1.24. பத்திரிகையாளர், எழுத்தாளர்களின் கடமை

-காஞ்சி மகா பெரியவர்

 

pen

சூட்சமமான தத்துவங்களையும், சிரமசாத்தியமான சடங்குகளையும் சொல்கிற வேதங்களை நான்காகப் பிரித்து, நான்கு சிஷ்யர்களுக்குப் போதித்தார் வியாசர். அந்தச் சூட்சமங்களைப் புரிந்துகொண்டு, வேதம் விதிக்கிற யக்ஞ அநுஷ்டானங்களை ஏராளமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுச் செய்யக்கூடிய ஒரு சிலருக்கு, இந்த நாலு சிஷ்யர்கள் வேதங்களைப் போதித்தார்கள்.

வேதங்களை இவ்வாறு வகுத்துப் பரப்பிய அதே வியாசர், அதே வேதங்களின் பரம தாத்பரியத்தைச் சிலருக்கு மட்டுமின்றி அனைவருக்கும் ரஞ்சகமான புராணங்களாக இயற்றினார். இவற்றைப் பொது ஜனங்களுக்கெல்லாம் பிரசாரம் செய்கிற பணியை, சுதர் என்பவரிடம் ஒப்புவித்தார்.

புராணங்களைப் பிரசாரம் செய்து கொண்டேயிருந்ததால், அவர் ஸூத பௌராணிகர் என்றே பெயர் பெற்றார். இவர் அப்பிராமணராக இருந்தும், பெரிய பிரம்ம ரிஷிகளெல்லாம் இவரை உயர்ந்த ஸ்தானத்தில் அமர்த்தி, நிரம்ப மரியாதை செய்து, இந்தப் புராணங்களைக் கேட்டார்கள்.

வேதத்தில் ‘ஸத்யம் வத’ என்று ஒரு விதி இருக்கும். அந்த விதியைக் கதாரூபமாக்கி ஜனங்கள் யாவரும் ஏற்குமாறு செய்கிறது ஹரிச்சந்திரன் வரலாறு. ‘தர்மம் சர’ என்கிற வேதத்தின் சட்டத்துக்கு மகாபாரதம் முழுவதும் விளக்கமாகிறது. ‘மாத்ரு தேவோபவ’, ‘பித்ரு தேவோபவ’ என்கிற வேத வாக்கியங்களுக்கு  ஸ்ரீராமனின் சரித்திரம் அற்புதமான பாஷ்யமாக இருக்கிறது.

ஆத்ம அபிவிருத்திக்காக வேதத்தில் சொல்லியிருக்கிற சூட்சமமான தத்வங்கள் எல்லாம் இப்படிப் பொது ஜனங்கள் எல்லோருக்கும் பௌராணிகரால் கதைகளாகப் பிரசாரம் செய்யப்பட்டன.

தொன்று தொட்டு பௌராணிகர்களின் பிரவசனங்கள் நம் தேசத்தில் எங்கு பார்த்தாலும் நடந்து வந்திருக்கின்றன. கல்வெட்டுகளைப் பார்த்தால் கோயில்களிலெல்லாம் புராணப் பிரவசனம், குறிப்பாக பாரதப் பிரசங்கம் நடந்து வந்திருப்பது தெரியும். நித்திய பூஜை போலவே புராணப் பிரவசனமும் கோயில்களில் அன்றாடம் நடக்க வேண்டும் என்று மானியங்கள் விட்டிருக்கிறார்கள்.

ஆலயத்தில் வழிபட்டும், புராணங்களை சிரவணம் செய்துமே சமீப காலம் வரையில் நம்முடைய பொது ஜனங்கள் சூதுவாதில்லாமல் யோக்கியர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். இக்கால நோக்கின்படி, அவர்களுக்கு எழுத்தறிவு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் நல்ல பண்பு படைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்தால், அவர்களே வாஸ்தவமாகக் கல்வி பெற்றவர்கள் என்று சொல்ல வேண்டும்.

அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கும் வரையில் எல்லாக் கல்வியுமே வாய்மொழியாகச் சொல்லி, காது வழியாகக் கேட்டே, வழிவழியாக வளர்ந்து வந்திருக்கிறது. அந்தக் காலத்தில் பனை ஓலையில் எழுதுகிற தேர்ச்சி பெற்றவர்கள் சிலரே இருந்தார்கள்.

மற்றபடி, பெரிய வேத வேதாந்தம் தெரிந்தவர்கள்கூட எல்லாம் செவிவழியேதான் கேட்டறிந்தார்கள். அச்சு இயந்திரம் வந்தது. அப்புறம் நிறையப் புஸ்தகங்கள், நியூஸ் பேப்பர்கள் ஏற்பட்டுவிட்டன. பௌராணிகர்களின் இடத்தை இவை பிடித்துக்கொண்டன.

எனவே, பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும்தான் இன்றைய பௌராணிகர்கள். சுதரும் மற்ற பௌராணிகர்களும் எப்படி தர்மங்களை ரசமான கதைகள் மூலம், பொது ஜனங்களிடையே பிரசாரம் செய்தார்களோ, அவ்விதமே செய்ய வேண்டியது இன்றைய பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்களின் கடமை.

ஜனங்களுக்குப் பிடித்ததை மட்டுமே சொல்வது என்று வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்களின் அறிவை, மனத்தை உயர்த்துகிற விஷயங்களையே எழுத வேண்டும். இதை சுவாரசியமாகச் செய்ய வேண்டும். உத்தமமான விஷயங்களைப் புதுப்புது விதங்களில் உணர்த்த வேண்டும்.

பத்திரிகையாளர்கள் வாழ்நாள் முழுதும் மாணாக்கர்களாகவே இருந்தால்தான், தாங்களும் இப்படிப் புதுப்புது விஷயங்களை அறிந்து, மற்றவர்களுக்குப் பிரசாரம் செய்ய முடியும்.

சத்தியத்தை சர்க்கரை பூசிய மாத்திரைகளாக்கித் தர வேண்டும். சர்க்கரை பூச்சுத்தானே ஒழிய, முழுக்கவும் சர்க்கரையாகிவிடக் கூடாது. வெறும் சர்க்கரை உடம்புக்கு நல்லதல்ல. வெறும் இந்திரிய ரஞ்சகமான சமாச்சாரங்களில்தான் ஜனங்களுக்கு அதிகக் கவர்ச்சி இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு, இவ்விதமே எழுதுவது சரியல்ல.

ஜனங்களுக்கு ஆத்மாபிவிருத்தி தருகிற முறையில் எழுதுவதற்கு இதயபூர்வமாக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் முனைந்தால், தானாகவே ஜனங்களுக்கு அதில் ருசி பிறக்கும். ‘நம்மையும் உயர்த்திக்கொண்டு, நம் வாசகர்களையும் நாம் உயர்த்த வேண்டும்’ என்கிற கடமை உணர்ச்சியைப் பத்திரிக்கையாளர்களும் எழுத்தாளர்களும் பெற வேண்டும்.

இவ்விதம் ஆத்மக்ஷேமம், லோகக்ஷேமம், சாந்தி, சுபிட்சம் எல்லாவற்றுக்கும் மெய்யான சேவை செய்கிற பாக்கியத்தைப் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் பெறவேண்டும்.

 

குறிப்பு:

kanji-periyavarகாஞ்சி மகாபெரியவர் என்று பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படும் காஞ்சி சங்கர மடத்தின் 68-வ்து பீடாதிபதி, சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

அவரது  ‘தெய்வத்தின் குரல்’- முதல் பாகத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதி இது.

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஐப்பசி-2016 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s