1.23. சகோதரி நிவேதிதை வழிபட்ட பாரத அன்னை

-சாது பேராசிரியர் வே.ரங்கராஜன்

 

sister-nivedita-1

சகோதரி நிவேதிதை

சகோதரி நிவேதிதை

(150-வது ஜெயந்தி துவக்கம்: அக்டோபர் 28, 2017)

 

பாரதியின் ஞானகுரு

தாய்த்திருநாட்டை மகாசக்தியின் வடிவமாக வழிபடும் பண்பாடு, ஆன்மீகத்துடன் இணைந்த தேசியம் மற்றும் தேசபக்தி மார்க்கத்தின் ஒப்பற்ற திருவுருவமாகத் திகழ்ந்த சகோதரி நிவேதிதை, அயர்லாந்து நாட்டில் ஒரு கிறிஸ்தவப் பாதிரியின் மகளாக- மிஸ் மார்கரட் நோபிளாக -பிறந்து, சுவாமி விவேகானந்தரின் வேதாந்த முழக்கங்களால் ஆட்கொள்ளப்பட்டு, பாரதம் வந்து, பாரத அன்னையின் சரணாரவிந்தங்களில் தன்னையே அர்ப்பணமாக்கிக் கொண்டு அவளது அருட்புதல்வியாக மாறியவராவர். “இதுதான், மற்றேதுமல்ல நமது தாயகம்! நாம் ஒவ்வொருவரும் பாரதியனே!” என்று பெருமையுடன் முழங்கினார். அவரை தமது ஞானகுருவாக ஏற்றுக் கொண்ட தேசபக்தக் கவிஞர் மகாகவி பாரதியார்,

அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர்

                                கோயிலாய் அடியேன் நெஞ்சில்

                இருளுக்கு ஞாயிறாய் எமதுயர் நா

                                டாம் பயிர்க்கு மழையாய் இங்கு

                பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்

                                பெரும் பொருளாய்ப் புன்மைத்தாதச்

                சுருளுக்கு நெருப்பாக விளங்கிய தாய்

                                நிவேதிதையைத் தொழுது நிற்பேன்

-என்று பாடியுள்ளார்.

தம் தேசீய கீதங்களை “ஸ்வதேச கீதங்கள்” எனும் தலைப்பில் முதன்முதலாக வெளியிட்ட பொழுது தமது ஞானகுருவாகிய நிவேதிதா தேவிக்கு அந்த நூலை ஸமர்ப்பணம் செய்து பாரதி எழுதினார்:

“ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்துமநிலை விளக்கியதொப்ப, எனக்கு பாரததேவியின் ஸம்பூர்ணரூபத்தைக் காட்டி, ஸ்வதேசபக்தி யுபதேசம் புரிந்தருளிய குருவின் சரணமலர்களில் இச்சிறு நூலை ஸமர்ப்பிக்கின்றேன்.”

ஸ்வதேச கீதங்கள் இரண்டாம் பகுதியை  ‘ஜன்ம பூமி’ எனும் தலைப்பில் வெளiயிட்ட பொழுது அதன் ஸமர்ப்பணத்தில் பாரதி எழுதினார்:

“எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும் துறவுப்பேருண்மையையும் சொல்லாமலுணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந்தருடைய தர்ம புத்திரியுமாகிய ஸ்ரீமதி நிவேதிதா தேவிக்கு இந்நூலை ஸமர்ப்பிக்கின்றேன்.”

பாரத அன்னை வழிபாடு

சகோதரி நிவேதிதை பாரத அன்னையை என்றென்றும் இளமை மாறாத கன்னிக்குமரியாகவே கண்டு களித்தார். “தேசங்களுக்கிடையே பாரதம் ஒரு பிரம்மச்சாரிணி; ஆற்றல் மிக்க, போராடத் துணிந்த, ஆர்வம் மிகுந்த, வீரம் பீறிட்டெழுந்த, தனது ஆன்ம பலத்தை உணர்ந்த, உலகம் என்றுமே கனவில் கூட கண்டிராத ஒரு சிறு பிள்ளை”, என்று பாரதததைப் போற்றினாள், சகோதரி நிவேதிதை.

தேசபக்தி என்பது நாட்டின் மண்ணையும் நாட்டு மக்களையும நேசிப்பதே என்று போதித்தார் சகோதரி. தேசம் என்றும் ஒன்றுபட்டு இருக்க அவர் வழி கூறினார்: “தாய்நாட்டிடமும் நாட்டு மக்களிடமும்- மண்ணிடமும் மண்ணின் மைந்தர்களிடமும்- ஆழ்ந்த பற்று எனும் வார்ப்பு அச்சில் ஊற்றப்படுகின்ற சூடான உருக்குக் குழம்பாக நமது வாழ்க்கை மாற வேண்டும்” என்று.

மேலும் அவர் கூறுகையில், “இந்த நிலை ஏற்பட்டால், நாம் எண்ணுகிற ஒவ்வொரு எண்ணமும், நாம் பெறுகின்ற அறிவின் ஒவ்வொரு சொல்லும்,  அந்த மாபெரும் சித்திரத்தை மேலும் மேலும் தெளிவு படுத்தும். அன்னையிடம் மிகுந்த விசுவாசமும், பாரதத் தாயிடம் பக்தியும் பூண்டால், உண்மை நிலைகள் நாம் நாடாமலேயே நம்மை வந்து சேரும். பல துண்டுகள என்று கூறப்படும் நமது நாட்டையும் ஒன்றாக நாம் காண்போம்” என்று வலியுறுத்துகிறாள்.

இந்த நாட்டின் இல்லங்கள், கிராமம், நிலம், நீர், மலைகள்- ஏன் இந்த நாடு முழுவதுமே- ஆழ்ந்த பக்தியுடன் வழிபடப்பட வேண்டிய வழிபாட்டுப் பொருளாக அவர் கண்டார். தாய்நாட்டின் இளமை மிக்க திருத்தோண்டர்களுக்கு அவர் திட்டமொன்றை வகுத்துக் கொடுத்தார்: “கையிலே ஒரு பயாஸ்கோப்புடன், நாட்டின் பல்வேறு காட்சிகளைக் காட்டும் வண்ணப்படங்களுடன், பாரதத்தின் வரைபடத்துடன், எண்ணத்திலும் உள்ளத்திலும் பாரத அன்னையின் புகழைப்பாடும் பாடல்கள், கதைகள் மற்றும் நில இயல்சார்ந்த விளக்கங்களை நிரப்பிக்கொண்டு, கிராமம் கிராமமாகச் சென்று, கிணற்றருகிலோ மர நிழலிலோ மக்களை ஒன்றுதிரட்டி, தேசபக்தி போதனை நடத்துங்கள’ என அறைகூவல் விடுத்தாள் சகோதரி நிவேதிதை.

பாரத நாட்டு இளைஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த நிவேதிதை, ஒவ்வொரு இளைஞனும் தனது கல்லூரிப் படிப்பு முடிந்ததும் கண்டிப்பாக ஒருசில ஆண்டுகளாவது தேசத்தொண்டிற்காக செலவிட வேண்டுமென்றும் அதற்குப் பின்தான் தொழில் செய்து பொருளீட்ட முயல வேண்டும் என்றும் வலியுறுத்தினாள்.

வீரமிக்க இளைஞர் தேவை

சென்னை மாநகரில் வீரமிக்க தேசத்தொண்டர்களுக்கு அறைகூவல் விடுத்துப் பேசிய நிவேதிதை, “பாரதத்தில் ஒரு யுகம் மற்றொரு யுகத்தைப் பின்தொடர்ந்து வருகிறது. அன்னையின் கூக்குரலும் தமது செல்வங்களை, அவர்களது சுய பெருமையைப் புதுப்பித்து, புதுப்புது வழிபாடுகள் செலுத்தக் கோருகின்றது. இன்று அவள் கோருவது தேசியம். வல்லமை மிக்கவர்களைப் பெற்று வளர்த்த இல்லத்தரசியாகத் திகழும் அவள் இன்று நம்மிடம் கோருவது மென்பண்பு மற்றும் பணிவு மனப்பான்மையல்ல,  மாறாக வீறுகொண்ட ஆண்மை மற்றும் வெல்ல முடியாத வலிமையேயாகும்.  இன்று நாம் வாளேந்தி வீர விளையாட்டு விளையாடுவதையே அவள் விரும்புகிறாள். இன்று நாம் அவளை வீரச் செல்வர்களின் தாயாகவே காண வேண்டும். தான் பசித்திருப்பதாக அவள் கூவுகிறாள். முடிசூடிய மன்னர்களாகிய மக்களின் உயிர் மற்றும் உதிரத்தால் தான் நமது கோட்டையை நாம் காக்க முடியும்” என்று கூறுகிறாள்.

“நம்மைப் பெற்றெடுத்து, நமக்கு உணவும் நண்பர்களையும் அளித்து, நமது உற்றார், உறவினர்கள் மற்றும் நமது சமயத்தையே அளித்து நம் தாய் நாடு நமக்குச் செய்துள்ளதை எல்லாம் நாம் உணர்வோமாக! அவள் நமது தாயல்லவா? அவளை மீண்டும் மாபாரதமாகக் காண நாம் விழையவில்லையா?” என நிவேதிதா வினவுகிறாள்.

புரட்சித் தலைவி நிவேதிதை

1906-ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டில், தனது பள்ளிச் சிறுமியர்களைக் கொண்டு அவர் தயாரித்த, காவி நிறமும் மத்தியில் வஜ்ராயுதச் சின்னமும் வந்தேமாதரம் எனும் மந்திரமும் கொண்ட தேசியக் கொடியை நாட்டுமக்களுக்கு வழங்கிய நிவேதிதை, “வங்கத்து இளைஞர்களின் முதுகெலும்பினால் சக்திவாய்ந்த ஓரு ஆயுதத்தை உருவாக்கி” பாரத அன்னையின் அடிமைத்தளைகளை உடைத்தெறிய தமது குருநாதர் தமக்கு ஆணையிட்டதாக வீரமுழக்கம் செய்தார். புகழ்மிக்க புரட்சிவாதி ராஷ் பிஹாரி போஸ், “காய்ந்து போன எலும்புக் கூடுகள் கூட உயிர்பெற்று அசையத் துவங்கின எனில் அது சகோதரி நிவேதிதை அவற்றுக்கு உயிரூட்டியதால் தான்” என்று சகோதரியின் புரட்சி வேட்கையைப் புகழ்கிறார்.

வந்தேமாதரம்என்போம்!

‘வந்தேமாதரம்’ என்று உச்சரித்தால் சவுக்கடி மற்றும் சிறைவாசம் என்றிருந்த காலத்தில் தனது பள்ளிச் சிறுமியர்களைக் கூட நித்தம் காலையில் வந்தேமாதர கீதம் பாடி, பள்ளிப் பாடங்களைத் துவங்க வைத்தாள் நிவேதிதா. லோகமான்ய பாலகங்காதர திலகர், வ.உ.சிதம்பரம் பிள்ளை, விபின் சந்திரபாலர் வழிவந்து தேசபக்தச் சிங்கமாக கர்ஜித்த மகாகவி பாரதியார் காங்கிரஸ் மகாநாட்டிற்குச் சென்றபொழுது டம்டமில் சகோதரி நிவேதிதையைச் சந்தித்து தன்னை அவளது மலரடிகளில் சமர்ப்பித்ததில் வியப்பென்ன?

நிவேதிதையின் வழி பற்றி பாரதி பாடிய நாட்டு வணக்கம் நம் உள்ளங்களில் நித்தம் எதிரொலிக்கின்றது:

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

                இருந்ததும் இன்னாடே-அதன்

முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

                முடிந்ததும் இன்னாடே-அவர்

சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து

                சிறந்ததும் இன்னாடே-இதை

வந்தனை கூறி மனத்தில் இருத்தி என்

                வாயுற வாழ்த்தேனோ?-இதை

வந்தே மாதரம், வந்தே மாதரம்

                என்று வணங்கேனோ?”

இன்று நம் நாடு, தன்னலம் பேணாத இத்தகைய இளம் தேசபக்த சிங்கங்களையல்லவா காண விரும்புகிறது?

இமயமலைச் சாரலில், டார்ஜிலிங்கில், சகோதரி நிவேதிதா தேவியின் சமாதியில், “பாரத அன்னைக்காக அனைத்தையும் அர்ப்பணம் செய்த சகோதரி நிவேதிதை இங்கு உறங்குகிறார்” என்று எழுதி வைக்கப்பட்டுள்ளதை நாடு என்றும் மறவாது.

வந்தே மாதரம்!

 

குறிப்பு:

சாது வே.ரங்கராஜன்

சாது வே.ரங்கராஜன்

ஸ்ரீ. சாது பேராசிரியர் வே.ரங்கராஜன், தேசிய சிந்தனைக் கழகத்தின் ஆரம்பகால நிறுவனர்களுள் ஒருவர். தியாகபூபி பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். தற்போது, பெங்களூர், கிருஷ்ணராஜபுரத்தில், ஸ்ரீ பாரதமாதா மந்திரை நிறுவி ஆன்மிகப்பணி ஆற்றி வருகிறார்.

இக்கட்டுரை, அகில இந்திய வானொலி- சென்னையில் சாது அவர்கள் ஆறறிய சொற்பொழிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஐப்பசி-2016 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s