர் திலகமாகவும், எழுத்திலும் பேச்சிலும் மொழி ஆளுமையிலும் நிகரில்லா ஆற்றல் பெற்றவராகவும், அரசியலில் அசைக்க முடியாத அரசியாகவும் என,  எல்லாவற்றிலும் ஒருவரால் ஆகச்சிறந்த ஆளுமை பெற்றவராக இருக்க முடியுமா என அனைவரும் ஆச்சர்யத்துடன் அண்ணார்ந்து பார்க்கும் அளவுக்கு,  பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் சிறந்த முன்னோடியாக ‘ரோல்மாடலாக’ விளங்கியவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த செல்வி ஜெ. ஜெயலலிதா.

அவரது திடீர் மறைவால் அரசியலில் மட்டுமல்லாமல் மக்களின் இதயத்திலும் ஏற்பட்டுள்ள வெற்றிடமே இந்தப் பேருண்மைக்குச் சான்றாக உள்ளது.

குடும்பத்தைக் காப்பாற்ற அவரது  தாய் சந்தியா சினிமாவில் நடிப்பதற்காக சென்னை வந்தபோது பெங்களூரில் தாத்தா பாட்டியிடம் வளர வேண்டிய சூழலில் அம்மாவைப் பிரிந்த சோகத்தில் தவித்திருக்கிறார். பாசத்துக்காக ஏங்கி அழுத நாட்களின் வெறுமை, வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை என்ற உறுதியை இவர் மனதில் விதைத்திருக்க்க் கூடும். அந்தச் சூழலிலும் பாதை மாறாமல் மன உறுதியோடு வளர்ந்தார்.

பள்ளி நாட்களில் அவரது தாய் நடிகை என்ற காரணத்தால் சக மாணவிகளின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான போது அவமான உணர்ச்சியில் வீட்டில் வந்து அழுதாலும், மன உறுதியுடன் அவர்களைத் தூக்கி அடிக்கும்விதமாக பள்ளி நாட்கள் முழுவதும் அத்தனை  பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெற்றதோடு, பள்ளியில் Best Out Going Student என்ற பட்டத்தையும் பெற்றார். அவமானத்தில் கூனிக் குறுகி ஒதுங்கிவிடாமல் அவமானப்படுத்திய மாணவிகள் மத்தியில் படிப்பில் உச்சாணிக்கொம்பில் இருந்தார்.

கல்லூரி படிக்க விரும்பியவரை,  அவரது தாய் தனக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் நடிக்குமாறு வற்புறுத்தினார். படிக்கும் ஆர்வத்தை மனதுக்குள் மூட்டை கட்டி வைத்துவிட்டு அம்மாவின் ஆசைப்படி நடிப்பில் இறங்கினார். அந்தத் துறை பிடிக்காவிட்டாலும்,  நடிப்பிலும், நடனத்திலும் சிறந்து விளங்குவதற்காக அத்தனை முயற்சிகளையும் எடுத்து கடுமையாக உழைத்து தென்னிந்தியாவின் நம்பர் 1 நடிகையாக விளங்கியிருக்கிறார்.

நடிப்பைத் தவிர எவ்வளவு சம்பளம், அவற்றை எப்படி வங்கியில் போடுவது, எப்படி வரி கட்டுவது என எதையுமே சொல்லித் தராமல் அவரது 23 வயதில் தாயும் இறந்துவிட கண்ணைக் கட்டிக் காட்டுக்குள் விட்ட குழந்தையைப்போல தவித்திருக்கிறார். தன்னைச் சுற்றி இருந்த சுயநல மனிதர்களுடன் வாழ வேண்டிய கட்டாயச் சூழலே, அவருக்குள் இருந்த அப்பாவிப் பெண் உருமாறி  உலகையும் மனிதர்களையும் புரிந்துகொண்ட மனமுதிர்ச்சியுள்ள பெண்ணாக விஸ்வரூபமெடுத்ததற்குக் காரணம்.

படிக்கும்போதும், நடிக்கும்போதும் புத்தகங்கள் படிப்பதை தன் பழக்கமாகவே வைத்திருந்தார். நேரம் கிடைக்கும்போதெல்லாம்  புத்தகமும் கையுமாக உட்கார்ந்துவிடுவார். புத்தகங்களை தன் முதன்மையான  நண்பர்களாக்கிக்கொண்டார். இதுவே அவரது புத்திகூர்மைக்குப்பிரதான காரணம்.

எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து, தொடர்ந்து பலபடங்களில்அவருடன் இணைந்து கதாநாயகியாகவே நடித்ததால், தன் நடிப்புத் திறமையினால் தான் பெற்றிருந்த ரசிகர்களுடன் சேர்ந்து எம்.ஜி.ஆரின் ரசிகர்களும் இவருக்கும் ரசிகர்களாயினர்.

1977-ஆம் ஆண்டு எம்.ஜி,ஆர். அதிமுகவைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்தார். ஜெயலலிதாவின் அறிவாற்றல், ஆங்கிலப் புலமை போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர். 1982-ஆம் ஆண்டு ஜெயலலிதாவை அதிமுகவில் இணைய வைத்து மாநிலங்களவை உறுப்பினராகவும் ஆக்கினார்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பிறகு1989-இல் ஜெயலலிதா தலைமையில் அதிமுக தேர்தலைச் சந்தித்தது. அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறவில்லை என்றாலும் அரசியலில் ஜெயலலிதா துடிப்புடன் செயல்பட்டார்.

1991-இல் திமுகஅரசு கலைக்கப்பட்டபோது காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் கலந்துகொண்டு இமாலய வெற்றி பெற்றார். அந்த வெற்றி தந்த உற்சாகம், மக்களின் பேராதரவு, அனுபவம் போன்றவைதான்  அதிமுகவை தொடர்ச்சியாக தன் கட்டுப்பாட்டில் வைத்துகொள்வதற்கும் 2001,   2011,  2016 தேர்தல்களில் பெற்ற வெற்றிகளுக்கும் அடிகோலின.

அவரது குருவாக விளங்கிய எம்.ஜி.ஆர் இறந்தபோது அரசியல் உலகில் தனித்துவிடப்பட்டார். இவர் அரசியலில் நுழைவதற்கு எம்.ஜி.ஆர்.தான்  காரணம்என்றாலும் அதன் நுணுக்கங்களை தன் அனுபங்களில் இருந்து மட்டுமே கற்றுக்கொண்டார்.  தனது அரசியல் வாழ்வில் உடனிருந்தவர்களின் தவறான வழிகாட்டலால் ஊழல் புகாருக்கு உள்ளாகி சிறை செல்ல நேர்ந்தபோதும் அவர் வீழவில்லை. மீண்டும் முன்னைவிட வேகமாக எழுந்தார்.

அரசியலில் ஆண்களின் ஆதிக்கமே அதிகமிருந்த சூழலில், தன் திறமையான ஆளுமையால் ஆணாதிக்கத்தைத் தொடர்ந்து வீழ்த்தி வந்திருப்பது ஜெயலலிதாவின் மிகப் பெரிய சாதனை. இதற்கு அசாத்தியமான தைரியமும், மனஉறுதியும், தன்னம்பிக்கையும், சகிப்புத்தன்மையும் வேண்டும்.

இலவசமாக மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் கொடுத்ததாகட்டும்,  பள்ளி சென்றுவர சைக்கிள் கொடுத்து உற்சாகப்படுத்தியதாகட்டும்,  பெண்களுக்கு மிக்ஸி, கிரைண்டர் எனக் கொடுத்து அவர்களின் வேலைபளுவைக் குறைத்ததாகட்டும், அம்மா உணவகம் தொடங்கி அடித்தட்டு மக்களின் வேலை வாய்ப்பை அதிகப்படுத்தியதோடு மட்டுமில்லாமல் பாமர மக்களின் பசியை குறைந்த செலவில் போக்கியதற்கு எடுத்த முயற்சியாகட்டும்,  அத்தனையுமே அரசியலில் பெண்கள் புத்திசாலியாக மட்டும் இருந்தால்போதாது,  சாமர்த்தியமாகவும் இருக்க வேண்டும் என்பதை தன் அனுபவத்தால் கண்டுகொண்டதன் விளைவே. அரசியலில் வெற்றிபெற இவர் தேர்ந்தெடுத்த ஒரு வழி என்றும் சொல்லலாம்.

அதிகார பலத்துடன் அரசியலில் ஆண்களுக்கு இணையாக மட்டும் இல்லாமல் ஆணதிகாரத்தைதன் கட்டுக்குள் வைத்திருந்த ஜெயலலிதாவை தமிழகப் பெண்கள் அனைவரும் தங்கள் பிரதிநிதியாகவே கருதுவதோடு அவரின் வெற்றி தோல்வி வலி வேதனை அத்தனையையும் தங்களுடையதாகவேக் கருதினார்கள்- சினிமாவில் கதாநாயகன் பெறுகின்ற வெற்றியை தாங்கள் பெற்றதாக்க் கருதும் ரசிகர்களின் மனநிலைபோல.

சுருங்கச் சொன்னால் ஒட்டுமொத்த தமிழகத்தை தன் கை அசைவிலும், கட்சியை தன் கண் அசைவிலும் வைத்திருந்த ஜெயலலிதாவின் ஆளுமையைக் கண்டு பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் உள்ளுக்குள் பிரமித்ததாலேயே அவர் மறைந்த செய்தியைக் கேள்விப்பட்ட ஆண்கள் பலரின் கண்கள் அழுதன.

இதுவே ஜெயலலிதா என்ற இமயம் வாழ்ந்த வாழ்க்கையின் வெற்றி.

இரண்டு வயதில் தந்தையை இழந்தத் தருணம், படிக்கும்போது சக மாணவிகளின் கேலியால் அவமானத்தில் சுருங்கியத் தருணம், தாய் நடிக்கச் சென்றதால் தாய்ப்பாசத்துக்காக ஏங்கியத் தருணம், கல்லூரி படிக்க விரும்பிய ஆசையில் இடி விழுந்து- விரும்பாத சினிமாத் துறையில் நுழைந்தத் தருணம், ஆர்வமே இல்லாத அரசியலில் நுழைந்தத் தருணம்…  இப்படி தன் வாழ்க்கையில் எல்லாமே தன் விருப்பத்துக்கு எதிராகவே நடந்திருந்தாலும், உணர்வுகளாலும் சூழலாலும் கீழே விழுந்த ஒவ்வொரு நிகழ்வின்போதும் ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்து நிமிர்ந்து நின்ற இவரது தைரியமும் மன உறுதியும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு எடுத்துச்சொல்ல வேண்டிய தன்னம்பிக்கைச்செய்தியாகும்.

 

குறிப்பு:

compcare-bhuஸ்ரீமதி காம்கேர் கே.புவனேஸ்வரி  எம்.எஸ்சி.  கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.பி.ஏ. பட்டங்கள் பெற்றவர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் ‘காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்’ என்ற ஐ.டி. நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வருகிறார். 100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நூல்களை தமிழில் எழுதி உள்ளார். இவர் தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர் என பல்முகம் கொண்டவர். இவரது சாஃப்ட்வேர் தயாரிப்புகளும், தொழில்நுட்பப் புத்தகங்களும் பல பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் உள்ளன.

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in தை-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s