1.22. கவிஞரின் அறம்

-சத்தியப்பிரியன்

kannadasan

கவியரசு கண்ணதாசன்

கவியரசு கண்ணதாசன்

(நினைவுநாள்: அக். 17)

 

அறம் என்பதை நேரடியாக அர்த்தம் கொள்வது என்றால் தர்மம் என்று கூறலாம். அறம் என்ற பதத்தை அறு என்ற வினைச்சொல்லிலிருந்து பெறுகிறோம். மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளே ‘அறம்’ எனப்படுகிறது. இது பொதுவான  ஒன்றா என்று கேட்டால் பொதுவானது என்று கூற முடியாது. ஏன் என்றால் கள்ளுண்ணாமை பாரதத்தைப் பொருத்த வரை மாந்தர் கடைபிடிக்க நிர்பந்தப்படுத்தப்படும் ஒழுக்காறுகளில் ஒன்று. ஆனால் இது மேலைநாடுகளில் அனுமதிக்கப்பட்ட ஒன்று. அதேபோல ஏகபத்தினி விரதம் என்ற தர்மம் இங்கு மட்டுமே கடைபிடிக்கப்படுகின்றது. ஆனால் கீழை நாடுகளில் குறிப்பாக இசுலாமியர்களின் வழியில் ஏக பத்தினி என்ற கோட்பாடே கிடையாது. எனவே பொதுவான அறம் என்று பார்ப்பதைவிட எந்த அறம் மேலோங்கியது அல்லது மேன்மையானது என்று பார்ப்பது நல்லது.

ஹிந்துமதம் இரண்டு மாபெரும் காவியங்களின் மேலே எழுந்து நிற்கும் ஆல விருக்ஷம். பாரதம் என்ற தர்ம ஸ்தாபனத்தின்  அடிக்கற்கள் ராமாயணமும், மகாபாரதமும். தர்மத்தை போதிப்பதற்காகவே யுகங்கள் தோறும் ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும், மகான்களும் தோன்றிய வண்ணம் உள்ள புண்ணிய பூமி பாரத பூமி. ஒரு சமுதாயம் என்பது அதன் மக்கள், அதன் ஆட்சியாளர்கள் இவர்களோடு நில்லாமல் மேற்கூறிய மகான்கள், கவிஞர்கள் போன்றவர்களால் கட்டமைக்கப்படுகிறது. எப்போதெல்லாம் அறப்பாதையிலிருந்து மனிதன் நழுவுகின்றானோ அப்போதெல்லாம் பல மகான்களும் அறத்தில் சிறந்த கவிஞர்களும் அவதரித்து நமக்குத் தர்மத்தைக் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். வேத வியாசர், பதஞ்சலி, பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ஜனகர், வால்மீகி, துளசிதாசர், காளிதாசர், சாணக்கியர், ஆதிசங்கரர், மீரா என்று நம்மிடம் பெரிய பட்டியலே உள்ளது.

தமிழ்மொழி மட்டும் சளைத்ததா என்ன?  தமிழ் இலக்கியம் என்பது அறத்தின் அடிப்படையில் அமைந்தது. அது அகமாக  இருந்தாலும் சரி, புறமாக இருந்தாலும்  சரி, அனைத்தும் அறத்தின் அடிப்படையிலேயே எழுப்பப்பட்டன. ஐந்திணை ஒழுக்கம் என்கிறது தமிழ் இலக்கியம். பிறகு அது எவ்வாறு தடம் புரளும்? அந்தச் செம்மை மொழியில் தோன்றிய கவிஞர்கள் எப்படி தடம் புரள்வார்கள்?

தமிழ்க் கவிதைக்கு ஒரு நீண்ட பாரம்பரியம் உள்ளது. ஐந்திணை ஒழுக்கத்தில் ஆரம்பிக்கும் இதன் வரலாறு நீண்டது; செம்மையானது. பதினெண்கீழ் கணக்கு என்று நீதி நூல்களை எல்லாம் தரம் பிரித்து அழகு பார்க்கும் ஒரே மொழி தமிழ் மொழியாகத்தான் இருக்கும். அப்படி ஒரு  மொழியில் தோன்றிய கவிஞர் கண்ணதாசன் எப்படி வேறாவார்?

சங்க காலம் தொடங்கி இதோ இந்த 21-ஆம் நூற்றாண்டு  வரையில் மொழியும் சமூகமும் பல மாறுதல்களைச் சந்தித்து வந்துள்ளன. களப்பிரர்கள் காலம் வரையில் தமிழின் செம்மை அதன் ஐந்திணை ஒழுக்கத்தில் செழித்தது. வேறு எந்த தேசத்திலும் எந்த இனமும் வாழ்க்கையை ஐந்து நிலங்களின் தன்மைக்கு ஏற்ப அமைத்துக் கொண்டதா என்று தெரியவில்லை. பொழுது, நிலம், மக்கள், கடவுள் அவர்கள் சார்ந்த ஒழுக்கம் அனைத்தையும் ஐந்து வகையாகப் பிரித்து வாழக் கற்றவர்கள் நாம். அதன் பிறகு களப்பிரர்களின் ஆட்சியின் கீழ் தமிழகம் பல  மாறுதல்களைச் சந்தித்தது. இன்னமும் கூட களப்பிரர்கள் யார் என்று தெரியாத அளவிற்கும் ஆவணங்கள் எதுவுமற்ற நிலையில்தான், களப்பிரர்கள் ஆட்சி புரிந்த மூன்று நூற்றாண்டுகளின் நிலை உள்ளது. பல்லவர்களின் ஆட்சிக்குப் பிறகு நாம் மெல்ல மெல்ல நமது ஐந்திணை ஒழுக்கத்தை இழந்து நம்மைத் தழுவிய வடமொழியைச் சேர்த்து அணைத்துக் கொண்டோம். இந்தச் சேர்க்கையினால் பல அருமையான பக்தி இலக்கியங்கள் நம்மிடம் மிளிர்ந்தன. திருக்குறள்  என்ற உலகம் போற்றும் உன்னத நூல் நமது வேதம் என்று சொல்லும் அளவிற்குச் சிறப்பைப் பெற்றது. கம்பன் என்ற கற்பனைச் சுரங்கத்தை தமிழகம் அகழ்ந்து எடுத்தது இந்தக் காலகட்டதில்தான்.

கம்பனை ஓர் எல்லையாகக் கொண்டால், அதன் பிறகு இசுலாமியரின் அறம் சாராத  ஆட்சி  காரணமாக தமிழ் இலக்கியம் பெரும் பின்னடைவைச் சந்தித்தது என்றுதான் சொல்ல வேண்டும். கலம்பகம், உலா, தூது, பள்ளு, சிலேடை என்று தமிழ் ஒரு கட்டுக்கோப்பினுள் அடங்காமல் உதிரி உதிரியாகப் பரிணமிக்கத் தொடங்கியது. ராஜராஜ சோழன் காலத்தில் புதுப் பொலிவினைப் பெற்ற நாட்டியம் மெல்ல மெல்ல முழு அளவையும் எட்டி,  பின்னால் இசையிலும், கூத்திலும், நாடகத்திலும் பல புதிய சாளரங்களைத் திறந்து விட்டது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் தமிழ் உரைநடை என்ற கட்டுரைத் தமிழை புதுப்பிக்கத் தொடங்கியது. இது பொதுவாகவே உலக அரங்கில் நடைபெற்ற மாற்றம் என்பதால், உரைத்ததமிழ் செம்மை பெறுவதை ஒருவராலும் தடுக்க இயலவில்லை. அதற்கு முன்பாகவே பல்லவர்களுடன் உள்ளே நுழைந்த மணிப்பிரவாளம் வைணவ சமயத்தில் உரைநடை வடிவில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. விருத்தம் என்ற புதிய வடிவம் தமிழ்ச் செய்யுள்களுக்குக் கிடைத்தது. வெண்பா ஓர் நூலாசிரியனின் புத்திக்கும், திறமைக்கும் சவால் என்றால், விருத்தம் அதே ஆசிரியனால் தான்  எண்ணிய எண்ணங்களை எளிய வகையில் மக்களிடம் கொண்டுசெல்லும் செய்யுள் வடிவாக இருந்தது.. அருணாசல கவிராயர் என்ற மாபெரும் ராம நாடகக் கலைஞனை  தமிழ் அளித்தது. இதன் தொடர்ச்சியாக வந்தவர்தான் மகாகவி பாரதியார்.

கம்பன் ஓர் எல்லை என்றால் பாரதி ஓர் எல்லை. கம்பனுக்காவது வாழ்வதில் அன்றாடச் சிக்கல்கள் எதுவும் இல்லை. வயிற்றுப்பாட்டை கவனிக்க ஒரு சடையப்ப வள்ளல் இருந்தார். ஆனால் சுப்பிரமணிய பாரதியார் தோன்றிய காலம் மிக மோசமான காலகட்டம். ஆங்கிலேய அரசு அவருக்குச் சாதகமாக இல்லை.  மக்களும் சாதகமாக இல்லை. அடிமைப்பட்டுக் கிடந்த மக்கள். இதிலிருந்து மேலெழுந்து வர பாரதியாருக்கு மிகவும் பற்றுக்கோடாக இருந்தது நமது பாரதத்தின் அறம். அறம் என்ற கேள்விக்கான பதிலை நீங்கள் பாரதியாரிடம் தேடினால் போதும், வேறு எங்கும் போக வேண்டாம்.

கம்பனும், மகாகவியும் சந்தித்திராத மேலும் ஓர் அதிசயத்தை மாற்றத்தை அவனுக்குப் பிறகு வந்த அடுத்த தலைமுறை சந்தித்தது. இந்தியாவின் முதல் திரைப்படமாக  ’ஸ்ரீபுண்டலிக்’ என்ற மராத்திய மொழியில் வெளிவந்த ஆண்டு 1919.  பாரதி 1921-ல் இறந்து விடுகிறார். இலக்கியம் காணொலிக் காட்சிகளின் மூலம் புதிப்பித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானபோது, பாரதி தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளவேண்டிய சோதனைக்கு ஆளாகவில்லை என்றாலும், அவர் பல பாடல்களில் இருந்த நாடகக் கூறுகளே அவர் மறைவிற்குப் பின்பு அவர் பல பாடல்கள் திரைப்படங்களில் எடுத்துக் கையாளபட்டாலும் இன்றும் புதிது போலத் தெரிகின்றன. இதனை அறிந்துதான் ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் அவர்கள், பாரதியாரின் மொத்த கவிதைகளின் திரைப்படப் பாடலாக மாற்றும் உரிமையை எழுதி வாங்கிக் கொண்டார். பிறகு அந்த உரிமையை மீட்பதற்குத் தமிழ் உலகம் பட்ட பாடு தனிக்கதை.

இவர்களின் நீட்சியாகக் கண்ணதாசன் திரை உலகில் பிரவேசிக்கிறார். சமகாலக் கவிஞன் என்பதால் கண்ணதாசனை அவருடைய எழுத்து மூலமாக மட்டும் பார்க்காமல் அவர் சார்ந்த சமூகம் சார்ந்தும் பார்க்க வேண்டியிருக்கிறது. அரசியல் என்பது சுரண்டிப் பிழைப்போரின், உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவோரின் காலமாக மாறிய நேரத்தில் வெள்ளையனிடமிருந்து விடுதலை பெறவேண்டும் என்ற ஒற்றைச் சிந்தனையுடைய மாந்தர்கள் நடுவில் தோன்றியவன் பாரதி. ஆனால் அரசியல் என்பது சாக்கடையாகப் போன காலத்தில் செந்தாமரையாக மலர்ந்தவன் கவிஞன் கண்ணதாசன். அவருடைய சுயசரிதையான மனவாசம், வனவாசம் ஆகிய தொகுப்புகளைப் படிக்கும்போது இதனைத் தெளிவாக அறியலாம். அவர் தமிழக முன்னாள் முதல்வர். மறைந்த சி.என்.அண்ணாதுரை அவர்களிடம் பெறாத  ‘கணையாழி’ கதை அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

சிறுகூடல்பட்டி முத்தையா கண்ணதாசன் என்று மாறியதே ஒருவகை அறம்சார்ந்த விஷயம் எனலாம். தமிழர்களுக்கான மொத்த அடையாளம் கவிஞர் என்றால் சற்று மிகையோ என்று நீங்கள் மிரளக்கூடும். ஆனால் தமிழர்களின் பாரம்பரியமான ஐந்திணை ஒழுக்கத்தையும், தமிழர்களின் காதலையும் வீரத்தையும் மீட்டுத் தந்தவன் கண்ணதாசன் என்றால் மிகையாகாது. அகம்- புறம் என்று அவன் தமிழர்களின் அடையாளமாகப் பிரிந்து கிடக்கிறான்.

கவிஞரைப் புகழ் உச்சியில் கொண்டு நிறுத்திய திரைப்படப் பாடல், பாகப்பிரிவினையில் இடம் பெற்ற “தாழையாம் பூ முடித்து” என்ற பாடல். நமது இல்லற தர்மமே பெண் என்ற தூணின் மீது எழுப்பப்பட்டது என்பதைக் கவிஞர் நன்கு புரிந்து வைத்திருந்தார். மிக அழகான பாடல், நாட்டுப்புறப் பாடல் மற்றும் உரையாடல் நிறைந்த பாடல்- இதற்கு முன்னால் ஆண்டாள் “எல்லே இளங்கிளியே” பாடலில் மேற்கொண்ட உத்தி இது-

அவன் உடல் ஊனமுற்றவன் . அவனை ஒரு பெண் காதலிக்கிறாள். அவள் காதல் உன்மைதான என்று அறிய அவன் ஆவலுடன் உரையாடுகிறான்.

‘தாயாரின் சீதனமும் தம்பிமார் பெரும்பொருளும் மாமியார் வீடு வந்தால் போதுமா? மானாபிமானங்களைக் காக்குமா?-  இது அவனுடைய கேள்வி.

‘மானமே ஆடைகளாம்; மரியாதை பொன்னைகையாம். நாணமாம் துணையிருந்தால் போதுமே, எங்கள் நாட்டுமக்கள் குலப்பெருமை தோன்றுமே’

என்று பளிச்சென்று ஓர் உரையாடல் போன்ற வரிகளில்  பதில் சொல்லிவிடுகிறார்.

அதே பாடலில் மேலும் ஓர் இடத்தில் ‘ அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண்மகனை மங்கையர்கள் நினைப்பதுண்டோ ?’ என்ற அவனுடைய கேள்விக்கு அவள், ‘மண்பார்த்து விளைவதில்லை, மரம் பார்த்துப் படர்வதில்லை, கன்னியரும் பூங்கொடியும் “ என்று பதில் கூறுகிறார்.

இந்த அறம் சார்ந்த காதல்தான் பெருவாரியான அவருடைய காதல் பாடல்களுக்கு அடித்தளம்.

களவு நெறியின்கண் மிகுதியான காதலை அனுபவிக்கும் அவரது காதலர்கள் அந்தக் காதல் முடியுமிடம் இல்லற தர்மம் என்பதில் கவிஞர் உறுதியாக இருந்தார்.

எனவேதான் ‘தாய்ப் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை ஒரே ஒரு பாட்டு “ என்று காதலை அவன் காதலர்கள் போற்றினாலும்,

‘ சுகம் மேவிடும் காதலின் எல்லை மாலை சூடும் மணநாள் “ என்று பாட முடிகிறது.

‘ நம் முன்னவர்கள் வெறும் மூடர் இல்லை அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை “ என்ற நமது பாரதத்தின் நான்கு ஆசிரமங்களில் ஒன்றான இல்லற தர்மத்தை ஒரு காதல் பாடலில் அமைக்கும் துணிச்சல் கவிஞருக்கு மட்டும்தான் இருக்கும்.

புறப்பாடல்களில் அவருடைய தத்துவத்தின் தாக்கம் வேறு எந்தச் சமகாலக் கவிஞரிடமும் காண முடியாத ஒன்று.

நாட்டுப்பற்றை விளக்கும்போது கவித்துவத்தோடு விளக்குவதைப் பாருங்கள்:

வானம் குலமாதர் முகம் பாத்ததில்லை

வஞ்ச நினைவெங்கள் மனம் பார்த்ததில்லை

வீரர் விழி தாழ்த்தி நிலம் பார்த்ததில்லை

வெற்றி திருமாது விளையாடும் எல்லை

-என்கிறார். அதே பாடல்,

பசி என்று வருவோர்க்கு விருந்தாக மாறும்

பகைவர் முகம் பார்த்துப் புலியாகச் சீறும்

நிலத்தில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும்

எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்.

-என்ன ஓர் உணர்ச்சி கொந்தளிக்கும் வரிகள்?

கீதையில் ஒரு சுலோகம் கீழ்கண்டவாறு பொருள் தரும்படி உள்ளது:

கடல் பெரியது. பல வழிகளிலிருந்து அதற்கு நீர் வருகின்றது. அதற்காக அந்தக் கடல் நிரம்பி வழிவதில்லை. அதேநேரம் அந்தக் கடலின் நீர் முழுவதும் கதிரவனால் ஆவியாக மாறுகிறது. உடனே கடல் கோபித்துக் கொண்டு தான் வற்றுவதில்லை. மகிழ்ச்சி வருத்தம் இரண்டும் அற்ற நிலையில் கடல் அமைதியாக இருக்கிறது. அதே போல நிலையான உள்ளம் கொண்டவன் எந்தச் சூழலிலும் அசையாது இருப்பான்

இந்தக் கீதையின் சுலோகத்தைக் கவிஞர் எத்தனை அழகாகத் தமிழ்ப் படுத்துகிறார் என்று பாருங்கள்:

கடலளவு இருந்தாலும் கலங்க மாட்டேன் அது

கையளவே ஆனாலும் வருந்த மாட்டேன்உள்ளத்திலே

உள்ளதுதான் உலகம் கண்ணாஅதை

உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா

-என்கிறார்.

மனமிருந்தால்  பறவைக் கூட்டில்  மான்கள்  வாழலாம்

வழியிருந்தால் கடுகுக்குள்ளும் வழியைக் காணலாம்.

துணிந்து விட்டால் தலையில் எந்தச் சுமையும் தாங்கலாம்

-என்று பாடும் கவிஞரின் அறம் நமது ஹிந்து மதம் சார்ந்தது.

கண்ணனை அவர் வருணிக்கும் அழகைப் பாருங்கள்.

தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்

தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்

கேட்டவருக்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்

கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்

தர்மம் என்னும் தேரில் ஏறி கண்ணன் வந்தான்

தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்.

ஸ்ரீகிருஷ்ணரை ஆராதனை செய்து கொண்டாடும் தேசம் நமது தேசம். வங்க தேசத்தில் கேட்கும் ஒலி எல்லாம் கிருஷ்ண கானம் தானாம். பறக்கும் பறவைகளின் ஒலி எல்லாம் கிருஷ்ணனின் பெயர்தானாம்.

நமது கவிஞருக்கோ எப்போதும் கண்ணனின் ஸ்மரனைதான். அவரே சொல்வதைக் கேளுங்கள்

கண்ணனை நினைக்காத நாள் இல்லையே

காதலில் துடிக்காத நாள் இல்லையே

உண்ணும்போதும் உறங்கும்போதும்

எண்ணம் முழுதும் கண்ணன்தானே.’

கவிஞரே வேறு ஒரு பாடலில் ,

என் போல கண்டதுண்டோ உனது சன்னதிஉன்

முன்னாலே பாடும் வரை கொஞ்சம் நிம்மதி

கிருஷ்ணப் பிரேமையில் கவிஞரை விஞ்ச வேறு யாருண்டு இங்கே?

குடும்பம் என்ற இல்லற தர்மத்தில்தான் கவிஞருக்கு எவ்வளவு நம்பிக்கை?

ஓர் இல்லம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் இடும் பட்டியலைப் பாருங்கள்.

ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்

ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்

-என்று தொடங்கும் கவிஞர்,

கோடி கொடுத்தும் உறவினரோடு வாழ்வது இன்பம்

கூட இருந்து பாதி  கொடுத்து உண்பது பேரின்பம்

 -என்னும்போது அதிதி தேவோ பவ என்னும் உபநிடத வாக்கியத்தின் சாரத்தை உயரப் பிடிக்கிறார். ஒரு மனையாளின் தர்மத்தை நான்கே வரிகளில் எப்படி பதிவிட்டிருக்கிறார் என்பதையும் பாருங்கள்:

வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்

வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்

கண்ணில் நீரைக் காணமல் கவலை எதுவும் கூறாமல்

என்னை எண்ணி வாழாமல் உனக்கென  நான் வாழ்வேன்

-என்று கூறும் வாழ்க்கைத் துணையின் குரல் இருந்து விட்டால் இல்லற தர்மத்திற்கு வேறு என்ன ஊறு நேரிடும்?

பெண்ணுக்குத்தான் இல்லற தர்மமா? ஆணுக்கு  இல்லையா ? என்று கேட்பவர்களுக்கு

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்அதில்

ஒன்று மட்டும் சிறியதென்றால்  எந்த வண்டி ஓடும்?

-என்று கவிஞரே விடையும் சொல்கிறார். அதுவும் போதவில்லை என்று இல்லாளின் பெருமையைத் தலைவனை விட்டே ஏற்றிப் பாட வைக்கிறார்:

“காலச் சுமைதாங்கி கோலே மார்பில் எனைத் தாங்கி

வீழும் கண்ணீர் துடைத்தாய் அதில் என் விம்மல் தணிந்ததடி

-இதை விட வேறு இல்லற தர்மம் வேண்டுமா?

இங்கு மேற்கோள் காட்டப்பட்ட பாடல்கள் எல்லாமே மாதிரிகள்தான். இவற்றையெல்லாம் தொகுத்துக் கொடுப்பது போல அவருடைய ஒரு பெரிய நூல் தொகுப்பு ஒன்று உள்ளது.

இன்றளவும் திருமண நாளில் மணமக்களுக்குப் பரிசாக மக்கள் தேர்வு செய்யும் நூலாக அது விளங்குகிறது. அதுதான்  ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்று நமது பாரத நாட்டின் தர்மத்தை நமக்குச் சிறு பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறுவது போன்ற மொழியில், தானும் பிறழாமல் தமிழும் பிறழாமல் படைக்கப்பட்ட நூல் தொகுப்பாகும்.

இந்த நூல் வெளியாவதற்குக் காரணமானவர்  ‘பெரியவா’ என்று அழைக்கப்படும் காஞ்சி மடாதிபதி மகாஸ்ரீ சந்திரசேகர ஸ்வாமிகள் ஆவார். ஒரு நாத்திகவாதியை ஆத்திகவாதியாக மாற்றிய மகானுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டவர்கள் ஆவோம். இல்லையென்றால் நமது சனாதான தர்மங்களைக் கூறும் ஒரு நூலை நாம் கவிஞரிடமிருந்து பெற்றிருக்க வாய்ப்பில்லை.

காலம் உள்ளவரை நமது பாரத தேசத்தின் தர்ம நதி இங்கே வற்றாது. தர்மம் உள்ளவரை கவிஞர் கண்ணதாசனின் கவிதை நதியும் வற்றாது.

 

 

குறிப்பு:

prabakarசத்தியப்பிரியன் எனப்படும் திரு. சேலம் பிரபாகர், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளர்.

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஐப்பசி-2016 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s