1.11. தேசிய கல்விக் கொள்கையின் அவசியம்

-பேரா. கே.குமாரசாமி

students-2

மாத்ரு பூமி, பித்ரு பூமி, புண்ய பூமி, ஸ்வர்ணபூமி, வீரபூமி, மோட்ச பூமி போன்ற அடைமொழிகளுடன் விளங்கும் பாரதம்  ‘ஞானபூமி’ என்றும் அழைக்கப்படுகிறது. அறிவியல், கலை, கணிதம், தத்துவம், வான சாஸ்திரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் பாரத நாடு உலகளாவிய புகழ்பெற்று விளங்கியது. இன்று அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயில்வதை பெருமையாக நினைக்கும் இந்திய மாணவர்களைப் போன்று,  ஒரு காலத்தில் பாரத நாட்டின் தக்ஷசீலா, நாளந்தா, காஞ்சி, சர்வகலா சாலைகளில் சேர்ந்து படிப்பதை வெளிநாட்டினர் பாக்கியமாகக் கருதினர்.

திண்ணைப் பள்ளிக்கூடம், இராத்திரிப் பள்ளிக்கூடம், குருகுலம் ஆகியவை மூலம் மக்கள் பரவலாக கல்விச் செல்வத்தை ஈட்டி வந்தனர். ஏட்டுக் கல்வியுடன் பண்பாட்டுக் கல்வியும் வலியுறுத்தப்பட்டதால் படித்தவர்கள் பண்பாளர்களாக விளங்கினர்.

ஆனால் இன்று கல்வி தரம் தாழ்ந்து விளங்குகிறது. உலக அளவில் பல்கலைக்கழகத் தரவரிசையில் எந்த ஒரு இந்திய பல்கலைக்கழகமும் முதல் இருநூறு இடங்களைக் கூட பிடிக்க முடியவில்லை.

அண்மையில் நடந்த குற்றவாளிகள் பற்றிய ஒரு ஆய்வறிக்கையின்படி மெத்தப் படித்தவர்களே அதிக குற்றம் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஏன் இந்த அவல நிலை?

மெகாலே கல்வித் திட்டம் குமாஸ்தா மனப்பான்மையை வளர்த்ததும். மார்க்ஸ் கண்ணோட்டம் ஆன்மிக சிந்தனையை மழுங்கடித்து லோகாயுத அணுகுமுறை மூலம் மனிதனை சுயநலவாதியாக மாற்றியதும் தான் இதற்குக் காரணம்.

இவற்றை சரி செய்வது எப்படி?

நாடு சுதந்திரம் பெற்ற பின் ஏ.எல்.முதலியார், டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன்,பேராசிரியர் டி.எஸ்.கோத்தாரி, டாக்டர் சட்டோபாத்யாயா போன்றோர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு கல்விக் கொள்கைகள் வகுக்கப்பட்டன. ஆனால் நடைமுறை சாத்தியக் குறைபாடுகளால் எந்த மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படவில்லை.

கடந்த முப்பது ஆண்டுகளாக கல்வித்துறையில் எந்த புதிய சிந்தனையும் உருவாக்கப்படாத நிலையில், தற்போதைய நரேந்திர மோதி அரசு புதியதொரு தேசியக் கல்விக் கொள்கையை வகுத்துள்ளது. நடைமுறை சாத்தியம் பெரும் சவாலாக அமையலாம். இருப்பினும் அதன் சிறப்பு அம்சங்களை சீர்தூக்கிப் பார்ப்பது அவசியம் ஆகும்.

பண்பாட்டுக் கல்வி: உதாரணமாக புதிய கல்விக் கொள்கையில் ஏட்டுக் கல்வியுடன் பண்பாட்டுக் கல்வி வலியுறுத்தப்பட்டுள்ளது. கல்வியின் நோக்கம்,”மிருக, அசுர குண நாசம், மனித தேவ குண விகாசம்” ஆகும்.  எனவே மனிதாபிமானம், ஒழுக்கம், கட்டுப்பாடு, சேவை உள்ளம், தேசபக்தி, சமுதாய விழிப்புணர்வு, தேசிய ஒருமைப்பாட்டுணர்வு, பரோபகார மனப்பான்மை, கருணை, நேரம் தவறாமை, ஆகிய உயர்ந்த கருத்துக்களை வலியுறுத்தும் புதிய கல்விக் கொள்கை பாராட்டிற்குரியது.

நமது பாரம்பர்யம், பண்பாடு, ஆன்மீகம்,தாய்நாடு ஆகியவைப் பற்றி பெருமிதம் கொள்ளும் வகையிலான தேசியக் கல்வி கொள்கை மெச்சத்தக்கதாகும்.

ஆசிரியர் மேம்பாடு: கல்விக் கொள்கை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் அதை அமல்படுத்தும் கருவி ஆசிரியர் பெருமக்களே. ஆசிரியர் தரம் நீர்த்துப் போயிருக்கின்ற இச்சூழலில் ஆசிரியர் தர மேம்பாட்டிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.  ஆசிரியர் கல்விவாரியம் ஏற்படுத்த வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆசிரியர் தரமதிப்பீடு செய்ய வேண்டும். பயிற்சி பெற்ற கல்வி ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும். B.Ed. வகுப்பில் சேர்வதற்கு குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். நான்காண்டு, ஐந்தாண்டு, ஒருங்கிணைந்த B.Ed படிப்பு ஆசிரியர்களைத் தேர்வு செய்ய TET கட்டாயம் போன்றவையும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன.

IAS தேர்வைப் போல IES(Indian Educational Service) தேர்வை நடத்தி அதில் தேர்ச்சி பெற்ற கல்வித்துறை நிபுணர்களை மாநிலத் தலைமயகங்களில் அமர்த்திக் கல்வி முறையை நெறிப்படுத்த வேண்டும் என்பது சிறந்த சிபாரிசு ஆகும்.

தாய்மொழிக் கல்வி: ஆங்கில மோகத்தின் காரணமாக பிராந்திய மொழிகள் புறந்தள்ளப்பட்டுள்ளன. எனவே குறைந்த்து ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி வாயிலாகக் கல்வி என்ற கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. காந்திஜி, அரவிந்தர் போன்றோர் தாய்மொழி கல்வியை ஆதரித்தனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எல்லா இந்திய மொழிகளின் மீது தாக்கம் கொண்டுள்ள கலாசார மொழியான சமஸ்கிருத மொழிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.சமஸ்கிருதம் மூலம் பண்பாட்டு ரீதியான ஒற்றுமையை நிலைநாட்ட முடியும் என்பது உண்மை. கணினிப் பயன்பாட்டிற்கு உகந்த மொழி சமஸ்கிருத மொழி என்பது நிரூபணமாகி உள்ளது.

உயர்கல்வி இலக்கு: நேர்மையான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆராய்ச்சியாளர்களுக்கு ஆராய்ச்சிக் காலத்தில் ஊக்கத்தொகை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் உயர் கல்வியின் தரம் உயரும் என்பது உறுதி.

தரம் வாய்ந்த இருநூறு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பல்கலைக் கழகங்கள் இந்தியப் பல்கலைக்கழகங்களோடு இணைந்து செயல்பட ஊக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அது போல நமது பல்கலைக் கழகங்களின் வளாகங்கள் வெளிநாடுகளிலும் துவக்கப்பட வாய்ப்பினை ஏற்படுத்துகிறது.  எனினும், உலக பல்கலைக்கழகங்களுக்கு நம் நாட்டின் கதவுகளைத் திறந்து விடுவது நமது பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கு ஏற்றதா என்பது சர்ச்சைக்கு உரியதாகும்.

அரசுப் பள்ளிகளிலும் முன்குழந்தைப் பருவக் கல்வி முதல் படிப்படியாக கல்வி கற்பிக்க வேண்டும். அதாவது pre school (அங்கன்வாடி), preprimary. மற்றும் primary என குழந்தைகளுக்கு கற்றலில் இன்பம் என்ற கண்ணோட்டத்தின் மூலம் பாடம் நடத்த வேண்டும்.

கணினி பயிற்சி, தகவல் தொழில் நுட்பம் போன்ற பயிற்சிகளுக்கு புதிய கொள்கையில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

 பிற அம்சங்கள்:  RTE Act எட்டாம் வகுப்பு வரை பொருந்தும், சிறுபான்மை பள்ளிகளுக்கும் இச்சட்டம் பொருந்தும் என்பது புதிய கல்விக் கொள்கையில் மற்றொரு அம்சமாகும்.

ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகியவற்றின் பாடத்திட்டங்கள் தேசிய அளவில் பொதுவானதாக இருக்க வேண்டும். மற்ற பாடத் திட்டங்களை மாநில அரசுகள் வகுத்துக் கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு வரை மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும். பள்ளிக் கல்வியிலும், உயர்கல்வியிலும் வேலைவாய்ப்பினைப் பெருக்குதல் என்ற கருத்து புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ளதன் மூலம் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட புதியக் கல்விக் கொள்கையின் ஷரத்துக்களை அமல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கலாம். படிப்படியாக சற்று கால அவகாசம் எடுத்துக் கொண்டு நல்லனவற்றை நடைமுறைப்படுத்த அரசியல் சாயம் பூசாமல், திறந்த மனதோடு அனைவரும் முன்வர வேண்டும்.

 சிந்தனைக்கு: கனடா நாட்டில் டொரெண்டோ நகரில் வெள்ளச் சேதம் ஏற்பட்டது. நிவாரண நிதி கொண்டு வரும்படி மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அவனது சிறுசேமிப்பு உண்டியலை திறந்து அத்தொகையையும் நிவாரண நிதியில் சேர்க்கும்படி ஒரு தாய் தனது மகனிடம் கூறினாள்.

”போம்மா, அது என்னுடைய பணம், தர மாட்டேன்” என்ற மகனின் பதிலைக் கேட்டு தாய் அதிர்ந்து போனாள். நேராக தலைமையாசிரியரிடம் சென்று, “உங்கள் பாடத்திட்டத்தில் ஏதோ குறை இருக்கிறது, உடனே சரி செய்யுங்கள்” என்றாளாம்.

ஆம், நம் நாடும் கல்விக் கொள்கையை சரி செய்யும் தருணம் வந்து விட்டது. வாழ்நாள் முழுமையும் கற்றல் வாய்ப்பினை நல்குதல், தேச முன்னேற்றச் செயல்களில் ஈடுபடும் தகுதியுடைய மாணவர்களை உருவாக்குதல் போன்ற குறிக்கோள்களுடன் வெளிவரும் தேசியக் கல்விக் கொள்கை-2016 ஐ வரவேற்போம்.

அதிலுள்ள நல்ல அம்சங்கள் எதையும் படித்துப் பாராமலே, அரசியல் காரணங்களுக்காக அதை விமர்சிக்க வேண்டும் என்பதற்காகவே அதை எதிர்ப்போர், அந்த அறிக்கையை முழுவதும் முதலில் படிக்க வேண்டும். கல்வியில் நல்ல மாற்றத்தை உருவாக்க அனைவரும் இணைந்து பணி புரிய வேண்டும்.

வாழ்க பாரதம்!

 

குறிப்பு:

பேராசிரியர் கே.குமார்சாமி, கல்வியாளர், எழுத்தாளர். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் வட தமிழக துணைத் தலைவர்.

 

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஐப்பசி-2016 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s