2.11 ஜல்லிக்கட்டு: பாரம்பரிய மத விளையாட்டுக்குத் தடை ஏன்?

நம்பி நாராயணன்

jallikkattu

மதுரை உள்பட்ட சில தென்மவட்டங்களில் வரவிருக்கும் பொங்கல் திருவிழா களையிழந்து காணப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு, இந்த ஆண்டேனும் பொங்கலுக்குள் மீண்டும் அனுமதிக்கப்பட்டுவிடும், இதற்கென மத்திய அரசு முனைந்து ஏதாவது செய்துவிடும் என்ற எதிர்பார்ப்ப்பு ஒரு புறமும், சென்ற ஆண்டு மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்த போதும் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விழாவை தடுத்தன் காரணமாக விரக்தி ஒருபுறமுமாக மக்கள் தவித்து வருகின்றனர். ஏமாற்றத்தின் விளிம்பிலும், காளைகளைப் பறிகொடுக்கும் ஆபத்தான நிலையிலும் பல கிராமத்து மக்கள் காத்திருக்கின்றனர்.

தமிழக ஆளும் கட்சியான அதிமுகவும் மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவும் தீவிரமாக முயன்றும்கூட, நீதிமன்றம் இதற்குத் தடையாக இருப்பதை, நீதிமன்றத்தின் அத்துமீறல் என்றே குறிப்பிடலாம். கொள்கை முடிவுகளை ஆட்சியாளர்களுக்குப் பதிலாக நீதின்றங்கள் எடுப்பது என்பது ஜனநாயக மாண்புக்கு எதிரானது. ஆனால் இதே நீதிமன்றங்கள் ஜனநாயகம் பற்றி வகுப்பு எடுப்பதும் உண்டு. அதுதான் வேடிக்கை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சியில் இருந்த திமுகவும் காங்கிரசும் இணைந்துதான் ஜல்லிக்கட்டுக்கு ஆப்பு வைத்தன. வேடிக்கை என்னவென்றால் இன்று அக்கட்சியினர்தான் ஜல்லிக்கட்டை நடத்தியாக வேண்டும் என்று போராட்டம் அறிவித்து, மக்கள் முன்பு வேஷமிட்டு வருகின்றனர்.

எப்படி தடை செய்யப்பட்டது ஜல்லிக்கட்டு?

இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டம் 1966-இன்  விதிமுறைப்படி, ‘வன  விலங்குளைக்  கூண்டில்  அடைத்தோ,  பொது இடங்களில்  வைத்தோ  வித்தை  காட்டக்   கூடாது.   அதன்படி  பல விலங்குகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவற்றை  பொது  இடங்களில் துன்புறுத்துவது  குற்றமானது. சிங்கம்,  புலி,  கரடி,  குரங்கு போன்ற வன விலங்குகளை இப்படியலில் சேர்த்தனர். சில தலைமுறைகளுக்கு முன்பு சர்க்கஸ் காட்சிகளில் இவ்விலங்குகளைப் பார்த்து வந்த நாம் இன்று பார்க்க முடியாமல் போனதற்குக் காரணம் இச்சட்டமே.

இந்திய பாரம்பரியத்தை நசுக்க வேலை செய்துவரும் கூட்டம் ஒன்று நயவஞ்சகமாக காளை மாடுகளை இந்த அட்டவணையில் சேர்க்க வைத்த்து.  2011 -இல் நடந்த இந்தச் செயலுக்கு உடன்போனவர் அன்றைய தினம் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ். தடை அறிவித்தவுடன்  “காட்டுமிராண்டி தனமான’  இந்த வழக்கம் முடிவுக்கு வந்தது  குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்“  என்றும் அவர் அறிவித்தார்.

அன்றைய (காங்கிரஸ்) ஆட்சியாளர்களுக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை என்பதற்கு இதுவே மிகப் பெரிய சான்று. ஜல்லிக்கட்டுக் காளைகள் வேறு எவ்வித வேடிக்கைக் காட்சிகளுக்கும் பயன்படுத்தப்படுவதில்லை.  ஜல்லிக்காட்டு மாடுகள் எந்த வகையிலும் துன்புறுத்தப்படுவதில்லை. அவை  களத்தில் இருக்கும் நிமிடமே அதிக பட்சம் ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் மட்டுமே. அந்த இரண்டு நிமிடங்களில் அவற்றின் திமிலைக் கைப்பற்றி குறிப்பிட்ட தூரம் தொங்கிப் பயணிப்பவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். இதுவரை எந்தக் காளையும் இதனால் காயம் பட்டதாகவோ இறந்ததாகவோ ஒரு பதிவும் இல்லை. ஒருபுறம் மதத்தின் பெயரில் பசுக்களை இரக்கமற்று கொன்று வியாபாரம் செய்ய அனுமதிக்கும் சட்டம்; மறுபுறம் அதிகபட்சம் இரண்டு நிமிடமே களத்தில் நிறுத்தப்பட்டு வீர விளையாட்டுக்காக பயன்படுத்தப்படும் காளைகளுக்குத் தடை. என்ன நியாயம் இது?

உண்மையில் ஜல்லிக்கட்டுக் காளைகள் அந்த ஓரிரு நிமிடங்களிக்காகவே 365 நாட்களும் செல்லப்பிராணியாக வளர்க்கப்படுகின்றன. ஏழ்மையில் இருக்கும் குடும்பங்கள் கூட ஜல்லிக்கட்டுக் காளையை வளர்ப்பதை கௌரவமாக்க் கருதி ஏழ்மைக்கு மத்தியிலும் இவற்றை வளர்க்கின்றனர். ஒரு காளை ஒரு லட்சத்திலிருந்து ஒன்றரை லட்சம் வரை விலை மதிப்பு பெறுகிறது. விலை மதிப்பற்ற ஓர் உயிரை எவ்வாறு பாதுகாப்பார்களோ அவ்வாறுதான் இவை பாதுகாக்கப்படுகின்றன. இந்தக் காளைகளை வளர்ப்பதே ஒரு அலாதியான கலை. இவற்றை ஜல்லிக்கட்டுக்கு பழக்கப்படுத்துவதோ மற்றொரு கலை. ஒவ்வொரு காளையும் அந்தந்தக் குடும்பத்தின் மரியாதைக்குரிய நபர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

‘மிருகவதைத் தடுப்பு’ என்ற பெயரில் கண்மூடித்தனமாக அமலாக்கப்படும் விதிமுறைகளால் மாநிலத்தில் 3,000 இடங்களில் நடந்துவந்த ஜல்லிக்கட்டு இன்று எல்லா இடங்களிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. ஒரு லட்சம்,  ஒன்றரை லட்சம் பெறுமான காளைகளைப் போஷிக்க முடியாமல் அவற்றை மிக மலிவான விலைக்கு விற்கும் நிலைக்கு அக்குடும்பத்தினர் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டுக் காளைகளையும் நாட்டுப் பசுக்களையும் அழிக்கும் சதியாளர்களின் செயலுக்கு இதன்மூலம் வெற்றி கிடைத்து வருகிறது.

ஜல்லிக்கட்டின் மீதான இந்தத் தாக்குதல் 2009-ஆம் ஆண்டு முதலே துவங்கிவிட்டது. இந்த மாபெரும் திருவிழாவைத் தடுக்கத்தான் என்னென்ன சதிகள்,  நீதிமன்றம் விதித்த கட்டளைகள்? ஏராளம், ஏராளம்.

சுமார் 77 கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. அவற்றில் சில:

  • காளைகளும் மாடுபிடி வீரர்களும் முறைப்படி பதிவு செய்யப்பட வேண்டும். காளைகளுக்கும் வீரர்களுக்கும் மருத்துவரிடம் தகுதிச் சான்று பெறப்பட வேண்டும்.
  • காளைகளின் பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடி தூவுதல், சேறு, சகதி பூசி வெறியூட்டுதல் கூடாது.
  • ஒரு காளையை ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு மேல் அடக்கக் கூடாது.
  • காளைகளை அடிப்பதோ வாலைப் பிடித்துத் திருகுவதோ வேறு விதமான கருவிகளைக் கொண்டு துன்புறுத்துவதோ கூடாது.
  • காளைகள் ஓடவும், வீரர்கள் அடக்கவும் போதிய இட வசதி களத்தில் இருக்க வேண்டும். ஒரு மாவட்டத்தில் ஓராண்டில் மூன்று ஜல்லிக்கட்டுகளுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது.
  • குறைந்த அளவாக சில லட்சத்தை வைப்புநிதியாக ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் செலுத்த வேண்டும். அதை போட்டியின்போது காயமடைபவர்களின் நலனுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.
  • தகுந்த மருத்துவத் துணைக் கருவிகள், மருந்துகளுடன் கால்நடை மருத்துவர் ஒருவரும் போட்டியின்போது பணியில் இருக்க வேண்டும். போட்டியின் போது மாவட்ட உயர்நிலை மாவட்ட அதிகாரி ஒருவர் பார்வையாளாரக இருக்க வேண்டும்.

ஒரே நேரத்தில் மனிதனுக்கும் காளைகளுக்கும் மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும் என்றதால் கூட்டம் கட்டுப்படுத்த முடியாததாகியது. சீருடையுடன் உள்ளே சென்றவர் சிறுநீர் கழிக்கக் கூட வெளிவர முடியாத நிலைமை.

இத்தனை தடைகளையும் தாண்டி 2012-இல் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியை நடத்துவதற்கான வைப்பு நிதி கிராமத்தினரால் செலுத்த முடியாததால் 3,000 போட்டிகள் வெறும் 24 போட்டிகளாயின. அரசு அதிகாரிகளோ  ‘பார்வையாளர்’ என்ற பெயரில் தங்கள் வேலைப்பளு கூட்டப்பட்டதால் போட்டிகளை தடுத்து நிறுத்தவே முற்பட்டனர்.

இன்று முற்றிலுமாக ஜல்லிக்கட்டுக்குத் தடை என்றால், அதற்குக் காரணம் பாரபட்சமான நிர்வாகமும்,  இந்திய பாரம்பரியத்தைச் சீர்கெடுக்க வந்த அரசு சாரா அந்நிய நிதி பெறும் நிறுவனங்களும்தான். குறிப்பாக PETA எனப்படும் People for the Ethical Treatment of Animals  என்ற அமைப்பு. இந்த அமைப்புதான் பிராணி நல வாரியத்தை பின்னிருந்து இயக்கி வருகிறது. 2012-இல் எவ்விதப் பிரச்னையும் இன்றி ஜல்லிக்கட்டு நடைபெற்ற போதும், எங்கோ ஏற்பட்ட சில விதிமீறல்களை புகைப்படம் எடுத்தும் விடியோ எடுத்தும் முந்தைய ஆண்டுகளின் சில புகைபடங்களை பத்திரிகைகளில் வெளியிட வைத்தும், அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து நீதிமன்ற உத்தரவு மீறப்படுவதாகச் சித்தரித்து முழுத் தடை பெறுவதில் அந்த அமைப்பினர் வெற்றி பெற்றனர். இதற்கு அரைகுறை ஞானம் உள்ள நீதிபதிகளும் உடந்தையாயினர். அதிபுத்திசாலி நீதிபதி ஒருவர் “ஏன், சிங்கத்தை அடக்கி விழா நடத்துவது தானே?”  என்று கேள்வி கேட்கிறார். பாவம், அவருக்குத் தெரியாது போலும், சிங்கங்களை யாரும் வீட்டில் செல்லக் குட்டிகளாக வளர்ப்பதில்லை என்று.

இது பகவான் கண்ணனின் கதை:

கோசல தேசத்து அரசரான நக்னஜித்திற்கு சத்யா என்று ஒரு மகள். தன்னிடம் உள்ள வலிமை மிக்க ஏழு காளைகளை யார் அடக்குகிறாரோ, அவருக்கு தன் மகள் சத்யாவைத் திருமணம் செய்து கொடுப்பேன் என நக்னஜித் அறிவித்திருந்தார். செய்தி கேட்ட கண்ணன், அர்ஜுனன் மற்றும் படைகள் பின்தொடர, கோசல நாட்டை அடைந்து காளைகளை அடக்கி சத்யாவை மணம் செய்தான் என்பது வரலாறு. காளையை அடக்கி சத்யா நக்னஜித்தை மணந்த கண்ணனுக்கு தட்சிணையாக 10,000 பசுக்களையும் 9,000 யானைகளையும், 900 தேர்களையும் நக்னஜித் வழங்கியதாக பாகவதம் கூறுகிறது.

அதுபோலவே, கும்பகனின் மகள் நப்பின்னையை, ஏழு காளைகளை அடக்கி மணந்தார் கண்ணன். காலநேமி என்னும் அரக்கனின் பிள்ளைகள் ஏழு பேர்,  கும்பகனின் வீட்டில் காளைகளாக வந்திருந்தனர். அவர்களை அடக்கி  கும்பகன் மகளை கண்ணன் திருமணம் செய்து கொண்டார்.

காளையை அடக்க வேண்டும் என்றால் மிகுந்த உடல் வலிமை வேண்டும். அது மட்டுமின்றி,  தெளிந்த அறிவும் வேண்டும். அப்போதுதான் காளைகளின் போக்கை அறிந்து, அவற்றை அடக்க முடியும். அதேபோல பெண் ஒருத்தியைக் கைப்பிடித்து, இல்லற தர்மத்தில் ஈடுபட நினைக்கும் ஆணுக்கு உடல் பலமும் தெளிவான அறிவும் வேண்டும். அப்படிப்பட்டவன்தான் இல்லறத்தில் உயர்வை அடைகிறான்  என்று இதற்குப் பரவலாக வியாக்யானங்கள் சொல்லப்படுவதுண்டு.

இதன்மூலம் ஜல்லிக் கட்டு தமிழர் விளையாட்டு மட்டுமல்ல, ஹிந்துக்களின் பாரம்பரிய விளையாட்டு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

கோயில் காளைகள் என்ற பெயரில் காளைகள் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு தனிநபராலும் உயர்ந்த ஜாதிக் காளைகள் வாங்க முடியாது என்பதால் ஊர்கூடி காளை வாங்கி,  கோயிலில் வளர்த்து வருவதற்குப் பெயர்தான் கோயில் காளை. கோயில் காளை தங்கள் நிலத்தில் நுழைந்தால் யாரும் விரட்டுவதில்லை. மாறாக தங்கள் பாக்கியம் என்கின்றனர். கோயில் காளைகள் ஜல்லிக் கட்டு மைதானத்தை சுற்றிவந்த பிறகுதான் போட்டிகளே துவங்குகின்றன.

சர்சுகளிலும் மசூதிகளிலுமா காளைகளை வளர்க்கின்றனர்?   தமிழர் தமிழர்  என்று பேசி மதத் திருவிழாவுக்கு இனவாதச் சாயம் பூசிய அதீத ஆர்வலருக்கும் ஜல்லிக்கட்டுத் தடையில் பங்கு உண்டு. ஜல்லிக்கட்டுக்கு மதத்தோடு கொண்ட தொடர்பை அறுப்பதன் மூலம் நாட்டுக் காளைகளையும் பசுக்களையும் அழித்துவிடலாம்,  பாரம்பரியத்தை இழந்து வறுமைக்குத் தள்ளப்படும் குடும்பங்களை மதம் மாற்றவும் செய்யலாம் என்பது இந்த அந்நிய நிதிபெறும் விலங்குநல ஆர்வலர்களின் திட்டம். நீதிமன்றமோ அவர்களைக் கலந்து கொள்ளாமல்,  அவர்கள் அனுமதியின்றி வேடிக்கை விலங்குகள் தவிர்ப்புப் பட்டியலில் இருந்து காளை மாட்டின் பெயரை எடுக்கத் தயாராக இல்லை.

மதத்தின் பெயரால் பசுவை வதை செய்வதை அனுமதிக்கும் சட்டம்,  மாட்டிறச்சி வியாபாரத்தை அனுமதிக்கும் சட்டம், அதே மதத்தின் பெயரால் ஜல்லிக்கட்டையும் அனுமதிக்கலாமே? இதுதான் தற்போதைய நியாயமான கேள்வி.

 

குறிப்பு:

nambi-narayananதிரு. நம்பி நாராயணன், சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் முன்னாள் மாநில நிர்வாகி. பத்திரிகையாளர்.

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in தை-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s