1.18. பாரத ரத்னா மதன்மோகன் மாளவியா

-என்.டி.என்.பிரபு

மதன்மோகன் மாளவியா

மதன்மோகன் மாளவியா

நாம் MLM என்ற வார்த்தையை நாம் கேள்விப்பட்டிருப்போம்.  அதாவது மல்டி லெவல் மார்க்கெட்டிங். MMM தெரியமா? இந்த மூன்று எழுத்துக்கு சொந்தக்காரர், மதன்மோகன் மாளவியா.  இவர் செய்த பல சாதனைகளில் மிகப் பெரிய சாதனை, காசி ஹிந்து பல்கலைக் கழகத்தை நிறுவியதுதான். கடந்த 2015-ம் ஆண்டு பாரத அரசு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்துள்ளது. இவரது பெயரில் மூன்று MMM உள்ளதால் இவரை அன்பாக  ‘Money Making Machine’ என்றும் அழைப்பார்களாம். ஏன் அப்படி அழைக்கப்பட்டார் என்பதை கட்டுரையின் இடையே தெரிந்துகொள்வோம்.

மிகப் பெரிய செயல்களைச் செய்தவரான மதன்மோகன் மாளவியா, உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத்தில் ஒரு சாதாரணக் குடும்பத்தில்,  1861, டிசம்பர் 25ந் தேதி பிரிஜ்நாத் மாளவியா, மூனாதேவி தம்பதியினருக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். உடன்பிறந்தோர் ஐந்து சகோதரர்கள் இரண்டு சகோதரிகள். தந்தை சமஸ்கிருத  பண்டிதர். பல நூல்கள் எழுதியுள்ளார்.

மாளவியாவும் ஐந்து வயதிலேயே சமஸ்கிருதம் கற்கத் தொடங்கினார். ஆச்சார்யர் ஹரதேவ் இவருக்கு எளிமையான சமஸ்கிருத இலக்கண நூலான கௌமுதீயை போதித்தார். பள்ளியில் படிக்கும்போதே கவிதைகள் எழுத்த் தொடங்கிவிட்டார். அவை இதழ்களிலும் பிரசுரமாகின.

பள்ளிப் படிப்பை முடித்தபின் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அலகாபாத்தில் ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார். அதன்பின், ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர், அலகாபாத்தில் சட்டப் படிப்பை முடித்தார். பிறகு வழக்கறிஞரானார். அதில் கணிசமான வருவாய் கிடைத்தபோது, தமக்கென எதுவும் செது கொள்ளாமல் பொதுப் பணிகளுக்காக வழங்கி விடுவார். அதுகுறித்து அவரிடம் கேட்டபோது அவர் சொன்னார்: என் குடும்பத்திற்குத்தான் நான் செலவு செய்கிறேன். பாரத நாட்டுக் குடிமகன் ஒவ்வொருவனும் என் சகோதரன்.” என்றார்.

நாட்டின் சுதந்திரத்திற்காக போராட்டங்கள் நடைபெற்று வந்த அந்தக் காலகட்டத்தில், தாதாபாய் நௌரோஜியின் பேச்சுக்கள் மாளவியாவைக் கவர்ந்தன. அந்தப் பேச்சால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்த் தொடங்கினார் மாளவியா.

1909, 1918, 1930, 1932-ஆம் ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசில் கட்சித் தலைவராக இருந்தார்.

ஆங்கிலேயர்களால் பெங்களூரு பிஷப் காட்டன் பள்ளியில் (1909) துவங்கப்பட்ட ஸ்கவுட் இயக்கத்துக்கு மாற்றாக, இந்தியர்களுக்கென்று பிரத்யேகமாக சாரணர் இயக்கத்தை ’சேவா சமிதி’ என்ற பெயரில் மாளவியா நண்பர்களுடன் இணைந்து துவக்கினார்.

ஸௌரி ஸௌராவில்  நடந்த வன்முறைக்காக 177  போராளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவுடன், அவர்களுக்காக வாதாடி, 156 பேரை விடுவித்தார்.

காசியில் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் கனவு கண்டார். அதற்காக பல லட்சம் ரூபாய் நிதியை அலைந்து திரிந்து திரட்டினார். பல்லாயிரக் கணக்கான மாணவர்களுக்குக் கல்வி தரும் நிலையமாகப் காசி ஹிந்து பல்கலைக்கழகத்தை 1916-இல் நிறுவினார். இதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. அவற்றில் சில சம்பவங்களைப் பார்ப்போம்…

***

பல, ஜமீன்தார்களையும், செல்வந்தர்களையும், நவாப்புகளையும் சென்று பார்த்து மாளவியா பொருள் சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது காசியை ஆண்டு கொண்டிருந்த நவாப்பிடம், மாளவியா. தன் நோக்கத்தை சொல்லிப் பொருளுதவி செய்ய வேண்டினார்.

அப்போது நவாப் பொருள் தர முடியாது என்று சொல்லியதோடு தன் காலில் இருந்த காலணி ஒன்றைக் கழற்றி மதன்மோகன் மாளவியா மீது எறிந்தார்.

“மிக்க நன்றி மன்னா” எனக் கூறி அரண்மனையை விட்டு வெளியே வந்தவர், ”காசி மாநகரத்தின் நவாப் அணிந்த காலனி ஏலத்திற்கு விடப்போகிறேன்.” எனக் கூறி ஏலம் விடத் தொடங்கினார்.

இதை ஊழியர்கள் வாயிலாக அறிந்த நவாப்,  “ஓடுங்கள் உடனே அதனை ஏலத்தில் எடுங்கள் என்ன செலவானாலும் சரி…” என ஆணையிட்டார். ஏலம் சூடுபிடித்து, லட்சம் வராகனுக்கு அச்செருப்பை ஏலம் எடுத்து மன்னரிடம் கொண்டுவந்து கொடுத்தார் மந்திரி.

பின்பு, மதன்மோகன் மாளவியா நவாபைச் சந்தித்து  “அரசே என் மீது தங்கள் செருப்பை எறிந்தமைக்கு மிக்க நன்றி. மற்றதை எறிந்தாலும் பெற்றுக்கொள்வேன்” எனப் பெருமிதத்தோடு சொல்லிச்சென்றார்.

***

காசி ஹிந்து பல்கலைக் கழகத்திற்கு பிகானிர் மகாராஜாவிடம் மூன்று லட்சம் கேட்கச் சென்ற மதன் மோகன் மாளவியா அதில் வெற்றி பெறவில்லை. சில ஆண்டுகளுக்குப் பின் அதே மகாராஜா காசிக்கு தீர்த்த யாத்திரையாக வந்த போது மாளவியா தாமே ஒரு பண்டா வேஷத்தில் சென்று மகாராஜா ‘ஷேத்ர ஸாத்குண்யம்’ என்ற தானம் செய்யும் போது, அதற்கு மூன்று லட்சம் செலவாகும் என்று தெரிவித்தார். மகாராஜாவும் கொடுத்தார்; பணம் கைமாறியதும் பண்டா வேஷம் கலைந்தது. மாளவியாவே தமக்கு புரோகிதராக வந்ததில் மகாராஜாவுக்குத் திருப்தி.

***

ஹைதராபாத் ராஜாவிடம் பணம் பெறாமல் திரும்புவதில்லை என முடிவெடுத்தார் மாளவியா. அங்கு தர்பங்காவில் ஸ்ரீமத்பகவத் கீதை பிரசங்கம் செதார். ராஜா இவரது சொற்பொழிவில் மயங்கி 25 லட்சம் ரூபாய் தானமாகக் கொடுத்தார்.

***

நிதி திரட்ட மாளவியா ஊர் ஊராகப் போனபோது முஜாபர்பூரில் ஒரு பிச்சைக்கார மூதாட்டி நாள் முழுதும் தான் பிச்சை எடுத்துச் சேர்த்த சில்லறைகளை மூட்டையாகக் கட்டி தன் காணிக்கையாக அளித்தார். ஓர் ஏழை அன்பர் தன்னிடமிருந்த கிழிந்த சட்டையை காணிக்கையாக அளித்தார். மாளவியா இவற்றை ஏலம் போட்டு நூற்றுக்கணக்கான ரூபாய் திரட்டினார். ஏலம் எடுத்தவர்கள் அந்தக் காணிக்கைப் பொருள்களையும் அவரிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்கள்.  அந்த மதிப்பு மிக்க பொருள்கள் இன்றும் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன.

***

மாளவியா ஹைதராபாத் நிஜாமைச் சந்தித்து நிதி உதவி கேட்டார். நிஜாம் மறுத்துவிட்டார்.

அப்போது அவ்வூரில் ஒரு சவ ஊர்வலத்தில் சில்லறைக் காசுகளை இறைத்துக் கொண்டே போனார்கள். உடனே மாளவியா, சில்லறைகளை சேகரித்து பையில் போட்டுக் கொள்ள ஆரம்பித்தார். இதைக் கண்ட அவ்வூர் மக்கள், ஏன் இப்படி செய்கிறார் என தெரியவில்லையே என குழம்பி, அவர்களும் அவருக்கு உதவியாக சில்லறைகளை எடுத்துக் கொடுத்தனர்.

இந்தத் தகவல், ஹைதராபாத் நிஜாம் காதுகளை எட்டியது. அவர் மாளவியாவை அரண்மனைக்கு அழைத்து தாராளமாக நிதி அளித்தார்.

***

பொதுப் பணிகளுக்காக ஆடுகிற மாட்டை ஆடியும் பாடுகிற மாட்டைப் பாடியும் கறந்து விடும் கலையில் வல்லவரான மதன்மோகன் மாளவியாவை ஆங்கிலத்தில் அவரது பெயரின் முதலெழுத்துகளுக்கு ஏற்றபடி ‘Money Making Machine’ என்று செல்லமாக அழைப்பார்கள்!.

அனைத்துத் தலைவர்களும் தானம் வசூலிப்பதில் ஈடுபாடுடன் அதை செய்யும் முறையை மாளவியாவிடம் இருந்து கற்றுக் கொண்டதாக கூறுகின்றனர்.

***

மாளவியா 1939-இல் காசி ஹிந்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பொறுப்பேற்றார்.

ஒத்துழையாமை இயக்கத்தில் முன்னணி வகித்த மாளவியா, முஸ்லிம்களை திருப்திப்படுத்த கிலாபத் இயக்கத்தில் காங்கிரஸ் பங்கேற்றதை ஆட்சேபித்தார். 1928 சைமன் குழுவுக்கு எதிரான போராட்டங்களிலும் பங்கேற்றார்.

மே 1932-இல் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, ‘இந்தியப் பொருட்களையே வாங்கு’ இயக்கத்திற்கான கொள்கை அறிக்கையை வெளியிட்டார்.

மாளவியா  ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழின் தலைவராக 1924 முதல் 1946 வரை பணியாற்றினார். இந்த நாளிதழின் இந்திப் பதிப்பை 1936-ஆம் ஆண்டில் துவக்கினார்.

நாட்டில் நிலவிய தீண்டாமைப் பேயை ஒழிக்க பல முயற்சிகளில் ஈடுபட்டவர் மாளவியா. ஹரிஜன ஆலயப் பிரவேசப் போராட்டங்களை அதற்காக நடத்தினார்.

மதம் மாற்றப்பட்ட தாழ்த்தப்பட்ட சகோதரர்களை மீண்டும் ஹிந்துக் குடும்பத்திற்குள் இணைத்துக்கொள்ள வழிவகை காணும்படி,   பல்கலைக்கழகத்தின் ‘இந்திய இயல்’ பேராசிரியர்களை மாளவியா  கேட்டுக் கொண்டார். கங்கையில் ஒரு முழுக்குப் போட்டு ‘ஸ்ரீ ராம் ஜெயராம், ஜெய ஜெய ராம்’ என்ற மந்திரத்தை ஓதினால் போதும் என்று மாளவியா எடுத்துக்கூறி, அதை ஏற்கச் செதார்.

1919 முதல் 1926 வரை மத்திய சட்டசபையின் உறுப்பினராக பதவி வகித்த மாளவியா, முதல் வட்டமேஜை மாநாட்டில் (1931) இந்தியப் பிரதிநிதியாக சென்றார். 1946, நவம்பர் 12-இல் தனது 86-வது வயதில் மாளவியா மறைந்தார்.

2013-ம் ஆண்டு சுதந்திர போராட்ட வீரரான மதன்மோகன் மாளவியாவின் 150-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது அவரது உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

அவர் மறைந்து 68 ஆண்டுகள் கழிந்து, 2015-ம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது மதன் மோகன் மாளவியாவுக்கு வழங்கப்பட்டது.

 

குறிப்பு:

திரு.என்.டி.என்.பிரபு, சென்னையைச் சார்ந்த நூல் வடிவமைப்பாளர்.

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஐப்பசி-2016 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s