1.21. கொள்ளை கொள்ளும் பாக்கள் தந்த மன்னன்

-சு.சத்தியநாராயணன்

thirumangai-azhvar

திருமங்கையாழ்வார்

(திருநட்சத்திரம்: கார்த்திகை- கிருத்திகை -12.12.2016)

 

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்

  பெருந்துயரிடும்பையில் பிறந்து,

கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு

  அவர்த்தரும் கலவியேகருதி,

ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால்

  உணர்வெனும் பெரும்பதம் திரிந்து,

நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்

  நாராயணா வென்னும் நாமம்

 –தான் நாராயணா என்னும் திருநாமத்தை அடைந்ததை மிக அற்புதமாகத் தமது பெரிய திருமொழி முதல் பாசுரத்திலேயே குறிப்பிடுகிறார் திருமங்கையாழ்வார். இப்படிப்பட்ட அற்புத பாசுரங்கள் நாலாயிரத் திவ்யபிரபந்தமென்றும் திராவிட வேதமென்றும் தமிழ் மக்கள் கொண்டாடக் காரணமாய் இருந்தவர் எம்பெருமானார் என்று கொண்டாடப்படும், இப்பொழுது நாம் ஆனந்தமாய் ஆயிரமாவது ஜயந்தி கொண்டாடிக் கொண்டிருக்கும் ராமானுஜாச்சார்யார்.

திருமங்கையாழ்வார் அந்நாள் சோழப் பேரரசில் இருந்த திருவில்லிநாடு என்னும் நகருக்கு அருகில் திருக்குறையலூர் என்னும் கிராமத்தில் ஆலிநாடார் என்னும் சேனைத்தலைவர்- வல்லித்திரு என்னும் தம்பதியருக்கு உதித்தவர். நீலன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் சிறுவயதிலேயே வில், வாள், வேல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று அனைத்து வீரக்கலைகளிலும் சிறந்து விளங்கியுள்ளார். இவற்றோடு முறையான கல்வியையும் கற்றுள்ளார். இது அந்நாளில் நமது தேசம் வழங்கிய வற்றாத குருகுலக் கல்வியின் சிறப்பு.

தனது வீரத்தால் சோழப் பேரரசுக்கு வெற்றிகள் பல பெற்றுத் தந்ததற்குப் பரிசாக திருமங்கை ஊரைத் தலைநகராகக் கொண்டு விளங்கிய ஒரு சிற்றரசை வெகுமதியாகப் பெற்றார். எதிரிகளுக்கு காலனாக விளங்கி  ‘காலன்’ என்றும் சோழ அரசில் ‘பர’ என்னும் அடைமொழியை பெயருக்கு முன்னால் வைக்கும் முறைமையால் ‘பரகாலன்’ என்றும் அழைக்கப்பட்டார். அந்நாளில் சாதி, திறமையுள்ளவர் முன்னுக்கு வரவும் பட்டங்கள் பெறவும் தடையாய் இருந்ததில்லை போலும்.

ஆட்சிப் பொறுப்பேற்று அதிகாரத்தில் போர், காமம் எனத் திரிந்தவர் குமுதவல்லி என்ற நங்கையின் அழகைக் கேள்விப்படுகிறார். அந்நங்கையின் பெற்றோரை அணுகி தான் அவர்களது மகளை மணமுடிக்க தனக்குள்ள விருப்பத்தைத் தெரிவிக்கிறார். மருத்துவரான அவரது பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியடைகின்றனர் தம் மகளுக்கு கிடைக்கப் போகும் அரச வாழ்க்கையை எண்ணி. ஆனால் மகளின் திட்டமோ வேறு.

குமுதவல்லி மிகத் தெளிவாக உரைக்கிறாள், தந்தையே, “ உத்தமமான திருநாங்கூர் பிரானின் திருவடிகளைப் பற்றி வணங்கி வரும் நான் ஒரு வைணவ அடியாரையே மணக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். எனவே இவர் போர்வெறியைத் துறந்து, வேற்று மாந்தர் மேல் கொண்டுள்ள மோகம் துறந்து, பஞ்ச சம்ஸ்காரம் பெற்று, தினமும் 1008 வைணவ அடியார்களுக்கு உணவளித்து தனது சிந்தனையை பரமனின் தாளில் இருத்தி ஒரு வைணவ அடியாராக மாறினால் இவரது மாலையை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன்” என்கிறாள்.

என்னே துணிபு! பெண்களை அடக்கி வைத்த தேசம் என்று கூறும் இழிமாந்தர் இக்கதையைக் கேட்டறியட்டும். தனக்கான மணாளனை எவ்வளவு துணிபாக பெற்றோரிடத்தும் தன் முன்னே தன்னை மணமுடிக்க வேண்டி நிற்கும் மன்னனிடத்தும் கூறியிருப்பதை அறிந்து அவர்கள் வெட்கம் கொள்ளட்டும்.

குமுதவல்லியின் அழகும், தெளிவான பேச்சும் திருமங்கை மன்னனின் அதிகார போதையை மட்டுப்படுத்தியிருந்தது. அவளின் வேண்டுகோள்படி திருநறையூர் ஸ்ரீநிவாஸப் பெருமாள் சந்நிதியை அடைந்து அவனையே குருவாக வரித்து வைணவ அடியாராக மாறினான் திருமங்கை மன்னன். நான்காம் வர்ணத்தில் பிறந்த நீலன் ஒரு சிற்றரசனாவதற்கோ, கோயிலில் இறைவனை குருவாக ஏற்று மந்திர உபதேசம் பெற அந்நாளில் ஏதும் இடையூறு இல்லை என்பதும் தெளிவாகின்றது.

வைணவ அடியாராக மாறி அன்னதானத்தை சிறப்பாய் நடத்திட மன்னன் மெனக்கெட, அவன் வசம் இருந்த பொன்னும் பொருளும் குன்றினின்றும் குன்றி மணியாய் குறைந்தது. பேரரசுக்கு அளிக்க வேண்டிய கப்பம் இழுத்தடிக்கப்பட்டது. சினம் கொண்ட சோழன் கைது ஆணை பிறப்பித்து அனுப்ப அது திருமங்கை மன்னனின் தன்மானத்தை சீண்டவே சோழனை எதிர்க்கத் துணிபு கொண்டான். வந்த சிறு சோழப்படையை சிதறு காயாய் சிதறடித்து அனுப்ப, சோழன் மேலும் வெகுண்டெழுந்து நேரிடையாய் களம் காண்கிறான். திருமங்கை மன்னனின் வீரம் கண்ட சோழன் நெஞ்சில் ஈரம் கொண்டு அவனை மன்னித்து கப்பம் செலுத்தும்படி பணித்து ஆலயத்தினுள் காவல் வைக்கிறான்.

சிறைகண்ட திருமங்கையான் திருவின் மணாளனை நினைந்து உண்ணா நோன்பிருக்க அவன் மன்னனுக்கு புதையலை காஞ்சியில் பெற்றுக் கொள்ள அருள்கின்றான். அதனைக் கொண்டு கப்பம் செலுத்த, சோழன் திருமங்கை மன்னனுக்குப் பொருள் கிடைத்த விதம் அறிந்து, கொண்ட பொருள் அனைத்தையும் அடியவர் திருப்பணிக்கே கொள்ளுமாறு திருமங்கை மன்னனைப் பணிக்கிறான்.

எல்லாப் பொருளும் அடியவர் சேவையில் கரைய, கள்ளனாய் மாறி தன் படையோடு அணைபோல் பணத்தைச் சேர்த்து வைத்திருப்போரிடமிருந்து கொள்ளை கொள்கிறான். கொள்ளை கொண்ட பொருள் அடியவர் சேவை எனினும் தவறான வழியென்பதால் திருமங்கை மன்னனை ஆட்கொண்டருள முடிவு செய்த பரந்தாமன் மணமக்களாய் வழி ஏகுகின்றான். மணமக்களிடமிருந்து கொள்ளை கொண்ட பொருட்களை தூக்க இயலாமல் வீர்ர்கள் திணற திருமங்கையானே முயல்கிறான். இயலாமையால் வேர்வை வழிய கண்ணில் கோபம் வழிய என்ன மந்திரம் கொண்டு இவ்வாறு செய்தாய்? அதைக் சொல்லாவிடில் உனக்கு வழியில்லை என மிரட்ட,  கமலக் கண்களில் கருணை வழிய பெருமான் மந்திரம் மறந்தாயோ என்று கூறி அருகழைத்து வலச்செவியினுள் வலிமைமிகு மந்திரத்தை ஓத, மன்னனின் மனதில் இறைநினைவு ஆறாய் பெருகி ஓடியது.

அதன்பின் கவிதைகள் ஊற்றாய் பெருக்கெடுக்க பெரிய திருமொழி 1084, குறுந்தாண்டகம் 20,  நெடுந்தாண்டகம் 30, திருவெழுக்கூற்றிருக்கை 1, சிறிய திருமடல் 40, பெரிய திருமடல் 78 எனப் பாடி,  ஆசுகவி, சித்ரகவி, விஸ்தாரக்கவி, மதுர கவி என நால்வகைக் கவி பாடி  ‘நாற்கவி’ என பட்டம் பெற்றுச் சிறப்புடன் விளங்கினார். முன்னாளில் பொருள் கொள்ளை கொண்ட மன்னன் பின்னாளில் மனங்களை தண்டமிழ் பாசுரங்களால் கொள்ளை கொள்கின்றான்

குலம் தரும் செல்வம் தந்திடும்

  அடியார்  படுதுயராயினவெல்லாம்

நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்

  அருளொடு பெருநிலமளிக்கும்

வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்ற

  தாயினு மாயின செய்யும்,

நலந்தருசொல்லை நான் கண்டுகொண்டேன்

  நாராயணாவென்னும் நாமம்

– அழியாத பெருஞ்செல்வமான அழகுத்தமிழ் பாசுரங்களை விட வேறெந்த செல்வம் பெருஞ்செல்வமாய் இருக்கக் கூடும். அத்தனையும் நாராயணாவென்னும் நாம உபதேசம் பெற்றதால், அதனினும் அந்த நாமத்தை இருமுறை திருமங்கை மன்னன் இறைவனை குருவாகக் கொண்டு பெற்றிருக்கிறான் என்பது தனிச்சிறப்பு.

இப்படிப்பட்ட திருநாமம் கிடைக்கவொண்ணாததாய் சிலர் வசம் மட்டும் சிக்கியிருக்க, அதனை மிகவும் சிரமத்திற்கிடையே கைவரப்பெற்று,  ‘நரகமே புகினும் இந்நலம் தரும் மந்திரம் நானிலமறியட்டும்’ என்று அளித்த ராமானுஜனின் ஆயிரமாவது ஜயந்தி தருணத்தில் திருமங்கை மன்னனை நினைவு கூர்தல் நலம் விளைவிக்கும்.

 

குறிப்பு:

திரு. சு.சத்திய நாராயணன், காண்டீபம் இத்ழின் ஆசிரியர்.

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஐப்பசி-2016 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s