2.10 சர்வதேச வழக்கான சாவர்க்கர் கைது

-தஞ்சை வெ.கோபாலன்

வீர சாவர்க்கர்

வீர சாவர்க்கர்

வீர சாவர்க்கர்

(பிறப்பு: 1883, மே 28-

மறைவு: 1966, பிப். 26)

விடுதலைப் போராட்ட வீர்ர் விநாயக தாமோதர  சாவர்க்கர்  லண்டனில் இருந்த போது இந்தியா ஹவுசில் புரட்சி இயக்கத்தில் சம்பந்தப் பட்டிருந்தார் என்று கைது செய்யப்பட்டு (1910) வழக்கு நடந்தது. அவரை இந்தியாவுக்கு பலத்த காவலுடன் கப்பலில் அனுப்ப வேண்டுமென்று லண்டன் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. அதன்படி ஏராளமான காவலர்கள் புடைசூழ சாவர்க்கர் இந்தியா செல்லும் கப்பலில் ஏற்றப்பட்டார்.

இங்கிலாந்திலிருந்து புறப்பட்ட அந்த கப்பல் ஒரு வார காலம் பயணம் செய்திருக்கும். அப்போது அந்தக் கப்பல் பிரான்ஸ் நாட்டின் மார்சேல்ஸ் எனும் பிரபலமான துறைமுக நகரில் வந்து நங்கூரம் பாய்ச்சி நின்றது (1910, ஜூலை 8). அங்கு ஒரு விடியற்காலை நேரம், சாவர்க்கர் கழிவறைக்குப் போக வேண்டுமென்று சொன்னதும், பலத்த காவலுடன் அவரை அங்கு செல்ல அனுமதித்தனர்.

காவலர்கள் கழிவறை வாயிலில் நின்று காவல் காத்தனர். உள்ளே நுழைந்த சாவர்க்கர் அந்த அறையின் கதவை உட்புறம் தாழிட்டுக் கொண்டார். அங்கு எதிரில் சுவற்றில் காற்று வெளியேறுவதற்கென்று ஒரு வட்டமான துவாரம் காணப்பட்டது. மெல்ல அதனுள் நுழைய முயற்சி செய்தார் அவர் உடல் அதனுள் நுழைய முடியவில்லை. உடனே தன்னுடைய ஐரோப்பிய பாணி உடைகளையெல்லாம் களைந்துவிட்டு நுழைந்து பார்த்தார். அவர்கள் உடை ஏராளமானவை என்பதால், அவைகளைக் களைந்தவுடன் அவர் உடல் அந்த துவாரத்தினுள் நுழைந்தது. இந்த சந்தர்ப்பத்திற்காக அவர் பல நாட்கள் பட்டினி இருந்து உடலை இளைக்க வைத்திருந்தார்.

அந்த துவாரத்தினுள் நுழைந்து வெளிப்புறம் வெளியேறி கடல் நீரில் குதித்து நீந்தத் தொடங்கினார். அப்படி உடைகளை நீக்கிய நிலையில் நிர்வாண கோலத்தில் இவர் கடல் நீரில் நீந்துவதைக் கண்டு மேல்தளத்தில் நின்று கொண்டிருந்த சிலர் கூச்சலிட்டனர். உடனே கழிப்பறை வாயிலில் காவல் இருந்த காவலர்கள் ஒடிவந்து பார்த்தபோது தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியக் கைதி கடலில் நீந்திச் செல்வதைக் கண்டனர்.

உடனே இரு காவலர்கள் கடலில் குதித்து  “திருடன், திருடன், கைதி தப்பியோடுகிறான்” என்று கூச்சலிட்டுக் கொண்டே அவரைப் பின்தொடர்ந்து நீந்திச் சென்றார்கள். இப்படி தப்பியோடும் சாவர்க்கரின் முயற்சிக்கும், அவரைப் பிடிக்க கடமை உந்தப் பின்தொடரும் காவலர்களின் முயற்சிக்கும் வித்தியாசம் உண்டல்லவா? எப்படியும் தப்பிவிட வேண்டுமென்கிற வாழ்வா சாவா போராட்டத்தில் நீந்திய சாவர்க்கரே முதலில் கரை சேர்ந்தார்.

இங்கு கப்பலில் இருந்து சாவர்க்கர் தப்பியோடி வருவார் என்பது தெரிந்திருந்த மேடம் காமா அம்மையாரும், வேறு சிலரும் இவரது வரவுக்காக ஒரு காரோடு கரையில் காத்திருந்தனர். சாவர்க்கர் கப்பலில் இருந்து தப்பி நீந்தி வருவது என்றும், கரையில் மேடம் காமா அம்மையார் ஒரு காருடன் தயாராக இருப்பதென்றும், அந்தக் காரில் ஏறி இருவரும் தப்பிவிடலாம் என்றும் ஏற்பாடு. பிரெஞ்சு நாட்டுக்குள் இவர் தப்பிச் செல்லும்போது பிரிட்டிஷ் போலீசார் இவரைக் கைது செய்ய முடியாது என்பதும், அப்படி அவர்கள் முயற்சி செய்தாலும், பிரெஞ்சு போலீஸ் அவர்களுடன் ஒத்துழைக்காது என்பதையும் இவர்கள் அறிந்திருந்தார்கள். எப்போதுமே பிரிட்டிஷ் அரசும் பிரெஞ்சு அரசும் அத்தனை ஒற்றுமையுடன் இருந்ததில்லை. இந்த ஏற்பாட்டின்படிதான் மேடம் காமா அம்மையார் வந்து காத்திருந்தார். கடற்கரைக்கும் கார் நின்ற இடத்துக்குமிடையே சற்று தூரம் அதிகம் இருந்தது.

நிர்வாணமாகக் கரையேறிய சாவர்க்கர் காரை நோக்கி ஓடத் துவங்கினார். அப்போது அந்தப் பகுதிக்கு வந்த பிரெஞ்சு காவலன்  ஒருவன் இவர் காரை நெருங்கும் முன்னரே அவரைப் பிடித்துவிட்டான். அதற்குள் கப்பலில் இருந்து இறங்கி வந்த சில காவலர்களும் தங்கள் கைதி தப்பி ஓடிவருகிறான், அவனைத் தங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டுமென்று பிரெஞ்சு காவலரிடம் கேட்டனர்.

அந்த நேரத்தில் வ.வே.சு.ஐயர் உள்ளிட்ட சில இந்திய புரட்சிக்காரர்கள் அங்கு வந்து, இந்த இடம் பிரெஞ்சு பிரதேசம், இங்கு ஆங்கில அதிகாரிகள் யாரையும் கைது செய்ய உரிமையில்லை என்று வாதிட்டார்கள். ஆனால், அவர்களுடைய வாதம் எடுபடாமல் போனது. அந்தப் பிரெஞ்சு அதிகாரி சாவர்க்கரை கப்பலில் வந்த ஆங்கில அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டார். வேறு வழியில்லாமல் அவர் மீண்டும் ஆங்கில அதிகாரிகளிடம் கைதியாக மாட்டிக் கொண்டு கப்பலில் ஏற்றப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து மறுநாள் பிரெஞ்சு பத்திரிகைகள் இப்படி தங்கள் பிரதேசத்தினுள் நுழைந்து ஆங்கில அதிகாரிகள் ஒருவரைக் கைது செய்ததை கண்டித்து எழுதின. பிரெஞ்சு அரசாங்கமும் தங்கள் ஆட்சேபணையை பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிவித்தார்கள். இந்த விவகாரம் அப்போது  ‘தி ஹேக்’ எனுமிடத்தில் இருந்த சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு நடைபெற்ற வாதங்கள், அன்னிய நாட்டு மண்ணில் வேறொரு நாடு யாரையும் கைது செய்ய முடியுமா என்பது குறித்த கேலிவியை எழுப்பியது. எனினும், பிரிட்டிஷ் போலீசார் நியாயம் தவறவில்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது (1911, பிப். 24).

அதன் பிறகு அந்தமானில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு, கால்களும் கைகளும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கிடந்த காலத்தில் அடுத்த ’செல்’லில் இருப்பது யார் என்பது கூட தெரியாமல் துன்பங்களைத் தாங்கிய தியாக சரித்திரம் சாவர்க்கருடையது.

தனக்காகவோ, தனது குடும்பத்துக்காகவோ அவர் இத்தகைய துன்பங்களைத் தாங்கியவரில்லை. இந்த நாட்டின் விடுதலைக்காகவும், மிலேச்சர்களை இந்த நாட்டை விட்டு விரட்ட வேண்டுமென்பதற்காகவும் தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும் சர்வபரித்தியாகம் செய்தவர் வீரர் சாவர்க்கர். அவருக்கு சுதந்திர இந்தியாவில் கொடுக்க வேண்டிய கெளரவம் கொடுக்காமல் போனது மட்டுமல்ல, அவருக்கு ஏராளமான துன்பங்களையும் கொடுத்தனர்.

அப்படிப்பட்ட மகானுக்கு அவர் சிறையிருந்த அந்தமானில் ஒரு நினைவுச் சின்னம் அமைத்தபோது, அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் அதற்கு கடும் எதிர்ப்பைக் கிளம்ப்பிய செய்தியை அனைவரும் அறிந்திருப்பர். எந்தத் தியாகத்தையும் நாம் செய்யாவிட்டாலும் கூட தியாகம் செய்து தழும்பேறிய பெரியோர்களை மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் என்ன செய்வது?

நாட்டுக்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த தேசபக்தர்களையும் அவர்களுடைய தியாகங்களையும் புரியாமல் இவர் மீது அபாண்டமான பழிகளை சுமத்தி அவரை அவமரியாதை செய்தனர் என்பதை அறியும்போது, நம் இந்திய தேசத்தில் தேசபக்திக்கு இதுதானா மரியாதை என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?
குறிப்பு:

thanjai-ve-gopalanதிரு.  தஞ்சை வெ.கோபாலன், தஞ்சையில் இயங்கும் பாரதி இலக்கியப் பயிலகத்தின்  இயக்குனர்; தே.சி.க. மாநில துணைத் தகலைவர்;  ‘காண்டீபம்’ இதழ் ஆசிரியர் குழு உறுப்பினர்.

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in தை-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s