தே.சி.க.

dck-symbol

இதுவரையும், இனியும்….

தேசியம், தெய்வீகத்தின் உறைவிடம் தமிழகம்:

தேசியம் மலர்ந்து மணம் பரப்பிய கர்ம பூமி; பாரதத்திற்கே வழிகாட்டிய தெய்வீக புருஷர்கள் பலர் அவதரித்த தர்ம பூமி; பல்லாயிரம் வருடங்களாகத் தொடர்ந்து உலகில் சிறந்த பண்பாட்டுச் சின்னங்கள் மிளிரும் தவ பூமி; அற்புதமான இலக்கியச் செறிவுக்கும் ஞானத்திற்கும் நெடிய பாரம்பரியத்துக்கும் அழியாப்புகழ் கொண்டநூல்களை அளித்த பெருமக்களின் புண்ணிய பூமி, தமிழகம்.

இசை, சிற்பம், இலக்கணம், நாட்டியம், மருத்துவம் எனப் பல கலைகளிலும் துறைகளிலும் பாரதத்தின் விடிவெள்ளியாகத் துலங்கியது தமிழகம். நாயன்மார்களும் ஆழ்வார்களும் தங்கள் இன்தமிழ்ப் பாசுரங்களால் தாய்மொழியையும் சமயத்தையும் வளர்த்த செழிப்பான கழனி தமிழகம். கட்டபொம்மனும் வேலு நாச்சியாரும், பாரதியும் வ.உ.சி.யும், திருப்பூர் குமரனும் வாஞ்சிநாதனும், விடுதலைப்போரில் தங்கள் வாழ்வை ஆகுதியாக்கிய மண் தமிழகம்.

சுவாமி விவேகானந்தரை உலகிற்கு அடையாளம் காட்டியதும், மகாத்மா காந்தியை எளிய கதராடை மகானாக மாற்றியதும், சுவாமி சிவானந்தர், சுவாமி சித்பவானந்தர், ரமண மகரிஷி உள்ளிட்ட அருளாளர்களை அள்ளி வழங்கியதும் தமிழகம் தான். தியாகி கக்கனும், காந்தியப் பொருளாதார மேதை கே.சி.குமரப்பாவும் வாழ்ந்த புண்ணிய பூமி தமிழகம். அனைத்திந்திய அளவில் விடுதலைப் போராட்டக் காலத்தில் அரசியலுக்கு வழிகாட்டிய தீரர் சத்தியமூர்த்தி, ராஜாஜி, காமராஜர் போன்ற தலைவர்கள் உதித்த மண்ணும் தமிழகம் தான்.

இத்தகைய தமிழகத்தில் இடைக்காலத்தில் தேசநலனுக்கு விரோதமான கருத்துக்கள் விதைக்கப்பட்டன். பகுத்தறிவுப் பிரசாரம் என்று கூறிக்கொண்டு திராவிட இயக்கத்தினர் நடத்திய பிரசாரத்தால் தமிழகத்தின் தேசிய, தெய்வீக சிறப்பம்சங்கள் அனைத்தையும் மறந்து, மாயைவசப்பட்டது மாநிலம். தங்கள் சுயநல ஆதிக்கத்தை வலுவாக்கவும் அரசியல் அதிகாரத்தை வளர்க்கவும் தமிழ் மக்களிடையே ஜாதி, மொழி அடிப்படையில் வெறுப்புணர்வை விதைத்தனர். ‘ஆரிய- திராவிடம்’ என்னும் பொய்யான, ஆதாரமற்ற, ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்ட கருத்துக்களைப் பரப்பி, நம் மக்களின் மனங்களில் நச்சு உணர்வுகளைத் தூவினர்; சீர்திருத்தம் செய்வதாகக் கூறிக்கொண்டு நமது வேரில் அமிலம் பாய்ச்சினர் திராவிட இயக்கத்தினர்.

இதன் கொடும் விளைவையே இன்று தமிழகத்தில் காண்கிறோம். நமது பெருமை மிக்க பாரம்பரியத்தை மறந்ததால், தன்னம்பிக்கை இழந்தவர்களாக, தன்னை மறந்தவர்களாக, லட்சியம் துறந்தவர்களாக இளம் தலைமுறை தள்ளாடுகிறது. உலகிற்கே வழிகாட்டும் மாபெரும் இலக்கியங்களை தன்னகத்தே கொண்டிருந்தும், ஜாதி அடிப்படையில் இயங்கும் அரசியலில் தத்தளிக்கிறோம்; ஊழலில் முக்குளிக்கும் அரசியல்வாதிகளால் தமிழகம் சின்னாபின்னமாவதைக் கண்டு திகைக்கிறோம்.

இதன் ஆபத்தை 1970-களிலேயே தேசியநலம் விரும்பிய சில நல்லுள்ளங்கள் உணர்ந்தன. இந்த இழிநிலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடையே முகிழ்த்தது. அதன் விளைவாக உருவானது தேசிய சிந்தனைக் கழகம்.

தேசிய சிந்தனைக் கழகத்தின் தோற்றம்:

நாட்டை நிலைகுலையச்செய்த நெருக்கடிநிலைக் காலத்தில் ஜனநாயகம் மீட்க தமிழகத்தில் பல அரும்பணிகள் நடைபெற்றன. அப்போது, தமிழகமெங்கும் பரவியிருந்த பிரிவினை விஷப்புகைக்கு மாற்றாக, தேசிய நற்சிந்தனைகளைப் பரவச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன் வாயிலாக, தமிழகத்தின் தொன்மைச் சிறப்பை மக்களிடையே நினைவுபடுத்தி, அவர்களைப் புதுப்பிக்க வேண்டும் என்ற உள்ளக் கிடக்கையுடன் தேசிய சிந்தனைக் கழகம் 1976-ல் தோற்றுவிக்கப்பட்டது.

திருச்சி தேசிய கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய திரு. ராதாகிருஷ்ணன், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அப்போதைய மாநில அமைப்பாளர் திரு. ராம.கோபாலன் ஆகியோரிடையே நிலவிய கருத்துப் பரிமாற்றங்களே தேசிய சிந்தனைக் கழகத்தின் வித்து.

சிறந்த மேடைப் பேச்சாளரான திரு. ராதாகிருஷ்ணன், எந்த மேடையைக் கொண்டு தமிழகத்தில் திராவிட விஷம் விதைக்கப்பட்டதோ, அதே மேடையில் தேசியமும் தெய்வீகமும் பின்னிப் பிணைந்த தமிழை மேடையேற்றுவதன் வாயிலாக தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தத் திட்டமிட்டார்.

அவர்தம் மாணாக்கர்கள் அவரது அடியொற்றி தமிழின் தெய்வீக, தேசியப் பண்புகளை மேடைதோறும் விதைத்தனர். அன்றைய அரசியல் சூழலில் இது ஒரு துணிச்சலான செயல்பாடு. இம்முயற்சிக்கு வாரியார், புலவர் கீரன், தீபம் நா.பார்த்தசாரதி போன்ற பெரியோர் ஆதரவளித்தனர்.

காரிருளில் சிறு அகல் விளக்காக ஏற்றப்பட்ட தேசிய சிந்தனை கழகம், பேராசிரியர் திரு. ராதாகிருஷ்ணனின் மறைவுக்குப் பிறகு (1982) சிறிதுகாலம் செயல்படாமல் இருந்தது. தேசிய சிந்தனை தமிழகத்தில் பரவ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தேசிய சிந்தனையாளர்கள் மீண்டும் அதுகுறித்துச் சிந்தித்தனர். அதன்விளைவாக, 2007-ல் தே.சி.க. மீண்டும் புத்துணர்வுடன் தனது வேலைகளைத் துவக்கியது.

ஆரம்பகாலப் பணிகள்:

சிந்தனைரீதியாக இயங்கிவந்த தேசிய சிந்தனைக் கழகத்தை அமைப்புரீதியாக வலுப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது. ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தால் உத்வேகம் பெற்று இயங்கும் தேசிய அளவிலான சிந்தனையாளர் இயக்கமான ‘பிரக்ஞா பிரவாஹ்’ அமைப்பின் தமிழகக் கிளையாக தேசிய சிந்தனைக் கழகம் அமைப்புரீதியாக இயங்கத் துவங்கியது.

அதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தொடர்பு கொள்ளப்பட்டு, தேசிய சிந்தனையின் முக்கியத்துவத்தை வலுபடுத்தி வருகிறது தே.சி.க.

பேராசிரியர் திரு. ராதாகிருஷ்ணன் அமைத்த அடித்தளத்தில், அவர்தம் புதல்வர் திரு. இரா.மாது, அவரது மாணவர்களான பேராசிரியர் திரு. சோ.சத்தியசீலன், பேராசிரியர் திரு. அ.அறிவொளி, பேராசிரியர் தா.ராஜாராம், பேராசிரியர் திரு. ம.வெ.பசுபதி உள்ளிட்ட பெரியோருடன் இணைந்து தேசிய சிந்தனையைப் பரப்பும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

துவக்கத்தில் தமிழ் அறிஞர்களை, குறிப்பாக மேடைப் பேச்சாளர்களை தொடர்பு கொள்வதே தேசிய சிந்தனைக் கழகத்தின் பணியாக இருந்தது. அவர்களைக் கொண்டு அங்கும் இங்குமாக பல உள்ளரங்க நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பள்ளி, கல்லூரிகளில் அவ்வப்போது தேசிய சிந்தனையை வலுப்படுத்தும் நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

தவிர ஒத்த சிந்தனையுடைய நண்பர்களைக் கண்டறிந்து அவர்களையும் தேசிய சிந்தனைக் கழகப் பணியில் ஈடுபடுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றது. தமிழ்ப் புத்தாண்டு விழா, நாட்டுநலனுக்காக உழைத்த சான்றோரை நினைவுபடுத்தும் நிகழ்வுகள் வாயிலாக தே.சி.க. மாநிலம் முழுவதும் தனது தளத்தை விரிவாக்கியது.

ஆன்றோரும் சான்றோரும்:

தமிழகத்தில் அவதரித்த ஆன்மிகப் பெரியோர், நாடு சுதந்திரம் பெற உழைத்த விடுதலை வீரர்கள், தமிழ் மொழியின் உயர்வுக்காகப் பாடுபட்ட நல்லோர், சமுதாய நலனுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணமாக்கிய சான்றோர் பலரையும் நினைவுபடுத்தும் பணியில் தேசிய சிந்தனை கழகம் ஈடுபடத் துவங்கியது.

நமது முன்னோடிகளை இளம் தலைமுறைக்கு நினைவுபடுத்துவதன் மூலமாக அவர்களிடம் நாட்டுப்பற்றையும் தாய்மொழிப்பற்றையும் வளர்க்க முடியும் என்னும் நம்பிக்கையே தேசிய சிந்தனை கழகத்தின் இலக்குகளில் ஒன்றானது.

இதற்கென, தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதுமுள்ள ஆன்றோர், சான்றோர் நாட்கள் தொகுக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் அலைபேசி குறுஞ்செய்திகளாக (எஸ்எம்எஸ்) அனுப்பப்படுகின்றன. பரிசோதனை முயற்சியாக இவை 2009—ல் தனி நூலாகவும், 2010-ல் நாள்காட்டியாகவும், வெளியிடப்பட்டன.

அதைத் தொடர்ந்து தேசத்தின் தவப்புதல்வர்களை தினசரி அறிமுகப்படுத்தும் விதமாக ‘தேசமே தெய்வம்’ என்ற பிளாகர் வலைப்பூ 2010-ல் துவங்கி இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக தமிழ்கத்தின் முன்னணி எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், பத்திரிகையாளர்களை சான்றோர் குறித்து எழுதச் செய்து அவற்றை புதிய வேர்டுபிரஸ் இணையதளத்திலும் வெளியிட்டு வருகிறோம்.

ஒவ்வொரு சான்றோர்- ஆன்றோர் பிறந்த / மறைந்த தினங்களில், கல்வி நிறுவனங்களிலும் பொது இடங்களிலும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, அவர்களைப் பற்றி சிறப்புரையாற்றச் செய்வதும் தேசிய சிந்தனைக் கழகத்தின் பணிகளுள் ஒன்றாகும்.

விவேகானந்தர் 150-வது ஜெயந்தி விழா:

தேசத்தின் நவயுக விழிப்பிற்கு வித்திட்ட வீரத்துறவி விவேகானந்தரின் 150-வது ஆண்டு ஜெயந்தி கொண்டாட்டங்கள் 2013, ஜனவரி 12 முதல் 2014, ஜனவரி 12 வரை நாடு முழுவதும் நடைபெற்றன. அதில் தேசிய சிந்தனைக் கழகமும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டது.

இதையொட்டி, ‘விவேகானந்தம் 150 டாட்காம்’ என்ற புதிய இணையதளம் துவக்கப்பட்டு, தினசரி சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரைகள், செய்திகள் வெளியிடப்பட்டன. இந்த இணையதள வாய்ப்பைக் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள 200-க்கு மேற்பட்ட எழுத்தாளர்கள் தொடர்பு கொள்ளப்பட்டனர். அவர்களுள் பலர் சுவாமி விவேகானந்தர் குறித்து கட்டுரைகள், கவிதைகளை எழுதினர். சுவாமி விவேகானந்தருக்கு வித்தியாசமானதோர் அஞ்சலியாக இத்தளம் இன்றும் இயங்குகிறது.

இத்தளத்தில் 180-க்கு மேற்பட்டோரின் 355 கட்டுரைகள், 40 கவிதைகள், சுவாமி விவேகானந்தரின் பல சொற்பொழிவுகள், 150 செய்திகள் உள்பட பல அம்சங்கள் உள்ளன. இத்தளம் இதுவரை 40 லட்சம் ஹிட்ஸ் பெற்றுள்ளது.

இத்தளம் வெற்றிகரமாக இயங்க 23 பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டது. இதில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவியர் சுவாமி அபிராமானந்தர், சுவாமி கமலாத்மானந்தர், சுவாமி விமூர்த்தானந்தர் ஆகியோர் இடம்பெற்று, நல்வழி காட்டினர்.

இணையதளப் பணிகள் மட்டுமல்லாது, பல்வேறு கல்விநிறுவனங்களில் 25-க்கு மேறபட்ட கருத்தரங்குகளை தேசிய சிந்தனை கழகம் விவேகானந்தர் 150-வது ஜெயந்தி காலகட்டத்தில் நடத்தியுள்ளது. இதில் தமிழகத்தின் அறிஞர் பெருமக்கள் பலர் பங்கேற்றனர்; ஆயிரக் கணக்கான கல்லூரிப் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் 200-வது ஜெயந்தி விழா:

2014-ஆம் ஆண்டு, சிறந்த தமிழ்த் தொண்டாற்றிய மகாவித்வான் திருசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் 200-வது பிறந்த தின ஆண்டாகும். அதேபோல, கடல் கடந்தும் நமது பண்பாட்டைப் பரப்பிய மன்னன் ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது முடிசூடிய ஆண்டுமாகும். இதனைப் பயன்படுத்தி பல்வேறு நிகழ்வுகளையும் கருத்தரங்குகளையும்  தே.சி.க. நடத்தியது.

தேசிய சிந்தனைக் கழக வெளியீடுகள்:

தேசிய சிந்தனைக் கழகம் இதுவரை சில சிறிய நூல்களை வெளியிட்டுள்ளது. அவற்றின் பட்டியல்:

1. பாரதத் தாயின் பாத கமலங்களில் (2009)

(ஆன்றோர்- சான்றோர் தினங்களின் தொகுப்பு)

2.தெய்வப்புலவரின் தேசிய சிந்தனை (2009, 2010)

(கவிஞர் குழலேந்தி எழுதியது)

3. தமிழ் வருட நாள்காட்டி – விக்ருதி ஆண்டு (2010-11)

(சித்திரை முதல் பங்குனி வரை- சான்றோர் நாட்களுடன்)

4. நிவேதனம் (2014)

(சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தியின் போது வெளியானது; தேசபக்தர்கள், ஆன்மிக அருளாளர்களின் நாட்களும் இடம்பெற்றது).

5. சோழபுரத்து மன்னனும் திரிசிரபுரத்து பிள்ளையும் (2015)

(ராஜேந்திர சோழன் முடிசூடிய ஆண்டின் ஆயிரமாவது ஆண்டு,  மகா வித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் இருநூற்றாண்டு ஆகியவற்றின் கொண்டாட்டங்களை ஒட்டி வெளியிடப்பட்ட நூல்; தேசபக்தர்கள், ஆன்மிக அருளாளர்களின் நாட்களும் இடம்பெற்றது).

இணையத்தில் ஓர் அமைதிப்புரட்சி:

தற்போதைய தகவல் உலகில் இணையம் தவிர்க்க சக்தியாக மாறியுள்ளது; மாற்று ஊடகமாக வளர்ந்துள்ள இணையதளத்தை தேசிய சிந்தனைகளைப் பரப்ப நல்லதொரு கருவியாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் தே.சி.க. செயல்படத் துவங்கியது.

தே.சி.க. தற்போது ஓர் இணையதளத்தையும், 3 வலைப்பூக்களையும் பிரத்யேகமாக நடத்தி வருகிறது. தவிர முகநூலிலும் டிவிட்டரிலும் கூட நமது செயல்பாடுகள் உள்ளன.

நமது இணையப்பணிகளின் பட்டியல் இது:

1. தேசமே தெய்வம் (பிளாகர்)

இது 2010-ம் ஆண்டு விஜயதசமியன்று துவங்கப்பட்டது. நமது தேசத்தலைவர்கள், விடுதலை வீரர்கள், சமயச் சான்றோர்கள் உள்ளிட்ட  பாரத தவப்புதவர்கள் பலர் பற்றிய 360 இடுகைகள் இதில் உள்ளன. இதன் பார்வையாளர்கள் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இதன் முகவரி: http://desamaedeivam.blogspot.in/

2. தேசிய சிந்தனை (வேர்டு பிரஸ்)

இத்தளம் ‘தேசமே தெய்வம்’ பிளாகர் வலைப்பூவின் வேர்டுபிரஸ் நீட்சியாகும். இதில் பத்திரிகைகளில் வெளியாகும் நல்ல செய்திகள், நாடு நலம்பெற உழைத்தோர் பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்படுகின்றன.

இதன் முகவரி: http://desiyachindhanai.wordpress.com/

3. விவேகானந்தம் 150 டாட் காம்

சுவாமி விவேகானந்தரின் பன்முக ஆற்றலைப் பறைசாற்றும் தனித்தன்மையான தளம் இது. விவேகானந்தர் பற்றிய தனிக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், விவேகானந்தர் குறித்த பெரியோரின் புகழ்மாலைகள், சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள், பத்திரிகைகளில் வெளியான தமிழ், ஆங்கிலக் கட்டுரைகள், விவேகானந்தரின் படங்கள், பொன்மொழிகள், சுவாமி விவேகானந்தர் 150-வது ஜெயந்தி கொண்டாட்டங்கள் தொடர்பான செய்திகள் இத்தளத்தில் இடம்பெற்றுள்ளன.

2013 ஜனவரி 11-ல் துவங்கிய இத்தளம், 2014 ஜனவரி 2012 வரை, 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட தனிப்பட்ட பார்வையாளர்களை (ஒருமுறை அவர் இணையத்திற்குள் வந்து சென்றால் மறுமுறை அவரது வருகை கணக்கில் ஏறாது) பெற்றுள்ளது. இதன்மூலமாக இதுவரை 40 லட்சம் ஹிட்ஸ் பெற்றுள்ளது.

இதன் முகவரி: http://vivekanandam150.com/

4. தேசமே தெய்வம் (வேர்டுபிரஸ்)

நமது முந்தைய ‘தேசமே தெய்வம்’ பிளாகர் வலைப்பூவை மேம்படுத்தும் வகையில், தனியாக கடந்த 2014 விஜயதசமியில் துவங்கிய வலைப்பூ இது. இத்தளத்தில் தினசரி, நமது நாட்டின் தவப்புதல்வர்கள் பற்றிய கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. இதனை ஒரு ஞானவேள்வியாக நடத்தத் திட்டமிட்டு தே.சி.க. பணிபுரிந்து வருகிறது.

இதன் முகவரி: https://desamaedeivam.wordpress.com/

5. நமது முகநூல் முகவரிகள்:

‘தேசமேதெய்வம்’ என்ற முகவரியில் உள்ள முகநூலின் நண்பர்கள் எண்ணிக்கை 3,125-ஐ நெருங்கிவிட்டது.

இதன் முகவரி: https://www.facebook.com/desamaedeivam14

‘தேசமே தெய்வம்’ தளத்தின் முகநூல்பக்கம் 950-க்கு மேற்பட்டவர்களால் பின்தொடரப்படுகிறது.

இதன் முகவரி: https://www.facebook.com/desamaedeivam

இந்த முகநூல் பக்கங்களில் நமது இணையக் கட்டுரைகளின் தொடுப்புகள் (links) வெளியாகின்றன.

6. டிவிட்டர் முகவரி:

நமது டிவிட்டர் தளத்தை நூற்றுக்கு மேற்பட்டோர் தொடர்கின்றனர். இதிலும் நமது இணையக் கட்டுரைகளின் தொடுப்புகள் வெளியாகின்றன.

இதன் முகவரி: https://twitter.com/desamaedeivam

நமது எதிர்காலத் திட்டங்கள்:

  • இதுவரை சிந்தனைரீதியாக இயங்கிவந்த தேசிய சிந்தனைக் கழகம் அமைப்புரீதியாக வலுப்படுத்தப்பட உள்ளது. இதற்கென மாநிலம் முழுவதிலுமுள்ள தேசிய, தெய்வீக சிந்தனை கொண்ட ஆதரவாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
  • ஒவ்வொரு மாவட்டக் குழுவும் தங்கள் பகுதியில் உள்ள தேசிய சிந்தனையாளர்களைத் தொடர்பு கொண்டு, தங்கள் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களில் பொது நிகழ்ச்சிகளையும் கருத்தரங்குகளையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் தே.சி.க. கிளையைத் துவங்கவும், அவற்றின் தொகுப்பாக மாநில அளவில் ஒரு செயற்குழுவை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். ஆண்டுக்கு ஒருமுறை மாநில அளவில் பெரிய அளவில் கருத்தரங்கு நடத்த உத்தேசித்துள்ளோம்.
  • நமது இணையதளங்களில் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர்கள் அனைவரின் பங்களிப்பையும் உறுதிப்படுத்த உள்ளோம். நமது இணையதளக் கட்டுரைகளைத் தொகுத்து அவ்வப்போது நூல்கள் வெளியிடும் திட்டம் உள்ளது.
  • 2017-ஆம் ஆண்டு ஸ்ரீமத் ராமனுஜரின் ஆயிரமாவது ஆண்டு தே.சி.க.வால் கொண்டாடப்படுகிறது. 2017-18-இல் சகோதரி நிவேதிதையின் 150-வது ஆண்டு, காந்தியப் பொருளாதார நிபுணர் ஜே.சி.குமரப்பாவின் 125-வது ஆண்டு ஆகியவற்றை கொண்டாட உள்ளோம்.

 

பதிவிட்ட/ திருத்தப்பட்ட  நாள்:  11.01.2017