1.15. சகோதரி நிவேதிதையின் கல்வித் தொண்டு

-காம்கேர் கே. புவனேஸ்வரி

சகோதரி நிவேதிதை

சகோதரி நிவேதிதை

சகோதரி நிவேதிதையின் இயற்பெயர் மார்கரெட்எலிசபெத் நோபிள். இவர் அயர்லாந்தின் வடபகுதி மாகாணம் டைரோனில் உள்ள டங்கனன் எனும் ஊரில் சாமுவேல் ரிச்மண்ட்- மேரிஇசபெல் ஹாமில்டன் தம்பதியினருக்குப் பிறந்த மூத்த மகள்.

மார்கரெட் எலிசபெத் நோபிளின் தந்தையும், தாத்தாவும் வாழ்ந்த காலத்தில் அயர்லாந்து மக்களை ஆங்கில அரசு துன்புறுத்தி வந்தது. இவர் தந்தைவழி  தாத்தாவும்,  தாய்வழி தாத்தாவும் அயர்லாந்தின் சுதந்திரப் போராட்ட வீரர்கள். மேலும் இவரது தந்தைவழி தாத்தா பாதிரியாகப் பணியாற்றிவர்.

மார்கரெட் எலிசபெத் நோபிளின் தந்தை சாமுவேல் ரிச்மண்ட் மதபோதகராகப் புகழ்பெற்றவர். மேலும் ஏழைகளுக்கும் சேவை புரிந்துவந்தவர். குடும்பமே சமய நம்பிக்கை கொண்டவர்களாலும், சமூக சேவையில் ஈடுபடுபவர்களாலும்  நிறைந்திருந்ததால்,  மார்கரெட் எலிசபெத் நோபிளும் சிறுவயதிலேயே சமய நம்பிக்கை கொண்டவராகவும்,  எளியோர்களுக்கு உதவி செய்யும் கருணை உள்ளத்தோடும் வளர்ந்தார்.

பெண்கல்விக்காக இந்தியா வருகை:

தமது பதினேழாம் வயதில் கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர், ஆசிரியராகப் பணியாற்றி லண்டனில் இருந்த அறிஞர்களிடையே செல்வாக்குப் பெற்று, எதிர்காலத்தில் பிரபல கல்வியாளராவார் என்ற அடையாளத்தைப் பெற்றார் மார்கரெட்.

ஒரு முறை இங்கிலாந்தில் இவரது தோழி இசபெல் மார்கசென் வீட்டில்நடந்த சுவாமிஜி விவேகானந்தரின் சொற்பொழிவைக் கேட்கும் வாய்ப்பைப் பெற்றார். அந்தச் சொற்பொழிவு இவரது அறிவுத் தேடலுக்கு பெருமளவில் உதவியது.

பல புதிய தகவல்களை வித்தியாசமான கோணத்தில் அவரது சொற்பொழிவுகள் மூலம் அறிந்துகொள்ள முடிந்தாலும் அவர் கூறிய எல்லாக் கருத்துக்களையும் அப்படியே ஏற்க முடியாத சமயங்களில், துணிந்து சுவாமிஜியிடம் கேள்விகள் எழுப்பி விவாதம் செய்தார் மார்கரெட்.

வேதகாலத்தில் பாரதப் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கி ஆண்களுக்கு நிகராக விளங்கினார்கள். ஏற்றத்தாழ்வின்றி அனைவருக்கும் சமமான கல்வியே வழங்கபட்டது.  ரிக்வேதத்தில்,  ஏறக்குறைய 30 பிரம்மவதனிகள் இருந்திருக்கிறார்கள் என்றும்,  பெண்கள் ஆண்களோடு தத்துவஞானம் சார்ந்த சொற்போர்களில் பங்குபெற்று, விவாதங்களில் கலந்துகொண்டு வாதிட்டு வெற்றிபெற்று பெருமைகளையும் மரியாதைகளையும் வாழ்த்துக்களையும் பெற்றுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.

கார்கி,  மைத்ரேயி,  வடவாபிரதிதேயி,  அனுசுயா,  ஷஷ்வதி,  கோசாகக்சியவதி, லோபமுத்ரா,  ரொமசா,  சரமாதேவயுனி,  யமி,  ரதீர்பரத்வாசா,  அபலா, பௌலோமி என இருபதுக்கும் மேற்பட்ட ஆகிய பெண் ரிஷிக்காகள் இருந்திருக்கின்றனர்.  அவர்களின் படைப்புகளும் வேதஉபநிடதங்களில் உள்ளன. ஆனால் அந்நியர் ஆட்சியினால் அந்த நிலை முற்றிலும் மாறி, இந்தியப் பெண்கள் கல்வியில் பின்தங்க ஆரம்பித்தனர். இவற்றை சுவாமிஜியிடமிருந்து அறிந்தார் மார்கரெட்.

ஒருமுறை இந்தியப் பெண்களின் நிலை பற்றி பேசிக் கொண்டிருந்தபோது சுவாமிஜி, ‘என்நாட்டுப் பெண்களின் கல்வி குறித்த திட்டங்களில் நீ பெரிதும் உதவ முடியும் என நம்புகிறேன்’ என்றுகூறினார். சுவாமிஜியின் அழைப்பை ஏற்று, ஜனவரி 28, 1898 ஆம் ஆண்டு இந்தியாவில் கல்கத்தாநகருக்கு வந்தார் மார்கரெட்

மூன்று அம்ச பயிற்சி:

nivedita-book

நிவேதிதையின் நூல்

இந்தியா வந்த பின்னரும், மார்கரெட் சுவாமி விவேகானந்தரிடம் எதிர்க்கேள்விகளை எழுப்பி விவாதத்தில் ஈடுபடுவார். சுவாமிஜி எப்போதுமே தன்னுடைய கருத்துக்களை மற்றவர்களுக்குள் திணிக்க மாட்டார். அவர்களுக்குப் புரியும்படி எடுத்துரைத்து, நாளடைவில் அவர்களே ஏற்றுக்கொள்ளும்படி செய்வார். அதன்படியே மார்கரெட்டுக்கும் இந்தியாவைப் புரிய வைத்து, அவரே அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும்படிச் செய்தார். மேலும், மூன்று முக்கிய அம்சங்கள் கொண்ட பயிற்சியையும் கற்றுக்கொண்டார் மார்கரெட்.

இந்திய நாட்டின் பெருமைகளை பல்வேறு கோணங்களில் கண்டுகொண்டார். எல்லா உயிர்களிடத்திலும் இறைவன் இருப்பதால், அவற்றை இறைவனாகக் கருதிப் பணிசெய்ய வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டார். மற்றவர்களுக்கு கல்வி அளிக்கும்போது மற்றவர்களைவிட நாம்தான் பெரிய அறிவாளிகள் என்று நினைக்கக் கூடாது என்ற பண்பை வளர்த்துக்கொண்டார்.

மார்கரெட் நிவேதிதையான நிகழ்வு:

மார்கரெட்டை கல்கத்தாவாசிகளுக்கு அறிமுகப்படுத்துவதற்காக சுவாமி விவேகானந்தர் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்.மார்ச் 28, 1898-இல் சுவாமி விவேகானந்தர், மார்கரெட்டுக்கு பிரம்மச்சரிய தீட்சை கொடுக்கும்போது ‘தெய்வத்துக்கு அர்ப்பணிப்பு’ எனும் பொருள்படும் ‘நிவேதிதா’ என்ற பெயரை அளித்தார். இவ்வாறு இந்து சமயத்தில் தீட்சை வழங்கப்ட்ட முதல் மேற்கத்திய பெண் இவர் தான்.

மார்கரெட்டின் தாய் அவரை தன் வயிற்றில் கருவுற்றிருந்தபோது, தனக்கு சுகப்பிரசவமானால், அந்தக் குழந்தை வளர்ந்தவுடன் இறைத் தொண்டில் ஈடுபடுத்துவதாக வேண்டிக்கொண்டிருந்தார். இறைவனுக்கு நிவேதனமாகப் படைக்கப்பட்டவள் என்ற பொருளில் நிவேதிதா என்ற பெயரில் தீட்சை பெற்றபொழுது, தன் தாயின் பிரார்த்தனையும் நிறைவேறியதால், தன்மீது இறையருள் இருமடங்குப் பொழிந்ததாக உணர்ந்தாள் நிவேதிதை.

கல்விப்பணியில்:

நிவேதிதை நினைவு தபால்தலை

நிவேதிதை நினைவு தபால்தலை

அன்னை சாரதா தேவியின் வீட்டுக்கு எதிரில் போஸ்பாரா தெருவில் ஒரு சிறிய சந்து இருந்தது. அமைதியான அந்தத் தெருவில் எண் 16-ல் குடியேறினார் நிவேதிதை. ஆர்ப்பரிப்பில்லாதா அந்த அமைதியான இடத்தில் பள்ளியைத் திறக்க விரும்பினார்.

நவம்பர் 13, 1898 –இல், காளி பூஜை அன்று அன்னை சாரதா தேவியால் பள்ளி திறந்து வைக்கப்பட்டது. இன்றும் உலகமெங்கும் அன்னை சாரதா தேவியின் பெயரில் பல பள்ளிகளும், கல்லூரிகளும் செயல்படுகின்றன.

இப்பள்ளியில் சிறுமிகளுக்கு எழுதப் படிக்கச் சொல்லித் தந்ததுடன்,  ஓவியம் வரைதல்,  மண்பொம்மைகள் செய்தல், துணி தைத்தல் முதலானவற்றையும் சொல்லித் தந்தார் நிவேதிதை.

குடும்பத்தில் ஒரு தாய் கல்வி கற்றால் அந்தக் குடும்பமே பயனடையும் என்ற எண்ணத்தில்,  சிறுமிகளின் அன்னையருக்கும் கல்வியும் மற்ற நுண்கலைகளும் சொல்லித் தர விரும்பி,  சகோதரி கிறிஸ்டைன் துணையுடன் அந்தப் பணியையும் ஆரம்பித்தார்.

நூறுஆண்டுகளுக்கு முன்பே,  குடும்பப் பெண்களின் வசதிக்காக,  நிவேதிதை பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை அவர்களுக்கு கல்வி கற்பித்தார். எத்தனை புதுமையான முயற்சி இது? நிவேதிதை புதுமைப்பெண் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையா?

பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வரவே அனுமதி இல்லாத அந்தக் காலத்திலேயே அவர்களுக்கு அறிவுரை சொல்லி கல்வியைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, கல்வி கற்க வைத்ததோடு தன் பள்ளியில் படித்த மாணவிகளை அவ்வப்பொழுது நகரத்தின் பல பகுதிகளுக்கும் அழைத்துச் சென்றார். அதனால் பெண்கள் வெளியுலகத்தைப் பற்றிய அறிவு பெற்றனர்.

இவ்வாறு பெண் குழந்தைகளை பள்ளிக்கு வரவழைப்பது நிவேதிதைக்கு அத்தனை சுலபமாக இல்லை. ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாகச் சென்று பெண் குழந்தைகளை கல்வி கற்க அனுப்புமாறு வேண்டினார். ஆனால் அவர் வேற்று மதத்தைச் சார்ந்தவராக இருந்ததால், தங்கள் குழந்தைகளை மதமாற்றம் செய்துவிடுவாறோ என அஞ்சினர். அவர்களிடம் தன் பணிவான அணுகுமுறையினால் பேசி அவர்களுக்கு நம்பிக்கை அளித்து பெண் குழந்தைகளை மட்டும் இல்லாமல் அவர்களின் தாய்க்கும் கல்வி அளிக்க ஏற்பாடு செய்தார்.

‘மதமாற்றம் நிச்சயம் செய்ய மாட்டோம். இந்து தர்ம பழக்க வழக்கங்கள், ராமாயணம் போன்ற இதிகாசங்கள்,  பக்திப் பாடல்கள் இவற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்போம்’ என உறுதி அளித்ததோடு அவ்வாறே செயல்படுத்தியதால் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பகுதி மக்கள் தாங்களாகவே தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முன்வந்தனர்.

பள்ளி நடத்துவதற்கான செலவை, புத்தகம் எழுதி அதில் வரும் தொகை கொண்டு சமாளித்தார். இவருக்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நண்பர்களும் உதவினர்.

நம்நாட்டுப் பெண்கள் தலைநிமிர்ந்து பேச பயந்து கொண்டிருந்த காலத்திலேயே அவர்களின் கல்விக்காகவும்,  வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும்,  சரிநிகர் சமான நிலைக்காகவும் போராடி பெற்றுத் தந்த உரிமையைத் தான் இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதற்குப் பின்னால், சகோதரி நிவேதிதை போன்ற துணிச்சல் மிக்க பெண்களின் பேருழைப்பு உள்ளதை மறுக்க முடியாது. போராடிப் பெற்ற அந்த உரிமையை விட்டுக் கொடுக்காமல் காப்பாற்றுவது ஒன்றே நாம் செய்ய வேண்டிய செயல்.

 

குறிப்பு:

compcare-bhuஸ்ரீமதி காம்கேர் கே.புவனேஸ்வரி  எம்.எஸ்சி.  கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.பி.ஏ. பட்டங்கள் பெற்றவர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் ‘காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்’ என்ற ஐ.டி. நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வருகிறார். 100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நூல்களை தமிழில் எழுதி உள்ளார்.

இவர் தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர் என பண்முகம் கொண்டவர். இவரது சாஃப்ட்வேர் தயாரிப்புகளும், தொழில்நுட்பப் புத்தகங்களும் பல பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் உள்ளன.

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஐப்பசி-2016 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s