1.28. தாய்மதம் காக்க தன்னுயிர் ஈந்தவர்

-முத்துவிஜயன்

சுவாமி சிரத்தானந்தர்

சுவாமி சிரத்தானந்தர்

சுவாமி சிரத்தானந்தர்

(பிறப்பு: 1856, பிப். 22-

மறைவு: 1926, டிச. 23)

நமது நாட்டின் சமய மறுமலர்ச்சி வரலாற்றில் பேரிடம் வகிக்கும் பெயர் சுவாமி சிரத்தானந்தர் எனில் மிகையாகாது.  காலத்தின் கோலத்தால் இதர மதங்களுக்கு  மாறியவர்களை தாய்மதம் திருப்ப முடியும் என்று நிரூபித்தவர் சிரத்தானந்தர்.

இவரது இயற்பெயர் முன்ஷிராம். 1856, பிப். 22 -ல், பஞ்சாப் மாகாணம், ஜலந்தர் மாவட்டம், தல்வானில் பிறந்தார். இவரது தந்தை லாலா நானக் சந்த், கிழக்கிந்திய கம்பெனி நிறுவனத்தில் காவலராக பணி புரிந்தவர். ஆகையால் இடம் விட்டு இடம் பெயர்ந்த தந்தையுடன் பயணித்த தனயன் முன்ஷிராம், பல்வேறு பள்ளிகளில் படிக்க வேண்டி வந்தது. வாரணாசியிலும் லாஹூரிலும் பயின்ற முன்ஷிராம், சட்டக் கல்வியில் தேர்ந்து வழக்கறிஞர் ஆனவர்.

ஆரம்பத்தில் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகராக இருந்த முன்ஷிராம், பரேலியில் இருந்தபோது, ஆர்ய சமாஜம் நிறுவனர் சுவாமி தயானந்த சரஸ்வதியைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பு முன்ஷிராமின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தயானந்தரின் போதனைகளால் கவரப்பட்ட அவர், அதில் தீவிரமாக ஈடுபட்டார். மகாத்மா முன்ஷிராம் என்று அவர் அழைக்கப்பட்டார்.

ஆர்ய சமாஜத்தின் கல்வி நிறுவனமான லாகூர் டி.ஏ.வி.பள்ளியில் வேதக்கல்வி அறிமுகம் செய்யப்பட்டபோது கொள்கை அடிப்படையில் ஆர்ய சமாஜம் இரண்டாகப் பிளந்தது. அப்போது பஞ்சாப் ஆர்ய சமாஜத்தில் முன்ஷிராம் இணைந்தார். 1897 ல், பஞ்சாப் ஆர்ய சமாஜத்தின் தலைவராக இருந்த லாலா லேக்ராம் கொல்லப்பட்டார். அதையடுத்து பஞ்சாப் ஆர்ய பிரதிநிதி சபா அமைப்பின் தலைவரானார். அப்போது ‘ஆர்ய முஷாபிர்’ என்ற மாத இதழைத் துவங்கினார்.

1902-ல் ஹரித்வார் அருகில் காங்க்ரியில், குருகுலம் ஒன்றை அமைத்தார்; தீண்டாமைக்கு எதிராக ஆவேசமாகக் குரல் கொடுத்தார். 1916 ல் பரிதாபாத் அருகிலுள்ள  ஆரவல்லியில் குருகுலம் இந்திரபிரஸ்தம் என்ற கல்வி நிறுவனத்தையும் துவங்கினார். இக்கல்வி நிறுவனங்கள் வாயிலாக தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி உயர பாடுபட்டார்.

1915 ல் தென் ஆப்பிரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி,  காங்க்ரி  குருகுலத்தில் முன்ஷிராமைச் சந்தித்தார். இருவரும் நாட்டின் நிலை, தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தனர். அப்போது காந்திக்கு முன்ஷிராம் அளித்த பட்டமான ‘மகாத்மா’  , காந்தியின்  வாழ்வோடு ஒன்றிக் கலந்துவிட்ட பெயரானது.

முன்ஷிராம் இளமையிலேயே திருமணம் ஆனவர். இவரது மனைவி ஷிவாதேவி, முன்ஷிராமுக்கு  35 வயது ஆனபோதே இறந்துவிட்டார். இவர்களுக்கு இரு மகள்களும் மகன்களும்  உண்டு.  1917 ல் மகாத்மா முன்ஷிராம் துறவறம் மேற்கொண்டார். அன்றுமுதல்  அவரது  பெயர் சுவாமி சிரத்தானந்தர் என்று மாற்றம் பெற்றது. அதையடுத்து தான் துவங்கிய குருகுலத்திலிருந்து வெளியேறிய சிரத்தானந்தர், தேசிய விடுதலை இயக்கத்திலும் சமய சீர்திருத்தப் பணிகளிலும் ஈடுபட்டார்.

1919 ல் அமிர்தசரஸில்  காங்கிரஸ் மாநாடு நடந்தது. ஜாலியன் வாலாபாகில் நடந்த கொடூரத்தை அடுத்து அங்கு மாநாடு நடத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரும் தயங்கிய வேளையில்,  அஞ்சாமல் தலைமையேற்று அங்கு மாநாட்டை நடத்திக் காட்டினார். ரௌலட் சட்டத்தை எதிர்த்து நடந்த கிளர்ச்சியிலும் தடையை மீறி போராட்டம் நடத்தி, தில்லியில் சாந்தினி சௌக் பகுதியில்  வெற்றிகரமாக பேரணி நடத்திக் காட்டினார்.

நாட்டில் நிலவிவந்த வகுப்புவாதச் சூழல் சிரத்தானந்தருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. இஸ்லாமியர்களின் கிலாபத் இயக்கத்தை ஆதரித்த போதும் காங்கிரசுடன் முஸ்லிம்கள் இணக்கமாக இல்லை என்பதை அவர் கண்டார். அதன் விளைவாக, 1920 ல் ஹிந்து ஒற்றுமை இயக்கத்தில் இணைந்து அதன் முன்னணி தளகர்த்தரானார். அது ஹிந்து மகா சபாவின் துணை அமைப்பாக இயங்கியது.

ஹிந்தியிலும் உருதுவிலும் சமய சீர்திருத்தம் தொடர்பான பல கட்டுரைகளை சிரத்தானந்தர் எழுதினார். இரு மொழிகளிலும் நாளிதழ்களையும் நடத்தினார்.தேவநாகரி வடிவிலான ஹிந்தியை அவர் ஊக்குவித்தார்.

1923- ல் அனைத்து பொதுநல அமைப்புகளிலிருந்தும் விலகி, சுத்தி இயக்கத்தில் இணைந்தார். ஹிந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு  ஆசை காட்டியோ, அச்சுறுத்தியோ மதம் மாற்றப்பட்டவர்கள் மீண்டும் தாய்மதம் திரும்ப முடியாத நிலை அப்போது இருந்தது. தாய்மதம் திரும்பும் ஹிந்துக்களை ஏற்க அப்போதைய துறவிகள் மறுத்து வந்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தாய்மதம் திருப்பும் சடங்கான சுத்தி இயக்கத்தை சுவாமி  சிரத்தானந்தரே முன்னின்று நடத்தினார். அந்த ஆண்டிலேயே, பாரதீய ஹிந்து சுத்தி சபா அமைப்பின் தலைவரானார். மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மக்களையும் தாய்மதம் திருப்பிய அவர், தீண்டாமைக்கு எதிராக ஹிந்து ஒற்றுமை என்ற மந்திரத்தைப் பிரயோகித்தார்.

இந்த சுத்தி இயக்கம் பல்லாயிரம் பேரை தாய்மதம் திருப்பியது. குறிப்பாக மேற்கு ஐக்கிய மாகாணத்தில் (தற்போதைய ராஜஸ்தானம்), இஸ்லாமுக்கு வாள்முனையில் மதம் மாற்றப்பட்ட  ‘மல்கானா ராஜபுத்திரர்கள்’ பல்லாயிரம் பேர் ஹிந்து மதத்திற்குத் திரும்பினர். இதனால் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிரத்தானந்தர் மீது கோபம் கொண்டனர். அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. ஆனால், சிரத்தானந்தர் மிரட்டல்களுக்கு அஞ்சவில்லை.

இதனால் கோபம் கொண்ட அப்துல் ரசீத் என்னும் முஸ்லிம் வெறியன், 1926, டிச. 23 -ல் தில்லியில் சுவாமி  சிரத்தானந்தரை   அவரது வீட்டிலேயே சுட்டுக் கொன்றான். அன்னாரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, கௌகாத்தி காங்கிரஸ் மாநாட்டில் மகாத்மா காந்தி தீர்மானம் கொண்டுவந்தார்!

தமிழகத்தின் மகாகவி பாரதி, பெரியார் ஈ.வெ.ரா. ஆகியோர் சிரத்தானந்தர் குறித்து எழுதி இருக்கின்றனர். துவக்க காலத்தில் காங்கிரசிலும், இறுதிக் காலத்தில் ஹிந்து இயக்கங்களிலும் ஈடுபட்ட சுவாமி சிரத்தானந்தர்,  தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைத்த மகான் ஆவார். அன்னாரது சுத்தி இயக்கம் ஹிந்து மதத்தின் புத்தெழுச்சிக்கு காரணமானது. அவரது பலிதானம், நாட்டில் ஹிந்து விழிப்புணர்வுக்கும் வித்திட்டது.

 

 

குறிப்பு:

திரு.முத்துவிஜயன், பத்திரிகையாளர்.

 

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஐப்பசி-2016 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s