1.1. காண்டீபம் – ஏன்?

-ம.கொ.சி.இராஜேந்திரன்

arjun

  “எது நம்மை நமது எண்ணம், சொல், செயல்களின்  மூலம் நமது  மனம், மொழி, மெய்யை (அதாவது  உடம்பை)  மேலான  நிலைக்கு உயர்த்துகிறதோ  அதுவே  தர்மம்.”  -இத்தகு  உயர்ந்த  தர்மத்தை  தங்கள் வாழ்வின்  ஆதாரமாகக்  கொண்டே  நமது  பாரத தேசத்தின்  ரிஷிகள், மஹான்கள்  மற்றும்  அரசர்கள்  வாழ்ந்துக் காட்டியுள்ளனர்.

இதைத்தான்   சுவாமி  விவேகானந்தரும் “நம் நாட்டின் லட்சியங்களாக தொண்டும் துறவும் விளங்கின” என்று  குறிப்பிடுகிறார். பல்லாயிரக்கணக்கான வருடங்களாக  இம்மண்ணில்  தேசிய நீரோட்டமாக  ஓடும்  ஆன்மிக நதி  சேருமிடமாக   அறக்கடலாக  நாம் வணங்கும்  இறைவனின்  பாதங்களாக  நமது வேதங்கள், இலக்கியங்களும்  அடையாளம் காட்டின.

தர்மம் தாழ்ந்து, அதர்மம் ஓங்கும்போது இறைவனே இப்பூமியில் பல வடிவங்களில் தோன்றி தர்மத்தை நிலைநாட்டுவதென்பது பன்னெடுங்காலமாக நமது பாரததேசத்தில்  நிலவிவரும் அசைக்கமுடியாத நம்பிக்கை. இங்ஙனம் உலகிற்கே  குருவாக விளங்கி எல்லாத்  துறைகளிலும் முன்னேறிய, வழிகாட்டிய நாடு  இன்று….?

கல்வியிலும், பொருளாதாரத்திலும், அறிவியலும், விளையாட்டிலும் நம் பாரத நாடு  பின்தங்கிய நிலையில் இருப்பதை நாம் அன்றாட செய்திகள்  மற்றும் ஊடக  வாயிலாக  படிக்கின்றோம்; காண்கின்றோம். உலகின் முதல் பல்கலைக்கழகமான  தட்சசீலம் பல்கலைக்கழகத்தைக்  கொண்ட நம் நாடு, முதன்முதலில் உலகம் உருண்டை என்ற  அறிவியல் உண்மையைச் சொன்ன நம் பாரத நாடு, பூஜ்ஜியம், பை  என்ற கணித மூலங்களை  அறிவித்த நாட்டின்  இன்றைய நிலை?

பார்த்தனும் பீமனும் வாழ்ந்த நாடு, ஒலிம்பிக்கில் பதக்கம் பெறும்  நாடுகளின் பட்டியலில்  இடம்பெறப் போராடுகிறது. உலகில்  அதிகமான  மக்கள்தொகை கொண்ட இரண்டாவது நாடாக  விளங்கினாலும்,   நம்மைவிட  மக்கள்தொகை குறைந்த  ஜப்பான், ஆஸ்திரேலியா  போன்ற நாடுகளுடன்  ஒப்பிடும்போது  வருத்தமும், ஏக்கப் பெருமூச்சுமே  எதிரொலிக்கிறது.

இத்தகு நிலைகளுக்கான காரணம் என்ன என விடை தேடும்போது  வள்ளுவப்பேராசான் நம்முன் வந்து பதிலளிக்கிறார்:

குடி என்னும்   குன்றாவிளக்கம்  மடியென்னும்

மாசூர   மாய்ந்து  கெடும்

-“எந்தச்  சமுதாயம் தன்  முன்னோர்கள்மீது  பெருமித உணர்வு கொண்டதாக  இல்லையோ,  எந்தச் சமுதாயம் தனது  முன்னோர்களின் பெருமைகளைக்  காப்பதில்  செயல்படாத தன்மை கொண்டதாக உள்ளதோ, அந்த  சமுதாயத்தின்  உயர்வும், சிறப்பும்  நாளடைவில்  மங்கிவிடும்” என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  நம்மை எச்சரிக்கின்றார். மேலும்  வள்ளுவர்  தொடர்கிறார்:

மடிமை  குடிமைக்கண்  தங்கின்

தன்ஒன்னார்க்கு  அடிமை புகுத்தி விடும்

 – “எந்த சமுதாயத்திற்கு  தேசிய  ஒருமைப்பாட்டுடன்  செயல்படும் தன்மை  இல்லையோ, பல  குழுக்களாகப்  பிரிந்து  தேசத்திற்கு விரோதமாக  செயல்படுகிறதோ  அந்தச்  சமுதாயம் அல்லது அந்த நாடு எதிரிகளுக்கு  எளிதாக  அடிமையாகிவிடும்.” என்று உரைப்பதன்மூலம்  நம் பாரத தேசத்தின் 500 வருட அடிமைக்கான  காரணத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.

தேசிய நீரோட்டத்தில்  இணையாமல்  தமது சுயநலத்துக்காக மாநில உணர்வினை தூண்டுகின்ற அமைப்புகளும், மேலைநாட்டு சக்திகளுக்கு விலைபோகி  தேசத்துக்கு  எதிராகச் செயல்படும் தேச விரோதிகளுமே தேச முன்னேற்றத்துக்கு  தடைகளாக  இருப்பது வெளிப்படை.

குருஷேத்திரப் போரில்  தர்மத்துக்கும், அதர்மத்துக்கும்  யுத்தம் நடைபெறும் சமயத்தில், தயங்கியும் மயங்கியும் நின்ற மானுடனின் பிரதிநிதியான அர்ஜுனனுக்கு,  கண்ணபிரான்  தனது  பகவத்கீதையினால்  தயக்கத்தைப் போக்கி  தர்மத்தின் மீதான  பற்றினை  உருவாக்கி, ஆண்மையுணர்வினை  தூண்டி, அதர்மத்துக்கு  எதிராகப்  போரிட வைத்தார். இறைவனின்  துணையும், தர்மத்தின்  வழிகாட்டுதலாலும்  ஊக்கமும், ஆக்கமும்  பெற்ற அர்ஜுனன்  தனது  வில்லான   ‘காண்டீபத்தை’ கையிலேந்தி  போரிட்டு  அதர்மத்தை வென்று,  தர்மத்தைக் காத்தான்.

அங்ஙனமே  நமது  தேசிய சிந்தனைக் கழகம்  நம் நாட்டில் தர்மசக்திகளை வலுப்படுத்தவும், உலவும் அதர்ம சக்திகளை  மக்களுக்கு  அடையாளம் காட்டவும்  ‘காண்டீபம்’ என்னும் தேசிய விழிப்புணர்வு   இதழை /காலாண்டு இதழை  வெற்றித் திருநாளான  விஜயதசமி  அன்று  வெளியிட்டு  தனது  தேசப்பணிக்கும்,  தேசிய உணர்வுக்கும்  தன்னாலான  பங்கினைச்  செலுத்த முன்வருகிறது.

நம் தேசத்தின் உயிர்நாடியான ஆன்மிகம், கலை,  ,இலக்கியம், கல்வி, அறிவியல், வரலாறு, விளையாட்டு  போன்ற துறைகளில் தேசிய உணர்வுடன்  கூடிய  சமூகப்பார்வை கொண்ட கட்டுரைகள், கதைகள்,  கவிதைகள்,  வரலாற்றுச் சம்பவங்கள் இவ்விதழில் இடம்பெறும்.

தேசமே  தெய்வமாகவும், தேசியமே  செல்வமாகவும்  கொண்டு செயல்படும் தேசிய சிந்தனைக்  கழகம் (பிரக்ஞா  பிரவாஹ் ) தனது அணில் முயற்சியான    ‘காண்டீபத்தின்’ முதல் வெளியீட்டுக்கு  ஆசியுரை  வழங்கிய  சுவாமி அபிராமானந்தர், சுவாமி சைதன்யானந்தர், சுவாமி  சாது ரங்கராஜன்  ஆகியோருக்கும்,  வாழ்த்துரை வழங்கிய பெரியோர்களுக்கும், கட்டுரைகள் படைத்த  சான்றோர்களுக்கும், நல்ல விதத்தில்  அச்சிட்டு  உதவிய  மாதவ முத்ரா  பதிப்பகத்தாருக்கும்,  மற்றும்  எல்லா வகையிலும் எங்களுக்கு  உதவிக்கரம்  நீட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தனது மனமார்ந்த  நன்றியினைத் தெரிவித்துக்  கொள்கின்றது.

தேசியமும், தெய்வீகமும் இரு கண்களெனக் கொண்டு  தேசமுன்னேற்றத்துக்குப்  பாடுபடும் தேசிய சிந்தனையாளர்களோடும், தெய்வீகத் தொண்டர்களோடும்  நமது தேசிய சிந்தனைக் கழகம்  தன்னை  இணைத்துக்  கொள்கிறது.

அனைவருக்கும்  எங்களது  வெற்றிருந்திய  விஜயதசமித்  திருநாள்  வாழ்த்துக்கள்!

வணக்கம்!  வந்தே  மாதரம்!

 

குறிப்பு:

makochiதிரு. ம.கொ.சி.இராஜேந்திரன், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பாளர்.  ‘காண்டீபம்’ இதழின் வெளியீட்டாளர்.

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஐப்பசி-2016 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s